வல்வை தீருவில் பொதுப்பூங்கா – வல்வை நகரப் பகுதியையொட்டி அமைந்துள்ள ஒரேயொரு குறிப்பிடக் கூடிய பெரிய பொதுவெளி. மிகவும் பிரபல்யமான இப்பகுதி தற்பொழுது (கடந்த பல வருடங்களாக) வல்வை நகரசபையின் கீழ் உள்ளது.
வல்வையின் நகர்ப் புறத்தையொட்டி மக்கள் குடியிருப்புக்களின் நடுவே அமைந்துள்ள இப்பூங்காவானது, எதுவித பராமரிப்புக்களும் இன்றி பல குறைபாடுகளுடன் தொடர்ந்தும் காணப்பட்டுவருகின்றது.
பிரதான குறைபாடு – பாதுகாப்பு வேலி
பூங்காவை சுற்றி பூரணமான பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. இவ்வாறு பாதுகாப்பு வேலி அமைக்காது திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது பிரயோசனமற்றதாகவே தொடர்ந்து அமையும்.
அண்மைய திட்டம் – மரநடுகை
சில இலட்சங்கள் ரூபா செலவழித்து மரநடுகை அண்மையில் வல்வை நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. தற்பொழுது அவ்வாறு நடப்பட்ட ஒரு மரமும் காணப்படவில்லை.
பூங்கா உரியமுறையில் பாதுகாப்பு உட்படுத்தப்படாமல் மரநடுகை மேற்கொள்ளப்பட்டமை தவறு. மரங்கள் நடுகையின் பின்னர் பரமாரிக்கப்படவில்லை.
ஏனைய திட்டங்கள்
நடைபாதை அமைப்பு
சில மில்லியன்கள் ரூபா செலவழித்து நடைபாதைகள் தொகுதி ஒன்று 3 வருடங்கள் முன்பு அமைக்கப்பட்டது. மழை காலத்தில் பாவிக்கப் படமுடியாத ஒரு வடிவமைப்பாகவே இது அப்பொழுது அமைக்கப்பட்டது.
எவரும் குறித்த இந்த நடைபாதையை பாவிப்பதாக தெரியவில்லை. தற்போது நடைபாதையின் சில பகுதிகளில் புற்களாலும் சருகுகளாலும் பகுதியாக மூடப்பட்டுள்ளன.
சிறுவர் விளையாட்டு உபகரணங்கள்
பூங்காவின் மத்தியில் அமையப்பெற்றுள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்களில் ஒன்று கூட பாவிக்கக் கூடிய நிலையில் இல்லை.
சிறுவர்கள் எவரும் இங்கு வருகை தருவது இல்லை – சிறுவர்களைக் கவரக் கூடிய நிலையில் சிறுவர் பூங்காவும் இல்லை.
சூரிய சக்தி விளக்குகள்
இரவில் மின்னுவதற்காக பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி விளக்குகள், ஏன் பொருத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாக உணர முடியவில்லை.
இருக்கைகள்
பூங்காவுக்குள் போடப்பட்டுள்ள இருக்கைகளின் தரம் மிகவும் விசனத்துக்கு உரியவையாக உள்ளன. எவரும் இவற்றைப் பாவிப்பதாக தெரியவில்லை. இருக்கைகள் சீமெந்து மற்றும் கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டவையாகும்.
இவ்வாறான கட்டுமானங்கள் சாதாரணமாக (பாவனையின் போது) பல வருடங்கள் நீடித்து நிலைக்கக் கூடியவை. ஆனால் இங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் ஒரு சிறிய கால இடவெளியிலேயே தமது உறுதியை இழந்து சரிந்து தரங்கெட்டுள்ளன.
டெண்டர், பரிசோதனைகளின்..................... போதான குறைப்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன.
குப்பை மேடுகள்
பூங்காவின் வெளிப்பகுதிகள் பல குப்பைகள் கொட்டும் இடமாக விளங்கி வருவதை, ஆங்காங்கே கொட்டப்பட்டுவரும் குப்பைகளை பார்க்கும் போது தெளிவாகத் தெரிகின்றது.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளும் உரிய முறையில் அகற்றப்படுவதாகத்தெரியவில்லை.
சாக்கடை
பூங்காவின் பிரதான சீர்கேடு பூங்காவின் வட எல்லையில் உள்ள சாக்கடைதான். வட எல்லைக்கு வடக்காக உள்ள குடியிருப்புக்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல வருடங்களாக பூங்காவுக்கு உள்ளேயே விடப்படுகின்றது.
வெயில் காலங்களில் இது ஒரு சாக்கடையாகவும், மழை காலங்களில் வழிந்தோடி வரும் மழை வெள்ளத்தில் சாக்கடை நீர் கலந்துவருவதும் தோடந்து பல வருடங்களாக இடம்பெற்றுவருகின்றது.
குறித்த குடியிருப்புகளுக்கு உரிய வடிகால் வசதிகள் அமைத்துக் கொடுக்கப் படவில்லை. சாக்கடைக்கு உரிய மாற்றீடூம் இதுவரை முன் வைக்கப்படவில்லை.
நிம்மதியாகத் தூங்கும் நாய்கள்
அகழி - குளம்
அண்மையில் கல்லூரி மைதானத்தை உயர்த்துவதற்காக பூங்காவின் தென் கிழக்கு மூலையில் அகழி ஒன்று வெட்டப்பட்டது. உரிய அளவு முறைகள் இன்றி வெட்டப்பட்டுள்ளது போல் தோற்றமளிக்கும் இந்த அகழியானது ஒரு சிறு குளம் போல் தோற்றம் அளிக்கின்றது.
இதில் அல்லி மரங்கள் பூத்துக் குலுங்குவதும், நாரைகள் கொக்குகள் போன்ற பறவைகளின் இருப்பிடமாகவும் இது விளங்குகின்றது.
தீருவில் பொதுப் பூங்காவில் + ஆகவுள்ள ஒரே ஒரு விடயமாக இது ஒன்று தான் தற்பொழுது தென்படுகின்றது. ஆனாலும் இது பெரிதாக எவரையும் கவரவில்லை - கவரக் கூடிய வகையில் ஏற்பாடுகள் எதுவும் ஏற்படுத்தப்படவுமில்லை..
சீர்கேடுகள்
உரிய பாதுகாப்பு வேலி, பாதுகாப்பு பொறிமுறைகள் அற்ற நிலை காரணமாக மதுப் பிரியர்கள் சிலருக்கு இப்பூங்கா சிறந்த தொரு களியாட்ட இடமாக அமைந்துள்ளது.
மேற்குறித்தவை மேலோட்டமாகத் தெரியும் குறைபாடுகள் தான். இவை தவிர மேலும் பல குறைபாடுகள் உள்ளன.
தீருவில் பொதுப் பூங்கா கோடிட்டு காட்டுவது என்னவென்றால், எமது பகுதிகளில் பொதுப்பணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மிகச் சிறந்தாக அமையும் என்று கருதுவதற்கு இல்லை.
ஏராளமான பணம் விராயமாவதற்கு வாய்ப்புள்ளது.
இது பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மட்டத்தில் உரிய முறையில் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ச்சியான கண்காணிப்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டால் அன்றி, இங்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் திட்டங்கள் தீருவில் பூங்கா போல் முற்றுப்பெறாத குறைபாடான திட்டங்களாகவே அமையும் என்பது திண்ணம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
சி..சிவநேசன் (Srilanka)
Posted Date: April 27, 2021 at 17:01
தீருவில் பொது பூங்கா பற்றிய குறிப்புகள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.சில வருடங்கள் முன்பு நகரசபையால் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.அதில் நகரசபைக்கு ஒரு தொகை பணம் வந்திருப்பதாகவும் ,அதை எப்படி செலவழிப்பது என்றும் விவாதம் நடைபெற்றது.
பணம் செலவழித்து ஒரு நிபுணர் வந்திருந்தார்.அவர் தீருவில் மைதானத்தின் மத்தியில் குன் றுகள், நீரோடை கள், நீர் வீழ்ச்சிகள் எல்லாம் அமைக்கலாம் என்று கதை கட்டி கொன்டிருந்தார்.
நான் அப்பொழுது கூறினேன் தீருவில் பூங்கா அமைக்கும் அந்த இடத்தில் மாலை நேரத்திற்கு பிறகு ஒருவரும் வரமாட்டார்கள் சமூக விரோதி கள் மாத்திரம் காணப்படுவார்கள் என்று கூறி தேன்.
நான் அந்த இடத்தில் ஒரு Indoor Badminton court போடலாம் என்று கூறி தேன் . ஒருவரும் அதை கவனத்தில் கொள்ள வில்லை.
Saba Rajendran (Sri Lanka)
Posted Date: April 27, 2021 at 11:42
தீருவில் பொதுப்பூங்காவின் இன்றைய நிலைபற்றி கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. யார் காரணம் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை மக்களும் அவர்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகளும்தான் காரணம். நகரசபை பிரதிநிதிகள் தாம் கொண்ட ஆர்வத்தினால் பூங்காவை அழகு படுத்துவதற்கான பல திட்ட்ங்களை ஆரம்பித்தார்கள். ஆனால் ஆர்வக்குறைவினாலோ அல்லது வசதியின்மையினாலோ சரியாகப் பராமரிக்க முடியவில்லை. அதற்காக அவர்களைக் குறை கூறிக் கொண்டிருப்பதுடன் நில்லாமல் வல்வெட்டித்துறை பொதுமக்களும் குறிப்பாக சமூக ஆர்வலர்களும் இன்றைய நிலைமையை மாற்றியமைக்கும் பொறுப்பை எடுக்கவேண்டும். எமதூரின் வளர்சசிக்காக வெளிநாடுகளில் வசிக்கும் வல்வையர்கள் பெரும் தொகையான பணத்தை வருடாவருடம் அனுப்பி வருகிறார்கள். அத்துடன் ஊரில் வசிப்பவர்களும் உதவுகிறார்கள். இந்தப் பணத்தில் ஒரு சிறு பகுதியைக்கொண்டு பூங்காவை மிகவும் அழகாக, மக்கள் பாவிக்கக்கூடியதான இடமாக மாற்றி அமைக்கலாம். தீருவில் பூங்கா அழகு படுத்தும் திடடமாடேன் என்ற பெயரில் நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கலாமா?. பண உதவி செய்ய விரும்புவர்களும் சிரமதான உதவி செய்ய விரும்புபவர்களும் அங்கத்தவர்களாக சேரலாம். இது பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு ஆர்வமுள்ள வல்வையர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - கலாநிதி சபா இராஜேந்திரன்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.