"சிறக்கு மாதவா் முனிவா் மகபதி இருக்கு வேதனும் இமயவா் பரவிய திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே ” என அருணகிரிநாதா் தன் திருப்புகழில்“ குரா ”மரத்தையும் ( ஸ்தல விருட்சம் ) குராமரத்தடிக் குமரனையும் போற்றித் துதி செய்கின்றார். அருணகிரிநாதா் வியந்து போற்றிய இந்த திருக்கைவேல் வடிவழகுப் பெருமான் “ சுப்பிரமணியன் ”என்ற அருட்கோலம் கொண்டவா்.
தமிழ்நாட்டில் தல விருட்சம் சிறப்புப் பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று காஞ்சிமாவடி. மற்றது திருவிடைக்கழி குராவடி. இந்த “ குரா ”மரத்தடியிற்றான் “ ராகு”முருகனைப் பூசித்து வரம் பெற்றதால் இது “ ராகுதோசம் நீக்கும் ஸ்தலம் ” எனப்படுகிறது. இந்த“ குரா ” மரத்தடி நிழலில் இன்றும் முருகன் விரும்பி உலாவுவதாக ஸ்தலபுராணம் சிறப்பிக்கின்றது. “ ராகு ” என்பதை திருப்பி நோக்கினால் “ குரா ” எனவரும். எனவே, ராகு கிரகத்துக்கும் குராமரத்துக்கும் ஏதோ ஒரு வகை தொடா்பு இருப்பது புரிகிறது. “ இந்த ஊரில் பாம்பு யாரையும் தீண்டுவதில்லை. அப்படித் தீண்டினாலும் நஞ்சு ஏறியாரும் மரணிப்பதில்லை ” என்று இந்த கிராமவாசிகள் அடித்துக் கூறுகிறார்கள்.
இது தொடர்பான இன்னொரு செய்தி. இந்தக் கோயிலில் நவக்கிரக சந்நிதியும் இல்லை. நாகை மாவட்டம் தரங்கம் பாடி வட்டத்தில் தில்லையாடியிலிருந்து 2 கி.மீதூரத்தில் உள்ளது இந்த ஊா். இன்னுமொரு பாதையும் குறிப்பிடுகிறேன். “ மணிவிழா ” , “ சதாபிஷேகம் ” இவற்றிற்கு பிரபலமான திருக்கடவூரிலிருந்து நோ் தெற்கு நோக்கிய பாதையில் ( தரங்கம் பாடிக்கு இடையே ) 6 கி.மீதூரத்தில், பிரதான பாதையிலிருந்து வலது புறம் விலகி 1 கி.மீ உள்ளே தூரம் உள்ளே போக வேண்டும்.
திருவிடைக்கழி சிறிய ஊா். சிவாலய அமைப்பில் முருகப்பெருமான் சிவசொரூபமாக நின்று அடியவா்க்குத் திருவருள் பொழியும் ஒரே முருக ஸ்தலம்“ திருவிடைக்கழி ” ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது திருவிடைக்கழி“ ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ” திருக்கோயில். இங்கே இரண்டு கருவறைகள். ஒன்று பிரதான கருவறையின் சற்று பின்புறமாகக் காணப்படும் “ பாபநாசப் பெருமன் ”லிங்க வடிவில் அருள்பாலிக்கும் இடம்.
மற்றொரு கருவறையில் முருகன்“ சிவகுமாரன் ” ஆகவும், சிவன் “ குமாரசிவம் ” ஆகவும் (இரு பெயருக்குமிடையே உள்ள தொடா்பினை அன்பா்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும்) ஒருங்கே அமர்ந்திருந்து அருளும் அதிசயம் வேறு எங்குமே காணமுடியாதது. திருவிடைக்கழியில்மட்டுமேகாணலாம்.லிங்கவடிவில்“ குமாரசிவமாகி” நிற்கும் இறைவன் சற்று பின்புறமாக அமா்ந்திருக்கும் காரணத்தை அறியமுடியவில்லை. அழகன் “ சிவகுமாரன் ” முன்பாக சிறியதொரு ஸ்படிகலிங்கம் உள்ளது.
சூரன்மகன் இரண்யாசுரனை சம்ஹாரம் செய்த தோசநிவர்த்திக்காக முருகன் இந்த ஸ்படிகலிங்கத்தை வழிபாடு செய்ததாக ஸ்தலபுராணம் கூறுகிறது. சுப்பிரமணியா் ஒரு திருமுகத்துடனும், இரு கைகளில் ஒன்று அபயமாகவும் – மற்றதை இடுப்பிலும் கொண்டுள்ள கோலத்தை அள்ளிப்பருக ஆயிரம் கண்கள் வேண்டும்.
திருவிடைக்கழி திருவிசைப்பா பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று. முதல் இராசராசன் காலத்தில் மிகச்சிறுவனாக இருந்த நம்பியாண்டார் நம்பிகள், அம்மன்னன் மகன் முதல் இராசேந்திரன் காலத்தில் இடை வயதை அடைந்து, இராசேந்திரனின் விருப்பப்படி திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருப்பதிகங்கங்களை ஒன்பது என்று சேந்தனார் கண்டு காதலித்த வடிவழகை நாமும் கண்டு மையல் கொண்டு மயங்கி நிற்கிறோம். இன்னமும், “ செழுத்தடம் பொழில்சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்போர் இடா்கெடுமே ” என்று நிறைவு செய்கிறார் பதினோராவது திருவிசைப்பாவில்.
அருணகிரிநாதா் இடைக்கழி அழகனை எட்டுத் திருப்புகழ் பாடலில் போற்றியுள்ளார். அதற்குப் பரிசாக முருகன் அவருக்குத் தத்துவங்களையும் வித்தைகளையும் அனுக்கிரகம் செய்தான். மகா தாம் திருமுறையாகத் தொகுத்துக் கொடுத்தார் என்பது வரலாற்று ஆசிரியரின் துணிபாகும்.
திருவிடைக்கழி அழகனைத் திருவிசைப்பாவில் பதினொரு பாடல்களில் பாடி இன்புற்றார் சேந்தனார்.“ பரிந்த செஞ்சுடரே! பரிதியோ! மின்னோ! பவளத்தின் குழவியோ! பசும்பொன் சொரிந்த செந்தூரமோ!...... (திருவிடைக்கழி, திருவிசைப்பா 7ஆவது பாடல்) வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவா்கள் இந்த இடைக்கழி முருகன் மீது “ பிள்ளைத் தமிழ்……” பாடியுள்ளார்.
முருகன் சிவசொரூபமாக நின்ற ஒரே ஸ்தலம் என்று குறிப்பிட்டேன் அல்லவா! நடராஜா் இருக்க வேண்டிய இடத்தில் தெற்கு நோக்கி வில்லேந்திய வேலன் மிக அழகாகக் காட்சி தருகிறார். சோம ஸ்கந்தா் அமர்ந்திருக்க வேண்டிய இடத்தில் தேவசேனா சமேதப்பெருமானாக எம்பெருமான் கந்தவேள் உள்ளார். இங்கே உள்ள சந்திரசேகரா், பிரதோசநாயகா், சண்டேசுவரா் ஆகிய அனைத்து மூா்த்தங்களும் சுப்பிரமணிய ரூபமாக விளங்குவதும் இங்குள்ள ஓர் அதிசயமே. எல்லா மூா்த்தங்களுமே தமது வலது கரத்தில் வஜ்ரவேல் கொண்டுள்ளமை முருக வழிபாட்டுக்கு முதன்மை ஸ்தலம் இது என்பதை உணா்த்தும். ஏனைய ஸ்தலங்களில் திரிசூலமே அத்திரதேவராக( அத்தறதேவா்) அமைந்திருக்க, இங்கு வஜ்ரவேல் அத்திரதேவராகவும் உள்ளது.
சிவப்பரம் பொருள் புகழ் விரிக்கு ம்திருமுறைகள் பன்னிரண்டினுள்
திருவிசைப்பாவும் – திருப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறைகளாகும். ஒன்பதாம் திருமுறை அருளாசிரியர்கள் ஒன்பதின்மா். அவா்கள் திருமாளிகைத்தேவா், கருவூா்த்தேவா், பூந்துருத்திநம்பிகாடாநம்பி, கண்டரா்சித்தா். வேணாட்டிகள், திருவாலியமுதனார். புருடோத்தமநம்பி, சேதிராயா் என்போராகும்.
திருவிசைப்பா பெற்ற ஸ்தலங்கள் பதினான்கு அவை.
1.தில்லைத்திருக்கோயில்
2.திருவீழிமிழலை
3.திருவாவடுதுறை
4.திருப்பூவணம்
5.திருவிடைமருதூர்
6.திருவாரூா்
7.கங்கைகொண்டசோழேச்சரம்
8.தஞ்சைஇராசராசேச்சுரம்
9.திருக்களந்தைஆதித்தேச்சரம்
10.திருக்கீழ்க்கோட்டூா்
11.திருமுகத்தலை
12.திரைலோக்கியசுந்தரம்
13.திருச்சாட்டையக்குடி
14.திருவிடைக்கழி
இத்தலங்கள் பதின்நான்கினுள் முதல் ஆறம் தேவாரமும் பெற்ற தலங்கள். ஏனையவை திருவிசைப்பா மட்டும் பெற்றமை.
தெய்வயானை அம்பிகை தெற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். முகத்தைச் சற்று வலப்புறம் திருப்பிய படி எழிலாக – அழகாக –ஒயிலாக முருகன் அழகை மானசீகமாகக் கண்டு இன்புறும் காட்சியை நாமும் கண்டு இன்புறலாம். தாயாரின் திருவுருவமும்( பார்வதி ) சந்நிதியும் எங்கும் இல்லை. திருவிடைக்கழி “ சுப்பிரமணியன்
”அடைந்தாருக்கெல்லாம் அடைக்கலம் தரும் அருளனாக அமா்ந்திருக்கும் கோலம் கண்ட மனநிறைவோடு பிரியமனமின்றிப் பிரிந்து வருகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
suryaprakash (india)
Posted Date: April 28, 2019 at 20:35
God is great.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.