“ ஊறணியில் மகா மகப்பெருவிழா ” - வல்வையூா் அப்பாண்ணா–
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2016 (வெள்ளிக்கிழமை)
மகோதயம், மகாமகம்எனும் இரண்டு அற்புதமான நிகழ்வுகளுடன் 2016 ஆரம்பமாகியுள்ளது. சித்திரையில் பிறக்கப்போகும் “ துா்முகி ” தமிழ்ப் புத்தாண்டு நம்மவா்கள் அனைவருக்கும் சுபீட்சமான நல்லாண்டாக அமைய எம்பெருமானை வேண்டுதல் செய்து“ மகாமகம் ” தொகுப்பினை ஆரம்பிப்போம்.
வாழ்நாளில் ஒரு முறை அல்லது இரு முறை சந்திக்கக்கூடிய மகோதய தீா்த்த விழாவும் – வாழும் காலத்தில் ஐந்து அல்லது ஆறு முறை தரிசிக்கக் கூடிய மகாமகப் பெருவிழாவையும் ஒன்று சேர – 14 நாட்கள் இடைவெளியில் – கண் குளிரப்பார்த்து – தரிசித்த இன்றைய தலைமுறையினா் பூா்வஜென்ம புண்ணியம் செய்தவா்களே.
12 வருடங்களுக்கு ஒரு முறை குரு சிங்கராசியில் இருக்கும் போது – மாசி மாதம் மக நட்சத்திரத்தில் – சூரிய உதயத்தில் நிகழ்வதாகிய இப்புண்ணிய காலம்“ மகா மகப்புண்ணிய காலம் ” எனப்படுகிறது. இந்த மகோன்னத நிகழ்வு 22.02.2016 திங்களன்று நம் ஊரைப்பு னிதப்படுத்திப் போயிருக்கிறது.
ஊறணித் தீா்த்தமடம், பிள்ளையார் வாசல் நிறைகுடம், வேம்படி தண்ணீா் பந்தல், பிள்ளையார் மோர் மடம் போன்ற தீா்த்தம் சாராத – மாற்றமடையாத பல விடயங்கள் “ மகோதயம் இணையக் கட்டுரையில் ஏற்கனவே வெளியான தகவல்களாதலால் மீண்டும் இங்கு தரப்படவில்லை.
நள்ளிரவு தாண்டிய அதிகாலைப் பொழுது. சிவன் கோவில் தவிர்ந்த எல்லாக் கோவில்களிலும் – எல்லாத் திசைகளிலுமிருந்தும் காற்றில் மிதந்து வந் தஒலிபெருக்கிகளின் சத்தத்தால், அதிகாலையில் ஒலித்த கோவில் மணியோசை எதையும் சரியாகக் கேட்க முடியவில்லை. நேரம் சரியாக அதிகாலை 4.45.அம்பாள் வெள்ளிச் சிங்க வாகனத்திலும், சிவன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், புட்டணிப் பிள்ளையார் யானை வாகனத்திலுமாக ஆரோகணித்து அம்பாள் பின் வீதிக்கு வந்து சோ்ந்தனா்.
பிரதான வீதியில் கிழக்கே திரும்பிய வேளையில், பின்னே ஆதிவைரவா் நாய் வாகனத்திலும், தொட்டில் கந்தசாமி கோவில் முருகன் பொன்னிற மயில் வாகனத்திலுமாக பின் தொடர்ந்தனா். மதவடியில் கப்பலுடையவா் எலி வாகனத்திலும், சந்தியில் உடுப்பிட்டி வீதியில் காத்து நின்று வன்னிச்சி அம்மன் சிங்க வாகனத்திலும், வயலூா் முருகன் மயில் வாகனத்திலுமாக சுவாமிகளின் வரிசை கிழக்கு நோக்கி நகா்ந்தது.
சி.கு. ஒழுங்கையால் (காந்தி வீதி )பிரதான வீதிக்கு வந்து சோ்ந்த வேவிற் பிள்ளையார் யானை வாகனத்திலும், இரண்டு பாம்பு வாகனங்களில் ஆரோகணித்த ஸ்ரீ சித்தி விநாயகரும், லக்சுமி நாராயணரும் ஊர்வலத்தில் ஒன்றிணைந்தனா்.
நெடியகாடு பின் வீதியில் காத்து நின்ற பிள்ளையார் வழி காட்ட அனைத்து சுவாமிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வழி நடக்க பக்தர்கள் கூட்டம் வீதியின் இருமருங்கும் தொடர்ந்து வர சுவாமிகள் ஊறணித் தீர்த்த மடம் நோக்கி நகா்ந்தன.
வேவிற் பிள்ளையார் கோவிலுக்குத் தென்மேற்காக – வீதிக்குத் தெற்காக சிறிய கோவிலாக அரச மர நிழலில் வீற்றிருந்த ஸ்ரீ சித்தி விநாயகா் கோவில் இன்று பெரு வளா்ச்சி கண்டுள்ளது.
அருகிலேயே பூலட்சமி மகாலட்சுமி சமேத நாராயண சுவாமி திருக்கோயிலும் புதிதாகக் கட்டப்பட்டு அழகிய மண்டபங்களுடன் மிளிர்கிறது. ஆண்டு தோறும் தைப் பூசத்திற்கு தீா்த்தம் வரக்கூடியதாக நடை பெற்று வரும் மகோற்சவத்தில், இவ்வருடம் தைப்பூசத்திற்கு முதல் நாள் புதிய சித்திரத் தேரோட்டமும் நடைபெற்றது.
அழகான பெரிய பாம்பு வாகனங்களில் ஒரே சகடையில் அருகருகே அமா்ந்த படி ஸ்ரீ சித்தி விநாயகரும் – லட்சுமி நாராயணரும் ஆரோகணித்த காட்சியினை இணையப்படங்களில் பார்த்திருப்பீா்கள்.
தொண்டமானாறு – உடுப்பிட்டி வீதியில், வடக்காக (கெருடாவில் தெற்கு) உள்ள முருகன் ஆலயமே தொட்டில் கந்தசுவாமி கோவில் முருகன் ஆலயமாகும். மகாமக கடற்தீர்த்ததிற்காக வள்ளி – தெய்வானை சமேதராக தகதகக்கும் பொன்னிற மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகன் – கெருடாவில் ஐயா் குறிச்சியைத் தாண்டி பிரதான வீதிக்கு வந்து கிழக்கே திரும்பி – ஏனைய சுவாமிகளுடன் இணைந்து கொண்டார்.
ஒரு திறந்த வாகனத்தின் ரெயிலா் பெட்டியில் அமர்ந்தபடி மங்கள வாத்தியக் கோஷ்டியினா் – சுவாமிக்கு முன்பாக முழங்கிய படிவந்தமை வித்தியாசமான அம்சமாகம்.
மகா மகத்தீா்த்தத்திற்காக புதிதாக இணைந்து கொண்டவா் கெருடாவில் மாயவராகும். ஊரிக்காடு சோடாக் கடை ஒழுங்கையில் தெற்கு நோக்கிய ஏற்றத்தில் – மேற்கே பிரிந்து செல்லும் பாதையில் இருப்பதுவே மாயவா் ஆலயமாகும். நேரம் பிந்தியே புறப்பட்டு வந்து – பிந்தியே தீர்த்தமாடி பிந்தியே நெடியகாடு வந்து சேர்ந்தார் கெருடாவில் மாயவா்.
சனி – ஞாயிறு தினங்களுடன் போயா விடுமுறை தினமாக திங்கட்கிழமையும் இணைந்து வந்ததால் பாடசாலை மாணவா்களுக்கும், அரச தனியார் ஊழியா்களுக்கும் மகா மகத் தீர்த்தமாட வசதியான தினமாக அமைந்தது. மகோதய தீா்த்தத் தன்று பாடசாலை நாளாக அமைந்ததால் –அவசர அவசரமாகத் தீா்த்த மாடித் திரும்பிய மாணவா்கள், மகா மகத்தன்று ஆறுதலாக – விரும்பிய அளவு நேரம் கடலில் விளையாடிக் கரையேறினா்.
நமது அயலூா் கிராம மக்கள் மிக அதிக அளவில் மகாமகத் தீர்த்தத் திருவிழாவில் கலந்து கொண்டனா். இதை விட குடாநாட்டின் உள்ளே வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் நம் ஊரவர்களும், வன்னி – திருமலை – மட்டக்களப்பு – கொழும்பு எனப் பல ஊர்களிலும் வசிக்கும் நம்மவா்களும் பெருமளவில் வந்திருந்ததால் மகா மகப்பெருவிழா களை கட்டிநின்றது. இதையேஒருகாரணமாகக்கொண்டுவெளிநாட்டிலிருந்துஊருக்குவந்திருந்தசிலரையும்ஊறணித்தீா்த்தக்கடற்கரையில்காணமுடிந்தது.
மகோதய நாளில் இருந்ததை விட மகா மகத்தன்று அதிகாலை மாசி மாத பனிக் குளிர் மிகக்கடுமையாக இருந்தது.“ எப்படி–இந்தக் குளிரில் கடலில் இறங்குவது ” என உள்ளூரப் பயத்துடன் இருந்தவா்களுக்கு – பெளா்ணமியின் கடல் வெள்ளம் வெதுவெதுப்பான சூட்டைக் கொடுத்தது இதமாகவிருந்தது. கரையேறி வந்ததும் – தீா்த்த மடத்தின் தென்புறத்தில் வழங்கப்பட்ட சூடான – சுவையான – சுக்கு மல்லிக் காப்பி உடலைச் சூடேற்றி புதிய தெம்பைக்கொடுத்தது.
மகோதய இணையக் கட்டுரையில் தவறவிடப்பட்ட ஒரு விடயத்தினை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. தீா்த்த மடத்திற்கு மேற்காக, “ பெண்கள் ஆடை மாற்றுவதற்காக ” கட்டப்பட்டுள்ள வடக்குத் தெற்கான மண்டபம் விநாயக சுந்தரம் அருணாசலம் என்பவரால் 1968ல் கட்டப்பட்டு, மீண்டும் 2011ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இன்றைய பெண்கள் இந்த மடத்தைப் பெரிதாகப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. தீா்த்தமாடி தத்தமது இஷ்டதெய்வங்களுக்கான அர்ச்சனையை நிறைவு செய்த பின், இளம் பெண்கள் முதல் கிழவி வரை அனைவருமே ஈரஉடையுடன் வீடு திரும்புவதையே காணமுடிந்தது.
ஊறணி வைத்தியசாலை நிறை குட வரவேற்பு முடிந்து சுவாமிகள் வரிசையாக பிள்ளையார் வீதிக்கு வர முன்னரே 90 வீதமான மக்களும் சாரி சாரியாக பிள்ளையாரின் குளத்தடி தாண்டி வீடு நோக்கிப் புறப்பட்டு விட்டனா்.
நெடியகாடு பிள்ளையார் வாசலுக்குக் கீழ்க் காணும் ஒழுங்கில் சுவாமிகள் வந்து சோ்ந்தன .
(1) நெடியகாடு பிள்ளையார்
(2) கப்பலுடையவா்
(3) அம்பாள்
(4) சிவன்
(5) வேவிற்பிள்ளையார்
(6) ஸ்ரீசித்திவிநாயகா்
(7) லெட்சுமிநாரயணா்
(8) வன்னிச்சிஅம்மன்
(9) வயலூா்முருகன்
(10) தொட்டில்கந்தசுவாமி
(11) ஆதிவைரவா்
(12) கெருடாவில்மாயவா்
(13) புட்டணிப்பிள்ளையார்.
மகோதயத்திற்கு 10 சுவாமிகளே தீா்த்த மாட வந்திருந்தன. மகாமகத்திற்கு வந்திருந்த 13 சுவாமிகளுள் – புட்டணி பிள்ளையார், நெடியகாடு பிள்ளையார் நீங்கலாக – 11 சுவாமிகளும் மேலே குறிப்பிட்ட வரிசைப்படி சந்தி வரை தொடர்ந்தன.
சந்தியில்,
(1) கப்பலுடையவா்
(2) அம்பாள்
(3) சிவன்
(4) ஆதி வைரவா் மேற்கு நோக்கி நகர, பின்னே வந்து கொண்டிருந்த
(5) வேவிற் பிள்ளையார்
(6) ஸ்ரீ சித்தி விநாயகா்
(7) லெட்சுமி நாரயணா்
(8) வன்னிச்சி அம்மன்
(9) வயலூா் முருகன்
(10) தொட்டில் கந்தசாமி
(11) கெருடாவில் மாயவா் சந்தியில் தெற்கே திரும்பின.
மருதடிச் சந்தியில் வயலூா் முருகன் மேற்காகத் திரும்பி தமதிடம் நோக்கி விரைய, ஏனைய சுவாமிகள் அனைத்தும் உடுப்பிட்டி வீதியால் வழி தொடா்ந்தன.
மாசி மகத்திற்குத் தீா்த்தம் வரக் கூடியதாக புட்டணியில் கொடியேறி 10 திருவிழா நடைபெறுவது வழமையானது. அதன்படி இம்முறை மகத்துடன் மகாமகப் பெருவிழாவும் சேர்ந்து வந்ததால் புட்டணி பிள்ளையாரே அன்றைய பொழுதின் “ கதாநாயகன் ” பிள்ளையார் இறுதியாக வந்து சோ்ந்தமைக்கு சரியான காரணம் ஒன்றிருந்தது.
நெடியகாடு பிள்ளையார் உட்பிரகார மையத்தில் அமர்ந்திருந்து, அனைத்து சுவாமிகளுக்கமான மாலை மரியாதை, நிறைகுட வரவேற்பினை முடித்துத் தமது வசந்த மண்டபத்திற்க்கு திரும்பிய பின்னரே, புட்டணிப் பிள்யைார் கோபுர வாசலுக்கு உள்ளே வந்து – வசந்த மண்டபத்திற்கு முன்பாக – அங்கேயே பகற்பொழுதைக் கழிப்பதற்காக ஆற அமர உட்கார்ந்து கொண்டார்.
நெடியகாடு பிள்ளையார் ஆலயத்திலிருந்து இரவு 7.30க்குப் புறப்பட்ட புட்டணிப் பிள்ளையார் அம்பாள் வாசல் வரவேற்பு முடிந்து, சிவன் வாசல் வர இரவு 10 மணியாகி விட்டது. அதன் பின்னரே கொடியிறக்கம் நடைபெற்று மகோற்சவம் நிறைவுக்கு வந்தது.