தமிழகத் திருக்கோயில் வரிசை - திருக்கருகாவூர் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2016 (வெள்ளிக்கிழமை)
தமிழகத் திருக்கோயில் வரிசை
திருக்கருகாவூர்
-வல்வையூர் அப்பாண்ணா-
ஆண்டவன் எங்கணுமிருப்பினும் திருக்கோயில்களிலேயே அவன் அருள் நிறைந்து விளங்கிறது. அதனால் உருவமற்ற பரம்பொருளுக்குப் பல உருவங்கள் தந்து, வணங்குவதற்குப் பல திருக்கோயில்களும் எற்பட்டன.“ பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்” எனச் சிவன் கோவில்களும், “ நீலமேனி நெடியோன் கோயில் ” எனத் திருமால் கோவில்களும் ஏனைய தெய்வங்களின் கோவில்களும் அமைந்தன.
இத்தகைய கோயில்களில் வெள்ளாற்றின் தென்கரையில் சிறப்புவாய்ந்த பிரார்த்தனை தலமாக விளங்கி வருவது, கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவனநாத சுவாமி அமர்ந்து அருள்பொழியும் திருக்கருகாவூர் ஆகும். கரு + கா + ஊர்: கரு- தாயின் கருப்பையில் உள்ள கருவை, கா காத்த (காக்கின்ற), ஊர் – ஊர். கருவைக் காத்துநின்ற “ கருக்காத்த நாயகி ” வீற்றிருக்கும் இடம்.
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதை 40 கி.மீ தூரம் கொண்டது.ஏறக்குறைய நடுப்பகுதியில் வெட்டாற்றின் தென் கரையில் திருக்கருகாவூர் அமைந்துள்ளது.
பல ஆண்டுகள் குழந்தைப் பேறில்லாதவர்கள் குழந்தைப் பாக்கியம் பெறவும், திருமணம் கூடி வராத இளம் பெண்களுக்கு விரவில் திருமணம் கூடிவரவும் அன்னை கருக்காத்த நாயகியை வியாழக்கிழமைகளில் வேண்டி நெய்தீபம் ஏற்றிவந்தால் குழந்தைப்பேறு கிட்டும் என்பதும், மேலும் கருவுற்ற பெண்கள் கருக்காத்த நாயகியை வேண்டி அவள் காலடியில் பெறப்பட்ட விளக்கெண்ணையை வயிற்றில் தடவிவந்தால் கரு காக்கப்பட்டு சுகப்பிரசவம் ஆகும் என்பதுவும் உண்மை நிகழ்வுகளாக இன்றும் தொடர்கிறது.
மேலும் இத்திருக்கோவிலில் அருளாட்சி செய்யும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை (கருக்காத்த நாயகி ) திருவருள் பெற்றுக் குழந்தைப்பாக்கியம் பெற்றவர்கள் தங்கள் நேர்த்தியினை நிறைவு செய்ய வராமல் வந்த மழலைச் செல்வத்தினை அம்மன் சந்நிதியில் தொட்டிலில் இட்டு எடுப்பது ஒரு புனிதகாரியமாகக் கருதப்பட்டு தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
இதற்காக ஒரு தங்கத் தொட்டிலையே செய்து வைத்துள்ளார்கள். வசதி வாய்ப்பு உள்ள பலரும் பிறக்கும் குழந்தையின் எடைக்கு எடையாக -அவரவா் வசதிக்குத் தகுந்தமாரி பொன், வெள்ளி, தானியங்கள், நாணயங்கள், நெய், நெல், பழவகைகள், இனிப்புகள் என்பவற்றைத் துலாபாரமாக அம்மன் சந்நிதியில் கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது.
நிருத்துருவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் தமது ஆச்சிரமத்தில் வசித்து வந்தனா்.வேதிகை கருவுற்றிருந்த வேளையில் அவளைத் தனியே தன் ஆச்சிரமத்தில் விட்டுவிட்டு நிருத்துருவ முனிவா் திருக்கோவில் சென்றிருந்தார். அச்சமயம் ஊர்த்துவபாதர் என்கிற முனிவர் இவர்களது ஆச்சிரமத்தை நாடிவந்து தம்பசிக்கு அன்னமிடுமாறு கேட்டார். இவரது குரலைக் கேட்டும், அச்சமயம் கருவுற்றிருந்த வேதிகை தளர்ச்சி மிகுதியினால் எழுந்து வந்து அன்னமிட முடியவில்லை. இதனையறியாத அம்முனிவரோ கோபமுற்றுச் சாபமிட்டுச் சென்றார்.
வேதிகையின் வயிற்றில் உள்ள கருவுக்கு சாபத்தினால் ஊனம் வந்து, கர்ப்பம் நழுவ கர்ப்பரட்சகியாகிய அம்பிகை கலைந்த கருவை ஒரு தெய்வீகக் குடத்தில் வைத்துக் காத்து உரிய காலம்வர குழந்தையை வெளிக்கொணர்ந்து பெற்றோரிடம் ஒப்படைத்தாள்.
அம்பிகையின் கட்டளைப்படி குழந்தை நைதுருவனுக்குக் காமதேனு பாலைச் சுரந்து அளித்தது.காமதேனுவின் பாலைப் பருகி வளர்ந்து வந்த நைதுருவன், வேதிகை, நிருத்துவ முனிவா் மூவரும் இறைவனையும் இறைவியையும் தொழுது பணிந்தனா்.
அம்பிகையின் முன் மண்டபத்தின் இருபக்கச் சுவர்களிலும் இந்தக் கதை ஓவியமாக அழகுற வரையப்பட்டுள்ளது.இந்த மண்டபத்தின் தூண்களில் ஒன்றில் கா்ப்பவதி ஒருத்தி சிலைவடிவில் காணப்படுகிறாள். அவர்தான் நிருத்துவமுனிவரின் மனைவி வேதிகையோ?
நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் அம்பிகை அருள் பாலிக்கிறாள்.நிறைந்த பொன்னாபரணங்களுடன் பூமாலை அலங்காரங்களுமாக அம்பிகை ஜொலிக்கிறாள்.சுற்றுப் பரிவார மூர்த்தங்களோ, சண்டிகேஸ்வரி சந்நிதானமோ அங்கில்லை.
சில கோவில்களில் மூலமூர்த்தம் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தமாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இத்திருக்கோவிலில் சுவாமி, விநாயகா், நந்தி ஆகிய மூன்றுமே சுயம்புவாகத் தோன்றியவை.கருவறையின் மூல மூர்த்தத்தினை கிட்ட நெருங்கிப் பார்க்க முடியவில்லையாயினும் நந்தியையும், கணபதியையும் அருகில் நெருங்கிப் பார்க்க முடிகிறது.
வழமையான தென்மேற்கு மூலையில் காணப்படும் விநாயகா் சந்நிதானத்தில் இரண்டு விநாயகர்கள் உள்ளனா். ஒன்று: சுயம்பு, மற்றது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதேபோல வாசலில் உள்ள நந்தியும் அருகருகாக இரண்டு நந்திகள் காணப்படுகின்றன. ஒன்று:சுயம்பு, மற்றது பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுயம்புவான நந்தியும் விநாயகரும் கால ஓட்டத்தினால் சற்றே சிதைவடைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதனால் எல்லா அபிஷேகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தங்களுக்கே நடைபெறுகிறது.
மூலவா் – ஆறுமகா் – அம்பிகை ஆகிய மூன்றும் இத்திருச்சந்தியில் சோமாஸ்கந்த அமைப்பில் உள்ளமை ஒரு தனிச்சிறப்பான அம்சமாகும். மகேஸ்வர வடிவங்களில் முதன்மையானதும், மக்களுக்கு வேண்டுவன அருளும் தேரேறும் மூர்த்தமாகத் திருக்கோயில்களில் வீற்றிருக்கும் சச்சிதானந்த வடிவான சோமஸ்கந்த மூர்தியேயாவார். இந்த மூன்று சந்நிதானங்களையும் ஒன்றுசேர வலம் வரக்கூடியதாக ஒருவீதி அமைப்பினை இப்போது எற்படுத்தியுள்ளார்கள்.
சத்து ஆனந்தம் சித்து
அருள் ஆன்மா இன்பம்
(உண்மை) (மகிழ்ச்சி) (அறிவு)
சோ ஸ்கந்தா் உமா
முல்லைவனநாதர் ஆறுமுகா் கர்ப்பரட்சகி
திருக்கருகாவூர் மீது திருஞானசம்பந்தா் பாடிய பதிகத்திலுள்ள நான்குவரித் தேவாரப் பாடல்களில் 4 ஆவது வரியின் முதற் சொல்லாக அத்தா், அமுதர், அழகா், அடிகள், ஐயா், ஈசா், எந்தை, அண்ணல் , ஆர்த்தா் என இறைவனை விளித்துப் பாடியிருப்பதைக் காண்கிறோம். பதிகத்தின் முதற்பாடல் மட்டும் கீழே தரப்பட்டுள்ளது.
முத்திலங்கு முறுவல் லுமையஞ்சவே
மத்தயானை மறுகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூரெம்
அத்தா் வண்ணம் மழலும் அழல் வண்ணமே
தன்னுடைய முத்துப்போன்ற பற்கள் ஒளிவீசுமாறு புன்முறுவல் பூத்து அருகில் இருக்கும் உமாதேவியார் அச்சம் அடையும்படி மதங்கொண்டு வந்த யானையை நிலை குலையுமாறு வீழ்த்தி, அதன் தோலை உரித்து, அக்கனத்த தோலைப் போர்வையாகப் போர்த்துக்கொண்ட கடவுளாகிய கருகாவூர் எந்தையின் திருமேனியின் நிறம் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பு போன்ற சிவந்த நிறமாகும்.
இக் கோவில் மீது அப்பா் பெருமான் பாடிய பதினொரு பாடல்கள் கொண்ட பதிகத்தின் ஒவ்வொரு பாடலுமே அற்புதமானவை. பாடலின் ஒவ்வொரு சொல்லின் இறுதியும் “… ம் ” என முடியும் சொல்லாடல் பதிகத்திற்கு மெருகேற்றுகிறது. என்னே! பொருள் பொதிந்த வரிகள் இவை. பதிகத்தின் ஆறாவது பாடல் இதோ…
மூலனாம், மூர்த்தியாம், முன்னேதானாம்
மூவாத மேனி முக்கண்ணினானாம்
சீலனாம், சேர்ந்தாரிடர்கள் தீர்க்குஞ்
செல்வனாம் செஞ்சுடர்க்கோர் சோதிதானாம்
மாலனாம் மங்கையோர் பங்கனாம்,
மன்றாடியாம், வானோர் தங்கட்கெல்லாம்
காலனாம், காலனைக் காய்ந்தானாந்
கண்ணாம் கருகாவூ ரெந்தைதானே.
எல்லாப் புவனங்களுக்கும், எல்லாப் பொருட்களுக்கும் எல்லா உயிர்கட்கும் வினைமுதற் காரணமாக விளங்குபவனும், சகல குணங்களும் பொருந்தி அருள் செய்யும் மூர்த்தியாக விளங்குபவனும், எல்லாம் தோன்றுவதற்கு முன் தோன்றியவனும், மூப்பு அடையாத மேனியை உடையவனும், முக்கட் செல்வனும் சீலமுடையவனும், தன்னை வந்து சேர்ந்தவர்களின் துன்பங்களைத் தீர்த்தருளும் செல்வனும், மங்கை மணாளனும், பொன்னம்பலத்தில் நடனமாடுபவனும், வானோர்களின் காலத்தினை வரையறுப்பவனும், எமனை உதைத்தவனும், என் கண் போன்றவனும் யார் என்றால் திருக்கருகாவூரில் திகழும் எந்தையேயாவான்.
இவற்றினைவிட, சுந்தரா் வைப்புத்தலப் பாடலாக திருக்கருகாவூர் பற்றி பாடிய பாடலின் இடைவரிகள் இவை.
…………………………………………………….
…………………………………………..
காரூா் பொழில்கள் புடைசூழ்
புறவிற் கருகாவூ ரானே
…………………………………………………………..
…………………………………………
முல்லைவனநாதர் திருக்கோயில் வாசலில் ஒரு ஐந்து நிலைக் கோபுரமும், இடது புறமாக அம்பாள் திருக்கோயில் முன்பாக ஒரு நுழைவு வாசலும் ஒரே நேர்கோட்டில் கிழக்குப் பார்த்தபடி அமைந்துள்ளன. வெளியே வசந்தமண்டபமும் எதிரே சஷீரகுண்டம் எனப்படுகின்ற திருக்குளமும் உள்ளன.
கோபுர வாசலினூடாக உள்ளே சென்றால் நமக்கு இடது கைப்புறமாக (தென்கிழக்கு மூலையில், புறச்சுவரை ஒட்டியபடி) மடப்பள்ளியும், அடுத்து அறுபத்துமூவர் மண்டபமும் காணப்படுகிறது. நமக்கு வலது கைப்புறமாக நடராஜா்மண்டபமும், அதன் தொடர்பாக யாகசாலையும் (மேற்குப் பார்த்தபடி) இருக்கிறது.நடுவே கொடிமரம் – பலிபீடம் – நந்தி ஆகியன உள்ளன. இரண்டு நந்திகள் அருகருகே உள்ளன. ஈசனுக்கு நேராக இருப்பது சுயம்பு – தானாத் தோன்றியது.மற்றது பிரதிஷ்டை செய்யப்பட்டது (விபரம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது).
கோபுரம் அருகாகவே வலமாக நடந்து பிரகாரத்தை வலம் வருகிறோம். திறந்த பிரகாரத்தின் தென்பக்கச் சுவரை அண்மித்தபடி அனுமன் சந்நிதி தனியாகவும், சேக்கிழாரும் சந்தான குரவர்களான உமாபதிசிவம், அருள்நந்திசிவம், மறைஞான சிவம், மெய்கண்ட சிவம் ஐவரும் ஒரு சந்நிதியிலும் வடக்கு நோக்கியபடி உள்ளனா். நேராக நோக்கின் கருவறையின் முன் மண்டபத்தோடு இணைந்தபடி நீண்ட முன் மண்டபத்தோடு கூடிய சோமாஸ்கந்தா் சந்நிதி காணப்படுகிறது. தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகா் அமர்ந்துள்ளார். இங்கேயும் காணப்படும் இரண்டு விநாயகர்கள் பற்றிய விபரம் முன்னரே பார்த்தோம்.
மூலவா் முல்லைவன நாதரின் கோஷ்ட மூர்த்தங்களாவன தெட்சணாமூர்த்தியினை வழிபட்டு வந்தால் சரிபின்புற மாடத்தில் லிங்கோற்பவா் அமர்ந்திருக்க வேண்டிய இடத்தில் அர்த்தநாரீஸ்வரா் பெரிய உருவமாக உள்ளார். அடுத்து பிரம்மா, துர்க்கை, தனிச்சந்நிதியில் வழமையான இடத்தில் சண்டிகேஸ்வரரும் உள்ளனா். சிறிய ரூபமாக மாடத்தில் துர்க்கை அம்மன் அமரவேண்டிய இடத்தில் பெரியதொரு தனிச்சந்நிதியில் பெரியெதாரு திருவுருவாகத் துர்க்கையம்மன் அமர்ந்திருப்பதுவும் இங்கேயுள்ள சிறப்புகளில் ஒன்று.
இந்தச் சந்நிதியில் இராகுகாலப் பூசைகள் மிக விசேடமானவை.சண்டிகேஸ்வரரின் பிற்பக்க சுவரை ஒட்டியபடியுள்ள மண்டமும் தனிச்சந்நிதியும் வள்ளி - தெய்வானை சகிதம் உள்ள ஆறுமுகர் சந்நிதியாகும்.முல்லைவனநாதர் - ஆறுமுகா் - கர்ப்பரட்சாம்பிகை அம்பிகை உள்ளடங்கிய சோமஸ்கந்த அமைப்பு பற்றிய விபரம் முன்னரே தரப்பட்டது.பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் மகாலெட்சுமியும் உள்ளார். இப்போது நாம் பிரகாரச் சுற்றினை நிறைவு செய்து பழையபடி கொடிமரம், பலிபீடம் , நந்தி ஆகியன உள்ள இடத்திற்கு வந்துவிட்டோம்.
மண்டப வாசலில் இருமருங்கிலும் உள்ள துவார கணபதியையும், துவார ஸ்கந்தரையும் வணங்கி அனுமதி பெற்று கருவறை முன் மண்டபத்தின் உள்ளே நுழைகிறோம்.
கருவறையில் இறைவன் முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ளதால் முல்லைவனநாதர் என்றும், மகப்பேறு அளிப்பதால் கர்ப்பபுரீஸ்வரா் என்றும் அழைப்பார்கள். முல்லைவனத்தில் புற்றுருவில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்த வடுவை இன்றும் காணலாம்.(இந்தத் தகவல் அர்ச்சகா் தந்தது)
தலவிருட்சமான முல்லைக்கொடி உட்பிரகாரத்தின் சண்டிகேஸ்வரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையில் உள்ளது. புற்றுருவாக இருப்பதனால் இறைவனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகுத் திரவியம் மட்டுமே சாத்தப்படுகிறது. நீண்டு உயர்ந்துள்ள லிங்கபாணத்தின் அடிப்பகுதியில் கவசம் சாத்தப்பட்டுள்ளது.
ஆவுடையார் பகுதிக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. ஒற்றைப் பூமாலை, ஒரு சால்வை, தலைக்கு மேலாக ஒரு நாகபடம் மட்டுமே கொண்ட அளவான அலங்காரம் திருமேனிக்கு மேலே குறுக்காகக் காணப்படும் முப்புரிநூல் வெள்ளை வெளேரெனத் தெரிகிறது. முல்லைவன நாதரை நெஞ்சாரத் தொழுது விடைபெற்று கோபுர வாசல் வழியாக வெளியே வந்து புறவீதியை நோக்கினால், வீதி முழுவதும் அழகிய நந்நவனம் தெரிகிறது.
நந்தவனமும், பூக்களும் பற்றி மேலதிகமாக ஒரு சில வார்த்தைகள். இக்கோவில் உட்படவேறும் சில கோயில்களில் உட்பிரகாரங்களில் பல இடங்களிலும் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.
“வாசனையில்லாப் பூக்கள் வணக்கத்திற்குரியவையல்ல” “மணமற்ற பூக்கள் ஆண்டவன் திருப்பாதங்களுக்கு ஏற்றவையல்ல ” காலங்காலமாக காட்டுப் பூவாகவிருந்து அண்மைக் காலத்தில் வீட்டுப் பூவாகி வாசல் வளைவுகளை அலங்கரித்து வந்த கோண்பூ (சரியான பெயர் தெரியவில்லை) போன்றவற்றுடன், "எக்ஸ்சோறா" போன்றவையும் கூட்டுச் சேர்ந்து, படிப்படியாக கோயில்களில் நுழைந்து விட்ட அதிசயத்தை இன்று நாம் கண்ணெதிரே காண்கின்றோம். அர்ச்சகர்களும் அவற்றினைக் கையிலெடுத்து அர்ச்சிப்பதையும் நாம் பார்க்கிறோம்.
இந்தப் பந்தியில் தரப்பட்டுள்ள இரு தரவுகளும் சரியா…. தவறா…… எனும் முடிவினை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
நன்றி – ஞானச்சுடர்
மீண்டும் ஒரு திருக்கோயிலில் நாம் சந்திக்கலாம்….
அடுத்த வெள்ளி : “ திருவெண்பாக்கம் ” கண் பார்வையை இழந்த சுந்தரர், பார்வையைத் தரும்படி இறைவனை வேண்டி நிற்க இறைவன் “கைத்தடி ” கொடுத்த வரலாறு நிகழ்ந்த இடம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.