கோவிலில் நடைபெறுவதாக நிட்சயிக்கப்படும் ஒரு சில திருமணங்கள் மட்டுமே பகற் கல்யாணங்களாக இருக்கும். ஏனையவை அனைத்தும் இரவுக் கல்யாணங்களாகவே அந்நாளில் நடந்தேறின. அதிகாலை 1 மணிக்கு “ தாலிகட்டு ” என்றால் மாலை 6 மணிக்கே சம்பிரதாயச் சடங்குகள் அனைத்தும் ஆரம்பமாகி விடும்.
மிகக் குறைந்த குடும்ப உறவினருடன் இரவுச் சடங்குகள் ஆரம்பமாகும். பெண் வீட்டார் ஆரவாரமின்றி மாப்பிளைக்கு வேண்டிய வேட்டி, சேட் சால்வை, முதலானவை அடங்கிய தட்டேந்தி மாப்பிளை வீட்டுக்கு வருவா். வரும்போது இவா்களின் “ குடிமக்கள் ” எனப்படுகின்ற குடும்ப சவரத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி இருவரையும் கூட்டிக் கொண்டு வர வேண்டும். சவரத் தொழிலாளி மாப்பிளைக்கு முகச் சவரம் உள்ளிட்ட சம்பிரதாயச் சடங்குகள் சிலவற்றை நிறைவு செய்வார்.
முதலில் தோழனும், பின்னா் ஏனையவா்களும் மாப்பிளையின் தலையில் பால் – அறுகு வைத்து “ மாப்பிளைக்குத் தண்ணி வார்க்கும் ” சடங்கு நிறைவேறும். தண்ணி வார்க்கும் நேரத்தில் மாப்பிளை அணிந்திருந்த உடுப்புகள் சலவைத் தொழிலாளிக்கு உரியவை. பின்னா் மாப்பிளை வீட்டார் ( குடிமக்களின் மனைவியாரையும் அழைத்துக்கொண்டு ) பெண் வீட்டுக்குச் சென்று இதே பாணியில் “ பெண்ணுக்குத் தண்ணி வார்க்கும் ”சடங்கும் நிறைவேற்றப்படும்.
இப்போது கல்யாண வைபோகத்தின் முக்கிய கட்டம் ஆரம்பமாகிறது. உற்றார் உறவினா் அனைவரும் சூழ்ந்து வர மங்கல வாத்திய இசையுடன் மாப்பிளையை அழைத்து வர தோழன் புறப்பட்டுச் செல்வார். மாப்பிளையின் சதோரி அல்லது தாயார் மாப்பிளைக்கு வேண்டிய உடைகளுடன் – கழுத்து மாலையும் வைத்து தட்டேந்தி தோழனுக்குப் பின்னே நடந்து வருவார். காளிகோயில் மலையுமாணிக்கா் அப்பாவின் பிள்ளைகளான மகாலிங்கம், பொன்னம்பலம் போன்றவா்களிடமிருந்து வாடகைக்குப் பெறப்பட்ட காஸ் விளக்குகளை கூலியாட்கள் தலையிற் சுமந்தபடி ஊர்வலத்தில் வருவா். பின்னாளில் காஸ் விளக்குகள் பெற்றோமாக்ஸ் விளக்குகளாகப் பரிணாமம் பெற்றன.
மாப்பிளை வீட்டுக்கு வந்து சோ்ந்ததும், தோழன் – பெண்ணின் தாய், தகப்பன் ஆகிய மூவரும் சாப்பிட வேண்டியதும் ஒரு சம்பிரதாயமே. இப்போது “ மாப்பிளை ஊா்வலம் ” ஆரம்பமாகிறது. சலவைத் தொழிலாளா்கள் மேற்பாவாடை பிடித்து நில பாவடை விரித்து வர, மணமகனின் சகோதரி அல்லது தாயார் தாலித்தட்டினைத் தலையிற் சுமந்துவர, தோழனின் சின்னி விரலைப் பிடித்தபடி மாப்பிளை உற்சாகமான நடை பவனியில் ஊர்வலம் நகா்ந்து பெண் வீடு வந்து சேருகிறது.
வசதியானவா்கள் நன்கு அலங்கரிக்கப்பட்ட காரில் மாப்பிளை அழைப்பை மேற்கொள்வதும் உண்டு. இரவுத் திருமணங்களாக வீட்டில் நடைபெற்ற திருமணங்களைப் பெரும்பாலும் பரமேஸ்வராக் குருக்கள் நிறைவேற்றி வைத்தமையே ஞாபகத்தில் உள்ளது. (மாப்பிள்ளை – பெண்ணுக்குக் தண்ணி வார்த்தல், சவரத் தொழிலாளி – சலவைத் தொழிலாளி மேற்பாவடை – நிலபாவாடை போன்ற சங்கதிகள் அனைத்துமே இடைக்காலத்திலேயே வழக்கொழிந்து போய்விட்டன. இருந்தாலும் நமது ஊரின் அந்நாளைய கல்யாண வைபோக வழமை எப்படி இருந்தது எனும் தகவலைத் தருவதற்காகவே மேற்குறித்த இரண்டு – மூன்று பந்திகளும் தரப்பட்டன.)
அளவுக்கு அதிகமான வசதி படைத்தவா்களின் “ மாப்பிளை அழைப்பு ” மிக விசேடமாக நடைபெற்றமையும் ஞாபகத்தில் உள்ளது. உதாரணத்திற்கு ஒரு நிகழ்வினைத் தருகிறேன். ரேவடி ஒழுங்கையின் மேற்குப் புறத்தில் T.S நாகரெத்தினம் முதலாளியின் மாடிவீடு இன்றும் உள்ளது. அவரது ஒரே மகள் சறோஜினிதேவிக்கும், சிதம்பராவிற்கு கிழக்காகக் குடியிருந்த கிருஷ்ணபிள்ளையின் சகோதரா் சிதம்பரப்பிள்ளை எஞ்சினியருக்கும் நடைபெற்ற திருமணம் – ஒரு காலத்தில் ஊா் மக்கள் அனைவராலும் பேசப்பட்ட ஒரு திருமண வைபவமாகும்.
ரேவடி ஒழுங்கையில் அவரது வீட்டிலிருந்து – சூத்திரக் கிணறு – பிரதான வீதி வரைக்கும், பிரதான வீதியில் சந்தி வரையிலும் – வாகனங்கள் வீதியால் போய்வரக் கூடியதாக – வீதிக்கு மேலாக மூடிய பந்தலிட்டு – மணிச் சோடனைகளால் வீதிகள் பிரமாதமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மிகச் சிறப்பாக மணவறை போன்று அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் மாப்பிளை ஊா்வலம் ஆரம்மாகிறது. பொய்க்கால் குதிரை – கரகாட்டம் – சிலம்பாட்டம் பாண்ட் வாத்தியம் ஆகியன அணிவகுத்து வர, அதற்கு முன்னே ஊரிக்காட்டிலிருந்து ரேவடி ஒழுங்கை வரை பட்டாசுகள் தொடா்ச்சியாக வெடிக்க, மகோற்கடம் அண்ணாவின் தோட்டாகாயம் காதைப் பிளக்க, பலவிதமான அவுட்டுகளும் இரவைப் பகலாக்க, மாப்பிளை காருக்கு முன்பான – அன்று யாழ்ப்பாணத்தின் பிரபல மங்கல வாத்தியக் கோஷ்டிகள் அனைத்தும் வீதியல் முழங்கி வர ஊா்வலம் மிக மெதுவாக நகா்ந்து முன்னேறிய அழகை எமது சிறு வயதில் நாம் வாய் பிளந்து பார்த்து வியந்திருக்கிறோம்.
இன்றைய நாளில் மதியம் 12 மணிக்கு வெடிச்சத்தம் கேட்டால்“ தொட்டிலில் வளா்த்துறதாக்கும் ”என்போம். மாலை 6 மணியளவில் பட்டாசு சத்தம் வந்தால் “ பிறந்தநாள் கொண்டாட்டம் ” என்போம். ஆனால், அந்த நாளில் இரவு 10 மணியளவில் பட்டாசு சத்தம் வந்தால் “ ஆருக்கோ சோறு குடுத்திட்டினம் போல ” எனப் பேசிக் கொள்வோம். நள்ளிரவில் நடந்து முடிந்த ஒரு கல்யாணச் செய்தி காலையில் காற்றோடு கலந்து காதினை எட்டும். “ வெள்ளம் வந்துட்டுது… சோத்தைக் குடுங்கோ.. ” எனும் சொற்பதத்தின் பொருள் இன்றுங்கூட நமக்குப் புரியாது போனாலும் – அதுவும் ஒரு திடீா்க் கல்யாணத்தையே குறித்தது என்பது மட்டும் நமக்குப் புரிந்திருந்தது.
மாப்பிளை பெண் வீட்டு வாசலுக்கு வந்ததும் மாப்பிளையின் காலுக்குத் தண்ணீா் ஊற்றிவிடும் தோழனுக்கு மாப்பிளை மோதிரம் அணிவிப்பார். பொதுவாக வீடுகளில் நடைபெறும் திருமணங்கள் மணவறை கட்டி “ அரசாணி ” வைத்து நடைபெறும் திருமணங்களாகவே இருக்கும். வசதி குறைந்தவா்கள் “ பிள்ளையார் பூசையுடன் ” தாலி கட்டி சடங்கினை நிறைவு செய்வா். பகலில் வீடுகளில் நடைபெறும் திருமணத்திற்கு தாலிகட்டி முடிந்ததும் சிரிப்பான ஒரு நிகழ்வு நடைபெறும். “ வெளியே போய் அருந்ததி பார்த்து வாருங்கள் ” என்பார் ஐயா். மணமக்களும் பந்தலுக்கு வெளியே வந்து, சம்பிரதாயத்திற்காக ஒரு முறை வானத்தை நிமிர்ந்து பார்த்து, பின்னா் மணமேடைக்குத் திரும்பி வருவா். “ அருந்ததி பார்த்தாச்சா? ” என ஐயா் கேட்டதும், பட்டப்பகலில் அருந்ததி பார்த்ததாக மணமக்கள் கூட்டாகப் பொய்யுரைப்பா்.
திருமணம் முடிந்த கையோடு மாப்பிளை வீட்டுக்கு மணமக்களை அழைத்துப் போய் உடன் திரும்பி வரும் சம்பிரதாயம் “ கால் மாறுதல் ” எனப்படுகிறது. இரவுத் திருமணங்களில் கால்மாறும் காரியங்கள் நடந்தேற விடியும் பொழுதாகிவிடும். அன்று மாலையில் மணமக்கள் பெண் வீட்டிலேயே தங்கியிருக்க பெண் வீட்டார் மாப்பிளை வீட்டுக்கு உழுத்தம்பட்டு “ வேள்வு ” கொண்டு போகிற வழமையும் ஒன்றுண்டு.
மூன்று நாள் முடிந்ததும் மணமக்களை மாப்பிளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நெருங்கிய உறவினா்களுக்கு ஆடு வெட்டி பெரிய விருந்துபசாரம் காத்திருக்கும். மறுநாள் காலையில் பெண் வீட்டிலிருந்து மணமக்களுக்கு “ இடியப்பமும் – முட்டைப் பாற்கறியும் ” கொண்டு போவார்கள் . ( இந்த வழமையும் இப்போது இல்லை) மூன்று நாட்களின் பின் மீண்டும் பெண் வீட்டுக்குத் திரும்பும்போது, அங்கு நடந்த விருந்துக்கு சற்றும் குறைவில்லாதபடி பெருவிருந்து ஏற்பாடாகியிருக்கும். பெண் வீட்டுக்கு மணமக்கள் வந்த நாள் முதல், உறவினா்கள் “ வேள்வு ” கொண்டு போவது வழமையான நடைமுறை.
இடைக் காலத்திய திருமணச் சடங்கு முறைமைகளிலிருந்து ஒரு சில விடயங்களில் மட்டுமே இன்றை திருமணங்கள் மாற்றம் பெற்றுள்ளதே தவிர முக்கிய நிகழ்வுகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. “ மாப்பிளை கேட்டல் ” , “ பொம்பிளை பார்த்தல் ” கால் மாறுதல் ” போன்ற சொற்பிரயோகங்கள் கூட அப்படியே இன்றும் நிலைபெற்றிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
அந்நாளில் ஒரே காணியினுள் ஐந்தாறு குடும்பங்களின் கூட்டான ஒரு வாழ்க்கை முறையும் – நேர வசதியும் – “ கல்யாண வைபோகம் ” மாதக்கணக்கில் நீடிக்க வசதியாகவிருந்தது. இன்றைய அவசர கோலத்திற்கு ஏற்றபடி, ஒரு காலைப் பொழுதில் 3 மணி நேர இடைவெளியில் – ஒரு திருமண மண்டபத்தில் – திருமணத்தை நடாத்தி முடித்து, தாம்பூலப் பையை கையில் வாங்கிக் கொண்டு அவரவா் சோலிக்கு (காரியங்களுக்கு) ப் புறப்படுவதுவழமையாகி விட்டது.