வாரம் ஒரு பழங்கதை - தும்புத் தொழிற்சாலை - வல்வையூர் அப்பண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2015 (திங்கட்கிழமை)
வல்வை - தொண்டைமானாறு கரையோரப் பாதையில் பெரிய மலைக்கும் – சின்ன மலைக்கும் இடைப்பட்ட பகுதியே “காட்டுப்புலம்” ஆகும். இங்கே வீதியின் வடக்காக இருந்த ஏக்கர் கணக்கிலான மிகப்பெரிய காணி “அம்மான்” என்று அனைவராலும் அழைக்கப்படும் “அருட்பிரகாசம்” என்பவருக்கு சொந்தமானது.
அம்மான் வீடு அமைந்திருந்த பகுதி
1933ல் அம்பாள் கருவறையும் – அர்த்த மண்டபத்தையும், 1939 ல் சிவன் கோவில் கோபுரத்தையும் கட்டிய வல்வைப்பெரியார் மறைந்த சி.செல்லத்துரை என்பவரின் மகனே “அருட்பிரகாசம்” ஆகும். இன்னும் இலகுவாகச் சொல்வதனால் காலஞ்சென்ற பிறப்பு – இறப்புப் பதிவாளர் சு.இராஜேந்திரனின் மைத்துனர் இவர்.
வீதி ஓரத்திலிருந்து கடற்கரை ஓரம் வரையிலான பரந்துபட்ட அம்மானின் உரிமைக் காணியில் தென்னை மரங்கள் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. இருந்த தென்னை மரங்கள் கூட வயது முதிர்ச்சியின் காரணமாக பெரிதாக காய்த்துக் குலுங்கிப் பயன்தரவில்லை.
வீதியின் ஓரத்தில் இரண்டு பெரிய கார்ஜ் . மேற்காக ஒரு சிறிய கடை போன்ற அமைப்பு. கிழக்குப் புறமாக – தெற்குப் பார்த்த படியான ஒரு தலைவாசல். உட்புறமாக அந்நாள் பாணியில் வசதியான ஒரு வீடு. ஈசான மூலையில் வீட்டிக்கான ஒரு கிணறு. இந்த வீடுதான் அம்மானின் வாசஸ்தலம்.
நாம் இந்த காணியின் மையப்பகுதியை “தும்புத் தொழிற்சாலை”யாகப் பாவிக்க ஆரம்பித்த வேளையில், கிழக்கிலுள்ள காரஜ் “அம்மான்” நடத்திய பலசரக்கு கடையாகவும், மேற்கிலுள்ள சிறிய கடை சைக்கிள் திருத்தும் இடமாகவும், நடுவே உள்ள காரஜ் எமது தொழிற்சாலை சாதனங்களை வைக்கவும் – உற்பத்திப் பொருட்களின் சேமிப்பு இடமாகவும் பயன்பட்டு வந்தது.
பின்னாளில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக வீடு முற்றாக சேதமடைய – கடைகள் மூன்றும் மேற்கூரையின்றிப் பொலிவிழந்து சுவர்ப்பகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஏக்கர் கணக்கிலிருந்த அந்தப் பெரிய காணியும், நடுவே சிறிய பாதைகள் விட்டு, துண்டுதுண்டாகப் பிரித்து விற்பனை செய்யப்பட்டு குடிமனைகளாக மாறிவிட்டன.
டிராக்கரில் ஏற்றி வரப்படும் பொச்சு
சரி பழங்கதையின் தலைப்புக்கு வருகின்றேன். இரவுப் பாடசாலை பற்றி பழங்கதையில் வாசித்திருப்பீர்கள். இரவுப் பாடசாலையின் ஆரம்ப கால ஆசிரியர்கள் பலரும் இந்தத் தும்புத் தொழிற்சாலையின் ஆரம்பகால உறுப்பினர்களாவார்கள். சேவை நோக்கில் இரவுப் பாடசாலையிற் பணிபுரிந்து வந்த இவர்கள், வருவாயை ஈட்டிகொள்ளும் நோக்கில் – பயனுள்ள பொழுதாக பகற்பொழுதைப் பயன்படுத்த எண்ணித் தும்புத் தொழிற்சாலையை ஆரம்பித்தனர்.
ஜனசந்தடி குறைந்த பெரிய காணி ஒன்றே எமது தும்புத் தொழிற்சாலைக்குத் தேவைப்பட்டது. காட்டுப்புலத்திலுள்ள அம்மானின் காணியே பொருத்தமாக இருக்கும் எனக் கருதி அவரின் அனுமதியைப் பெற்றுகொண்டதோடு, காணியின் நடுவே ஒரு பாரிய தொட்டியினையும் (ஏறக்குறைய 40’ நீளம் - 10’ அகலம் கொண்டது) கட்டிக்கொள்ள சம்மதமும் தெரிவித்தார்.
தும்புத் தொழிற்சாலையின் பிரதான மூலப்பொருள் சுத்தமாக்கப்பட்ட “தும்பு” மட்டுமே. பளையிலிருந்து டிராக்கர் மூலம் ஏற்றி வரப்பட்ட பொச்சு தொட்டியினுள் அடுக்கப்பட்டு அருகிலிருந்த பெரிய கிணற்றிலிருந்து நீரும் நிரப்பப்பட்டது. நீரில் ஊறிய பொச்சினை குறித்த நாட்களின் பின் எடுத்து, கல்லின் மீதி வைத்து மரக்கட்டையால் அடித்துப் பதப்படுத்தி நீரில் கழுவித் தும்பாக்குவோம். பளையில் பொச்சு ஏற்றப் போய் வந்த வேளையில் அங்குள்ள தும்புத் தொழிற்சாலையில் ஊற வைக்கப்பட்ட பொச்சு முள்ளு யந்திர சாதனத்தின் மூலம் சுத்தமாக தும்பாக்கப்படுவதைப் பார்த்து நாம் வியந்தது உண்டு. யந்திரம் செய்த அதே வேலையை நாம் எமது கைகளினால் செய்து கொண்டோம்.
தும்புத் தொழிற்சாலை பற்றிய சிந்தனை ஏற்பட்டவுடனேயே சிறு கைத்தொழில் அமைச்சினில் பதிவு செய்து கொண்டோம். பதிவின் பயனாக, எமது ஆரம்ப முயற்சிகளை நேரில் வந்து பார்வையிட்ட சிறுகைத்தொழில் ஊக்குவிற்பதற்கான அதிகாரிகள், கயிறு திரிக்கும் முப்பிரி யந்திரங்கள் போன்ற சிறுசிறு சாதனங்களைத் தந்துதவினார்கள்.
அத்துடன் தும்புத் தொழில் உற்பத்தியில் எம்மைப் பயிற்றுவிக்க ஒரு ஆசிரியரையும் தந்தார்கள். அந்த ஆசிரியர் கொழும்புத் துறையிலிருந்து காட்டுப்புலம் வந்து எம்மைப் பயிற்றுவித்தார். அவர் எமது இடத்திற்கு வந்த நாட்களைவிட, வராத நாட்களே அதிகம் எனலாம். அவரது மாதாந்த சம்பளத்தை சிறு கைத்தொழில் யாழ் அலுவலகமே வழங்கி வந்தது.
பொச்சு
எம் அனைவரதும் கூடுதல் ஊக்கத்தினால் படிப்படியாக எமது பயிற்சியில் நாம் முன்னேற்றம் கண்டோம். வேலி கட்டும் கயிறு, தும்புத் தடியில் சாதாரணம் – விசேடம் என இரு ரகங்கள், பிரஸ் வகைகள், கால் மிதிகள் எனப் பலவும் தயாராகின. இவற்றினை விற்பனைக்கு விடுவது, சந்தைப்படுத்துவது என்று புறப்பட்ட போதுதான் சோதனையான காலம் ஆரம்பமானது.
வாகன வசதிகள் நம்மிடம் இல்லாததால், சைக்கிள்களில் வைத்துக் கட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக விற்பனைக்காக கடைகளுக்கு எடுத்துச் செல்வோம். சில கடைகாரர் நல்ல ஒத்துழைப்பு வழங்கினர். தும்புத்தடி “சாதாரணம்” 25 சதமாகவும், தும்புத்தடி “ஸ்பெசல்” 35 சதமாகவும் கடைகளுக்கு கொடுக்கப்பட்டது.
அந்நாளில் கொழும்புத்துறை, பளை போன்ற இடங்களில் தயாரான தும்பு உற்பத்திப் பொருட்கள் மிகப் பிரபல்யமானவை. அவற்றோடு போட்டியிடக்கூடிய தரம் எமது பொருட்களுக்கு இல்லை என்பது உண்மையே. வாங்குவதற்கு ஆள் இல்லாததால் ஆதரவு தெரிவித்த கடைக்காரர்கள் கூட படிப்படியாகக் கையை விரிக்கத் தொடங்கினர்.
இன்றுங் கூட , கடைகளில், பிளாஸ்ரிக் தும்புத்தடி, அதனை ஒத்த தென்னிலங்கைத் தயாரிப்புக்களே கடைகளில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். கயிற்றினால் வரிந்து கட்டிய தும்புத்தடியினை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
அந்நாளிலும் சரி – இந்த நாளிலும்சரி உள்ளூர் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் உண்டாகும் சிரமமே, பல உள்ளூர் உற்பத்திகள் நிலையங்கள் மூடுவிழா காணக் காரணமாக அமைந்தது. நாமும் இதற்கு விதிவிலக்கல்ல.
மாதிரி தும்புத் தொழிற்சாலை
படிப்படியாக வியாபாரம் படுத்துப் போக, நமது உற்பத்திகளை நமது வீடுகளில் நாமே பாவிக்கின்ற நிலைமை வந்து சேர ஒரு சில வருடங்களில் “தும்புத் தொழிற்சாலை” அற்ப ஆயுளிலேயே மரணித்துவிட்டது. நாமும் வெறும் கையுடன் வீடு திரும்பினோம்.
ஒரு சோகக் கதை
இரவுப் பாடசாலையின் ஆரம்ப கால ஆசிரியர் பட்டியலில் முதலாவதாக இருந்த காலஞ்சென்ற தி.பரமசிவம் என்பவரே தும்புத் தொழிற்சாலையின் பிரதான அமைப்பாளராகவும் இறுதி வரை செயற்பட்டவர். அவரது ஊக்கமும் விடாமுயற்சியும் பாராட்டப்பட வேண்டியது. இவர் மதவடி ஒழுங்கையில் முதல் வீட்டுக்காரர்.
தமது தொழில் தேவைகளின் நிமித்தம் ஒவ்வொருவராக தும்புத்தொழிற்சாலையிலிருந்து விலகிக் கொள்ள தனி ஒரு மனிதனாக தும்புத் தொழிற்சாலையை சொற்ப காலம் இழுத்துச் சென்றார். ஆனாலும் முடியாது போய்விட்டது. அவரும் மேற்படிப்பிற்காக இந்தியா சென்று, ஹேமியோபதி வைத்தியசாலையில் வைத்திய கலா நிதிப் பட்டம் பெற்றுத் திரும்பி வந்து ஆதிகோவிலடி சங்கக்கடை இருக்குமிடத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்திவந்தார்.
கொழும்பு போய்வர விமான மார்க்கம் தவிர வேறு தரைப்பாதை எதுவுமே இல்லாதிருந்த போர்கால சூழலில் தனது சொந்த தேவைக்காக கொழும்பு புறப்பட்டார் பரமசிவம். அவர் பயணம் செய்த “அவ்ரோ” விமானம் பலாலியிலிருந்து புறப்பட்ட சில நிமிட நேரத்திலேயே யாழ் பண்ணைக்கடலில் வீழ்ந்து மறைந்து போனது. அந்த விபத்தில் தி.பரமசிவமும் அகால மரணமடைந்தார் என்பது சோகமான செய்தி.