பேர்த் ஸ்க்ரோச்செர்ஸ் இவ்வாண்டுக்கான பிபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது!
பிரசுரிக்கபட்ட திகதி: 28/01/2015 (புதன்கிழமை)
பேர்த் ஸ்க்ரோச்செர்ஸ் அணி 4 விக்கெட்களால் சிட்னி சிக்ஸர்சை தோற்கடித்து இவ்வாண்டு பிபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி தொடர்ச்சியாக இரண்டுமுறை சாம்பியானாகி சாதனை படைத்துள்ளது.
இன்றைய இறுதி ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. சிட்னி சிக்சர்ஸ் அணி சார்பாக கப்டன் மொய்ஸஸ் ஹென்றிகூஸ் மட்டுமே 57 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உட்பட 77 ஓட்டங்களை பெற்று இவ்விலக்கை அடைய உதவினார். பேர்த் ஸ்க்ரோச்செர்ஸ் அணி சார்பாக பிராட் ஹொக், ஜேசன் பெகெரோட்ரோஃப் கட்டுக்கோப்பாக பந்து வீசி தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அடுத்து 148 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பேர்த் ஸ்க்ரோச்செர்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷோர்ன் மார்ஷ் 59 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 73 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தியபோதும், இறுதி ஓவரில் ஒரு ரன் பெறப்பட்டால் வெற்றி என்ற நிலையில் இப்போட்டியுடன் ஓய்வுபெறும் பிரட்லி 4 வது , 5வது பந்தில் போல்ட் முறையில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி இறுதி ட்விஸ்ட் கொடுத்தார். எனினும் போட்டியின் இறுதிபந்தில் இலகுவான ரன் அவுட் சந்தர்ப்பத்தை துடுப்பாட்டத்தில் கலக்கிய சிட்னி சிக்சர்ஸ் அணி கப்டன் மொய்ஸஸ் ஹென்றிகூஸ் தவறவிட பேர்த் ஸ்க்ரோச்செர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக ஷோர்ன் மார்ஷும், போட்டித்தொடரின் ஆட்டநாயகனாக ஜக் கலிசும் தெரிவு செய்யப்பட்டனர். இறுதிப்போட்டியில் விளையாடிய பேர்த் ஸ்க்ரோச்செர்ஸ் அணியும், சிட்னி சிக்ஸர் அணியும் இவ்வாண்டு நடைபெறவுள்ள உலகளாவிய ரீதியில் உள்ளூர் சாம்பியன் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.