வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2016 (வியாழக்கிழமை)
“சிதம்பரா சாரணீயம் ”எனும் பழங்கதைத் தலைப்பில் சிதம்பராவின் சாரணீய வளர்ச்சி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதால் இங்கே சாரணீய விபரம் எதுவும் மேலதிமாகக் கூறப்படவில்லை. ஆனாலும் ஒரு விடயத்தை ஆதாரமாகக் கொண்டே இந்தப் பழங்கதை எழுதப்பட்டுள்ளது.
1969, 1970, 1971 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக “ அகில இலங்கையிலும் சிறந்த சாரணா் குழு ” எனும் விருது பெற்றமையைக் சிறப்பிக்கும் முகமாக 1971 ல் ஒரு சாரணா் விழாக் கொண்டாட்டமும் ஒரு சஞ்சிகை வெளியீடும் இடம் பெற்றது. அன்று வெளியிடப்பட்ட சாரணர் சஞ்சிகையில் வெளியான நம்மவர்களின் விளம்பரங்கள் அன்றைய (46 வருடங்களின் முன்னா் ) சந்தியையும் சந்திச் சுற்றாடலில் இருந்த கடைகளின் அமைப்பையும் ஓரளவு தெளிவாக்கி நிற்கின்றன. அந்த சஞ்சிகையில் வெளி வந்த விளம்பர விபரங்கள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது.
1.“லிங்கம்ஸ் எலெக்றிக்கல்ஸ்”
இதன் உரிமையாளா் கதிர்காமலிங்கத்தின் மகன் சற்குணலிங்கம்.நெடியகாடு அற்புதலிங்கத்தின் சகோதரா்.இவா் தற்சமயம் வெளிநாட்டில் உள்ளார். நவீன சந்தையின் 2ம் கட்ட விஸ்தரிப்புக்குக் கிழக்காக கணபதிப்பிள்ளை விதானையார் இருந்த ஒழுங்கை உள்ளது. அதன் அருகே வடக்குப் பார்த்தபடி தற்போது லோன்றியாக உள்ள கடையே “லிங்கம் எலெக்றிக்கல்ஸ்” இருந்த இடமாகும். அந்நாளில் மின் பொருட்களின் விற்பனைக்காக இருந்த ஒரே இடம் இது.
2.“சண்முக விலாஸ்”
சிதம்பராவுக்கு முன்பாக சிற்றம்பலம் தேனீர் கடை. அதற்குக் கிழக்கே இருந்த பழைய கடையும் - வீடும் “ அப்பா கடை ” எனப்பட்டது. அந்த வீட்டின் ஒரு பகுதிதான் “சண்முகம் இன்டஸ்றீஸ்” அமைந்திருந்த இடம். இன்று அந்த இடம் வெறும் காணியாக உள்ளது.“சண்முகம் இன்டஸ் ரீஸ் ” எனும் பெயருக்கு ஏற்றபடி அங்கே பலவிதமான தயாரிப்புகளைப் பெறமுடிந்தாலும்
“ சண்முகவிலாஸ் ” சீவல் பாக்குக்கு தனி மவுசு உண்டு. “சண்முகா கிறைன்டிங் மில்ஸ்” எனும் பெயரில் அரிசி, மிளகாய், தானிய வகைகள் அரைத்துக் கொடுக்கும் தொழிலும் இங்கே நடைபெற்று வந்தது. இதன் உரிமையாளா் திருச்சிற்றம்பலம் சண்முக சபாபதிப்பிள்ளை ஆவார்.பெயா் நீண்டுவிட்ட காரணத்தால் தி.ச.சபாபதிப்பிள்ளை எனப் பெயரைச் சுருக்கிக் கொண்டார். இவா்
“கணக்கு வாத்தியார்” எனப்படுகின்ற தி.கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்), வேம்படியில் பலசரக்குக் கடை வைத்திருக்கும் தி.செல்வசபாபதிப்பிள்ளை (செல்லப்பு) ஆகியோரின் மூத்த சகோதரராவார். இவா் ஒரு “நெருப்புப்பெட்டி ” காரில் ஓடித்திரிந்ததை அந்நாளில் அனைவரும் பார்த்திருப்பார். அதே கார் – அவரது பிள்ளைகளால் முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு - இன்றும் ஊரில் இடைக்கிடையேஓடித்திரிவதைப் பார்க்கலாம்.
3.“இந்திராணி – ஐஸ் தொழிற்சாலை”
ஆலடிக்கு மேற்காக – வீதிக்கு வடக்காக – ஆலடியிலிருந்து 100 மீற்றா் தூரத்தினுள் – தற்போது சுவா் வைக்கப்பட்டுள்ள வெற்றுக் காணியே “ குமரகுரு வாடி ” என அழைக்கப்பட்டு வந்த “ இந்திராணி ஐஸ் தொழிலகமாகும் ”. வாசலோடு அலுவலகம் - நடுப்பகுதியில் ஐஸ் சேமிப்பறை – பிற்பகுதியில் ஐஸ் உற்பத்தியாகும். இடம் என இருந்த இடங்கள் அனைத்தும் வன்செயலில் அழிந்து போய் தற்போது வெற்றுக் காணியாக உள்ளது.
தொண்டைமனாறு முதல் - வெற்றிலைக் கேணி வரை உள்ள கரையோர மீன் வாடிகளுக்கு ஐஸ் விநியோகம் செய்யும் ஒரே ஸ்தாபனமாக ஒரு காலத்தில் இருந்தது இது. இதைவிட மீன் பெட்டிகள் கருவாட்டுச் சிப்பங்கள் ஆகியன ஐஸ் வாடியிலிருந்து தினமும்மாலை வேளைகளில் கொழும்புக்கு லொறிகளில் ஏற்றி அனுப்பும் இடமாகவும் ஐஸ் வாடி இருந்தது. இதன் உரிமையாளா் A.S.குமரகுரு ஆவார். இவா் யோகநாயகி தியேட்டா் உரிமையாளரான எட்வேட் தங்கவடிவேல் – யோகர், மௌனா் ஆகியோரின் சகோதரராவார்.A.S.குமரகுரு, முகாந்திரம் அப்புக்குட்டியாபிள்ளையின் ஒரே மகள் “ இந்திராணி ” யைத் திருமணஞ் செய்து – அப்பக்காத்தர் ஒழுங்கையில் வசித்து வந்தவா்.
இந்திராணி ஐஸ் தொழிற்சாலை இருந்த காணி தற்போது ஆதிசக்தி வி.கழகத்தின் வசம் உள்ளது. ஆதிகோவிலுடன் தொடர்புபட்ட ஸ்தாபனங்களின் பன்முகத் தேவைக்கும் இந்த இடம் பயன்படுத்தப்படவுள்ளதுள்ளது.
4.“கலாநிதி ஸ்ரோர்ஸ்”
இன்றைய நவீன சந்தையின் மேற்குப் புற கடைத் தொகுதியில் (வல்வை சனசமூக சேவா நிலையத்தைப் பார்த்தபடி) 05ம் இலக்கக் கடை உள்ள இடத்தில் மாடிக்கட்டிடமாக அமைந்திருந்ததுவே “கலாநிதி ஸ்ரோர்ஸ்” எனப்படுகின்ற பல சரக்குக் கடையாகும். ஒரு காலத்தில் யானைமார்க் குளிர்பானங்களின் விநியோகத்தர்களாகவும் “ கலாநிதி ஸ்ரோர்ஸ் ” இருந்தது. இதன் உரிமையாளரான N.தணிசைலம் என்பவா் காட்டுவளவு குறுக்கு ஒழுங்கையின் கடைசி மாடி வீட்டினில் குடியிருந்தார். இவரது மூத்த மகளான ‘ கலாநிதி ’ யின் பெயரிலே நிறுவனம் இயங்கி வந்தது. இவரது மகன் “ திருக்குட்டி ” வெளிநாட்டில் உள்ளார்.
5.“தியாகராஜா ஸ்ரோர்ஸ்”
“ ஸ்ரோர்ஸ் ” என்பது ஒரு பலசரக்கு சாமான்கள் விற்பனை செய்யும் இடத்தைப் பெரும்பாலும் குறித்த போதும், “ தியாகராஜா ஸ்ரோர்ஸ் ” - என்பது புடவை வகைகள் - றெடிமேட் உடுப்புகள் முதலானவை விற்பனை செய்யும் இடமாகவே இருந்தது. சந்தியில் வல்வை ச.ச.சே நிலையபழைய கட்டிடத்தை நெருக்கியபடி மேற்காக உள்ள S.V.நடராஜாவுக்குச் சொந்தமாகவிருந்த கடைகளில் முதற்கடையே “தியாகராஜா ஸ்ரோர்ஸ்” இருந்த இடமாகும். தற்சமயம் அந்த இடத்தில் “ அமிர்தச்சோலை ” எனப்படும் ஐஸ் கிறீம் கடை நடைபெற்று வருகிறது. உடு.வீதியில் மருதடியில் தற்போது மாதுஜன் கிளினிக் இயங்கி வரும் இடத்திலேயே “ தியாகராஜா ஸ்ரோர்ஸ் ” உரிமையாளரான மாணிக்கத்தியாகராசா வசித்து வந்தார். தனது பிற்காலத்தில் சிலகாலம் உடுப்பிட்டியிலும் வசித்து வந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
6.“எஸ்.கே.திருச்சிற்றம்பலம் அன்ட் சன்ஸ்”
தற்போது சந்தியில் மின்மாற்றி உள்ள இடம் “ கந்தப்பா பேப்பர் கடை ” இருந்த இடம். அதற்குக் கிழக்காக இருந்த “ கிட்டங்கிக் கடையே ” பிரபல பலசரக்குக் கடையான “S.K.திருச்சிற்றம்பலம் அன்ட் சன்ஸ்” கடை இருந்த இடமாகும். இதன் உரிமையாளரான S.K.திருச்சிற்றம்பலம் – வேம்படி ஒழுங்கையில் முதல் வளைவின் மூலையில் – மேற்குப் புறமாக உள்ள வீட்டில் குடியிருந்தவா். இவா் சத்தியமூா்த்தி ஆசிரியரின் (பெண்கொடுத்த ) மாமனாராவார்.திருச்சிற்றம்பலத்தின் காலத்தின் பின்னா் அவரது மகனான தி.இரத்தினவடிவேல்,அவரது மருமகனான மாணிக்கம் இரத்தினவடிவேல் இருவரதும் நேரடி நிர்வாகத்தில் பெரிய அளவில் பலசரக்குக் கடை நடைபெற்று வந்தது.
அத்துடன், அந்நாளிலேயே இவர்கள் மண்ணெண்ணை விற்பனைக்கான உரிமம் பெற்றவா்களாக இருந்தமையால் – கடையில் வைத்துப் பெருமளவு மண்ணெண்ணெய் வியாபாரம் செய்ததுடன், ஒற்றைத் திருக்கல் (மாட்டு ) வண்டியில் ஒழுங்கை ஒழுங்கையாக – வீடு வீடாக மண்ணெண்ணை வியாபாரமும் செய்து வந்தனா். சங்கக் கடைகள் வருவதற்கு முன்பு அனுமதிக்கப்பட்ட தனியார் கடைகளில் கூப்பன் புள்ளிக்கு அரிசி – சாமான் பெற்றுக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. 25 சதம் பெறுமதியான ஒரு கூப்பன் புள்ளிக்கு வாரத்திற்கு 11/2 கொத்து (கொத்தால் அளந்து ) கடகப் பெட்டியில் வாங்கிச் சென்றமை பசுமையாக நினைவில் நிற்கிறது.
திருச்சிற்றம்பலத்தின் பேரப் பிள்ளைகளின் நிர்வாகத்தில், இன்றுங்கூட, நெடியகாடு பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக – வீதிக்கு மேற்காக – இவா்களது மண்ணெண்ணை குதம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
7.“கதிர் ஸ்ரோர்ஸ்”
இல:- 1 இல் ஏற்கனவே சொல்லப்பட்ட சற்குணலிங்கத்தின் தம்பியே “கதிர் ஸ்ரோர்ஸ்” உரிமையாளரான “ கதிர்காமலிங்கம் அமிர்தலிங்கம் ” ஆகும். ஊறணி வைத்தியசாலைக்கு மேற்காக உள்ள - தற்போது சேதமடைந்த வீட்டின் கராஜ் பகுதியில் - இந்த கடை இயங்கி வந்தது. பால் மாவகைகள், சாய்ப்புச் சாமான்கள், மருந்து வகைகள், எனப் பல பொருட்களுடன் கோழித்தீன் விற்பனையே இக் கடையின் பிரதான விற்பனைப் பொருளாக இருந்தது. ஒரு குறித்த காலத்தின் பின்னா், இந்த “ கதிர் ஸ்ரோர்ஸ் ” சந்தியை அண்மித்த பகுதிக்கு இடம் மாறியது. தற்போதைய நவீன சந்தைக் கட்டிடத்தின் மரக்கறி சந்தைக்கு எதிரே உள்ள “ மதுஷி போன் ” கடையிருக்கும் இடத்திலேயே “ கதிர் ஸ்ரோர்ஸ் ” பின்னா் நீண்ட காலம் இயங்கி வந்தது.
8.“ T.P. தர்மராஜ் – வலைக்கடை”
தற்போது சந்தியில் உள்ள பெரிய இரும்புக் கடையின் தென்மேற்கு மூலையில் தெற்கு நோக்கியபடி இயங்கி வந்தது “ T.P தர்மராஜ் வலைக்கடை ”.ஏற்றத்தடியில் தெற்காக உள்ள வீட்டின் உரிமையாளரான பொன்னம்பலம் ஒரு காலத்தில் மீன்பிடி இலாகாவில் வேலை செய்து வந்தவா். இவரே வலைக்கடையின் உரிமையாளராக இருந்த காரணத்தால் இவா் “ வலைக்கடை பொன்னம்பலம் ” என்றே பொதுவாக அழைக்கப்பட்டு வந்தார். பின்னாளில் நீண்ட காலம் ஊறணி வைத்தியசாலையின் மேற்காக பேக்கரி ஒன்றும் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவரது மூத்த மகன் “ தர்மராஜ் ” பெயரிலேயே வலைக்கடை இயங்கி வந்தது. நூல்,வலை, தூண்டல் முதலான கடற்றொழிலோடு சம்மந்தப்பட்ட அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.
கடையின் பொறுப்பாளராக விற்பனையாளராக - காசாளராக - மனேஜராக ஏகமும் கடமை புரிந்தவா் “ கார்த்தி அண்ணா ” எனப்படுகின்ற குச்சம் ஒழுங்கையைச் சேர்ந்த வெங்கடாசலம் கார்த்திகேயன். “ வல்வை புளூஸ் ” இனது உச்ச கட்ட காலமது. வல்வை புளூஸின் “ இயங்கும் அங்கத்தவர்களால் ” பிரதான முடிவுகள் எடுக்கப்பட்ட இடமாகவும் வலைக்கடை இருந்து வந்ததுவும் குறிப்பிடத்தக்கது.
9.“அ.குழந்தைவடிவேல் – புத்தக வியாபாரம்”
“ கலைச்சோலை புத்தக நிலையம்” ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னா் அன்றைய நாளில் பாடசாலைப் புத்தகங்கள் – எழுது கருவிகள் ஆகியனவற்றை விற்பனை செய்யும் இடமாக – மாணவர்களின் தேவையைப் பூரணமாக நிறைவு செய்து வந்த ஸ்தாபனமே “A.K பிரதர்ஸ்” எனப்படுகின்ற “அப்பு அண்ணா” புத்தகக் கடை. இலவச பாடப் புத்தக விநியோகத்திற்கு முன்னா் அனைத்துப் புத்தகங்களையும் “அப்பு அண்ணா” கடையில் மட்டுமே மாணவர்களால் பெற முடிந்தது. பாடசாலைப் புத்தகங்கள் உட்பட சைக்கிள் உதிரிப் பாகங்கள் கைப்பந்து – கால்பந்து எனப் பல தரப்பட்ட பொருட்களின் விற்பனை நிலையமாகவும் “அப்பு அண்ணா” வின் வியாபாரம் விரிந்திருந்தது.
சந்தி ஒழுங்கைக்குக் கிழக்காகத் தற்போது “மின்மாற்றி” உள்ள இடம்“கந்தப்பா பேப்பர் கடை” அருகே கிழக்காக S.K.திருச்சிற்றம்பலம் – பலசரக்குக் கடை. அருகே வெல்டிங்கடை (யானை நடந்த கதையில் வரும் யானை உருவாகிய இடம் ) அருகே “மெத்தைக் கடை” எனப்பட்ட “அப்பு அண்ணா கடை” இதன் உரிமையாளா் காட்டுவளவில் குடியிருந்த அ.குழந்தைவடிவேல் எனும் “அப்பு அண்ணா” இவரது பிள்ளைகளான “அ” எனப்படுகின்ற அருணாசலம், கருணைதாஸ், யோகதாஸ் ஆகியோர் வெளிநாடுகளில் உள்ளனா்.
நவீன சந்தையில் வடக்குப் பார்த்தபடியான V.K.போன் கடைக்கு எதிரே, வீதிக்கு வடக்காக பெரிய வேம்பு மரம் உள்ள காணியே “அப்பு அண்ணா” வின் புத்தக கடை இருந்த இடமாகும்.
10.“ E.M.V. Stores ”
இதன் உரிமையாளா் E.M.விஸ்வலிங்கம் அப்பாவாகும்.ஆசிரியா் M.V.இரத்தினவடிவேல், சுகாதார பரிசோதகா் M.V சண்முகவடிவேல் ஆகியோரின் தந்தையாரே விஸ்வலிங்கம் அப்பா. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள – வீதிக்குக் கிழக்காக – அவர்களது சொந்த காணியிலும், பின்னா் – ஊரிக்காட்டில் உள்ள M.V.இரத்தினவடிவேல் ஆசிரியரின் வீட்டோடு இணைந்தபடியுள்ள கடையிலும் “E.M.V.STORES” இயங்கி வந்தது.
“Lanka Filling Station” என்பது இன்றும் சந்தியை அண்மித்தபடி சிவபுர வீதியில் இயங்கி வரும் எரிபொருள் நிரப்பு நிலையமாகும். நீண்ட காலமாக M.V.சண்முகவடிவேலின் நிர்வாகத்திலும், பின்னாளில் அவரது பிள்ளைகளின் நிர்வாகத்திலும் இயங்கி வந்த எரிபொருள் நிரப்பு நிலையம் – தற்போது பரு.ப.நோ.கூ சங்கத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
11.“மகேஸ்வரி பேக்கரி”
தீருவில் ஒழுங்கையில் முதல் வளைவுக்கும் - இரண்டாவது வளைவுக்கும் இடையே ஒழுங்கைக்கு மேற்காக இயங்கி வந்ததுவே “மகேஸ்வரி பேக்கரி” ஆகும். “தீருவில் குட்டியா் ” எனப்படுகின்ற கு.கதிர்காமத்தம்பி என்பவரே இதன் உரிமையாளராகும். நீண்ட காலமாக திருச்சியில் வசித்து வரும் அருமைச் செல்வத்தின் தந்தையாரே இவா். அந்நாளில் பாடசாலைகளின் மதிய இடைவேளையின் போது கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வந்த இலவச பணிஸ் விநியோகத்தினை மேற்கொண்டதில் முன்னிலை வகித்தவா்கள் “மகேஸ்வரி பேக்கரி” யினா் என்பது குறிப்பிடத்தக்கது.
12.“ரஞ்சனா தியேட்டர்”
தற்போதைய மக்கள் வங்கி அமைந்துள்ள இடமருகே ஒரு மதவு உண்டு. மதவிலிருந்து 100 மீற்றா் தூரத்தினுள்ளே வீதிக்கு மேற்காக இருந்ததுவே இந்த “ரஞ்சனா தியேட்டர்” வல்வெட்டியைச் சேர்ந்தவா்களே இந்த ஸ்தாபனத்தின் உரிமையாளர்களாக இருந்த போதும், அடுத்தடுத்து தியேட்டரின் மனேஜா் பொறுப்பிலிருந்தவா்கள் நம் ஊரவா்களேயாகும். யாழ்ப்பாணம் – நெல்லியடி தியேட்டர்களில் ஓடி முடிந்த தரமான M.G.R, சிவாஜி படங்களெல்லாம் ரஞ்சனாத் தியேட்டரில் ஓடிப் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தின.
13.“விஷ்ணு ஹாட்வெயா் ஸ்ரோர்ஸ்”
தற்போது உடு வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இலங்கை வங்கி இயங்கி வரும் இடமே “விஷ்ணு ஹாட்வெயா் ஸ்ரோர்ஸ்” இருந்த இடமாகும். கடையும் –கடைக்குப் பின்புறமாக உள்ள வீட்டினதும் சொந்தக்காரரான பிரபல வா்த்தகா் அ.சி.விஷ்ணுசுந்தரத்திற்கு சொந்தமான இந்த கட்டிடத்திலேயே “ ஹாட்வெயா் ஸ்ரோர்ஸ் ” இயங்கி வந்தது.
ஒரு புதிய வீடு அமைப்பதற்கு வேண்டிய சகல இரும்புச் சாமான்கள், சீற்வகைகள், காங்கேசன் சீமெந்து ஆகியவற்றை முழுமையாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய இடமாக இந்த ஸ்தாபனம் இயங்கி வந்தது. இந்த இடத்தின் பின்புறமாக உள்ள விஷ்ணு சுந்தரத்தின் வீடு தற்போது தபாற் கந்தோராக இருந்து வருகிறது. 2011 ல் வெளியிடப்பட்ட ஈழத்துப் பூராடனாரின் “வல்வெட்டித்துறைக் கடலோடிகள்” எனும் புத்தகத்தினை உருவாக்கித் தந்த அருள்சுந்தரம் என்பார் விஷ்ணுசுந்தரத்தின் மகனாவார். அருள்சுந்தரம் தற்சமயம் கனடாவில் வசித்து வருகிறார்.
பருத்தித்துறை வீதியில் அ.மி.பாடசாலைக்கு அண்மித்ததாக வீதிக்கு வடக்காக – தற்போது “ஆனந்தா மருந்தகம்” இயங்கி வரும் இடத்திற்குக் கிழக்காக உள்ள கடையே “பாலசுப்பிரமணியம் ஹாட்வெயா் ” இருந்த இடமாகும். ஒரு முழுமையான இரும்புக் கடைக்கான சகல சாமான்களுடன் மோட்டார் உதிரிப் பாகங்களும் – சைக்கிள் உதிரிப் பாகங்களும் இங்கே விற்பனை செய்யப்பட்டுவந்தன.இந்தக் கடையின் உரிமையாளரான மு.பாலசுப்பிரமணியத்தின் மகள் கடைகளுக்குப் பின்புறமுள்ள வீட்டில் குடியிருக்கிறார்.
15.“மனோகரா தேயிலை”
கொண்டைக்கட்டை ஒழுங்கையின் ( அல்லது அ.மி.பாடசாலையின் ) இரண்டாவது வளைவுக்கும், மூன்றாவது வளைவுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒழுங்கைக்குக் கிழக்காக இருந்த வீடுதான் “மனோகரா தேயிலை” விற்பனையின் மைய இடமாக இருந்தது. மலையகத்திலிருந்து தேயிலையை மொத்தமாக எடுத்து வந்து இங்கே வைத்து பைக்கற்றுக்களில் அடைத்து, வாகனத்தில் குடாநாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஐந்து சதத்திற்கான சிறிய பைக்கற் தேயிலை தொடக்கம், பெரிய பைக்கற்றுக்கள் வரை “ மனோகரா தேயிலை ” பைக்கற்றுகள் பல்வேறு அளவுகளிலும் கிடைத்தன. தற்போது கனடாவிலுள்ள பிரபல சட்டத்தரணியான கனக மனோகரனின் தந்தையாரான கனகராசாவே “ மனோகரா தேயிலை ” ஸ்தாபனத்தின் உரிமையாளராக இருந்தவராகும்.
16.“ஸ்ரீ மனோன்மணி பேக்கரி”
சீவரெத்தினம் பேக்கரியின் உரிமையாளராகவிருந்த க.சி.சீவரெத்தினத்தின் தயார் பெயரான ஸ்ரீ மனோன்மணியின் பெயரிலேயே ஒரு காலத்தில் பேக்கரி இயங்கி வந்தது. குறிப்பிட்ட காலத்தின் பின்னரே “சீவரெத்தினம் பேக்கரி” எனப் பெயா் மாற்றம் பெற்றது. க.சி.சீவரெத்தினம் என்பவரே இதன் உரிமையாளராவா். சீவரெத்தினத்தின் மருமகனான “வீ.பாலேந்திரதாஸ்” என்பவரால் இன்றும் மதவடி ஒழுங்கையில் சீவரெத்தினம் பேக்கரியின் தரமான பாண் – பணிஸ் – கேக் வகைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
17.“ஜெகஜோதி பேக்கரி”
தீருவிலைச் சேர்ந்த கு.ச.தங்கராசா என்பவா் உரிமையாளராக இருந்த “ஜெகஜோதி பேக்கரி” நெடியகாடு பிள்ளையார் கோவிலின் தெற்கு வீதியில், கிணற்றுக்குத் தென்புறமாக இயங்கி வந்தது. பாண் – பணிஸ் – கேக் வகைகளுடன் பிஸ்கற் தயாரிப்பில் “ஜெகஜோதி பேக்கரி ” யினா் முன்னிலை வகித்தார்கள். பின்னாளில் பேக்கரி உரிமையாளர் கு.ச.தங்கராசாவின் மைத்துனரான பேரம்பலம் சத்தியமூர்த்தி என்பவரின் நிர்வாகத்தில் பேக்கரியின் தயாரிப்புகள் தொடர்ந்தன.
18.“கலைச்சோலை”
1971ல், மெத்தைக்கடை A.K.பிரதர்ஸ் உரிமையாளரான அப்பு அண்ணாவின் வழி காட்டலுடன் ஸ்தாபிக்கப்பட்ட “கலைச்சோலைபுத்தக நிலையம்” ஆரம்ப காலத்தில் மீன் சந்தை ஒழுங்கைக்குக் கிழக்காக – பிரதான வீதியருகே இயங்கி வந்தது. பாடசாலை மாணவா்களுக்கு இலவச புத்தக விநியோகம் ஆரம்பிக்க முன்னா், புத்தகங்கள் – பயிற்சிகள் அனைத்தையும் வெளியேயே வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் மாணவர்களுக்கு இருந்தது. அத்துடன் மாணவர்களுக்குத் தேவையான – எழுது கருவிகள் உட்பட அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் – “ கலைச்சோலை ” யில் பெற்றுக் கொள்ள முடிந்தது. இது தவிர தினசரிப் பத்திரிகைகள், தமிழக வாராந்த – மாதாந்த சஞ்சிகைகளின் விற்பனை காரணமாக “கலைச்சோலை” எந்த வேளையும் ஒரு பரபரப்பான இடமாகவே இருந்து வந்தது.
நவீன சந்தை கட்டப்பட்ட பின்னர் சந்தைக் கட்டிடத்தின் மேற்குப் புறத்தில் 3ம் இலக்க கடைக்கு “கலைச்சோலை” இடம் மாறியது. 1988, 1989 ல் இரு தடவைகள் கடை எரியூட்டப்பட்ட பின்னர், நவீன சந்தையின் வடகிழக்கு மூலையில் – ரேவடி ஒழுங்கையைப் பார்த்தபடி – “கலைச்சோலை” சில காலம் இயங்கி வந்தது. நவீன சந்தை திருத்தி அமைக்கப்பட்ட பின்னர் 2010 முதல் நவீன சந்தைக் கட்டிடத்தின் 3ம் இலக்க கடையில் தற்போதும் இயங்கி வருவதுகுறிப்பிடத்தக்கது.
19.“சமுத்திரா திரேட்ஸ் லிமிட்டெட்”
சந்தியிலிருந்து 200 மீற்றா் தூரத்தினுள்ளே – உடுப்பிட்டி வீதியில் T.S.நாகரத்தினத்தின் மாடி வீட்டின் கீழ் பகுதியில் உள்ள கடையில் இயங்கி வந்தது. “சமுத்திரா திரேட்ஸ் லிமிட்டெட் ” பேர்க்கின்ஸ் உதிரிப்பாகங்கள், மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள், கடற்தொழிலுக்கான வெளி இணைப்பு யந்திரங்கள் - அவற்றின் உதிரிப் பாகங்கள் என்பன இந்த நிறுவனத்தின் முக்கிய விற்பனைப் பொருள்களாக இருந்தன. சந்தி ஒழுங்கையிலும், பின்னா் மயிலிதனையிலும் வசித்து வந்த செல்லையா காஞ்சிமாவடிவேல் இந்த நிறுவனத்தின் உரிமையாளராவார். செ.காஞ்சிமாவடிவேல் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.