நாடு முழுதும் உள்ள முன்னணி தமிழ் பாடசாலைகள் தோறும் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலரின் திருவுருவச் சிலைகளை நிறுவுவதன் மூலம் நாவலரின் சிறப்பை மாணவர்கள் மத்தியில் நிலைநாட்ட நடவடிக்கை எடுத்துவரும் நாவலர் நற்பணி மன்றம், எதிர்வரும் வாரங்களில் யாழ்பாணத்திலும் 10 பாடசாலைகளில் நாவலர் சிலைகளை நிறுவத்திட்டமிட்டிருக்கின்றது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன் யாழ் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, காரைநகர் தியாகராஜா இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, சாவகச்சேரி இந்து கல்லூரி ஆகியவை உட்பட்ட 10 பாடசாலைகளிலேயே நாவலர் சிலைகளை நிறுவப்படவுள்ளன.
கொழும்பிலும் மலையகத்திலும் மாத்தளை, நாவலப்பிட்டி கொட்டகல போன்ற இடங்களிலும் அண்மையில் பல நாவலர் சிலைகள் இந்த அமைப்பினரால் நிறுவப்பட்டுள்ளன.
நாவலர் நற்பணி மன்றம் அதன் ஸ்தாபகத் தலைவர் கருணை ஆனந்தனின் வழிகாட்டலில் தமிழ் பாடசாலைகள் தோறும், நாவலர் சிலைகளை நிறுவும் பணியை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source - Valampuri
எமது குறிப்பு - வயித்திலிங்கப்பிள்ளை புலவர்
ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலரின் காலத்தில் வாழ்ந்தவரும் சமயம் தமிழ் என்பவற்றின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவரும் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் மாணாக்கருமான வல்வையைச் சேர்ந்த வயித்திலிங்கப்பிள்ளை புலவர் அவர்களினை நினைவு கூறுகின்ற எந்தவொரு விடயமும் அவர் பிறந்த ஊர் முதற் கொண்டு எங்குமே இல்லை. சிந்தாமணி நிகண்டு வயித்திலிங்கப்பிள்ளை புலவர் அவர்களின் புகழ் பூத்த செய்யுள் ஆகும்.
ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலரின் காலத்தில் பல்வேறு காரணங்களால் வயித்திலிங்கப்பிள்ளை புலவர் அவர்களின் சமய சமூக மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கான அரும்பணிகள் பலவும் அவரின் காலத்திலேயே புறந்தள்ளி வைக்கப்பட்டது.
இன்று பாடப்புத்தகங்கள் முதல் தமிழ் பாடசாலைகள் தோறும் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலரின் நினைவுகளைத் தாங்கியுள்ள நிலையில் அவரின் காலத்திலேயே வாழ்ந்து சமய சமூக மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவரான வயித்திலிங்கப்பிள்ளை புலவர் அவர்களை காலம் அடையாளப்படுத்த மறந்துவிட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.