எங்கள் ஊரைச் சுற்றியுள்ள உடுப்பிட்டி, இலக்கணாவத்தை, சமரபாகு, பொலிகண்டி, வதிரி போன்ற அயற் கிராமங்களில் பனை ஓலை உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் தயாராகின. இவை அனைத்தும் பல சந்தைகளிலும் விற்பனையாகிய போதும், திக்கம் சந்தியிலிருந்து தெற்கு நோக்கிய வீதியில் 2km தூரத்தி உள்ள “ கல்லாண்டிச் சந்தை ” இவற்றை விற்பனை செய்யும் பிரதான சந்தையாக இருந்தது. கல்லாண்டிச் சந்தை அந்நாளில் மாலை நேர சந்தையாக இயங்கியது.
மேற்குறித்த ஊர்களிலிருந்தும் சந்தையின் சுற்றாடலிலிருந்தும் வரும் பனை ஓலைப் பொருட்கள் தினமும் சந்தைக்கு வந்து குவியும். அந்த நாட்களில் நமது வீடுகளில் பனை ஓலை – பனை நாரினால் செய்யப்படும் பொருட்கள் மிக அதிகமாகவே பயன்பாட்டில் இருந்தன.அவைபற்றிய ஒரு கண்ணோட்டம் இது.
சொல்லளவில் “ கடகம் ” எனப் பொதுவார்த்தையில் அழைக்கப்பட்டாலும் நார்க்கடகத்திற்கும் – கடகத்திற்கும் அதன் செய்கையிலும் பயன்பாட்டிலும் வித்தியாசம் உண்டு.
“ நார்க் கடகம் ” பொதுவாக கட்டுவேலை போன்ற பல்வேறு கடினமான தேவைகளுக்குப் பயன்பட்டது. “ கடகம் ” அநேகமான வீட்டுத் தேவைகளுக்குப் பயன்பட்டது. வீடுகளில் நடைபெறும் விசேட வைபவங்களுக்குப் “ பந்தி ” வைக்க “ சோத்துக் கடகம் ” பயன்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.
கட்டு வேலைக்குப் பயன்பட்டு வந்த நார்க் கடகத்திற்குப் பதிலாக, இன்று, 20 லீற்றா் எண்ணெய் கலன் (மஞ்சள் நிறமானது) நீளப்பாடாக வெட்டிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் நார்க் கடகத்தின் தேவை மிகக் குறைந்து விட்டது. அதேபோல வீடுகளில் பாவித்து வந்த கடகங்களுக்குப் பதிலாக, வெவ்வேறு அளவுகளில் பிளாஸ்ரிக் சட்டிகள் புகுந்து கொண்டதால் கடகத்தின் தேவையும் குறைந்து வருகிறது.
அடுக்குப் பெட்டியும் – சரக்குப் பெட்டியும் :
சரக்குப் பெட்டி என்பது மட்டை கட்டாமல் பனை ஓலையால் இளைத்து – ஈா்க்கினால் விளிம்புகட்டி நான்கைந்து அடுக்குகளாக இருப்பது சரக்குப் பெட்டி. மிளகு – சீரகம் – மஞ்சள் – செத்தல் – வோ்க்கொம்பு முதலான சரக்குச் சாமான்கள் ஒவ்வொரு அடுக்கினுள்ளும் வைத்திருப்பா். அம்மியில் அரைக்கப் போகும் அம்மாமார் இந்த அடுக்குப் பெட்டியுடனேயே அம்மி அருகில் இரண்டு கால்களையும் நீட்டியபடி அமர்ந்திருந்து அரைப்பார்கள். இன்று அம்மியும் குளவியும் காட்சிப் பொருள்களாகி விட்டன.
அடுக்குப் பெட்டி, சரக்குப் பெட்டியை விட சற்று பெரியதாக அமைப்பு ஒரே மாதிரி இருக்கும். பயறு, உழுந்து, கடலை, போன்ற தானிய வகைகள் இந்த அடுக்குப் பெட்டியில் குறையாமல் இருக்கும். இப்போதும் கூட சில சந்தைகளில் சிறு வியாபாரம் செய்யும் பெண்கள் இவ்வகை அடுக்குப் பெட்டியை காசு வைப்பதற்குப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.
சுத்துப்பெட்டியும் – மூடற் பெட்டியும் :
அந் நாளில் எல்லா ஒழுங்கைகளிலும் உள்ள தட்டிகளில் (தட்டி என்பது பலகாரம் விற்பனை செய்யும் இடம்) அப்பம் – இடியப்பம் – தோசை – பிட்டு விற்கப்படும் இடங்களுக்குச் சென்று பலகாரம் வாங்குவதற்கு இந்தச் சுத்துப் பெட்டிகள் பயன்படும். பனை ஓலையால் இளைக்கப்பட்டு மேல் விளிம்பில் இரண்டு மூன்று ஈர்க்கினை வைத்து அதே மிகுதிப் பனை ஓலையால் மூடிக் கட்டுவது “ சுத்துப் பெட்டி ” இன்றுங் கூட சில வீடுகளில் சுத்துப் பெட்டிகள் பாவனையில் உண்டு.
சுத்துப் பெட்டியை விட சற்றுப் பெரிதாக – கீழ்ப் பெட்டியை மூடக் கூடியதாக அமைந்த பெட்டி மூடற்பெட்டி எனப்பட்டது. அகலம் குறைந்த சாய மூட்டப்பட்ட ஓலையினால் மூலைப் பெட்டிகள் அலங்காரம் பெற்றிருக்கும்.
சுத்துப் பெட்டியில் அல்லது மூடற் பெட்டியில் பாதி இன்றுங் கூட மயானத்தில் “ வாய்க்கரிசி ” போடும் மஞ்சள் நிற அரிசி வைத்திருக்கப் பயன்படுவதைப் பார்க்கிறோம்.
தட்டுப்பெட்டி – சுளகு – நீத்துப்பெட்டி :
பனை ஓலையினால் சற்சதுரமாக இழைத்து ஈா்க்கினால் விளிம்பு கட்டியது “ தட்டுப்பெட்டி” பனை. ஈா்க்கினால் இழைத்து, பனைமட்டை நாரினால் வாய் கட்டிய வட்டமான அமைப்பு “ தட்டுச் சுளகு ” எனப்படுகிறது. மீன், நாவற்பழம் விற்கும் பெண்கள் தட்டுச்சுளகினை இன்றும் பயன்படுத்துவதைப் காண்கிறோம்.
“ சுளகு ” நமது வீடுகளில் அரிசி பிடைக்கப் பயன்படுவது அநேகமாக அனைத்து வீடுகளிலும் இருப்பது சுளகு.
பனை ஓலையினால் இழைக்கப்பட்ட “ நீத்துப்பெட்டி ” பிட்டு அவிப்பதற்கு தினமும் வீடுகளில் பயன்படுத்தப்படுவதால் அனைவரும் அறிந்த ஒன்றாயுள்ளது.
மேற்குறித்த தட்டுப் பெட்டி – சுளகு – நீத்துப்பெட்டி மூன்றுமே இன்றும் வீடுகளில் நித்திய பாவனையில் இருப்பதால், வெளிநாடுகளிலிருந்து வரும் நம்மவர்கள் இந்த மூன்றையும் தவறாது தம்மோடு எடுத்துச் செல்கின்றனா்.
சாமத்தியச் சோடிப் பெட்டி:
பனை ஓலையால் இழைத்து, தடித்த மட்டை கட்டி, மூலைப்பெட்டிகளையும் – நடுப் பகுதியையும் சாயம் தோய்த்த ஓலையினால் அலங்காரம் இட்டு, மிக இறுக்கமாக அதே போன்ற பெட்டியினால் மூடிக்கொள்ளக் கூடியதாக உள்ள சோடிப் பெட்டியை “ சாமத்தியச் சோடிப் பெட்டி ” என்பா். சாமத்தியச் சோடிப் பெட்டிக்கு ஏனைய பனை ஓலைப் பொருட்களை விட நடப்பும் – மதிப்பும் மிக அதிகம்.
பெண் வீட்டார் 108 கொழுக்கட்டை அவித்து மூன்று சாமத்தியச் சோடிப் பெட்டிகளில் அடுக்கி – பக்குவமாக மூடி, மூடிய பெட்டிக்கு மேலாக பெரிய கப்பல் வாழைப்பழச் சீப்பையும் வைத்து, “ மாப்பிளை கேட்கப் ” புறப்பட்டுப் போவா். அதேபோல, மாப்பிளை வீட்டார் மூன்று வியளை (வியளை என்பது ஒரு நீத்துப்பெட்டி அளவு) உழுத்தம்புட்டு வீதம் மூன்று பெட்டிகளில் எடுத்துக் கொண்டு மூடிய பெட்டியின் மேலாக பெரிய கப்பல் பழச் சீப்பும் வைத்து “ பெண் பார்க்கப் ” புறப்படுவா். திருமணம் முடிந்த பின்னா் “ வேள்வு ” கொண்டு போகும் பெண்களும் சாமத்தியச் சோடிப் பெட்டியையே பயன்படுத்துவர்.
அந் நாளில் அந்தியட்டி போன்ற அமங்கலமான நிகழ்வுகளுக்குச் செல்பவர்களும், சாமத்தியச் சோடியின் ஒற்றைப் பெட்டியில் 3 கொத்து கைக்குத்தரிசி, 1 தேங்காய், பெரிய வாழைக்காய் சீப்பு வைத்து பெட்டியை மூடாமல் எடுத்துச் செல்வா். தற்போது 2 kg சீனிச்சரையை ஒரு சொப்பிங் பையில் வைத்து அந்தியட்டிக்கு எடுத்துச் செல்வது (F) பாசனாகி விட்டது.
மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் வெவ்வேறு சாமத்தியச் சோடிப் பெட்டிகளே பயன்படுத்தப்பட்டன என்பது முக்கியமான அம்சம்.
கொட்டைப் பெட்டி :
இந்நாளைய பெண்கள் செல்போன் வைத்துக் கொண்டு செல்லும் அளவு கொண்ட பா்ஸ் போல, அகலம் குறைந்த பனை ஓலையால் இளைக்கப்பட்டு மூடக் கூடியதாக உள்ளது.“ கொட்டைப்பெட்டி ”. அநேகமாக இவை இரட்டை அடுக்குகள் கொண்டதாக இருக்கும்.பக்கத்தில் வெத்திலை – பாக்கு – சுண்ணாம்பு – புகையிலை இருக்கும்.நடுவில் அந்நாளைய நாணய குத்திக் காசு இருக்கும்.இந்தக் கொட்டைப் பெட்டி பெண்களின் நெஞ்சுச் சட்டையினுள் பக்குவமாகத் துயில் கொள்ளும்.
கடலுக்குச் செல்லும் ஆண்களும் சற்று பெரிதாக உள்ள கொட்டைப் பெட்டியைப் பயன்படுத்தி வந்தனர்.கடலுக்குப் புறப்படும் வேளையில் தலையில் முண்டாசாக ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு – அதனுள்ளே இந்தக் கொட்டைப் பெட்டியைச் செருகிக் கொள்வா். என்ன கடுமையான காற்று – மழை – கடலோட்டம் இருந்தாலும் முண்டாசும் அவிழாது – கொட்டைப் பெட்டியும் கடலில் வீழாது.
கட்டுப் பெட்டி :
கடலுக்குப் போகிறவா்கள் சோறு கொண்டு போவதற்குப் பயன்படும் பெட்டியும் ஒரு வகை சுத்துப் பெட்டி ரகத்தைச் சோ்ந்த நீள் சதுரப் பெட்டியாகும். இரட்டை ஓலையினால் மிக நெருக்கமாக இழைக்கப்பட்ட இந்த ரக மூடற்பெட்டிக்கு “ கட்டுப் பெட்டி ” எனும் தனிப் பெயருண்டு. கடலுக்குப் புறப்படத் தயாரானதும் “ சோறு போட்டாச்சா ” என்று கேட்க வேண்டிய கணவா் தன் மனைவியைப் பார்த்து “ சாப்பாடு பெருக்கியாச்சா ” என்று கேட்பார். மனைவியும் “ சாப்பாடு பெருக்கியாச்சு” என்றே பதில் கூறுவாள். இது அந்த சந்தர்ப்பத்திற்குரிய ஒரு தனிப் பாஷை.
அா்ச்சனைப் பெட்டி :
சந்நிதி கோவில் போன்ற பிரபலமான கோயில் வாசற் கடைகளில் விற்கப்படும் அர்ச்சனைப் பெட்டியில் 5 வாழைப்பழம் – 1 தேங்காய் – 3 வெத்திலை – 3பாக்கு – 2 வில்லை கற்பூரம் ஆகியன பல்லாயிரக் கணக்கில் பனைஓலைப் பெட்டியில் (சுத்துப் பெட்டி போன்ற அமைப்பு கொண்டது ) விற்கப்பட்டு வந்தமையே பார்த்திருக்கிறோம். இன்று அர்ச்சனைப் பெட்டிகள் பிளாஸ்ரிக் தட்டுகளாகவும் – பிளாஸ்ரிக் கூடைகளாகவும் மாறி விட்டதைப் பார்க்கிறோம்.
சிவன் கோவிலில் கேதாரகௌரி விரத இறுதி நாளில் “ பெட்டிக் காப்பு ” வழங்கப்படுகிறது. இதுவரை பனை ஓலை சுத்துப் பெட்டியில் வழங்கப்பட்டு வந்த “ பெட்டிக் காப்பு ” இவ்வருடம் பிளாஸ்ரிக் தட்டுகளில் வழங்கப்பட்டதைப் பார்க்க முடிந்தது.
பாய் – தடுக்கு :
பனை ஓலைப் பாயிற் படுத்தெழும்பிய சுகம் இப்போது எவருக்கும் கிடைப்பதில்லை.ஒரு காலத்தில் பனை ஓலைப்பாய் இல்லாத வீடுகளே இல்லை.பனை ஓலைப் பாய் இருந்த இடத்தை மலிவான பிளாஸ்ரிக் பாய்கள் பிடித்துக் கொண்டன. அன்னதானம் அல்லது பெருஞ்சமையல் செய்யும் இடங்களில் மட்டும் சோறு பரவி உலர்த்துவதற்கு மட்டுமே பனைஓலைப் பாய்கள் இப்போதும் பயன்படுகின்றன.
பனைஓலைப் பாயின் நாலில் ஒரு பங்கு – சிறிய பாய் “ தடுக்கு ” எனும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. குழந்தைக்கு உடல் முழுவதும் நல்லெண்ணை பூசி வெறுந் தடுக்கில் நேர் சூரிய ஒளி பட்டும் படாமலும் உள்ள இடத்தில் சில மணி நேரம் வளத்தி விடுவது அன்று சர்வசாதாரணம். குழந்தையும் கையைக்காலை அடித்து விளையாடுவதைப் பார்த்து பெற்றோரும் மற்றோரும் ஆனந்திப்பா். இன்று இவை காணமுடியாத காட்சிகளாகி விட்டன.
குழந்தையைத் தொட்டிலில் வளர்த்தும் போதும் சானண – தலையணைக்குக் கீழாக “ தடுக்குப் ” போடுவதே அன்றைய வழமையாயிருந்தது. இன்று அதுவும் வழக்கொழிந்து போய்விட்டது.
பனை ஓலைப் பொருட்களின் உப பொருட்கள் :
கடுமையான வெப்ப காலத்தில் தலையில் போட்டுக் கொள்ள இப்போதும் சில பேர் பனைஓலைத் தொப்பியைப் பயன்படுத்துகிறார்கள். தலைக்கு அளவான குண்டாளமும் – கண்ணில் வெய்யில் விழாதபடி வட்டமான அமைப்பும் கொண்டு தயாராகும் பனை ஓலைத் தொப்பிகள் இப்போதும் சில கடைகளில் விற்பனையாகிறது.
எமது ஊரோடு ஒட்டியுள்ள தோட்டக் கிணறுகளில் “ துலா ஓடி” தண்ணீர் இறைக்கும் முறை அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. துலாவில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் நுனியில் உள்ள “ பட்டை ” மிகப் பெரியதாக – ஐந்து மூலை கொண்டதாக இருக்கும். ஒரு தடவையில் கூடுதல் கொள்ளளவு உள்ள நீரைப் மேலே கொண்டு வரும். இப்போது துலாவும் – பட்டையும் போன பின் நீர் இறைக்கும் வேலையை “ நீா் இறைக்கும் யந்திரங்கள் ” செய்து முடிக்கின்றன.
“பிளா ” வில் கள் அருந்திய ஆனந்தம் இன்று கிடைக்குமா? பனை ஓலையை மடக்கி கோலிக் கட்டியுள்ள “ பிளா ” எல்லா கள்ளு விற்கும் இடங்களிலும், பின்னாளில் கள்ளுத் தவறணைகளிலும் பயன்பாட்டில் இருந்தது. இன்று வெற்று பிளாஸ்ரிக் போத்தல்களை வெட்டி கிண்ணமாகப் பயன்படுத்துவதால் “ பிளா ” வின் பாவனை இல்லாது போயிற்று.
பனை ஓலை “ விசிறி ”தற்போதும் அநேக வீடுகளில் உள்ளது. திடீரென மின்சாரம் தடைப்பட்டுப் போனால் மட்டும் வீட்டிலுள்ளவா்கள் பனை ஓலை “விசிறி” யைத் தேடிக் திரிவார்கள். பனை ஓலை விசிறிக்குப் பதிலாக பிளாஸ்ரிக் விசிறி பாவனைக்கு வந்து விட்டது.
வீட்டுக் குசினிகளில் அன்றும் – இன்றும் நிட்சயமாகக் காணக்கூடியதாக இருக்கும் ஒரு பொருள் “ திருகணை ” அதுவுங்கூட இன்று அலுமினியம் – எவர்சில்வர் என “திருகணை ” மாற்றம் பெற்று விட்டது.
அந் நாளில் நம் வீடுகள் யாவும் கிடுகுக் கூரையாகவே இருந்தது. கிடுகுக் கூரைகள் வேய்வதற்கு ஈா்மணியும் ஈா்க்கும் பிரதானமானவை. பனை ஈர்க்கினால் தொடா் பின்னலாகப் பின்னப்பட்டிருப்பது ஈா்மணி. மேற் கூரையிலும் – கீழ்க் கூரையிலும் ஈா்மணியால் இழுத்துக்கட்டி – அதன் மேலாக கிடுகுகளை வைத்து கூரைகள் வேயப்பட்டன.
கடற்கரைக்கும் வட்டிக்கும் இடைப்பட்ட கிட்டிய தூரத்தில் வீச்சு மீன் பிடிக்கப் போகிறவர்கள் கைகளில்வலையையும் – இடுப்பில் ஒரு “ பறி ”யையும் கட்டிச் செல்வார்கள். அகன்ற பனை ஓலையினால் நெருக்கமில்லாமற் பின்னி அடி பருத்தும் – வாய் சிறுத்தும் இருக்கம்“ பறி ”யானது வீச்சுக்காரரின் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும். வீச்சுவலையில் மாட்டிக் கொள்ளும் மீன்கள் – பறியினுள் துள்ளி விளையாடும்.
அயற் கிராமங்களில் தயாராகி நமது ஊரில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பனை ஓலைப் பொருட்களின் விபரங்களை ஓரளவு பாரத்தோம்.ஆனாலும் ஊரில் இந்தப் பொருட்களின் பாவனை மிகக் குறைந்து போய்விட்டது.அதனால், ஓரளவு தயாராகும் பொருட்களையும் சந்தைப்படுத்த முடியாதிருப்பதும், அச் சிறு தொழில் தெரிந்தவர்கள் தற்போது குறைந்து வருவதும் போன்ற பல காரணங்களினாலும் இத் தொழில் இன்று சிறுகச் சிறுக செத்துக்கொண்டிருக்கிறது.
பி.கு : இந்தப் பழங்கதையில் – நமது ஊரில் பேச்சு வழக்கிலிருந்த பல சொற்களையும் – ஒரு புரிதலுக்காக – பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த சொற்கள் சரியான “ தமிழ் சொற்களல்ல ” என்பதையும் யான் அறிவேன். தயவு செய்து குறையாகக் கொள்ள வேண்டாம்.