1963 அளவில் எம்மிற் பலரும் O/L, A/L படித்துவிட்டு அரசாங்க சேவைகளை எதிர்பார்த்து காத்திருந்த காலமது. சிதம்பராவில் நாம் படித்த காலத்தில், பாடசாலைகளில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய “பாடம்” என எதுவுமில்லாத ஒரு சிரமமான கால கட்டம். எமக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், நமது தம்பி – தங்கைகள் – உறவினர்களுக்கு ஏற்படக் கூடாதென்பதே “பாடம்” ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமாக இருந்தது.
சிவகுரு வித்தியாசாலை – இரவுப் பாடசாலை இடம்பெற்ற இடம்
திருகோணமலையில் N.C வீதிக்கும் – கடற்கரைக்கும் இடைப்பட்ட, எமது ஊருடன் தொடர்புடைய உறவுகள் பலரும் இருந்த பகுதி “10 ஆம் நம்பர்” எனப்படும் நெருக்கமான மக்கள் குடியிருப்புப் பகுதியாகும். அந்த இடத்து மையத்தில் இருந்த வாசிகசாலை ஒன்றில் இரவு நேரத்தில் நடைபெற்று வந்த “இராப் பள்ளிக்கூடமே” “பாடம்” ஒன்றினை நாம் ஆரம்பிக்கும் சிந்தனையைக் கிளறியது.
ஐந்தாறு நண்பர்கள் வழமைப் போல மதவடி கடற்கரை (உதயசூரியன் கடற்கரை) மணலில் காலை நீட்டியபடி பலதும் பத்தும் பேசிய வேளையிலேயே உதமாகியது இந்த சிந்தனை.
விக்னேஸ்வரா வாசிகசாலைக்கும் அணைக்கும் இடைப்பட்ட 10 அடி அகலமான ஒரு பகுதி அந்த நாளில் வெறுமையாக இருந்தது. அதிலே ஒரு சாய்வான பத்தியை இறக்கி பாடத்தினை நடாத்த முடியுமா? என ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு ஆலோசனைகளின் பின்னர் பாடத்தை சிவகுரு வித்தியாசாலையில் நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அந்த வேளையில் சிவகுருவின் அதிபராக இருந்த இ.துரைராஜா அவர்களின் அனுமதியுடன் சிவகுரு வித்தியாசாலையில் 06.03.1963 இல் பாடத்தை ஆரம்பித்தோம். சிவகுருவின் அதிபராக அடுத்து வந்த மறைந்த க.து.அழகுதுரை (கெருடாவில்) மாஸ்டர் அவர்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்குப் பக்கபலமாக அமைந்தது.
O/L, A/L கற்ற பெண் பிள்ளைகள், அந்நாளில் வீடுகளில் வைத்து ஆரம்ப வகுப்புகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தனர். அதற்கு இடையூறு இல்லாமல் 4 ஆம் வகுப்பு முதல் O/L வரை வகுப்புக்கள் ஆரம்பமானது.
எவ்வித விளம்பரமுமின்றி அறிமுகமான 10, 15 பிள்ளைகளுடன் ஆரம்பமான பாடத்தில் ஐம்பதாகி – நூறாகி – ஒரு கட்டத்தில் 250 பிள்ளைகள் வரை பாடம் கற்றனர்.
அயற்கிராமங்களான பொலிகண்டி, கம்பர்மலை, கெருடாவில், தொண்டைமானாறு போன்ற இடங்களிலிருந்தும் பிள்ளைகள் கல்வி கற்க வந்தமையால், நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகிக் கொண்டே வந்தது. இரவு வேளையில் பாடசாலையில் நடாத்தப்பட்டுவந்தமையால் “இரவுப் பாடசாலை” எனப் பெயர் பெற்று அதுவே நிலைத்தும் விட்டது.
பொருட்கள் வைத்து எடுக்கப்பட்ட பகுதி
ஒரு பெற்றோமாக்ஸ் வெளிச்சத்துடன் ஆரம்பித்த இரவுப் பாடசாலை நாளடைவில் 5 பெற்றோமாக்ஸ் வெளிச்சத்துடன் நடைபெற்று வந்தது. மதவடிச் சந்தியில் இருந்த சிறிய கடை போன்ற அமைப்பே (உதயசூரியன் வளைவு உள்ள இடம்) இரவுப் பாடசாலையின் உடமைகள் வைத்து எடுக்கும் இடமாக இருந்து வந்தது.
இரவுப் பாடசாலையின் சொத்துக்களாவன,
நேரம் பார்க்க ஒரு மேசை மணிக்கூடு, வகுப்பு மாற்றங்களில் ஒலி எழுப்பும் கை மணி,
மாணவர்கள் வரவுப் பதிவுக் கொப்பிகள், ஆசிரியர்கள் கையொப்பமிடும் கொப்பி
5 பெற்றோமாக்ஸ், சோக்குப் பெட்டி, பின்னாளில் மின் வயர்ச்சுருள் ஆகிய இவை மட்டுமேயாகும்.
பெற்றோமாக்ஸ் கொழுத்துவது, வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் மாறி மாறி பெற்றோமாக்ஸ் “கைவிடுவது” நாளடைவில் மிகுந்த சிரமத்தைக் கொடுத்து வந்தது.
சிவகுரு பாடசாலைக்கு மேற்காகக் குடியிருந்தவர் மறைந்த சுந்தரமூர்த்தி அவர்கள். இவர் வேணுகோபால் மாஸ்டரின் மைத்துனர் ஆவார். வேணுகோபால் மாஸ்ரரின் அனுசரணையுடன் சுந்தரமூர்த்தி வீட்டு பின் சுவரில் ஒரு பிளக் பூட்டி மின்சாரம் பெற்று, "இரவுப் பாடசாலை" தொடர்ந்து இயங்கி வந்தது.
வகுப்புக்கு ஒரு குண்டு பல்ப் போட்டு, வகுப்புக்கள் ஆரம்பிக்க முன்னர், வயர் சுருள்களைக் கொண்டு வந்து கொழுவுவது, வகுப்பு முடிந்ததும் வயரைக் கழற்றி வளைத்து கையில் எடுத்துச் செல்வதும் ஆசிரியர்கள் வேலை.
சுந்தரமூர்த்தி வீட்டாரின் இந்த உதவிக்கு பிரதி உபகாரமாக அவர்களின் மாதாந்த மின்கட்டண பட்டியலை நாமே முழுமையாகச் செலுத்தி வந்தோம்.
ஆரம்பத்தில் மாணவர்களிடம் வாங்கி வந்த கட்டணம் 2/= ஆகும். மின்சார செலவினத்தினால் ரூபா 5/= வரை கட்டணமாக வாங்க வேண்டிய சூழ்நிலை பின்னாளில் ஏற்பட்டது.
இரவுப் பாடசாலையில் எமது கற்பித்தல் முறையும், மாணவர்களுடனான அணுகுமுறையும் எப்போதும் வித்தியாசமாகவே இருந்தது. மாணவர்களுக்குத் தனியாக வீட்டு வேலைகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. பரீட்சைகள் எதுவும் நடாத்தப்படுவதில்லை.
வல்வை கல்வி மன்றம்
பாடசாலைகளில் கொடுபடும் வீட்டு வேலைகளைத் தெளிவுபடுத்தி செய்விப்பது, மனனம் செய்ய வேண்டியதை மனனம் செய்ய வைப்பது, பாடசாலைகளில் கொடுபடும் குறிப்புக்களுக்கு மேலும் விளக்கங்கள் கொடுத்து தெளிவடைய வைப்பது – இவைகளே "இரவுப் பாடசாலை" யில் நாம் கையாண்ட நடைமுறையாகும். இந்த முறை, மாணவர்கள் தங்கள் பாட மதிப்பெண்களில் கூடுதல் தரத்தைப் பெற்றுக்கொள்ளவும், நமது கற்பித்தல் முறையில் பெரு வெற்றியையும் தேடித்தந்தது.
இரவுப் பாடசாலையின் ஆரம்ப காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் வேதனம் எதுவுமின்றி பணிபுரிந்த ஆசிரியர்கள் விபரம் வருமாறு,
T.பரமசிவம்
S.யோகரெத்தினம்
V.A.அதிரூபசிங்கம்
S.குமாரசாமிப்பிள்ளை
T.கனகசபாபதிப்பிள்ளை
K.அப்பாத்துரை
P.வேணுகோபால்
S.கமலரங்கன்
K.இராஜசுந்தரம்
S.யோகச்சந்திரன்
T.விஜயரத்தினராஜா
A.S.இராஜேந்திரன்
M.குகதாஸ்
S.கணேச வேலாயுதம்
V.முருகதாஸ்
S.தர்மரெத்தினம்
V.கார்த்திகேயன்
T.குகதாஸ் (கம்பர்மலை)
S.சிவசுப்ர மணியம் (நெற்கொழு சந்தி)
K.பாலசுப்ரமணியம் (நெற்கொழு ஒழுங்கை)
இரவுப் பாடசாலையில் கற்பித்த பலபேரின் பெயர்களுக்கு பின்புறம் “வாத்தியார்” என்னும் அடைமொழி ஒட்டிக்கொண்டு இன்றுவரை அவ்வாறே அழைக்கப்பட்டு வருவதையும் காண்கின்றோம்.
ஆமடா வாத்தியார் (M.குகதாஸ், மதவடி), கணக்கு வாத்தியார் (கவிஞன் – கனக சபாபதி), ஐயர் வாத்தியார் (ஐயர், இராச சுந்தரம், மதவடி ஒழுங்கை) என இன்னும் பலரை உதாரணமாகச் சொல்லலாம்.
இரவுப் பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாணவர் சுற்றுலா இரண்டினைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
1. பரந்தன் இராசனத் தொழிற்சாலை உட்பட திருகோணமலை
2. கொழும்பில் நடைபெற்ற பொருட்காட்சியினை மையமாக வைத்து இடம்பெற்ற கொழும்பு சுற்றுலா
இரவுப் பாடசாலையில் ஆரம்ப காலத்தில் கல்வி கற்ற சிலரும், வேறு பலரும் ஆசிரியர்களாக பிற்காலத்தில் கற்பித்துள்ளனர். அவர்களின் சரியான விபரங்களை முழுமையாகப் பெறமுடியாமையால் அவற்றினைத் தர முடியவில்லை.
அந்நாளில் கல்விகற்ற நூற்றுக்குத் 99 வீதமானோர் பின்னாளில் வைத்தியர்கள், பொறியியல் வல்லுனர்கள், வங்கி ஊழியர்கள், நில அளவையாளர்கள், படம் வரைபோர், அரசாங்க பல்துறை ஊழியர்கள், கப்பற்தொழில் புரிவோர் எனவும், புலம் பெயர்ந்து நன்னிலையிலும் இருப்பது கண்டு நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
அவர்கள், எமது முகத்திற்கு நேராக “Sir” என அழைத்துப் பேசும் போதும், தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை எமக்கு அறிமுகப்படுத்தும் போதும் நாம் பூரித்துப் போகின்றோம்.
கசப்பான அனுபவம் இது
இரவு பாடசாலையில் கல்வி காற்று வந்த மாணவர்கள், தத்தமது பாடசாலைகளில் மிகத் திறமை காட்டிய காரணத்தால், அந் நாளைய ஒரு சில ஆசிரியர்கள், "இரவுப் பாடசாலை" மீதும், இங்கு கல்வி கற்ற மாணவர்கள் மீதும் காரணமற்ற வெறுப்புணர்வை பல வழிகளிலும் காண்பித்து வந்தனர்.
“இரவுப் பாடசாலை” என்பதில் உள்ள “பாடசாலை” என்னும் பிற்பதமே அன்றைய ஆசிரியர்கள் சிலரின் வெறுப்புணர்வுக்கு காரணம் என்பதை புரிந்து கொண்ட நாம், இரவு பாடசாலையை “வல்வை கல்வி மன்றம்” என பெயர் மாற்றம் செய்தோம்.
....................... ஒரு நீண்ட இடைவெளியின் பின்னர் “வல்வை கல்வி மன்றம்” என்னும் பெயரில் ஊரின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் பலரது முயற்சி தொடர்ந்தது என்பதுவும் இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.
குறிப்பு
இதுவரை இவரின் 15 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.