கடந்த 26 ஆம் திகதி காலமான திரு.நடராசா வைத்திலிங்கம் அவர்களின் மறைவையொட்டி வல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் வாணி படிப்பகத்தினர் தமது இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளனர்.
வல்வையின் மூத்த பிரஜையும் அனைவராலும் வைத்தி அண்ணா ,வைத்தி அப்பா, வைத்தி மாமா என்று அழைக்கப்பட்ட வைத்திலிங்கம் அவர்களின் பிரிவுச்செய்தி எமை எல்லோரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி உள்ளது .இச்செய்தியை எமதெல்லோரது மனங்களும் ஏற்க மறுக்கின்றது. தமது சிறு பராயம் முதல் தற்போது வரை அனைவரது மனங்களிலும் குடியிருந்த ஒரு நல்ல மனிதர் ஆவார்.
வல்வையின் கல்வி வளர்ச்சியில் இவர் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காதவை. அந்த வகையில் குச்சம் வாணி படிப்பகத்தால் நடாத்தப்படும் மாலை நேர வகுப்புக்களை நடாத்துவதில் முனைப்புடன் செயலாற்றிய அவரது பிரிவு எமது நெஞ்சங்களை எல்லாம் பதற வைக்கின்றது என்றால் ஐயமில்லை.
மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியதோடு மட்டுமல்ல மாணவர்களுடன் நேரடியான தொடர்புகளை மேற்கொண்டு அவர்களின் தேவைகள் பற்றி கலந்துரையாடியதோடு எமது மாணவச்செல்வங்களின் நலனில் அக்கறையுடன் செயற்பட்ட ஒரு நல்ல மனிதர். கனடாவில் இருந்து கதைக்கும் நேரங்களில் எல்லாம் இளைஞர்கட்கு அவர் வழங்கும் நல்ல அறிவுரைகள் சிறப்பானவை. நாளைய சமுதாயத்தின் சிற்பிகள் நீங்கள் நல்ல முறையில் செயற்படுவதோடு நல்ல சேவைகளை வழங்க வேண்டும் என்றும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று கூறிய அந்த வஞ்சகமில்லா குரல் இன்றும் எல்லோர் மனிதிலும் குடியிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் கணணி வகுப்புக்களையும் நடாத்த வேண்டுமென்றும் நவீன உலகுக்கேற்ற வகையில் எமது மாணவச்செல்வங்களை தயார்படுத்த வேண்டுமென்றும் அதற்க்கு நான் எப்போதும் தயாராக உள்ளேன் அவற்றையெல்லாம் நல்ல முறையில் நடைமுறைப்படுத்துங்கள் என்று அவர் முனைப்புடன் கூறிய வார்த்தைகளை கண் முன் காணமல் எமை விட்டு பிரிந்தது எமை ஆழ்ந்த துயரில் ஆழ்த்துகின்றது.
இளைய சமூகத்துக்கு வழங்கிய ஊக்கப்படுத்தல்கள் இன்று எமது விளையாட்டு கழகம் மற்றும் படிப்பகத்தை நல்ல நிலையில் நாம் நடாத்தி செல்வதற்க்கு மிகப்பெரிய உந்து சக்தியாக வைத்தி அப்பா இருந்ததை நாம் மறக்கவே முடியாது.எமது விளையாட்டு கழகம் , படிப்பகம் என்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் மிகச் சிறந்த சேவையாற்றியத்தை மறக்கவே முடியாது.
இவரது கனவுகளை நனவாக்க முனைப்புடன் செயற்படுவோம். இவரது பிரிவுச்செய்தியை எமது உள்ளங்கள் ஏற்க மறுப்பினும் அன்னாரது பிரிவுத்துயரில் சிக்கித்தவிக்கும் குடும்பத்தினருக்கு சைனிங்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் வாணி படிப்பகம் சார்பில் எமதுஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
வையகம் வாழ்த்த வாழ்ந்த எமது வைத்தி அப்பாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்........