இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் நோய் தொற்று பரவாமல் இருக்க மக்கள் ஆரோக்கியமான சில வழி முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர்.
அதே போல குழந்தைகளை நாள் முழுவதும் வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைப்பதும் பலருக்கு பெரிய சவாலாக உள்ளது. எனவே அவர்களை நீண்ட நேரம் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த முடிவு செய்து குடும்பத்துடன் ஒன்று கூடி தாயம் விளையாட துவங்கி விடுகிறார்கள்.
தாயம் விளையாட துவங்கினால் பல மணி நேரம் அந்த விளையாட்டில் குழந்தைகளை ஈடுப்பாடுடன் வைத்திருக்க முடியும், மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் அணிகளாக பிரிந்து விளையாடுவதால் அணியை வெற்றி பெற வைப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
தாயக் கட்டை விளையாட்டில் யார் முதலில் தாயம் போட்டு விளையாட்டை துவக்குகிறார்கள் என்பதே சுவாரஸ்யம்தான். பல நேரங்களில் ஒரு மணி நேரம் போராடியும் தாயம் விழாமல், இடத்தை மாற்றி ஆளை மாற்றியெல்லாம் தாயம் விழவைக்க முயற்சி செய்வார்கள். கொரோனா ஊரடங்கின்போது பலர் இதை விட சுவாரசியமாக பல மணி நேரம் தாயக்கட்டை விளையாட்டில் பொழுதை போக்குகின்றனர்.
பொதுவாகவே தாயக்கட்டை, பல்லாங்குழி, கள்ளக்காய் போன்ற விளையாட்டுகள் விளையாடும்போது பலருக்கு தங்கள் நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு புரியும். பல விதமான கட்டங்கள் வரைந்து, புளியங்கொட்டைகள் பயன்படுத்தி விளையாடும் தாயமாக இருந்தாலும் சரி, பரம பதம் போன்ற விளையாட்டாக இருந்தாலும் சரி, எப்போது சறுக்கி விழுவோம், எப்போது தோல்வி நம்மை நோக்கி வரும் என்பதை கணிக்கவே முடியாது.
ஆனாலும் தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் முதலில் இருந்து விளையாட துவங்குவோம். அதையே வாழ்க்கையிலும் பின்பற்றபட வேண்டும் என்பதே இவ்வகையான பாரம்பரிய விளையாட்டுகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய சில நன்மைகள்.
ஒரு சில பாரம்பரிய விளையாட்டுகள் 90ஸ் கிட்ஸுக்கு தெரிந்திருந்தாலும், இன்று பலருடன் இணைந்து ஆன்லைனில் லுடோ விளையாடி மகிழ்வது 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என அனைவரும்தான். பலர் கூட்டு குடும்பமாக இல்லாமல், தனித்தனியாக வசித்து வந்தாலும் இணையத்தில் உள்ள லுடோ விளையாட்டில் உறவினர்கள் மற்றும் அனைத்து வயதினரும் ஒன்றாக விளையாடி மகிழ்கின்றனர்.
தாயக்கட்டை விளையாட்டு அனைவருக்கும் தெரிந்த பிரபலமான விளையாட்டு என்பது தான் இதற்கு காரணமா? அல்லது இது பாரம்பரிய விளையாட்டு என்பதால் இவ்வளவு சுவாரஸ்யமா என்பதை கணிக்க முடியவில்லை.
உண்மையில் நமக்கு அனைத்து பாரம்பரிய விளையாட்டுகளும் தெரியுமா? அல்லது சில விளையாட்டுகளை மறந்துவிட்டோமா? இன்னும் இருக்கும் சில ஊரடங்கு நாட்களில் நாம் என்னென்ன விளையாட்டுகளை விளையாட முயற்சி செய்யலாம் என்பதை பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் கிரீடா நிறுவனத்திடம் பிபிசி கேட்டறிந்து.
ஆடு புலி ஆட்டம்
இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் விளையாடப்படுகிறது. ஏனென்றால் பல இந்திய மொழிகளில் ஆடு, புலியின் பெயரை மொழி பெயர்த்தே இந்த விளையாட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டை பொறுத்தவரை 15 ஆடுகளுக்கு ஒரு வித காயும் 3 புலிகளுக்கு ஒருவித காயும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 3 புலிகள் இருந்தாலும் 15 ஆடுகள் ஒரு குழுவாக ஒன்று கூடினால் புலி போன்ற வலிமை மிக்க விலங்குகளிடம் இருந்தும் தப்ப முடியும் என்பதே இந்த விளையாட்டின் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ஒற்றுமையின் மாதிரி வடிவத்தை அடிப்படையாக கொண்டு இந்த பாரம்பரிய விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கொட்டாங்குச்சியின்(தேங்காய் ஓடு) மேல் கால் வைத்து சமநிலையில் நடப்பது.
இந்த விளையாட்டு இந்தியா உட்பட பல தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலம். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்திலும் இது முக்கியமான பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது.
கொட்டாங்குச்சியின் அடி பகுதியில் ஒரு கயிறு நுழையும் அளவு துளையிட்டு, அதில் நம் இடுப்பு அளவு கயிறை நீட்டமாக கட்ட வேண்டும். கொட்டாங்குச்சியின் துளைக்குள் கயிறை நுழைத்தவுடன் அதன் ஒரு புறத்தில் பெரிய முடிச்சி இடவேண்டும்.
அதாவது கயிறின் ஒரு புறத்தில் கொட்டாங்குச்சி தொங்க வேண்டும், முடிச்சி அவிழாத வகையில் இறுக்கமாக இருக்க வேண்டும். மற்றொரு புறத்தை உங்கள் கைகளில் பிடித்துக்கொள்ளும் அளவு நீட்டமான கயிறு தேவை.
இதே போல் இரண்டு கொட்டாங்குச்சிகளில் கயிறு கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு கொட்டாங்குச்சியின் மீது கால்கள் இரண்டும் வைத்து கயிறுக்கு ஒரு புறம் கட்டை விரலும் அதற்கு அடுத்த உள்ள விரலை கயிறுக்கு மற்றொரு புறமும் பொருத்திக்கொள்ள வேண்டும். கயிறின் மற்றொரு புறத்தை உங்கள் கைகளில் பிடித்துக்கொள்ள வேண்டும். தற்போது குதிகால் தரையில் படாத அளவுக்கு கொட்டாங்குச்சியின் மேல் உள்ள கயிறால் கால்களை இறுக்கி பிடித்துக்கொண்டு கயிரையும் விடாமல் மெல்ல விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும்.(BBC Tamil)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.