வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம், வடக்கில் இன்றும் மழை பெய்யலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2018 (புதன்கிழமை)
வங்காள விரிகுடாவில் வட மேற்குப் பகுதியில் நேற்று உருவாகியிருந்த தாழமுக்கம் (Low pressure) இன்று தீவிர தாழமுக்கமாக (Depression) மாறியுள்ளது என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் (India meteorological department) அறிவித்துள்ளது. நேற்றைய வடக்கின் சடுதியான காலநிலை மாற்றத்துக்கு இதுவே காரணம் என யாழ் பல்கலைக் கழக புவியியல் துறை அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் .
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இவ்விடயத்தில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கீழே படத்தில் இலங்கை கடற்பரப்பை சூழ ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படும் காற்றின் வேகம் மற்றும் கடலின் தன்மை என்பன காட்டப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.