வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருவாதிரை உற்சவத்திற்கான அபிஷேகம் இன்று அதிகாலை 06.00 மணியளவில் ஆரம்பமாகி, பின்னர் சுமார் 07.00 மணியளவில் வசந்தமண்டபத்திற்கான பூசையைத் தொடர்ந்து நடராஜப் பெருமான் வீதி உலாவும், நடராஜர் திருக்கூத்தும் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையில் பல சிவன் கோவில்கள் இருந்த போதிலும், நடராஜர் திருக்கூத்து நடைபெறுவது ஒரு சில சிவன் கோவில்களில் மட்டுமே. அத்தகைய நடராஜர் திருக்கூத்து நடைபெறும் கோவில்களில், வல்வெட்டித்துறை சிவன் கோவிலும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விசேடமாக அமைக்கப்பட்ட பொறிமுறையுடன் கூடிய சகடையில் (manually operated car), நடராஜப்பெருமான் வீதி உலாவும் திருக்கூத்தும் சிறப்பாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
திருவாதிரை – சிறு விவரணம்
மார்கழி மாதம் தேவர்களின் வைகறை பூஜை நேரமாகும். அதனால் திருவாதிரையன்று நடராசருக்கு வைகறையில் அபிஷேகம் நடை பெறும். திருவெம்பாவை பத்து நாட்கள் நடை பெறும். பத்தாம் நாளான இன்று திருவாதிரைத் திருநாளில் நடராஜர் திருக்கூத்தும், வீதி உலா நடைபெறுவது வழமை.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியன்று கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனம் என்ற சிவபெருமானின் ஆனந்த திருநடன நன்னாள் ஆகும். நடராசருக்கு வருடம் ஆறு அபிஷேகம் நடைபெறுவது வழமை. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை, மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது.
ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் இலங்கையில் வடபால் அமைந்துள்ள காரைநகர்ச் சிவன் ஆலயத்திலும், இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள சிதம்பரத்திலும் மார்கழித் திருவாதிரை மிகச் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
சோ.செ.தெய்வச்சந்திரன் (Uk)
Posted Date: December 21, 2021 at 15:19
படங்கள் தரமானதாக உள்ளது. புகைப்படக்கலைஞனுக்கு நன்றிகள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.