அந்நியர் ஆட்சியும் அந்த ஆட்சி முறையால் ஏற்பட்ட பொருளாதார, சமூக உறவு மாற்றங்கள், ஆங்கிலக் கல்விக்கும் கிறிஸ்தவ திருச்சபைக்குமிருந்த பிரிக்க முடியாத தொடர்பு, நாட்டு மக்களால் ஆங்கில ஆட்சியை எதிர்க்க முடியாமலிருந்த இயலாமை போன்ற பல காரணங்களினால் தேசிய விழிப்புணர்வுக்கான ஓர் இயக்கம் தோன்றிற்று.
சிங்கள மக்களிடையே இவ் இயக்கம் தோன்றுவதற்கு ஏறக்குறைய 50 ஆண்டுகள் முன்னரே, இது வடபகுதித் தமிழ் மக்களிடையே தோன்றிவிட்டது. இந்தத் தனித்துவ இயக்கத்தின் முதற்குரலாக விளங்கியவர் ஆறுமுகநாவலர் (1822 – 1879).
அவர் “சைவமும் தமிழும்” என்ற கோஷத்துடன் சைவப்பாடசாலைகளை நிறுவுதல், சைவ நூல்களை இலகுபடுத்தி வசன நடையில் எழுதி வெளியிடல், சைவ மக்களிடையே இருந்த கூடாவொழுக்கங்களை அகற்ற முற்பட்டமை, இவ்வாறான சமுதாய மாற்றத்துக்கு வித்திட்ட நாவலர் பெருமானின் பாதையிலே தொண்டாற்றியவர் வல்வெட்டித்துறை இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் .
சிவன் கோயில் மடம்
அன்னார் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர் கடலோடியாகவும் வணிகராகவும் திகழ்ந்தார். ஆறுமுக நாவலரது இருபத்தோராவது வயதில் வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் தோன்றினார். நாவலர் காலமானதன் பின்னர் இருபத்தொரு ஆண்டுகள் வாழ்ந்தார். நாவலர் காலமானபோது வைத்திலிங்கம்பிள்ளை பிள்ளைக்கு வயது முப்பத்தாறாகும்.
இவர் சிறுவயது முதலே உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் சென்று இலக்கண இலக்கியங்களையும் வடமொழியையும் கற்றுப் பண்டிதரானார். சிவசம்புப் புலவரோடு இருந்த காலத்தில் அவரது முக்கிய மாணவர்களில் ஒருவராக திகழ்ந்ததுடன், அவரது ஏனைய ஆரம்ப – நடுநிலை மாணவர்களுக்கு பாடஞ்சொல்லியும் கொடுத்தார்.
இப்பெருமகன் பலதரப்பட்ட நூல்களை இயற்றியும் ஏற்கனவே இயற்றப்பட்ட நூல்களை திருத்தி அச்சிட்டு, சில நூல்களுக்கு உரை எழுதியும் தமிழுக்கும் சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றினார்.
யாழ்ப்பாணத்து நல்லூரைச் சேர்ந்த வி.சின்னத்தம்பிப் புலவர் (1716 – 1780) அவர்கள் எழுதிய “கல்வளை அந்தாதி”க்கு உரை எழுதி சென்னை ரிப்பன் அச்சுக் கூடத்தில் பதிப்பித்து வெளியிட்டு வைத்தார். சுன்னாகத்தை சேர்ந்த வரத பாண்டியர் (1656 -1716) அவர்கள் இயற்றிய செய்யுள் நூலான சிவராத்திரி புராணத்தையும் இவரே பதிப்பித்தார்.
சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, வழுக்களைந்து இந்த நூல் சென்னை வித்தியாவர்த்தனி அச்சுக் கூடத்தில் 1885ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
சி.வை.தாமோதரம்பிள்ளையின் “சைவ மகத்துவம் “ என்னும் நூலுக்கு எதிராக “சைவ மகத்துவ ஆபாச விளக்கம்” என்னும் கண்டன பிரசுரம் தோன்றிய பொது “சைவ மகத்துவ ஆபாச விளக்க மறுப்பு’ என்னும் பதிவை விடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
வல்வை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகாமையிலேயே இவரால் ஸ்தாபிக்கப்பட்ட “பாரதி நிலைய முத்திராஷரசாலை” என்ற பெயருள்ள அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்ட “சைவாபிமானி” என்ற சஞ்சிகையில் “வல்வை மாணவன்” என்ற பெயரில் இவரது ஆக்கங்களும் கண்டனங்களும் வெளியாகின. அந்த அச்சுயந்திரசாலையின் அருகிலேயே இலக்கிய இலக்கண போதனைக்கான பாடசாலை ஒன்றும் நடைபெற்று வந்துள்ளது.
கள்ளுக்குடிச்சிந்து (மூன்று பாகங்கள் – மது ஒழிப்பு பற்றியது), மாதரொழுக்கத் தங்கச்சிந்து (இரண்டு பாகங்கள்) ஆகியவை எழுதியதன்மூலம் வைத்தியலிங்கம் பிள்ளையவர்கள் கொண்டிருந்த சமூகம் பற்றிய பார்வையை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. யாழ்ப்பணத்தில் இருந்த இலக்கிய விழிப்பினை மட்டக்களப்புக்கு பரப்பியவரும் இவரேயாவர். மட்டக்களப்பு சென்று அங்கு விரிவுரைகள் நிகழ்த்திவந்த வேளை மட்டக்களப்பு வித்துவான் ச.பூபாலப்பிள்ளை இவரது மாணாக்காரனார்.
இவரிடையேயும் ஏற்பட்ட நெருக்கத்தால், பூபாலபிள்ளை பிள்ளை பாடிய சோமவார மகிமையைக் கூறும் “சீமந்தினி புராணம்” இவரது நேரடி மேற்பார்வையில் சென்னையில் 1894 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இவர் தமது 36 வயதில் (1878 – 79) “சிந்தாமணி நிகண்டு “ என்னும் நூலை இயற்றியதன் மூலம் தமது இலக்கிய அறிவினை நிலைநிறுத்தினார். தமிழ் நாட்டினரால் நன்கு மதிக்கப்பட்டதோடு, சென்னை நகரத்துப் பேரறிஞர்களே இவருக்கு “இயற்றமிழ் போதகாசிரியர்” என்னும் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தினர்.
இந்நிகழ்வு சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் தலைமையில் சென்னையில் நடந்தது. இந்தப் பட்டம் கிடைக்கப் பெற்ற பின்னரே இவர் கந்தபுராணத்தின் சில படலங்களுக்கு உரை எழுதி வெளியிட்டார் என்பதுவும் தெரிகிறது. வள்ளியம்மை திருமணப்படல உரை நூலில், உரையாசிரியர் பெயர் "இயற்றமிழ் போதகாசிரியர் ச.வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் “ என்றே குறிக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட நூல் வடிவில் வருவதற்கு முன்னர் இவரது “சைவாபிமானி” பத்திரிகையில் தொடராக வெளிவந்துள்ளது.
நாவலரையும் இயற்றமிழ் போதகாசிரியரையும் ஒப்புநோக்கினால் நாவலர் வழியில் இலக்கிய நூற்பிரசுரம், அச்சுயந்திர ஸ்தாபனம், பிறமத கண்டனம் போன்ற அறிவு நிலைப்பட்ட விடயங்கள் முதல், முற்றிலும் சைவாசரமான வாழ்க்கை நாடத்துதல் வரை பல விடயங்களில் பின்பற்றியுள்ளரென்பது தெரியவருகிறது.இவரது வாழ்க்கை முழுவதும் “சைவத்தையும் தமிழையும் மட்டும்” போற்றிய இலக்கிய அறிஞரொருவரின் வாழ்க்கையாகவே இருந்தது.
கடவுளர் மீது இவர் பாடியவற்றுள் 1883ஆம் ஆண்டு வல்வைச் சிவன் கோவில் ஸ்தாபிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தின்போது இவர் இயற்றிய “வல்வை வைத்தியேசர் பதிகம்”, ஊஞ்சல் “ என்பன பாடப்பட்டன. முருக பக்தரான பிள்ளையவர்கள் செல்வசந்நிதித் திருமுறை, நல்லூர்ப் பதிகம், மாவைப் பதிகம் என்னும் பாடல்களையும் இயற்றியுள்ளார். வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் மீதும் “நெடியகாட்டுப் பதிகம்” பாடியுள்ளார்.
கணிதத்துறை, பூமிசாஸ்திரதுறை, வான சாஸ்திரம் போன்ற துறைகளிலும் பிள்ளையவர்கள் சிறந்து விளங்கினார். கணிதத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வாய்பாடுகளும் அவற்றின் விளக்கங்களும் அடங்கிய “கணிதாசாரம்” என்னும் நூல் பிள்ளையவர்களால் வெளியிடப்பட்டது.
இவரது வானசாஸ்திர அறிவைப் பற்றிக் கேள்விப்பட்ட உடுப்பிட்டி வேத போதகர் வண. ஹெளவந்து (Rev. Hoaland) அவர்கள் இவரை அணுகி சந்தேகங்கள் தெளிந்தார் என்றும் பின்னர் உடுப்பிட்டியிலிருந்து குதிரை வண்டியில் வந்து ‘தமிழ்’ கற்றுக்கொண்டார் என்றும் ஐயர் முத்தையர் குறிப்பாற் தெரியவருகின்றது.
இத்தகைய பெரியார் 03.09.1990 இல் ஆவணி மூலத்தில் இவ்வுலகைவிட்டு இறைவனடி சேர்ந்தார். இவரது மறைவு குறித்து சிவப்பிரகாசம் பண்டிதர், சுன்னாகம் அ,குமாரசாமிப்பிள்ளை புலவர், ந.ச.பொன்னம்பலபிள்ளை, வைத்தியலிங்கம் பிள்ளையின் முதல் மாணாக்கர் சி.ஆறுமுகப்பிள்ளை (அப்புக்குட்டி உபாத்தியார்) ஆகியோர் கையறு நிலைக் கவிகள் பாடியுள்ளனர்.
உதவியும் நன்றியும்
1) பேராசிரியர் திரு.கா.சிவத்தம்பி அவர்களின் இயற்றமிழ் போதாகசிரியர் நூல்
2) திரு.பா.மீனாட்சிசுந்தரம் அவர்களின் ‘வரலாற்றில் வல்வெட்டித்துறை’ நூல்