முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் - நந்திக்கடல் எல்லைக்குட்பட்ட ஆழமற்ற களப்புப் பிரதேசம் விரைவில் ஆழமாக்கப்படும் என வடமாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவிற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன், சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் உறுப்பினர்களான லிங்கநாதன், அஸ்மின் மற்றும் ரவிகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக குறித்த பிரதேசத்தை பார்வையிட்டபின்னரே குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாகாணசபை கூட்டத்தொடரின் 7ஆவது அமர்வில் நந்திக்கடலின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆழமாக்குதல் தொடர்பில் பிரேரணை ஒன்று திரு.ரவிகரனால் முன்வைக்கப்பட்டிருந்தது. பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இதில் வட்டுவாகல் - நந்திக்கடல் பிரதேசத்தின் ஆழத்தை சுமார் 2 அடிக்கு அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் இறால் உற்பத்திகள் அதிகமாக இடம்பெறும் என நம்பப்படுகின்றது.
இதன் மூலம் புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞன் மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல், செல்வபுரம், கோயில் குடியிருப்பு, மணற்குடியிருப்பு, வண்ணாங்குளம், கள்ளப்பாடு, சிலாவத்தை, தீயோகுநகர், உணாப்பிலவு, முல்லை நகர், கரைச்சிக்குடியிருப்பு, வற்றாப்பளை, ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை போன்ற கிராமங்களிலுள்ள மீன்பிடியை நம்பி வாழும் குடும்பங்களும் பெரிதும் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நந்திக்கடல் பிரதேசம் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மிகவும் கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பேசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.