இப்பத்தியின் நோக்கம் மற்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் ஆழப்படர்ந்திருக்கும் இந்துத்துவத்தின் சிறப்புக்களை ஆவணப்படுத்துவதே நோக்கமாகும்.
இந்துதுவம் வல்வையின் வாழ்வியலாய்
“இந்துத்துவம்” இந்துக்களுக்கே உரியதாகிய – இந்து மதத்திற்கே – உரித்தான உயர்நெறிகளின் சிந்தனை. இந்துத்துக்களின் நல்வாழ்வுக்கான நற்சிந்தனை. இச்சிந்தனையின் வசப்பட்டே இந்துதுக்களின் நல்லொழுக்கம் – மனித நேயத்திற்கான ஒழுக்கநெறிகள் யாவும் வெளிப்பட்டுத்துலங்குகின்றன. இந்துக்களின் வாழ்வியல் அம்சங்கள் யாவும் – சமயரீதியிலான சிறப்பியல் யாவும், இந்துத்துவம் என்ற புனித சொல் அமைப்பினுள்ளே ஆழ்ந்து – அடங்கித் திகழ்கின்றன.
இந்துத்துவம் பல்வேறுபட்ட சமயத் தத்துவங்களிலிருந்தும் வாழ்வியல் அம்சங்களிலிருந்தும் வேறுபட்டது – மாறுபட்டது – தனித்துவமானது. இந்துப்பண்பாட்டின் நிலைக்களானாகத் திகழும் எமது பிரதேசத்தின் ஊர்கள் யாவும் இந்துத்துவத்தின் மதிப்பினை உரியமுறையிலே பேணிக்காப்பதிலே சிறந்து விளங்குகின்றன. இவ்வகையில் எம்மூரைப் பொறுத்த வரையிலே, எம்மவர்கள் இந்துத்துவத்தைப் பேணிக்காப்பதில் முன்னோடியாகத் திகழ்கின்றனர். இந்துத்துவத்தின் பண்பாட்டு விழுமியங்கள் யாவும் பல்வேறு வடிவங்களில் ஊற்றெடுத்துப் பாய்கின்றன – பாய்ந்து பொலிகின்றன.
வல்வையிலே மேற்கொள்ளப்படுகின்ற – முன்னெடுக்கப்படுகின்ற சமய நிகழ்வுகள் யாவும் – வாழ்வியல் நிகழ்வுகள் பலவும் இந்துத்துவத்தின் பாரம்பரியத்தின் அடிப்படியிலேயே திகழ்கின்றன. கலை கலாச்சார நிகழ்வுகள் – விளையாட்டு நிகழ்வுகள் என்பனவும் ஒவ்வோர் தன்மையில் இந்துத்துவத்தின் அடிசார்ந்தனவே. எம் ஊரில் ஊற்றெரடுத்துப் பாயும் பண்பாட்டுக் கோலங்கள் உயர்நெறிகளின் வெளிப்பாடுகள் யாவும் இந்துத்துவத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்துத்துவப் பாரம்பரியத்திற்கு கெளரவம் கொடுப்பானவாகவே அமைந்துள்ளன.
எம் ஊரிலே மேற்கொள்ளப்படுகின்ற சமயம் சார் நிகழ்வுகள் யாவும் – புனித நிகழ்வுகள் யாவும் – எம்மூர் ஆலயங்களை முதன்மைப்படுத்தியே மேற்கொள்ளப்படுகின்றமை உளம் கொள்ளக்கூடியதாகும். எம்மவரின் வாழ்க்கையில் ஆலயங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வியல் அம்சங்களாக விளங்குகின்றன.
ஆலயங்கள், வேதாகமங்கள், குரு – சீட பாரம்பரிய முறைகள் என்ற மூன்று பலம் வாய்ந்த தூண்களிலேயே இந்து மதம் வலிமையுடன் திகழ்கின்றது. இவற்றையொட்டியே எம்மவரின் ஆன்மீகமும் வளர்ச்சி அடைகின்றது, நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன. இறையருள் வேண்டுதல், தியானம், ஆலயங்களிலும் இல்லங்களிலும் வழிபாடுகள், தன்னலமற்ற சேவை, தாராள சிந்தையிலான கொடை, விழாக்கள் என்பன இந்துத்துவத்தின் அடிப்படை அம்சங்களாக்கும்.
ஆலயங்கள் இறைவனின் பரிசுத்தமான இல்லங்களாகவே கருதப்படுகின்றன – நோக்கப்படுகின்றன.
எம்மூரைப் பொறுத்தவரையில் சிறியனவும் பெரியனவாகவும் அமைந்துள்ள தன்மையில் இருபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள், ஆங்காங்கே அமைந்துள்ளன. இவ்வாலயங்களின் அமைப்புக்க்கேற்ற தன்மையில், சகல ஆலயங்களிலும் நாளாந்த அபிடேக பூஜைகள், மகோற்சவங்கள், அலங்கார உற்சவங்கள், விரதகால பூசை வழிபாடுகள், விசேட விழாக்கள், விசேட தினங்கள், பண்டிகைகள், அபிடேக ஆராதனைகள் யாவும் அவ்வக் காலங்களிலேயே உரிய முறையிலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவையாவும் ஆகம விதிகளுக்கு அமைவாதனாவாகவும், இந்துதுவத்தின் இயல்பினை வெளிப்படுதுவதாகவும் அமைந்துள்ளன.
வல்வையாம் எம்மூரின் ஆலயங்களின் மகோற்சவங்கள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தீர்த்தோசவத்துடன் நிறைவெய்தும். சிறியனவாய் அமைந்துள்ள கொடித்தம்பம் இல்லாத ஆலயங்களிலே பெரும்பாலும் அலங்கார உற்சவங்கள் மேற்கொள்ளப்படும். கொடித்தம்பம் இல்லாத தன்மையில் கொடியேற்றம் என்ற புனித நிகழ்வு நடைபெறாவிடினும் கொடியேற்றத்துக்கான கிரியா நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாலயங்களிலே பத்து நாட்கள் உற்சவங்களே நடைபெறும். மகோற்சவகாலத் திருவிழாக்கள் யாவும் பஞ்சகிருத்திய முறையிலான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் உணர்த்தும் வகையிலே அமைகின்றமை கருத்திற் கொள்ளக்கூடிய தாகும். மகோற்சவ கால மகோற்சவ கால இறுதித் திருவிழாவாகத் தீர்த்தோற்சவம் அமையும்.
தீர்த்தோற்சவ தினத்தில் ஆலய மூலமூர்த்தி, ஆலய பரிவார மூர்த்திகளுடன் வல்வை ஊறணி தீர்த்தக் கடற்கரை சென்று சமுத்திர தீர்த்தம் ஆடுவர். தீர்த்த்ம் ஆடித்திரும்பும் பொழுது, நெடியக்காடு மோர் மடத்திலே சிறந்த முறையிலே பூரண கும்பம் அமைக்கப் பெற்று சிறந்த முறையிலே வரவேற்பளிக்கப்படும். அங்கிருந்து புறப்பட்டு ஆலயம் வரும் வரையில் வீதிகளிலே பூரணகும்பங்கள் வைக்கப்பெற்று, மங்கள நிகழ்வுகளும் மேற்கொள்ளப்ப்டும். வல்வை நகர் வீதியிலே ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பெற்று அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும்.
தீர்த்தம் ஆடியபின்பு மூர்த்திகள் ஆலயம் திரும்பியதும் உரிய கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு கொடியிறக்கம் நிகழும். கொடியிறக்கத்தைத் தொடர்ந்து ஆசாரிய உற்சவம் நடைபெறும். இதன் பொழுது கோவில் தர்மகர்த்தா சபையினர், பக்தர்கள் (அடியார்கள்) யாவரும் ஒருங்கிணைந்து உற்சவங்களை மேற்கொண்ட ஆசாரியரை வணங்கி, அவரை ஆசனத்தில் அமர்த்தி, தட்சணை கொடுத்து, அவரால் ஆசீர்வதிக்கப் பெற்று, அவரை அழைத்துச் சென்று, அவரை அவரது இல்லத்தில் விட்டுச் சென்று திரும்புவார். ஆசாரியரை அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றவர்களுக்கு, ஆசாரியார் வீட்டிலே உரிய முறையிலே கெளரவம் அளித்தல் ஒரு சிறப்பம்சமாக அமையும்.
இந்த நிகழ்வுகள் யாவும் இந்துத்துவம் சிறப்பித்துக் கூறும் குரு – சீட மரபு வழியிலான வழக்கத்தை வெளிப்படுத்துவதாக அமையும்.
மகோற்சவத் திருவிழாக்கள், வருடாந்த உற்சவங்கள் தவிர்ந்த நவராத்திரி விரதகாலப் பூசை, விழாக்கள், திருவெம்பாவை, திருவாதிரைப் பூசைகள், விழா, விசேட தினங்கள், ஆகியனவும் எம்மூர் ஆலயங்களிலே மேற்கொள்ளப்படும் விசேட விழாக்களாகும். திருவெம்பாவை இறுதி நாளான திருவாதிரைத் திருவிழா நடராஜருக்கான திருவிழாவாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். வல்வையிலே கோவில் கொண்டருளிய வாலாம்பிகா சமேத வைத்தீஸ் வரப்பெருமான் நடராஜர் வடிவத்திலே ஆனந்தத் தாண்டவம் ஆடும் நிகழ்வு ஓர் அற்புதமான நிகழ்வாக அமைவது மனங்கொள்ளத்தக்கதாகும்.
நடராஜர் வடிவம் இறைவனின் பஞ்ச கிருத்தியமாம் ஐந்தொழிகளை உணர்த்தும் வடிவமாகும். இந்துத்துவம் புகழ்ந்து பேசும் இறைவனின் ஓர் ஒப்பற்ற வடிவம்.
மேலைத் தேசங்கள், கீழைத் தேசங்களிலே உள்ள சித்திர, ஓவிய, சிற்ப வல்லுனர்கள் “நடராஜர் வடிவம் அமத்தற்கு அரிய வடிவம்” என்று கூறி வியப்பது எம்மால் உணரப்படவேண்டியதாகும்.
உயிர்களின் இதயம் துடித்துக் கொண்டிருப்பதும் நடராஜப் பெருமானின் திருத்தாண்டவ நடனத்தின் செயற்பாடே என்று கூறி நிற்கின்றனர். “ஆட்டு வித்தால் ஆரொருவர் ஆடாதரே” என்று சிவஞானிகள் கூறிப் போந்தனர். இவையும் இந்துத்துவம் சுட்டி உணர்த்திடும் ஞான வெளிப்பாடுகளே.
ஆலயங்களிலே நிகழ்திடும் பூசைகள், விழாக்கள் யாவும், இவற்றுடன் கூடிய பூசை நிகழ்வுகள் யாவும் இந்து மாத ஆசாரியார்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. பூசைகள் ஆரம்பமாவதற்கு முன்பும், பூசை நிகழ்வின் பொழுதும் ஓசை ஒலிகளை எழுப்பும் கண்டாமணியின் ஒலிகளும் பூசை வழிபாடுகளை நிகழ்த்தி அமையும் குருமார்கள் தாங்கியுள்ள மணிகளின் ஓசைகளும் ஆலயங்களிலே கரந்துறையும் அசுரர்களை ஆலயத்தினின்றும் விரட்டி – அகற்றி வானோர்களையும் தெய்வாம்சம் பொருந்திய தேவர்களையும் அழைப்பதெற்கென இந்துத்துவம் குறிப்பிடுகின்றது.
ஆலயங்களிலே இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
தேவர்கள் ஆலயங்களுக்கு வந்து பக்தர்களை ஆசீர்வதிப்பதாகவும் இந்து மதம் கூறி நிற்கின்றது. மனித குலத்திற்குரிய உன்னதமான சேவை, மனித இதயத்தை கசிந்திடச் செய்து, மனிதனை நிறை அன்பின் பாற்செலுத்தும் உன்னதமான சேவை அன்னதானம் வழங்குதலே. இறைபணிகளுள் முக்கியமான பணி அன்னதானம் வழங்குதலே. பசித்தோர் புசித்திட அன்னம் வழங்கி அவர்களுடைய பசியினைப் போக்குவதே அன்னதானம் வழங்குதலின் நோக்கம். எம்மூரிலே திருவிழாக் காலங்களிலும், விசேட தினங்களிலும் அடியார்களுக்கு – ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்படுகின்றமை இந்துத்துவம் உணர்த்திடும் ஒரு புனித நிகழ்வாகும்.
சந்நிதி வேலன் திருத்தலம், வாலம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், நெடியகாட்டுத் திருச்சிற்றம் பலப்பிள்ளையார் ஆலயம், கப்பலுடையார் ஆலயம், ஆதி வைரவர் ஆலயம், புட்கரணி பிள்ளையார் ஆலயம் என்பவற்றுடன் சிறியனவாக அமைந்துள்ள ஏனைய எம்மூர் ஆலயங்களிலும் திருவிழாக் காலங்களிலும், விசேட தினங்களிலும் அன்னதானம் வழக்கங்கப்படுவதும் இந்துத்துவத்தின் ஒரு சிறப்பு அம்சமே.
கடவுளுக்கும் மனிதனுக்கும் பொருந்தும் தன்மையிலான தன்னலமற்ற ஒரு புனித காரியம் இறைபணியாகவே போற்றப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது.
எம்மிடம் அமைந்துள்ள “நான் – எனது” என்னும் செருக்கினை அடக்கி, ஆணவத்தை மென்மையாக்கி தெய்வீகத்திடம் செலுத்தும் ஒரு கருவியாகப் பார்க்கப்படுகினறது. வழிபாட்டிற்க்காக ஆலயம் செல்லும் எம்மவர்கள் மிகவும் ஆசார சீலர்களாகவும் பக்திமான்களாகவுமே செல்வார்கள். எம்மூர் ஆலயங்களைப் பொறுத்தவரையிலே எவரும் ஆலயங்களுக்குள் மேலங்கியுடன் செல்வதில்லை. இது எம்மூர் ஆடவர்களால் காலகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு புனித காரியமாகும். மகனிடம் திலகம் எனப்படும் புனித சின்னத்தினை நெற்றியிலே தரித்துக்கொள்ளத் தவறுவதில்லை.
சமய ரீதியில் கலை கலாச்சார இலக்கிய நிகழ்வுகள் விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றின் நிகழ்வுகளும் இந்துத்துவம் உணர்த்தி நிற்கும் மங்கள விளக்கு ஏற்றுதல், பக்திப்பண்ணோடு இசைத்தல், திலகம் வழங்குதல், என்பவற்றை பேணிப் பாதுகாப்பதிலே வல்வையர்கள் முன்னோடியாக இருக்கின்றார்கள். விழாவின் ஆரம்பநிகழ்வுகளாக இவை மேற்கொள்ளப்படுகின்றன. இவையும் இந்துத்துவம் சுட்டி நிற்கும் வாழ்வியல் அம்சங்களே. இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் தினங்களிலே “பூரண கும்பம்” “வைக்கப்படுவது எம்மூர் பண்பாட்டுக் கோல நிகழ்வே. மற்றும் திருமண நிகழ்வுகள், குழந்தைகளைத் தொட்டிலில் இடுதல் என்பனவும் இந்துத்துவம் உணர்த்தி நிற்கும் பாரம்பரிய நிகழ்வுகளுடனேயே மேற்கொள்ளப் படுகின்றன. எம்மூரின் சிறப்பு நிகழ்வுகள் யாவற்றிலும் பிள்ளையாருக்கு முதன்மை கொடுப்பது எம்மவர்களின் பாரம்பரிய வழக்கமாகவே மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவையும் இந்துத்துவம் சொல்லும் வாழ்வியல் அம்சங்களே.
இவ்வாறாம் தன்மைகளில் இந்துமதம் சுட்டி உணர்த்தும், “”இந்துத்துவம்” இந்து மதத்தின் வாழ்வியல் ரீதியிலான அம்சங்கள் யாவற்றையும் இந்து மதத்தினருக்கு ஏற்புடைய தன்மையில், ஆழமாக – அகலமாக வெளிப்படுத்துகின்றமை இந்து மதத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
எம்மூரில் மேற்கொள்ளப்படும் சமய ரீதியிலான நிகழ்வுகள், கலை கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுக்கள் தொடர்பான நிகழ்வுகள் என்ற தன்மையில் யாவற்றையும் வெளிப்படுத்தி அமைந்திடும் தன்மையில் “இந்துத்துவம்” வல்வையின் வாழ்வியலாய் அமைந்து எம் மூரவர்களுடன் – எம்முடன் பின்னிப்பிணைந்து நிற்கின்றது.