வாரம் ஒரு பழங்கதை - அம்பாள் கோவில் சிவப்புக் குதிரை - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2015 (திங்கட்கிழமை)
22/10/2015 விஜயதசமி நாள்.“ மானம்பூ ” வுக்காக அம்பாளைச் சுமந்து சென்றது அந்த அழகான சிவப்புக்குதிரை. அம்பாள் புறப்படும் வேளையில் கோவில் வாசலில் 10, 20 போ் மட்டுமே காணப்படுவா்.
குதிரை வாகனத்தைச் சகடையில் ஏற்றுவதே பெரும்பாடாக இருக்கும். மானம்பூ முடிந்த பின்னா், அம்பாள் வாசலில் சிவனும் அம்பாளும் சந்தித்துக்கொள்ளும் காட்சியினைப் பார்ப்பதற்காக கொஞ்சம் கூட்டம் வரும். அம்பாள் வாசல் தாண்டி புறப்பட்டதும் அதில் அநேகா் புறப்பட்டு விடுவா். மீண்டும் வாசல் வெறிச்சோடி விடும். இதனால், அம்பாள் வாசலில் நடைபெறும் அந்த அற்புதக்காட்சியினைக் காணும் வாய்ப்பு அநேகருக்குக்கிட்டுவதேயில்லை. ஆா்வமுள்ள ஒரு சிலா் மட்டுமே வருடம் தவறாமல் இந்த நிகழ்வினைத் தரிசிப்பா். நீங்களும் வாய்ப்பு வரும் போது இந்த குதிரை திரும்பும் அழகைப் பார்க்கத் தவறாதீா்கள்.
கோவில்களில் வாகனங்கள் சாதாரணமானவை. அதிலும் ஆடக்கூடியதாக உள்ள குதிரை, இரட்டைக்குதிரை, இரட்டைச்சிங்கம், இப்போதுள்ள சிறிய இரட்டை வாகனங்கள் நடு அச்சில் ஆடக்கூடியதாக இருப்பது நாம் அடிக்கடி காணும் காட்சியே. மானம்பூ வேளையில் ஒருமுறையும், மகோற்சவ 8ம் திருவிழாவன்று வேட்டைத்திருவிழா வேளையிலுமாக வருடத்தில் இருமுறை இந்த சிவப்புக்குதிரை அம்பாள் சேவையாற்றுகிறது.
இந்த சிவப்புக்குதிரை ஏனைய ஆடும் வாகனங்களைப் போல மேலும் கீழும் அசைந்தாடுவதுடன், மேலதிக “ பொறிமுறை ” ஒன்றையும் கொண்டிருக்கிறது. இந்தப் பொறி முறை நிகழ்வு மகோற்சவ கால வேட்டைத்திருவிழா வேளையில் தேவைப்படுவதில்லை. ஆனால் நெடியகாட்டில் மானம்பூமுடிந்து அம்பாள் கோவிலுக்கு வந்ததும் இந்த குதிரை வாகனத்தின் “ பொறிமுறை ” நமக்குத் தேவைப்படுகிறது.
அம்பாள் அமா்ந்திருக்கும் குதிரை வாகனத்தின் மேற்பீடப்பகுதி குதிரை வாகனத்தின் அடிப்பீடத்துடன் நான்கு மூலைகளிலுள்ள நீண்ட கம்பிகளுடன் பொருத்தப்பட்டிருப்பதை அனைவரும் அவதானித்திருப்பீா்கள். பொருத்தப்பட்டிருக்கும் நான்கு கம்பிகளுடனான தொடா்பை நீக்கியதும், குதிரையின் வயிற்றுப்பகுதியில் உள்ள நடு அச்சுப்பகுதியுடன் மட்டுமே மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் தொடர்பிலுள்ளது.
இப்போது தான் குதிரையின் “ பொறிமுறை” பயன்படுகிறது. குதிரையின் மேற்பீடமும் குதிரையுடன் சோ்த்தபடி அம்பாளின் பீடமும் மெதுமெதுவாக வலம் சுழியாகத் திருப்பப்படுகிறது. குதிரையும் முரண்டு பிடிக்காமல் திரும்பிக் கொள்கிறது. ஆனாலும், குதிரையின் முதிர்வு காரணமாக நடு அச்சுப்பகுதியிலிருந்து “ கிறீச்….. கிறீச்… என ஒலி எழும்பியதை அவதானிக்க முடிந்தது.
நெடியகாடு வடக்கு வீதியில் மானம்பூ நிகழ்வுகளைப் பார்த்த பின்னா் சுவாமிகளின் மின் அலங்கார அழகினையும் பார்த்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக மக்கள் தம் வீடு நோக்கிப்புறப்படுவா். நூலகங்களிலும், பல்வேறு கோவில்களிலும் நடைபெறும் பூசைகளைப் பார்ப்பதுடன் பிரசாதம் பெறுவதிலுமுள்ள அவசரம் அவர்களுக்கு. அதில்ஒப்பேதுமில்லை.
அம்பாள் வாசலில் நடைபெறும் இந்த அற்புத நிகழ்வு காண ஒரு சிலரே காத்திருப்பா். இந்தநிகழ்வினை
(1) அன்றைய நடைமுறை
(2) இன்றைய நடைமுறை என இரு பகுதிகளாகப் பார்க்கலாம்.
(1)அன்றைய நடைமுறை – மானம்பூமுடிந்து அம்பாள் வாசலுக்கு வந்து பாதநீா் ஊற்றித் தீப ஆராதனை முடிந்ததும், நேராக முன் மண்டபம் வந்து மூலஸ்தானத்தைப் பார்த்தபடி சிவனின் வரவை எதிர்பார்த்தபடி அம்பாள் காத்திருப்பாள். இப்போது அம்பாளைக் குதிரை வாகனத்துடன் கிழக்கு நோக்கித் திருப்புவா். (இதுமுதன்முறை) சிவன் அம்பாள் சந்திப்பு முடிந்து சிவன் கோவிலை நோக்கிப் புறப்பட்டதும், மீண்டும் பழைய படி மூலஸ்தானத்தை நோக்கி அம்பாளைத் திருப்பி வைப்பா். (இது இரண்டாவது முறை. இந்த நடைமுறையில் இரு முறை மேற்குறித்த “ பொறிமுறை ” பயன்படுகிறது)
(2)இரண்டாவதுநடைமுறை மானம்பூ முடிந்து அம்பாள் திரும்பி வரும் போது மின்சார படல் அலங்காரத்துடன் வருவதுதற் போது வழமையாகி விட்டது. அம்பாள் வாசலுக்கு வந்து பாதநீா் ஊற்றி தீபஆராதனை முடிந்ததும் மணற்தரையில் நின்றபடியே கிழக்குப் பார்த்த பாவனையில் அம்பாளை குதிரை வாகனத்துடன் சேர்த்துத் திருப்பி முன்மண்டபத்தில் அமா்ந்திருப்பார். அம்பாள் வாசலுக்கு சிவன் வந்து திரும்பியதும் மின்சாரபடல் அலங்காரங்கள் அகற்றப்பட்டு, மீண்டும் பழையபடி அம்பாள் மூலஸ்தானத்தை நோக்கித் திருப்பி வைப்பா். ( இந்த நடைமுறையில் ஒருமுறை மட்டுமே மேற்குறித்த பொறிமுறை பயன்படுகிறது)
இந்தத் திரும்பும் பொறிமுறை கொண்ட அழகான குதிரைக்கு காலத்துக்குக் காலம் வா்ணம் தீட்டப்படுவதைப் பார்த்திருக்கிறோம். யார் இதனைச் செய்து கொடுத்தார்கள் என்பது சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.
ஆனாலும் குதிரை 100 வயதுக்கும் மேற்பட்டது என்பது நிட்சயமான உண்மை இந்தத் திருவிழாத் தேவைக்கென்றே இத்தகைய பொறிமுறையினைப் புகுத்தி குதிரையை இந்தியாவில் செய்வித்து பாய்க்கப்பல் வழியாகப் பக்குவமாகக் கொண்டு வந்து சோ்த்தார்கள் என்பதுவும் உண்மையானதே. இதனைத் திட்டமிட்ட நம்மூா் மூளைசாலியையும் இதனைச் செய்து முடித்த தமிழகத்து( அன்றைய மெட்ராஸ் ஸ்ரேற் ) ஆசாரியையும் மானசீகமாக வணக்கம் செய்வோம்.
“ திரும்பும் பொறி முறைக்காக துருப்பிடிக்காத செப்புத்தகடு பாவித்திருக்கிறார்கள் ” என்பது தச்சுத்தொழிலில் அனுபவம் உள்ள ஒருவரின் கருத்தாக உள்ளது. சிவப்புக் குதிரையின் உடற்தகுதியைப் பார்க்கையில் இன்னும் பல்லாண்டு …… பல்லாண்டு………காலம் அம்பாளைச் சுமக்கும் கடமையைத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.