இது பழங்கதையல்ல……. நேற்று முன்தினம் நடந்த புதியகதை. “ மகோதயம் ” - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2016 (புதன்கிழமை)
இது பழங்கதையல்ல……. நேற்று முன்தினம் நடந்த புதியகதை.
“ மகோதயம் ” -
வல்வையூா் அப்பாண்ணா
இவ் வருடத்தின் தை மாத அமாவாசை தினம், திங்கட்கிழமையும் – திருவோண நட்சத்திரமும் – “ வியாதீபாத யோகம் ” என்பவற்றுடன் இணைந்து வந்ததால் “ மஹோதய புண்ணிய காலம் ” எனும் சிறப்பைப் பெறுகிறது.
( மேற்படி தை மாத அமாவசை, திரிவோண நட்சத்திரம், “ வியாதீபாத யோகம் ” ஆகியவை ஞாயிற்றுக் கிழமைகளில் இணைந்து வந்தால் அது “ அா்த்தோதய புண்ணிய காலம் ” எனப்படும் ) மேற்குறித்த சிறப்பான புண்ணிய காலத்தில் சுவாமிகள் கடலில் தீா்த்தமாடுவதைப் பார்க்கும் நமக்கும் பெரு நன்மைகள் கிட்டும். அன்றைய தினத்தில் இறைபணியை மேற்கொண்டு இம்மை – மறுமை பேற்றினைப் பெறுவோம்.
31.01.1938, 01.02.1965, 06.02.1989, 08.02.2016 ஆகிய தினங்களில் “ மகோதய புண்ணிய காலம்” வந்ததைப் பஞ்சாங்கங்கள் மெய்ப்பிக்கின்றன. இப் புண்ணிய காலம் “ 144 வருடங்களுக்கு ஒரு முறை, ” 60 வருடங்களுக்கு ஒருமுறை ” மட்டுமே வரும் எனும் கூற்றினை சோதிட விற்பன்னா்களே நமக்கு விளக்கிக் கூற வேண்டும்.
இப்போது நாம் நேற்று முன்தினம் ( 08.02.2016 ) ஊரில் நடைபெற்ற “ மகோதய புண்ணிய கால ” தீா்த்த விழா பற்றிப் பார்ப்போம்.
நேரம் சரியாக அதிகாலை 3.05. சிவன் கோவில் மணி ஓசையைத் தொடர்ந்து, அம்பாள், வயலூா் முருகன், புட்டணிப் பிள்ளையார், ஆதிவைரவா், கப்பலுடையவா் என ஒவ்வொரு மணிச்சத்தமும் தொடர்ந்து ஒலித்து ஓய்ந்தன. வழமைக்கு மாறான இந்த அதிகாலைப் பொழுதின் மணிச் சத்தங்கள் கேட்டு அனைவரும் துயிலெழுந்தனா்.
நேரம் சரியாக 4.00 மணி. மகோதய நன்னாளின் அதிகாலைப் பொழுது எப்படி இருக்கிறது என ஊறணி மடம் வரை சென்று பார்த்தேன்.வழி நெடுகிலும் – வீதிகளைக் கூட்டிப் பெருக்கி – நீா் தெளித்து - தெருவினைப் புனிதமாக்கும் பணியில் அனேகமான பெண்கள் ஈடுபட்டிருந்தனா். வேம்படி வரவேற்புக் குழுவினா் வேம்படியிலும், நெடியகாடு மோர் மட வரவேற்பு குழுவினா் – மோர் மடத்திலும், ஊறணி மடத்திலுமாக மூன்று இடங்களிலும் காப்பி வழங்குவதற்கான முன் ஏற்பாடுகள் விரைந்து நடந்து கொண்டிருந்தது.
நேரம் சரியாக 4.45 மணி. 1) புட்டணி பிள்ளையார் – எலி வாகனத்திலும், 2) சிவன் – வெள்ளி ரிஷபத்திலும், 3) அம்பாள் – வெள்ளிச் சிங்கத்திலும், 4) ஆதிவைரவா் – வெள்ளி நாய் வாகனத்திலும் ஆரோகணித்து பிரதான வீதிக்கு வருகின்றனா். தீா்த்தம் முடிந்து திரும்பி வரும் போது, எந்த சுவாமியும், அம்பாள் வடக்கு வீதிக்கு வராதாகையால், வடக்கு வீதியில் உள்ளவா்கள் தீா்த்தத்திற்கு புறப்படும் இந்த நேரத்திலேயே நிறைகுடம் வைத்து வழியனுப்பி விடுகிறார்கள்.
மதவடியில் 5) கப்பலுடையவா் – எலிவாகனத்திலும், வல்வெட்டியில் இருந்து வந்த 6) வன்னிச்சி அம்பாள் – வெள்ளி சிங்க வாகனத்திலும், சிவபுர வீதியால் வந்து இணைந்து கொண்ட 7) வயலூா் முருகன் – மயில் வாகனத்திலுமாக சுவாமிகளின் வரிசை கிழக்கு நோக்கி முன்னேறியது. றெயின்போஸ் மைதானம் அருகாக, சி.கு.ஒழுங்கையால் ( காந்தி வீதி ) 8) ஸ்ரீ சித்திவிநாயகரும் லட்சுமி நாராயணனும் இணைந்தபடியாக தண்டிகைத் தொட்டியிலும், 9) வேவிற்பிள்ளையார் –யானை வாகனத்திலும் வந்து பிரதான வீதியில் சுவாமிகளின் அணிவகுப்பில் இணைந்து கொண்டன.
வீதியை மூடிப் போடப்பட்டிருந்த நெடியகாடு மோர் மட பந்தலினை அண்மித்தபடி இந்த வரிசை அப்படியே காத்திருக்க, நெடியகாட்டுப் பிள்ளையார் வீதிக்கு வந்து அனைவருக்கும் வழி காட்ட ஏனைய சுவாமிகள் அனைத்தும் கீழ்க்காணும் ஒழுங்கில் (வந்த ஒழுங்கில் சில மாற்றங்களை ஏற்படுத்தி ) மிக நெருக்கமாக அணிவகுத்தன. 1) நெடியகாடு பிள்ளையார் 2) வேவில் பிள்ளையார் 3) லட்சுமி நாரயணா் 4) கப்பலுடையவா் 5) புட்டணி பிள்ளையார் 6) சிவன் 7) அம்பாள் 8) வன்னிச்சி அம்மன் 9) வயலூா் முருககன் 10) ஆதிவைரவா்.
சிறிய சிறிய மின்பிறப்பாக்கிகள் மூலம் அளவாக ஒளியூட்டப்பட்ட சுவாமிகள் வரிசையாக – நெருக்கமாக வந்த காட்சியினை – மகளிர் விளையாட்டு மைதானத்தின் வடகிழக்கு மூலையில் நின்று பார்த்த போது…. ஆஹா!.... அதை எப்படிச் சொல்வேன்… அற்புமான காட்சி…. ஆனந்தமான தரிசனம். பிறவிப் பயன் என்பது இதுதானோ! ஊர்வலத்தில் சென்றவா்களுக்கு இந்த அழகு புரியாது.தூர நின்று தரிசித்தவா்களுக்கே இந்தமாயம் புரியும்.அவரவா் இஷ்ட தெய்வங்களோடு மகோதய தீா்த்தமாடப் புறப்பட்டு வந்த பக்தா்கள் சிலா் – பலராகி ஒன்று கூடி கிழக்கு நோக்கி வீதி நிறைந்த கூட்டமாக முன்னேறினா்.
கடலில் எமது இடுப்புக்கும் மேலாக நின்றிருந்த அமாவசை வெள்ளத்தில் 10 சுவாமிகளும் ஒரே வரிசையில் வடக்கு நோக்கி நின்றபடி அஸ்திர தேவா்களுக்கு அபிஷேகம் நடைபெற்று சரியாக 6.30 க்கு எல்லாச் சுவாமிகளுக்கும் பஞ்சதீபம் காட்டப்பட்டதுடன் மகோதய புண்ணிய காலத் தீா்த்தம் நிறைவுக்கு வருகிறது. சுவாமிகள் கரையேறின. தீா்த்த மண்டபத்தில் நடுவே சிவன், இடதுபுறம் அம்பாள், வலதுபுறம் நெடியகாடு பிள்ளையார், கிழக்குப் பக்கமான விறாந்தையில் வேவிற் பிள்ளையார் அமர்ந்திருந்தனா். கிழக்கப் பக்கமாக (தரைப் பகுதியில் ) புட்டணிப் பிள்ளையார், வேவிற் பிள்ளையார், லக்சுமி நாராணயன், மண்டபத்தின் இடதுபுறமாக (மேற்காக) தரைப் பகுதியில் வன்னிச்சி அம்மன், வயலூா்முருகன், ஆதிவைரவா் தத்தமது சகடைகளின் மீதமா்ந்தபடி பக்தர்களுக்கு தரிசனம் தந்தனா். பக்தர்களும் தத்தமது விருப்பப்படி அர்ச்சனை செய்து மனநிறைவு பெற்றனா்.
ஊறணித் தீா்த்த மடம் பஸ் சாரதியாக இருந்த சிற்றம்பலம் சந்திரசேகரம் (சந்திரா்) குடும்பத்தாருக்கு உரித்தானது. சுண்ணாம்பு கட்டிடத்திற்கான பழைய மடம் இடிக்கப்பட்டு, இப்போதுள்ள கற்கட்டிடம் 1969ல் கட்டப்பட்டது. வடக்குப் பார்த்தபடியான மூன்று சுவாமிகள் அமரக்கூடிய விஸ்தாரமான மண்டபமும், மேற்காக – உட்புற வாசலும், தெற்கே ஒரு வாசலும் கொண்ட ஒடுக்கமான சிறிய அறையும் (குருக்கள்மார் உடை மாற்றுவதற்கான ) கிழக்கே மங்கள வாத்தி யக்காரா் அமா்ந்து வாசிப்பதற்கு வசதியாக ஒரு விறாந்தைப் பகுதியும், பிரதான வீதிப்பக்கமாக (தெற்கு ) மோர் – நீராகாரம் வழங்கக்கூடியதான நீண்ட விறாந்தைப் பகுதியையும் கொண்டுள்ளது.
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார்
இந்த தீா்த்த மடம் கற்கட்டிடமாகக் கட்டப்பட்டு ஆண்டுகள் 47 கழிந்து விட்ட நிலையில் கட்டிடப் பகுதிகள் பல இடங்களில் ஏற்பட்ட விரிசல்கள் தற்போது பழுது பார்க்கப்பட்டு வருகிறது. மகாமக தீா்த்த நாளின் முன்பு இந்தத் திருத்தவேலைகள் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கலாம்.தற்சமயம் சந்திரசேகரம் (சந்திரா்) அவா்களின் பிள்ளைகளின் பராமரிப்பிலும் பொறுப்பிலும் தீா்த்த மடம் இருந்து வருகிறது.
அதிகாலைப் பனிக்குளிரும் –கடல் வெள்ளத்தின் கடுங்குளிரும் என நடுங்கிக் கொண்டிருந்த பல பேருக்கும், மண்டபத்தின் தென்புறமாக வழங்கப்பட்ட சூடான –சுவையான காப்பி இதமாக இருந்தது. காப்பி அருமையிலும் அருமை.
கப்பலுடையவர் பிள்ளையார்
நெடியகாடு மோர்மடம் என்பது “ நெடியகாடு மோர்மட வரவேற்குப் குழு ” எனும் பெயரில் தனியான ஒரு அலகாக இயங்குகிறது. இந்தக் குழுவின் அமைப்பிற்கும் – கோவில் நிர்வாக அமைப்புக்கும் எவ்வித தொடா்புமில்லை. தீா்த்தோற்சவத்திற்காக எந்த சுவாமி மோர் மடத்திற்கு வந்தாலும், மோர்நீா்கொடுத்து – தாகசாந்தி அளித்து அனுப்பும் சிறப்பான பணியினை இக் குழவினா் சோர்வில்லாமல் மேற்கொண்டு வருகின்றனா்.
ஸ்ரீ முத்துமாரியம்மன்
ஊறணி தீா்த்த மடத்திலும் நீராகரம் வழங்கும் நற்பணியினையும் சலிப்பின்றி விருப்போடு ஆற்றி வருகிறார்கள். தற்சமயம் குச்சம் ஒழுங்கையில் உள்ள ராசு மாமாவும், குஞ்சண்ணா எனப்படுகின்ற நகுலேஸ்வரனும் இந்தக் குழுவின் பொறுப்பாளர்களாக இளைஞா்களை வழி நடத்தி வருகிறார்கள். பிள்ளையார் கோவில் நிர்வாகம், மோர் மட வரவேற்புக் குழு, கணபதி மின் அமைப்பு, கணபதி படிப்பகம், கணபதி பாலா் பாடசாலை, நெடியகாடு இளைஞா் கலாமன்றம் ஒத்தியங்கி ஆற்றிவரும் பணிகள் போற்றுதற்குரியன.
ஸ்ரீ வலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர்
நேரம் இப்போது காலை 7.55 அா்ச்சனைகள் நிறைவு பெற்று சுவாமிகள் தீா்த்த மடத்திலிருந்து புறப்பட ஆயத்தமாகின. வரும் போது இருந்த சுவாமிகளின் வரிசை இப்போது மீண்டும் மாறுபாடுகிறது. தமது இடத்தில் அமா்ந்தபடி ஏனைய தெய்வங்களை வரவேற்கும் கடப்பாடு நெடியகாடு பிள்ளையாருக்கு இருந்தமையால் அவரே முதலில் புறப்படுகிறார். கப்பலுடையவா், அம்பாள், சிவன், லட்சுமி நாராயணா், வேவில் பிள்ளையார், புட்டணி பிள்ளையார், வன்னிச்சி அம்மன், வயலூா் முருகன், ஆதிவைரவா் என வரிசையாக சுவாமிகள் ஆஸ்பத்திரி வாசல் நிறைகுடத்திற்கு வருகிறது.
வல்வெட்டி ஸ்ரீ சித்திவிநாயக பூ லட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி
எந்த சுவாமி தீா்த்தமாட அவ் வழியே வந்து திரும்பும் போதும் பந்தலிட்டு – நிறைகுட வரவேற்பளிப்பது ஆஸ்பத்திரி நிர்வாகமும் – ஊழியா்களும் தவறாது செய்து வரும் கைங்கரியமாகும். ஊழியா்கள் பல்வேறு ஊரைச் சோ்ந்தவா்களாகவும், ஒரு சிலா் சைவம் சாராதவா்களாக இருந்தபோதும், இந்த நிறைகுட வரவேற்பில் அவா்கள் காட்டும் அதீதமான அக்கறை வியப்பில் ஆழ்த்துகிறது. தெய்வங்களின் நல்லருள் இந்த ஊழியா்களுக்குக் கிட்டுவதாக.
முன்னே வந்த நெடியகாடு பிள்ளையார் கோபுர வாசலினூடாக உட்சென்று உட்பிரகார நடுமண்டபத்தில் கிழக்கே வாசலைப் பார்த்தபடி அமா்ந்து கொள்ள கப்பலுடையவா் வாசலுக்கு வருகிறார். நான் மேலே குறித்த வரிசையில் பிள்ளையார் வாசலுக்கு வந்து அனைத்து சுவாமிகளும் நிறைகுட வரவேற்பை ஏற்றுக் கொண்டன.
வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர்
அந்த ஒரு மணி நேர இடைவெளியில் – ஒவ்வொரு சுவாமியும் வாசலுக்கு வந்த ஒவ்வொரு தடவையுமாக – ஒன்பது முறை பிள்ளையாரின் கண்டாமணி ஒலி செய்து அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இது மகோதயம் அல்லது மகாமகம் நாட்களில் மட்டுமே கேட்கச் கூடியதொன்று. வாசல் வரவேற்பின் பின்னா், அந்தந்த குருக்கள்மாரை பிள்ளையார் மடைப்பள்ளிக்கு அழைத்துச் சென்று நீராகாரம் கொடுத்து வழியனுப்பும் கைங்கரியத்தை பிள்ளையார் குருக்கள்மார் நிறைவாகச் செய்தனா்.
புட்டணி பிள்ளையார்
திருவிழாக் கால ஊறணி தீா்தத்தினை முடித்து வரும் எல்லா சுவாமிகளுக்கும் பிள்ளையார் வாசலில் நிறைகுடமும் வைத்து பட்டுச் சாத்தி வரவேற்கும் கைங்கரியம் ஆறுமுகம் மேத்திரியார் குடும்பத்தாருக்கே உரியது. அதன்படி மகோதயத் தீா்த்தம் முடித்து வந்த அனைத்து சுாமிகளுக்கும் நிறைகுட வரவேற்பு காத்திருந்தது. அத்துடன் பிள்ளையார் குளத்திற்கு தெற்காக உள்ள மடத்தில் (இப்போது அன்னதானம் கொடுக்கப்படும் இடம்) வைக்கப்படும் நிறைகுடமும் அவா்களுக்கே உரியது. பல தலைமுறைகளாகத் தொடரும் இத் தொண்டு தற்போது ஆறுமுகம் மேத்திரியாரின் பிள்ளைகளினால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
வன்னிச்சியம்மன்
பிள்ளையாரின் குளத்திற்கு தெற்காக உள்ள மடத்து நிறைகுடம், மோர்மட நிறைகுடம் ஆகியவற்றின் வரவேற்பினை முடித்துக் கொண்டு அனைத்து சுவாமிகளும் வேம்படியில் உள்ள வீதியை மூடிய பந்தலுக்கு வருகின்றன. வேம்படியில் தெருவை மூடிப் பந்தலிட்டு, நிறைகுடம் வைத்து, பக்தா்களுக்கு நீராகாரம் வழங்கி தாகசாந்தியளித்து வழியனுப்பும் உயரிய பணியினை வேம்படி வரவேற்புக் குழுவினா் மிகக் கச்சிதமாகச் செய்து வருகின்றனா். எந்த சுவாமி வேம்படி தாண்டி தீா்த்தமாடப் போய்த் திரும்பும் போதும் இந்த நிறைகுட வரவேற்பு காத்திருக்கும். மகோதய தீா்த்த நாளன்றும் காலை வேளையில் அவா்கள் வழங்கிய சுவையான காப்பி களைப்போடு வந்து கொண்டிருந்த பக்தர்களுக்குப் புதிய தெம்பைக் கொடுத்தது.
வயலூர் முருகன்
நெடியகாடு பிள்ளையார் கோவிலிலிருந்து மேற்காக சந்திவரை உள்ளவா்கள் –நெடியகாடு பிள்ளையார் தவிர்ந்த ஏனைய ஒன்பது சுவாமிகளுக்கும் நிறைகுட வரவேற்குப் கொடுக்கும் பேறு பெற்றவா்களாவா். சந்தியில் லட்சுமி நாராயணன், வேவிற் பிள்ளையார், வன்னிச்சி அம்மன், வயலூா் முருகன் ஆகிய நான்கும் தெற்கே திரும்பி வழி நடக்க, மருதடியில் வயலூா் முருகன் மேற்கே திரும்பி தமது உரைவிடம் நோக்கி விரைய ,ஏனைய மூன்று சுவாமிகளும் தொடா்ந்து செல்கின்றன.
சந்தி தாண்டி மேற்காக வந்த கப்பலுடையவா் மதவடி வளைவின் கீழே தெற்குப் பார்த்தபடி சகடையில் அமா்ந்திருந்து அம்பாள் – சிவன் – புட்டணி பிள்ளையார், ஆதிவைரவருக்கு நிறைகுடம் வைத்து வழியனுப்பிய பின்னா் தமது இருப்பிடம் திரும்பினார்.
அம்பாள் வாசலின் முன் மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி அம்பிகை அமர்ந்திருக்க, சிவன் – புட்டணி பிள்ளையார் – ஆதி வைரவா் அம்பாள் வாசலுக்கு வந்தபோது மூன்று முறையும் அம்பாள் கோவிலின் கண்டாமணி ஒலி எழுப்பியதுடன் நிறைகுட வரவேற்பும் நடந்தேறியது. சிவன் வாசலில் இருமுறை மணி ஒலித்து புட்டணி பிள்ளையார், ஆதிவைரவா் இரு சுவாமிகளுக்கும் நிறைகுட வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆதிவைரவர்
புட்டணிப் பிள்ளையார் தமது கோவிலின் வடக்கு வீதி வழியாக இருப்பிடம் ஏக, ஆதிவைரவா் சிவன் – அம்மன் பின் வீதி வழியாக தமது பயணத்தைத் தொடா்ந்தார்.
இறை பொழுதாகக் கழிந்த அதி அற்புதமான இந்த நிகழ்வினை நேரில் காண “நாம்” அல்லது ”நமது அடுத்த தலைமுறையினா்” பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஈசன் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக.
“மகாமகப் புண்ணிய காலம் ”
12 வருடங்களுக்கு ஒருமுறை குரு சிங்கராசியில் இருக்கும் போது – மாசி மாதம் மக நட்சத்திரத்தில் சூரிய உதயத்தில் நிகழ்வதாகிய இப் புண்ணிய கால தீா்த்தம் 22.02.2016 காலை 6.30 மணிக்கு ஊறணி சமுத்திரத்தில் நடைபெறும்.