வடக்கில் மழை மீண்டும் அதிகரிப்பு - வானிலை அவதான நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2019 (புதன்கிழமை)
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.