லண்டனில் வல்வை மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த மந்திரக்கோல் ஓட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2014 (வெள்ளிக்கிழமை)
லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07/09/2014) வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
மேற்படி ஒன்றுகூடலில் இந்தமுறை ஒரு புது வித விளையாட்டை வல்வை மக்கள் தொடங்கியிருந்தார்கள். மிகவும் கலகலப்பான இந்தப் போட்டி அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.
ஆம்! அது தான் மந்திரக்கோல் ஓட்டப் போட்டி. என்னது? மந்திரக் கோலா? என நீங்கள் கேட்பது புரிகிறது.
இந்தப் போட்டியின் பின்னர், இதற்கு நாம் வைத்த பெயர் தான் மந்திரக்கோல் ஓட்டம். இனிமேல் கண்டிப்பாக இந்த மந்திரக் கோல் ஓட்டம் மிகவும் பிரபல்யம் ஆகும் என நம்பலாம்.
மூன்று அடி உயரமுள்ள சில குச்சிகள் நிலத்தில் நாட்டப்பட்டிருக்கும் (படத்தில் காண்க) இருப்பது மீட்டர் தொலைவில் இருந்து போட்டியாளர்கள் ஓடி வந்து இந்த மந்திரக் குச்சியில் அவர்களது நெற்றியை வைத்து 10 தடவைகள் சுற்ற வேண்டும். சுற்றியவுடன் அதே வேகத்தில் ஓட்டம் ஆரம்பித்த இடத்தை நோக்கித் திரும்பி ஓடி வரவேண்டும். அப்படி இவர்கள் ஓடினால் இப்ப என்ன நடக்கும் என்று நீங்களே ஊகித்துப்பாருங்கள்...
10 தடவைகள் தலைகுனிந்த நிலையில் சுற்றிவிட்டு உடனேயே ஓடினால் என்னாகும்? நேராக ஓடமுடியுமா? கடந்த கோடை விழாவின் உச்சக் கட்ட சிரிப்பொலி இந்தப் போட்டியில் தான். ஓடுபவர், நான் நேராகத்தான் ஒடுகிறேன் என ஓடுவார், ஆனால் அவர் ஓடுவது எல்லாம்.
நிறையக் குடித்து விட்டு குடிபோதையில் தள்ளாடும் ஆசாமி போல இங்கும் அங்குமாக ஓடி பார்வையாளர்களுக்குள் வந்து விழுந்து எழும்பி, அவர்கள் பட்ட பாடு இருக்கிறதே.. அப்பாடா அனைவரும் வயிறு நோக விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
இதை வரப்போகும் நிகழ்வுகளில் நீங்களும் செய்து பாருங்கள். சிரிப்புக்குப் பஞ்சமில்லாத ஒரு அட்டகாசமான விளையாட்டு.
முக்கிய குறிப்பு: தயவு செய்து குழந்தைகளை இந்த விளையாட்டில் சேர்க்கவேண்டாம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
smith (london)
Posted Date: September 13, 2014 at 00:18
good game...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.