Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை

பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2018 (வியாழக்கிழமை)
தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரை
 
எல்லோருக்கும் வணக்கம்!
 
கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இத்துணை பெருவாரியாக வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக!
 
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கத்தில் தமிழ் மக்கள் பேரவையினூடாக உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கடும் சவால்கள் நிறைந்திருந்த கடந்த 5 வருட காலத்தில் என்னுடன் பணியாற்றிய சக மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், எனக்கு ஆதரவு நல்கிய நண்பர்கள், தோளோடு தோள் நின்று சேவையாற்றிய தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் பெரும் ஆதரவும் அரவணைப்பும் அளித்த தாயக மற்றும் புலம்பெயர் மக்கள் ஆகிய சகலருக்கும் எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
ஆழமானநீச்சல் தடாகத்தினுள் பாய்ந்து முழுக இருக்கும் நீச்சல் வீரனின் மனோநிலையில் நான் தற்போது இருக்கின்றேன். ஐந்து வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஒரு நிலை இருந்தது. குதித்து எழும்பி மீண்டும் ஆழ நீரை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பது போல் உங்கள் முன் நிற்கின்றேன்.
 
இலங்கையின் சுதந்திரத்துக்காக சிங்களச் சகோதர்களுடன் தோளோடு தோள்நின்று போராடியவர்கள் தமிழர்கள். ஆனால், 1920 ஆம் ஆண்டளவில் நாட்டை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய நடவடிக்கைகளில் சிங்கள அரசியல் தலைவர்கள் ஈடுபட்டமை கவலைக்குரியது. சிங்களத் தலைவர்கள் நாடுமுழுவதிலும் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஏற்றவாறு “ஒரு நபருக்கு ஒரு வாக்கு” (One man one vote) என்ற வழிமுறையை பிராந்தியப் பிரதி நிதித்துவம் (Communal Representation) வேண்டும் என்ற முறையில் ஆங்கிலேயரிடம் கோரினர். அது எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விதத்தில் அதை எதிர்த்த கௌரவ சபாபதி அவர்களின் தலைமையிலான வடமாகாண தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் அவர்களது வரலாற்று ரீதியான சுய நிர்ணய ஆட்சிமுறை, அடையாளம் மற்றும் இருப்பு என்பவற்றை பாதுகாக்கும் நோக்கத்தில் இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினர்.
 
மகாவம்ச மனநிலையில் இருந்துகொண்டு தமது அடையாளத்தை நாடு முழுவதிலும் ஏற்படுத்தி சிங்கள இனத்தை வியாபிக்கச் செய்யும் சிங்கள அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளுக்கும் பூர்வீகக் குடிகள் என்ற அடிப்படையில் “தமிழர்” என்ற அடையாளத்தை பாதுகாக்கும் பொருட்டான தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளுக்கும் இடையில் அன்று முதல் உருவான ” சிங்கள- தமிழ் ” இன முரண்பாட்டு நிலை அடுத்துவரும் 2019ம் ஆண்டில் 100 வருடங்களை எட்டப்போகின்றது . இந்த இன முரண்பாடானது அது தோன்றுவதற்கு காரணமான நோக்கங்கள் மற்றும் காரணிகளில் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது.
 
தமிழ் மக்களின் இந்த “சுய பாதுகாப்பு” போராட்டமானது ஒரு அஞ்சல் ஓட்டமாக பின்னர் தந்தை செல்வா வழியாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஏற்படுத்தப்பட்ட பல உடன்படிக்கைகள் பௌத்த பேரினவாத சக்திகள் காரணமாக கிழித்தெறியப்பட்டு தொடர்ந்து ஏமாற்றப்பட்டோம். பின்னர் 1970 களின் ஆரம்பத்தில் ஆயுத வழிமுறைகளினூடாக நகர்த்தப்பட்ட இந்தப் போராட்டம் 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு அரசியல் ராஜதந்திர போராட்டமாக பரிணாமம் பெற்று இன்று எமது கைகளை வந்தடைந்திருக்கின்றது. ஆரம்பித்த நோக்கம் வெற்றி பெறும் வரையில் இந்த அஞ்சல் ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். இதனை வெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவரவேண்டிய ஒரு கடமை எமக்குண்டு. இல்லையேல் சாணக்கியமும் பொறுப்பும் ஆற்றலும் உள்ள அடுத்த தலைமுறையினரிடம் அதனை கையளிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
 
இது ஒரு சுய பாதுகாப்பு போராட்டம். இதன் அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இந்த போராட்டத்தில் பங்குகொண்டிருக்கும் எவருக்கும் உரிமை இல்லை. அதேசமயம் இந்த 99 வருட கால சுய பாதுகாப்பு போராட்டத்தில் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட எண்ணற்ற வன்முறைகள், அரசியல் பாகுபாடுகள் மற்றும் இறுதியாக 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட “இன அழிப்பு யுத்தம்” ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்துக்கும் அதிகமான எமது மக்களை நாம் இழந்துள்ளோம். பல ஆயிரம் உயிர்களை தியாகம் செய்துள்ளோம். புலர் ஊனமாகியுள்ளர். சுமார் 15 இலட்சம் மக்கள் சொந்த இடங்களைவிட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறியுள்ளனர. அதைவிட பெருமளவிலான எமது பூர்வீக நிலங்களை இழந்து கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து நெருக்கடியான ஒரு நிலைமையில் இன்று நாம் நிற்கின்றோம். ஆனாலும் நாங்கள் சோர்வடையவில்லை. நம்பிக்கையைத் தளர விடாமல் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றோம். ஒன்றைமட்டும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும். அதாவது, நாம் எமது தனித்துவத்தை வலியுறுத்திப் போராடாமல் இருந்திருந்தால் எப்போதோ எமது இனம் இலங்கையில் படிப்படியாக அழிவடைந்துபோயிருக்கும். இவ்வாறு இலங்கை பூராகவும் அழிந்துபோன தமிழ்க் குடும்பங்கள் பற்றி வரலாற்றாசிரியர்கள் பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.
 
தமிழ் மக்களுடன் உரிய அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் தாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் தொடர்ந்தும் தீர்க்க தரிசனம் அற்ற வகையில் சிங்கள பௌத்தத்தை முதன்மைப்படுத்தும் அதே மகாவம்ச மனநிலையுடன்தான் இன்றைய சிங்களத் தலைவர்களும் செயற்படுகின்றார்கள். தொடரும் இந்த இன முரண்பாடு சிங்கள மக்களையும் பாதித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் இன்று அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
 
அன்று பொருளாதாரத்தில் எம்மைவிட பின்தங்கி இருந்த சிங்கப்பூர் இன்று நாம் நினைத்தாலும் எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறது. எல்லா இன மக்களும் அங்கு சமமாக மதிக்கப்படுவதுடன் சம வாய்ப்புக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய எண்ணிக்கையில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் சுதந்திரத்துக்காக தோளோடு தோள் நின்று போராடியமைக்கு அங்கீகாரமாகத் தமிழை ஆட்சிமொழி ஆக்கி சிறப்பித்துள்ளார்கள். இதுதான் இன ஐக்கியம். இங்கிருந்துதான் நல்லிணக்கம் ஏற்படும்.
 
ஒரு இனத்துக்கும் ஒரு மதத்துக்கும் முதன்மை என்ற நிலை இருக்கும் வரை பாரிய முரண்பாடுகள் இந்நாட்டில் இருந்து கொண்டேயிருக்கும். கற்பனைக் கதைகளுடன் எழுதப்பட்ட மகாவம்சத்தை தொடர்ந்தும் வரலாறாக சிங்கள சிறார்களுக்கு பாடசாலைகளின் ஊடாக போதிக்கும் வரையிலும், தமிழ் மக்கள் பூர்வீக குடிகள் என்பதை மறுத்து அவர்கள் வந்தேறுகுடிகள் என்று பொய்யான வரலாற்றைப் போதிக்கும் வரையிலும் இனப்பிரச்சினை இலங்கையில் இருந்துகொண்டேயிருக்கும். இதுவரை காலமும் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் தொன்மை பற்றி எம்மவர் உரையாதிருந்ததால் சிங்கள மக்கள் அதை அறியாதவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். இப்பொழுது தான் அவர்கள் அதிர்ச்சி அடையத் தொடங்கியுள்ளார்கள். சிங்களமொழி கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே ஜனித்தது என்று நாம் கூறும்போது அதற்கு முன் வாழ்ந்த துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன் சம்பந்தமான கதைகள் எல்லாம் கேள்விக்குரியதாக ஆக்கப்படுகின்றன.
 
பாகுபாடுகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான எமது சுய பாதுகாப்பு போராட்டம் வன்முறை வழிகளில் அடக்கப்பட்டமையும் தொடர்ந்து அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு நாம் ஏமாற்றப்பட்டமையுமே இளைஞர்கள் மத்தியில் விரக்தி நிலையை ஏற்படுத்தி அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடக் காரணங்கள் ஆகின என்பது வரலாறு. பல சிங்களத் தலைவர்களே இதனை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜூலை 2009 இல் ஒரு கருத்தைக் கூறியிருந்தார் தற்போதைய கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் “தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக தோற்கடித்ததன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு விட்டதாக எவரேனும் கருதினால் அது முட்டாள்தனமான கருத்தாகவே நோக்கப்பட வேண்டும். 30 வருட காலமாக நீடித்த தேசிய இனப்பிரச்சினைக்கான சமாதானத் தீர்வுத் திட்டமே தற்போது விஞ்சி நிற்கும் தேவை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடுமையான நோயின் நோய்க்குறிகள் மட்டுமே. இன்னமும் நோய்க்கான மருந்து வழங்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.
 
2009 இல் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த போது, தமிழ்த் தலைவர்கள் தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டபோது, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு இனப்பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் அதனை அவர் பயன்படுத்த விரும்பவில்லை. அவருக்குப்பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ‘நல்லாட்சி” அரசாங்கத்தை அமைத்த போதும் இனப்பிரச்சினையை தீர்க்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் அப்போதைய சிங்களத் தலைவர்களுக்கு ஏற்பட்டது.
 
அவர்களும் அதை செய்யவிரும்பவில்லை. மாறாக, முன்னைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு யுத்தம் காரணமாக சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருந்த போர்க்குற்ற விசாரணை மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்படுத்தப்பட்ட முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு ஏற்ற வழிவகையாகவே ‘நல்லாட்சி” எனும் பெயரை பயன்படுத்தினார்களே தவிர இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பமாக இதயசுத்தியுடன் செயற்படவில்லை. ஆகக்குறைந்தது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வினைத்திறனான ஒரு பொறிமுறையைக்கூட ஏற்படுத்த அவர்கள் முயலவில்லை.
 
அதிகாரமற்ற வடமாகாண சபை ஊடாக எமக்கு ஒதுக்கப்பட்ட சிறிய அளவிலான நிதியைப் பயன்படுத்தி எம்மால் முடிந்தளவுக்கு எமது மக்களின் துயர் துடைக்கும் பணியைச் செய்துள்ளோம். இது யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போன்றது. இது எமது மக்களைப் பொறுத்தவரை நாம் எதுவும் செய்யவில்லை என்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தியுள்ளது. எமது செயற்பாடுகள் மற்றும் திட்டங்களுக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளும் சிக்கல்களும் கடந்த 5 வருட காலங்களில் ஏற்படுத்தப்பட்டன. வட மாகாண சபையில் நேற்று ஆற்றிய இறுதி உரையில் இது தொடர்பில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.
 
தமிழ் மக்களின் ஆயுத போராட்டம் இடைக்காலத்தில் இருந்தபோது 1987ஆம் ஆண்டு எம் மீது திணிக்கப்பட்ட ஒரு தீர்வு முறைமையே இந்த மாகாண சபைக் கட்டமைப்பு. பலவீனமான, அதிகாரம் அற்ற இந்த கட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான ஒரு ஆரம்ப புள்ளியாகக் கூட இருக்க முடியாது என்று எங்கள் தமிழ்த் தலைவர்கள் அன்றே நிராகரித்துவிட்டார்கள். அதன் பின்னர் இனப்பிரச்சினை மேலும் சிக்கலடைந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தில் முடிவடைந்தது.
 
எந்த வகையிலும் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத ஒரு கட்டமைப்பே மாகாண சபைக் கட்டமைப்பு என்ற யதார்த்தம் தெரிந்திருந்தபோதிலும் பிழையானவர்களின் கைகளில் அதிகாரம் சென்று எமது மக்களுக்கு மேலும் ஆபத்தாக முடியக்கூடாது என்ற காரணத்தினாலேயே தேர்தலில் போட்டியிட்டு வட மாகாண சபையைக் கைப்பற்றினோம். கைப்பற்றிவந்தபின் நாம் எதுவும் செய்யவில்லை என்று கொக்கரிப்போர் யார் என்று பார்த்தால் “பிழையானவர்கள் கைகளுக்கு செல்லக்கூடாது” என்று யாரை அன்று அடையாளப்படுத்தினோமோ அவர்களே அவர்கள் அரசாங்கத்திற்கு மண்டியிட்டு அல்லது பிச்சை கேட்டு ஏன் உங்கள் காரியங்களை நீங்கள் இயற்றவில்லை என்றே கேட்கின்றார்கள்.
 
பணிந்துபோய், பகடைக் காயாகி பல நூறு வேலைத்திட்டங்களை ஏன் இயற்றவில்லை என்றே அவர்கள் கேட்கின்றார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதானால், எமக்கு எமது உரிமைகள் முக்கியம். சலுகைகள் அன்று என்ற படியால்த்தான் எமக்கு எமது வருங்கால நிரந்தரத் தீர்வு அவசியம். இன்றைய ஒரு அடிமைப்பட்ட சொகுசு வாழ்க்கையல்ல.
 
தீர்வு முயற்சியில் உண்மையான அக்கறை கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் உண்மையான கரிசனை கொண்டிருந்தால் அதிகாரங்கள் கொண்ட ‘இடைக்கால நிர்வாகத்தை ‘ அரசாங்கம் யுத்தம் முடிந்தகையோடு ஏற்படுத்தியிருந்திருக்கவேண்டும் . ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
 
வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்காத நிலையில் புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்பை பெற்று எமது வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக முதலமைச்சர் நிதியத்தை அமைப்பதற்கு முயற்சித்தபோதிலும் அரசாங்கம் அதற்கு அனுமதிக்கவில்லை. ஏன் வேறு நிதியங்களைப் பாவிக்கவில்லை என்று கேட்கின்றார்கள் சிலர்.
 
எமது உரித்தைக் கைவிட்டு விட்டு கரவாக ஏன் பணத்தை வெளிநாடுகளில் இருந்து வருவிக்கவில்லை என்பதே அவர்கள் கேள்வி. கரவான எமது செயல்கள் மத்திய அரசாங்கங்களினால எவ்வாறு எமக்கெதிராகத் திசை திருப்பப்படும் என்பது எமக்குத் தெரியும். தமிழர் புனர்வாழ்வு அமைப்பு என்ற அமைப்பின் நிதிகள் இன்னமும் முடக்கி விடப்பட்டே இருக்கின்றன. முதலமைச்சர் நிதியத்தை வழங்குங்கள் என்று அரசாங்கத்துக்கு கூற வக்கில்லாதவர்களே கரவு முயற்சிகளில் எம்மை ஈடுபடச் சொல்கின்றார்கள். நாங்கள் வேறு நிதியங்களைப் பாவித்து பணத்தை வருவிக்கின்றோம் என்று கண்டால் அவற்றை மூடி விட உடனே நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம். அண்மையில் பிரித்தானியாவுக்கு சென்ற வட மாகாண ஆளுநர் உதவிகளை செய்யுமாறும் முதலீடுகளை செய்யுமாறும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தமை வேடிக்கையாக இருக்கிறது. அதே ஆளுநர் தான் எமது நிதியத்தை எமக்குக் கிடைக்கவிடாமல் நாடகமாடி வந்தவர்.
 
ஆவா குழு போன்ற வன்முறை குழுக்களை 3 மாதங்களுக்குள் தன்னால் இல்லாமல் ஒழிக்க முடியும் என்று ஆளுநர் அங்கு தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எமக்கு ஏற்படுத்துகிறது. ஆளுநரால் 3 மாதங்களுக்குள் ஆவாக் குழுவை இல்லாமல் செய்ய முடியும் என்றால் ஏன் அதனை அரசாங்கம் ஆளுநர் ஊடாகக் கடந்த 5 வருடங்களில் செய்யவில்லை? அல்லது ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் ஆவா குழுவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது.
 
ஒரு புறம் வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்த அதேவேளை, மறுபுறம் சிங்கள குடியேற்ற திட்டங்களையும் பௌத்த மயமாக்கலையும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புக்கள் மத்தியிலும் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வந்துள்ளது. இதற்கு ஆளுநர் உடந்தையாக இருந்துள்ளார்.
 
இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற மறுத்து வருவதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறை கும்பல்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதிலும் அசட்டையீனமாக இருந்துவருகிறனர் அரசாங்கமும் ஆளுநரும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் இப்படி இருக்கும்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்போ இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசு என்று சர்வதேச சமூகத்துக்கு நற்சான்றிதழ் கொடுத்துவருவதுடன், தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்றும் ஏமாற்றி வருகிறது. முதலில் 2016 என்றார்கள். பின்னர் 2017 என்றார்கள். இப்பொழுது 2018 என்கின்றார்கள். விந்தையிலும் விந்தை இந்தச் செயல்.
 
நிலைமைகள் இவ்வாறு நெருக்கடி மிகுந்ததாகவும் சிக்கலாகவும் இருக்கும் ஒரு சூழ்நிலையில்தான் முதலாவது வட மாகாண சபையின் 5 வருட காலம் முடிவுக்கு வந்துள்ளது.
 
எனது முதலமைச்சர் பதவிக் காலத்தின் பின்னர் எனது செயற்பாடுகள் எப்படி இருக்கமுடியும் என்பது தொடர்பில் 4 தெரிவுகள் இருப்பதாகக் கூறிவந்தேன்: 1.அமைதியாக வீட்டுக்குச் செல்லுதல் 2. ஒரு கட்சியுடன் இணைந்து தேர்தலில் நிற்பது 3. ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து செயற்படுவது. 4. ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்குவது, என்பவையே அவை.
 
முதலாவது வழியை நான் தெரிவு செய்தால் எனது குடும்பத்தினர் நன்மையடைவதுடன் நானும் எனது ஓய்வுகாலத்தை அமைதியாகக் கொண்டு செல்லமுடியும். எனது உடல் நிலை சீரடையும். அப்படியான ஒரு முடிவை நான் எடுப்பதானால், நான் அரசியலுக்கே வந்திருக்கக் கூடாது. அதுவே அறமாக இருந்திருக்கும். அரசியலுக்கு வந்த பின்னர் இத்தகைய ஒரு முடிவை எடுப்பது நான் தொடர்ந்து ஆற்றவேண்டிய பல பணிகளை ஆற்றாமல், பூர்த்திசெய்யவேண்டிய பல பணிகளை பூர்த்திசெய்யாமல் என்னை நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு எனது நலன்களை முதன்மைப்படுத்தி செல்வதாகவே அமையும். இது மனச்சாட்சிக்கு விரோதமானது என்று உணர்கின்றேன். மேலும் என்னை ஒரு இடர் நிலையில் இருந்து காப்பாற்றிய எம் மக்களுக்கு “நான் உங்களுடன் இருப்பேன்” என்று அன்று கூறிய வாக்கு பொய்த்துவிடும். அதனால் இத்தகைய ஒரு தெரிவை என்னால் எடுக்க முடியவில்லை.
 
நான் எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவன் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராகவே கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் என்னை ஒரு பொம்மையாக வைத்து அரசியலை நடத்துவதற்கு அதன் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கு என்னால் இடமளிக்கமுடியவில்லை. எனக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைக்கும் இடையே கடந்த 4 வருடங்களில் இடைவெளி பெரிதும் அதிகரித்துள்ளது. இது நான் பெரிது நீ பெரிது என்ற மனப்பான்மை காரணமானதாகவோ அல்லது தலைமைத்துவப்போட்டி காரணமாகவோ ஏற்படவில்லை. மாறாக, எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கோட்பாடு ரீதியாகவும் அணுகுமுறை ரீதியாகவும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இந்த வேறுபாடுகள் ஏற்பட்டன. ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் போட்டியிடுவதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
 
நான் கைப்பொம்மையாக இருக்க சம்மதிக்காதவரை எனக்கு மீண்டும் இடமளிக்க அவர்களும் தயார் இல்லை. பல நண்பர்கள் ஒற்றுமை அவசியம் என்பதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்தே போட்டியிட வேண்டும் என்றார்கள். கொள்கையில் திடமாக இல்லாது முன்பு “துரோகிகள்” என்று வர்ணித்தவர்களின் வழித்தடத்திலேயே இப்பொழுது பயணம் செய்யும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் எனக்கென்ன வேலை என்று கேட்டு அவர்கள் வாய்களை அடைத்துவிட்டேன். அதனால், தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்ற ஒன்று.
 
தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து பணியாற்றும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைந்து போட்டியிடுவது எமக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைந்துவிடும். “ஏன் இந்தக் கட்சி?” “மற்றக் கட்சி கூடாதா?” என்றெல்லாம் போட்டியும் பொறாமையும் மேலோங்கும். ஆகவே இரண்டாவது தெரிவும் சாத்தியம் அற்றது.
 
எனது தனிப்பட்ட நலனில் அக்கறைகொண்ட நண்பர்கள் பலரும் நான் முதலாவது தெரிவை அல்லது நான்காவது தெரிவையே எடுக்க வேண்டும் என்றே ஆலோசனை கூறி வந்துள்ளார்கள். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கும் நான்காவது தெரிவு சிறந்த ஒரு தெரிவாக இருந்தாலும் அதில் சில பலவீனங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்துள்ளேன். குறிப்பாக, மக்கள் இயக்கப் போராட்டங்கள் சாத்வீக கோட்பாடுகளின் அடிப்படையிலானவை. சாத்வீக வழிமுறைகளில் ஆரம்பித்து வன்முறைகளால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டமே இன்று அரசியல் ராஜதந்திர போராட்டமாக பரிணாமம் பெற்றுள்ளது.
 
ஜனநாயக தேர்தல்களில் பங்குபற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசியல் , ராஜதந்திர மற்றும் சர்வதேச உறவு செயற்பாடுகளில் ஈடுபட்டு எமது மக்களின் சட்ட ரீதியான பிரதிநிதிகளாக அவர்களின் கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் பெறுவதும் ஆதரவைப் பெறுவதுமே இந்த அரசியல் ராஜதந்திர போராட்டத்தின் அடிப்படை.
 
இதனை உணர்ந்துதான் 1990 களின் ஆரம்பத்தில் வெறும் ஒன்பது வாக்குகளுடன் ஒரு தமிழ் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் வகையில் தேர்தலை நடத்திவிட்டு அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்காட்டி தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே “ஒன்பது வாக்கு” கட்சியின் ஒரு முக்கிய உறுப்பினர்தான் நாம் எதுவுமே செய்யவில்லை என்று இன்று கூச்சல் போடுகின்றார்.
 
ஜனநாயக தேர்தல்கள் மூலமாக மக்களின் அபிலாஷைகளை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுசென்று அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் கசப்புணர்வுகள் பகைமைகளை மறந்து தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில் பழம்பெருந் தமிழ் அரசியல் கட்சிகளையும் முன்னாள் ஆயுத போராட்ட அமைப்புக்களையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கோட்பாடுகளை கைவிட்டு தடம் புரண்டு “ஒன்பது வாக்குக் கட்சி”யுடன் கைகோர்த்து நிற்கின்றது. பொருளாதார அபிவிருத்தி ஏன் செய்யவில்லை என்று துணிந்து கேட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் தீர்வின் அத்தியாவசியத்தை அறியாமல் அரற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
நேற்றைய எனது உரையில் குறிப்பிட்டிருந்தபடி, நான் 2013 ஆம் ஆண்டு வட மாகாண சபைதேர்தலில் போட்டியிடும் போது எமது மக்கள் கொடிய யுத்தம் ஒன்றினூடான இன அழிப்பை சந்தித்து மிகவும் பலவீனமான நிலையில் நொந்துபோய் இருந்தனர். ஆனாலும், தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளான இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையின் அடிப்படையில் எம்மை நாமே ஆளும் சுய நிர்ணய அடிப்படையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு எம்மை முழுமையாக நம்பி அதற்கு அங்கீகாரத்தை வழங்கியிருந்தனர். அந்த மனோநிலையும் எதிர்பார்ப்பும் எம் மக்களிடையே இன்னமும் கனன்று கொண்டேயிருக்கின்றது என்பதே எனது அவதானிப்பு.
 
அன்றைய தேர்தல் காலத்தில் இந்த வாக்குறுதிகள் சாத்தியமானவைகளாகத் தெரிந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு புதிய ஆட்சிமாற்றத்துடன் புதிய பதவிகள், சலுகைகள் வந்துசேர அவை சாத்தியம் அற்றவைகளாக மாறிவிட்டன. நான் முன்னர் குறிப்பிட்டதுபோல நல்லாட்சி அரசாங்கம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையிலும், அதற்கு முண்டுகொடுத்து இந்த அரசு எமக்கு தீர்வைத் தரும் என்று கூறிவருகின்றனர். தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகக் கூட சிங்கள குடியேற்றங்களையும் பௌத்தமயமாக்கலையும் தற்காலிகமாகக் கூட நிறுத்திவைக்க விரும்பாத இந்த அரசாங்கம் எப்படி எமக்கு தீர்வினை வழங்கும் என்று சிந்திக்க முடியாதளவுக்கு பதவிகளும் சலுகைகளும் அவர்களின் கண்களை மறைத்து வருகின்றன.
 
வராது என்று தெரிந்திருந்தும் வராத ஒரு தீர்வுத்திட்டத்துக்காக “ஒற்றை ஆட்சி” முறையை ஏற்றுக்கொண்டு “இலங்கை ஒரு பௌத்த நாடு” என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இவர்கள் இதற்கான மக்கள் ஆணையை எந்தத் தேர்தலில் இருந்து பெற்றுக்கொண்டார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்கவேண்டும் அல்லது எதிர்வரும் தேர்தல்களில் இவற்றை மக்கள் முன்பு வைத்து ஆணையைப் பெறவேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு கூற்று அரசியலில் மறு கூற்று என்றிருப்பது எம் மக்களை ஏமாற்றுவதாகவே முடியும்.
 
இராணுவம் முற்றுமுழுதாக வட கிழக்கு மாகாணங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று எமது மக்கள் வலியுறுத்தும்போது தனியார் காணிகளிலிருந்து அவர்கள் வெளியேறினால் அதுவே போதும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர் தற்போதைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர். வட கிழக்கில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்று அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச சமூகத்திடமோ கோர அவர்கள் அஞ்சுகின்றனர். மடியில் கனம் இருப்பதால்த் தான் அவ்வாறு அஞ்கின்றனர் போலும்!
 
இராணுவம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு எமது மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட சொற்ப மீள்குடியேற்ற நிதியை இராணுவம் வேறிடத்தில் முகாம் அமைப்பதற்குச் செலவாக வழங்கும் வினோதம் இங்குதான் இடம்பெறுகிறது.
 
எமது மக்கள் வீதிக்கு விரட்டப்பட்டு அவர்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் வியாபாரங்களையும் செய்து வருகின்றது. பொருளாதார முக்கியத்துவம் மிக்க இடங்கள் இனம் காணப்பட்டு தென்னிலங்கை மக்கள் வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் மீன்பிடியில் ஈடுபடுவதற்கும் இராணுவம் ஊக்குவிக்கிறது. இராணுவம் முன்னர் இருந்த முன்னரங்க நிலைகள், மினி முகாம்கள் போன்றவற்றில் தாம் வணங்குவதற்கு என்று அமைக்கப்பட்ட புத்தர் சிலைகள், இராணுவம் அந்த இடங்களில் இருந்து வெளியேறிய பின்னரும் அகற்றப்படாமல் விடப்பட்டு பௌத்த விகாரைகளாக மாற்றப்படுகின்றன. இவற்றைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடாது என்றும் தமது பதவிகளுக்கு ஆபத்து வரக்கூடாது என்றுமே எமது தலைவர்கள் நினைக்கின்றனர்.
 
வலி வடக்கில் சிறிய துண்டு காணிகளை விடுவித்துவிட்டு, முல்லைத்தீவு என்ற ஒரு மாவட்டமே திட்டமிட்ட குடியேற்றங்களால் முற்றிலுமாக விழுங்கப்படுவதை தெரிந்தும் தெரியாததுபோல் உள்ளனர் எமது தற்போதைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர். வடகிழக்கில் தொல்பொருள் திணைக்களம், வன இலாகா, மகாவலி அபிவிருத்தி சபை ஆகியன பூர்வீக தமிழர் வாழ்விடங்களை எல்லாம் ஆக்கிரமிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் தற்போதைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்.
 
காணாமல் போனவர்களின் உறவுகள் வீதிகளில் பல வருடங்களாக போராடி வருகின்றனர். கண்துடைப்பு முயற்சியாக ஏற்படுத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அதிகாரமற்ற அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையை கடந்த செப்ரம்பர் மாதம் ஐ. நா மனிதவுரிமை சபையின் கூட்டத்தொடரை ஒட்டி அவசர அவசரமாக வெளியிட்டுவிட்டு இன்று உறங்கு நிலைக்குச் சென்றுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளி உலகுக்குக் குறைத்து காட்டுவதே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் ஒரே நோக்கமாகும். முறைப்பாடு செய்தோர் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளனர். பலர் முறைப்பாடே செய்யவில்லை. பலர் முறைப்பாடே செய்யமுடியாத அளவுக்கு குடும்பத்துடன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பலர் உயிருக்கு பயந்து புலம் பெயர்ந்துள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழு தனது ஆய்வில் இந்த மட்டுப்படுத்தல்கள் (Limitations) குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
 
மன்னார் ச.தொ. ச வளாக மனிதப் புதைகுழியில் இன்றுவரை குழந்தைகள் உட்பட எடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை இருநூறை எட்டியுள்ளது. அதேபோல வேறு பல இடங்களிலும் மனித புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சரியான முறையில் முகாமைப்படுத்தி சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கு எமது தலைவர்களுக்கு வக்கில்லை. அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் சலுகைகளுக்கும் சொகுசுகளுக்கும் அடிமைப்பட்டு விட்டார்கள்.
 
குறைந்த பட்சம் இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவின் ஊடாக ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகத் தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுவிக்க முடிந்திருக்கின்றதா? அரசியல் சாணக்கியம் பற்றி அடிக்கடி குறிப்பிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், 16 பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் வைத்துக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஏன் இதுவரை எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை. ஆகக்குறைந்தது வரவு செலவு திட்டத்தைக் கூட சாதகமாக பயன்படுத்தி கைதிகளின் விடுதலைக்கு முயற்சி செய்யாமல் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டங்களுக்கு ஆதரவாக தவறாமல் வருடா வருடம் வாக்களித்து வருகின்றார்கள். இவர்களின் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையிலேயே அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எமது பல்கலைக்கழக மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளையும் இடைநிறுத்தி வீதியில் இறங்கி போராடும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
 
போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேச மனித உரிமைகள் சபையின் கோரிக்கையை மேலும் பலப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கான காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. கால இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போகின்றது என்பதுதான் யதார்த்தம்.
 
ஆகவே, இன்றைய நெருக்கடியானதும் இக்கட்டானதுமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தி சிந்திக்கும்போது, ஒரு மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கி செயற்படும் நான்காவது தெரிவு அதிகாரமற்ற ஒரு இயக்கத்தின் வெறும் ஆதங்க வெளிப்பாடாகவே இருக்கும் என்று எனக்கு புரிந்துள்ளது. அதனால்த்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவர் மக்கள் இயக்கமொன்றை நான் முன்னெடுத்துச் செல்வதைத் தாம் வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
 
எனவேதான் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ் தேசிய கோட்பாடுகளின்பால் பற்றுறுதியுடன் இருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்கும் மூன்றாவது தெரிவே சிறந்ததும் அவசியமானதும் என்று உணர்கின்றேன். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல தமிழ் புத்திஜீவிகளும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் இது காலத்தின் அவசியம் என்றும் எனது கடமை என்றும் உணர்த்தியுள்ளதுடன் தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் சந்தித்த ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இந்த கோரிக்கையைத் தான் என்னிடம் விடுத்துவந்திருக்கின்றார்கள்.
 
ஆகவே நீங்கள் விரும்பியபடியே எனது அரசியல் பயணம் தொடரும். என்னை நம்பிய எனது மக்களுடன் இறுதிவரை வாழ்ந்து அவர்களுக்காகப் பணி செய்வது என்று முடிவுசெய்துள்ளேன். பதவியில் இருந்து தற்போது தற்காலிகமாக ஒதுங்கியிருப்பது எனது உடல் நிலையை வெகுவாக சீர்செய்யும் என்று எதர்பார்க்கின்றேன்.
 
வடமாகாண முதலமைச்சராக இருந்த காரணத்தினால் வரையறைகளுக்கு அமைவாக எனது செயற்பாடுகள் வட மாகாணத்துக்குள்ளாகவே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. கிழக்கு மாகாண மக்களுக்கு எந்த உதவிகளையும் என்னால் செய்யமுடியவில்லை. உரிமைகளுக்கான எமது போராட்டத்துக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் செய்துள்ள தியாகம் மற்றும் காத்திரமான வகிபாகம் ஆகியவற்றை நான் அறிவேன். அவர்கள் இன்று சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வருவதையும் நான் அறிவேன். அங்குள்ள சமூக தலைவர்கள், செயற்பட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்துதான் உருவாக்கவிருக்கும் புதிய அரசியல் கட்சியின் ஊடாகப் பணியாற்றுவதற்கு நான் உறுதி பூண்டுள்ளேன்.
 
தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகளை நான் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன். தமிழ்த் தேசிய கோட்பாடுகளின் வழிநின்று எமது இனத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலையை வென்றெடுத்து மேன்மையை அடைவதற்கு, மனித உரிமைகளை மதித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் சேர்க்க, இந்தக் கட்சிப் பயணம் உறுதுணையாக அமையும். இதற்கு “தமிழ் மக்கள் கூட்டணி” (Thamizh Makkal Kootanii – TMK) என்ற காரணப் பெயரை இட்டுள்ளேன்.
 
என் அன்புக்குரிய மக்களே! இது எனது கட்சி அல்ல. இது உங்களின் கட்சி. நீங்கள் வளர்க்கப்போகும் கட்சி. காலத்தின் அவசியத்தால் உதயமாகும் கட்சி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக இதுகாறும் நடந்திருந்தார்களேயானால் நான் ஓய்வு பெறப் போயிருப்பேன். ஒரு கட்சியை உருவாக்க என்னை கட்டாயப்படுத்தி விட்டார்கள் கூட்டமைப்பினர்! தமிழ் தேசிய கூட்டமைப்பை எந்த விதத்திலும் கூறு போட நான் விரும்பவில்லை. எனது குறிக்கோள்கள் சரி என்றால் மக்கள் என் பக்கம் சார்வார்கள். இல்லையேல் என்னை ஒதுக்கி விடுவார்கள். அது மக்களின் விருப்பம்.
 
எமது மக்களின் அரசியல், சமூக பொருளாதார மற்றும் கலாசார விடுதலைகளுக்கான ‘மக்கள் அரசியலை’ முன்னெடுக்கும் பொருட்டாக சில செயற்திட்ட முன்மொழிவுகளை இந்த சந்தர்ப்பதில் இறுதியாக முன்வைக்க விரும்புகின்றேன். இவை மேலும் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டும், விவாதத்துக்கு உட்படுத்தப்படவேண்டும், உபாயங்கள் வகுக்கப்படவேண்டும். அவையாவன –
 
1. கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள், முன் கோபதாபங்கள் , குரோதங்கள் , விரோதங்கள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு தமிழ் தேசிய கோட்பாடுகளுக்கு அமைவாக இணைந்த வடக்கு கிழக்கில் பகிரப்பட்ட இறையாண்மை அடிப்படையில் சமஷ்டி தீர்வு ஒன்றைக் காணும் எனது அரசியல் பயணத்தில் கைகோர்க்குமாறு அகத்திலும் புலத்திலும் உள்ள அனைவரையும் அழைத்து அரவணைத்து செயற்பட வேண்டும்.
 
2. இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை அக்கறையுடனும் இதய சுத்தியுடனும் பரிசீலிக்கும் எந்த அரசுடனும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தீர்வை அடையப் பாடுபட வேண்டும்.
 
3. அரசாங்கத்துடன் தடைப்பட்டுப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு உள்நாட்டிலும் சர்வதேச சமுகத்தின் ஊடாகவும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
4. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு குறுக்கு வழிகளை கையாளாமல் போர் குற்ற விசாரணைகள் மூலம் உண்மைகளை எமது சிங்களச் சகோதர்களுக்கு தெரியப்படுத்தி பரஸ்பர அவநம்பிக்கைகள் மற்றும் அச்சங்களை நீக்கி நிலையான சமாதானம் ஏற்பட சகல வழிகளிலும் பாடுபடுபட வேண்டும். இதற்காக சிங்கள புத்திஜீவிகள் , மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக மற்றும் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும்.
 
5. நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டின் மூலம் தனிப்பட்ட கட்சி நலன்களைப் புறந் தள்ளி மூலோபாய திட்டமிடலுடனான செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
 
6. அரசியலையும் அபிவிருத்தியையும் சம அளவில் சமாந்திரமாக கொண்டுசெல்லும் நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.
 
7. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புலம்பெயர் மக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் சுயசார்பு பொருளாதார நடவடிக்கைகளை ஏற்படுத்தி மீண்டும் அவர்களுக்கு வளமான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தும் பொருத்தமான ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
 
8. அரசியல் கைதிகள், காணமல் போனவர்கள் மற்றும் மக்களின் காணிவிடுவிப்பு போன்றவற்றுக்கு சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் உதவிகளுடனும் அரசாங்கத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலமும் தீர்வு காணும் நடவடிக்கைகளை மேலெடுக்க வேண்டும்.
 
9. இறுதி யுத்தத்தில் நடைபெற்றது இன அழிப்புத் தான் என்று வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலுப்படுத்த, மேலும் ஆய்வுகளைச் செய்தும் தரவுகளைத் திரட்டியும் சர்வதேச ரீதியாக அதனை ஏற்றுக்கொள்ளச்செய்தல் வேண்டும். இதற்குக் காலம் கனிந்து வருகின்றது என்பதே என் கருத்து.
 
10. உலகம் முழுவதிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி எமக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலமான ஒரு ஆதரவு சக்தியை உருவாக்க வேண்டும். எமது இனத்தின் இருப்பை உறுதிசெய்யும் எமது நியாயமான இந்த சுய பாதுகாப்பு போராட்டத்துக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கியமாக தமிழ் நாட்டில் வாழுகின்ற கோடிக்கணக்கான எமது மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற தமிழ்மக்களும், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் எம் தமிழ் மக்களும், சேர்ந்து அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியான ஒத்துழைப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்கவேண்டும் என்று இந்த சந்தர்ப்பதில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
 
மக்கள் தந்த ஆணைதான் எனது மனசாட்சியாக இதுவரை இருந்துவந்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குகள் தான் என் சக்தி. நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ என்னால் துரோகம் செய்ய முடியாது. இதனை என் பலம் என்பர் சிலர். சிலர் பலவீனம் என்பர். இது பலமா பலவீனமா என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும். ஒருபோதும் மக்கள் எனக்கு அளிக்கும் ஆணைக்கு விரோதமாக நடக்கமாட்டேன். மக்களின் ஆணைக்கு விரோதமாக நடந்துவிட்டு அதற்கு சாணக்கியம் என்றும் ராஜதந்திரம் என்றும் முகமூடிகளை அணிந்துகொள்ளமாட்டேன். எமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.
 
எனதினிய தமிழ் மக்களே! அகவை எண்பதில் இன்று காலடி எடுத்து வைக்கும் இந்த வயோதிபனை உங்கள் சேவகனாக்க முன்வாருங்கள். புதிதாக உதயமாகும் உங்கள் கட்சியைக் கையாள கனதத எம் மக்கள் ஒன்று திரள வேண்டும். இன்றுடன் அரசாங்கம் எனக்களித்த அதிகாரங்கள், சலுகைகள், சார்பான அனுசரணைகள் யாவும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படுவன. இப்பொழுது நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. என்னை உரியவாறு உருவாக்குவது உங்கள் பொறுப்பு! என்னை வளர்த்த தமிழ் மக்கள் பேரவைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய இறுதி உரை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2018 (வியாழக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
தெய்வேந்திரா ஐயர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
பேராசிரியர் சிவத்தம்பியின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - மேர்ஷி நிரோசினி சுரேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
தங்கனின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
புவியியலாளருக்கு உதவும் உராங்குட்டான்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதியாவின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (வல்வெட்டித்துறை)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சின்ன கடற்கரையோரம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதிசிவம் நினைவாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிலம்பாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதிவைரவ சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai