உ/த பரீட்சார்த்திகளுக்கு இடையூறான ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/07/2019 (வெள்ளிக்கிழமை)
தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு விழாக்கள் மற்றும் வைபவங்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும், ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும் வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இம்முறை ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் 31ஆம் திகதி நிறைவடையவுள்ளது. வடமாகாணத்தில் 15,213 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 3,857 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். வடமாகாணத்தில் 217 பரீட்சை நிலையங்களில் உயர்தரப்பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.