வாரம் ஒரு பழங்கதை – சிதம்பரா சாரணீயம் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2015 (திங்கட்கிழமை)
“அக்கால சிதம்பரா சாரணீயம்” என இந்தப் பழங்கதைக்கு பெயர் இடலாமா என நான் யோசித்ததுண்டு. அனாலும் “A Scout is always a Scout” – ஒரு சாரணன் எப்பொழுதும் சாரணனே என்னும் தத்துவத்திற்கு ஏற்றபடி, சிந்தனைக்கு வந்த தலைப்பு பொருத்தமற்றது எனக் கருதியே “சிதம்பரா சாரணீயம்” என்னும் பொதுவான தலைப்பினை கொடுக்கும்படி நேர்ந்தது.
1907 இல் பேடன் பவுல் பிரவுவினால் தோற்றுவிக்கப்பட்ட இந்த உலகளாவிய இயக்கமானது, 1912 இல் இலங்கையிலும் 1916 இல் யாழ் மாவட்டத்திலும் 1942 இல் எமது சிதம்பரக் கல்லூரியிலும் ஆரம்பிக்கப்பட்டது. சாரணீய இயக்கத்தை சிதம்பராவில் ஆரம்பித்ததுடன் அதனை ஒரு உன்னத நிலைக்கு உயர்த்திய பெருமை நமது கல்லூரியின் பழைய மாணவரும், பின்னாளில் ஆசிரியராகவும், உப அதிபராகவும் இருந்த காலஞ்சென்ற உடுப்பிட்டியூர் S.R.அரியரத்தினம் அவர்களையே சாரும்.
சாரணர் குழு 1943
1967 இல் சிதம்பராவிலிருந்து மாற்றம் பெற்றுச் செல்லும்வரை அரியரத்தினம் அவர்கள், குழுவின் பிரதம சாரண ஆசிரியராகவிருந்து சாரணர்களை வழிப்படுத்தினார். அன்னார் வவுனியா மாவட்டத்திற்கு மாற்றம் பெற்றுச் சென்ற அதேவேளை “வவுனியா மாவட்ட சாரண ஆணையாளர்” என்னும் தனிப் பெருமையையும் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இடைக்காலத்தில் சிதம்பரா சாரணீய வளர்ச்சியில் ஒரு மந்தமான நிலை ஏற்பட்ட போதும், 1957 இல் செல்வச் சந்நிதி ஆலயத் திருவிழாக் கடமைகளில் ஈடுபட்டதுடன், அதே ஆண்டில் யாழ் பழைய பூங்கா போட்டியிலும் கலந்து கொள்ள நேர்ந்ததும் சிதம்பரா சாரணீயத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.
யாழ் பழைய பூங்கா என்பது யாழ் கச்சேரிக்கு முன்பாக (இந்த நாளில் யாழ் செயலகம்) உள்ள, பெரு மரங்களும் கீழே புற்தரைகளும் கொண்ட அழகிய சோலை வனமாக உள்ள இடம். பழைய பூங்கா வளாகத்தினுள்ளேதான் யாழ் அரச அதிபரின் உத்தியோக பூர்வ வதிவிடமும், அந்த மைதானத்தைச் சுற்றிவரக் கூடியதான ஒரு கிரவல் வீதியும் உள்ளது.
யாழ் பழைய பூங்காப் போட்டியில் யாழ் மாவட்டத்தில் சாரணர் குழுக்கள் இயங்கிவந்த அனைத்துப் பாடசாலைகளின் குழுக்களும் பங்கு கொள்ளும். அனைத்து முன்னணிப் பாடசாலைகளின் போட்டிகள் பலமாக இருந்தாலும், யாழ் மாவட்டத்தின் புகழ் பூத்த பாடசாலைகளான உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, கைதடி நபீல்ட் பாடசாலை ஆகியவை காண்பிக்கும் போட்டிகளின் தரம் மிக உயர்ந்ததாகவே இருக்கும்.
யாழ் பழைய பூங்காப் போட்டியாளர்களின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் “றொரட்டறிக் கேடயம்” யாழ் றொரட்டறி சங்கத்தினரால் யாழ் மாவட்ட சாரணர் சங்கத்திற்க்கு வழக்கப்பட்டதாகும்.
சந்நிதி கோயில் தற்காலிகப் பாலம்
கல்லூரியில் நடைபெறும் வார இறுதி பாசறைகளும், சந்நிதி கோவில் திருவிழாக்கால சேவை முகாமும், அங்கேயே நடைபெறும் வட்டாரப் போட்டியும் (Zonal rally) சந்நிதித் திருவிழாவிற்கும் – பழைய பூங்காப் போட்டிக்கும் இடைப்பட்ட ஒரு மாத கால அவகாசமும், சாரணர்கள் தம்மை தயார் செய்யவும், முனைப்பாகப் போட்டிகளில் பங்கு கொள்ளவும் ஏதுவாக இருந்தது.
சிதம்பரா சாரணர் குழுவில் மக்கள் பணி, சமூகத் தொண்டு, சிரமதானங்கள் ஆகியவற்றினைப் பட்டியல் இடுவது என்றால் அது மிக நீண்டதாக அமையும். ஆனாலும் வருடம் தவறாமல் செய்து வந்த சன்னிதிக் கடமை பற்றி குறிப்பிடாதிருக்க முடியாது. சந்தித் திருவிழாக் காலத்தில் இரவு பகல் பாராது சாரணர்கள் கோயிற் கடமைகளில் ஈடுபடுவதை பல லட்சம் மக்கள் பார்த்திருக்கின்றார்கள்.
நெருப்புப் பெட்டி கார்
சந்நிதி கோயிலின் மேற்காக உள்ள அக்கரைக்கும் – இக்கரைக்கும் குறுக்காக - திருவிழா காலங்களில் மட்டும் – போடப்படும் தற்காலிக பாலம் இந்நாளில் நீங்கள் பார்ப்பதைப்போல அகன்ற பாதையாக இருக்கவில்லை. ஒற்றையடிப் பாதைபோன்ற அகலம் குறைந்த தற்காலிக பாலத்தினூடாக வரும் பல்லாயிரக்காணக்கான பக்தர்களும் – காவடிகளும் மிகுந்த அவதானத்துடனேயே பாலத்தைக் கடப்பர்.
“BE PREPARED”, “தயாராயிரு” எனும் சாரண தாரக மந்திரத்திற்கு ஏற்றபடி, சுழி ஓடுவதிலும் – நீச்சலிலும் திறமை பெற்ற நமது சாரணர்கள் பாலத்துப் பணியில் எந்நேரமும் தயார் நிலையிலிருப்பர். தற்காலிக பாலத்தின் மீதேறிவரும் அடியார்களின் பாதுகாப்புப் பணியும் – கோயிற் கடமையும் பலராலும் பாராட்டப்பட்டது.
பழைய சாரணர் குழு
யாழ் பழைய பூங்கா போட்டியென்பது நிலைக்காட்சி (STANDING DISPLAY), மைதானக்காட்சி (ARENA DISPLAY), பாசறைத் தீ (CAMP FIRE), பதிவேடுகள் (RECORDS), அணிநடை (MARCHING) , பாசறைப் பரிசோதனை (CAMP INSPECTION), எனப் பலதரப்பட்டதாக இருக்கும்.
நிலைக்காட்சிகளில் உயர்ந்த கம்புகள் – தடிகள் – கயிறு மட்டுமே கொண்டு தொங்கும் பாலங்கள், காவற்கோபுரங்கள், மேம்பாலங்கள் எனப் பலவும் கட்டப்பட்டிருக்கும். மைதானக் காட்சியில் நமக்கென ஒதுக்கப்பட்ட 10 நிமிட நேரத்தினுள் பாலம் அமைப்பது, ஊஞ்சல் கட்டி ஆடுவது போன்ற பலவும் செய்து காண்பிக்கப்படும்.
பழைய சாரணர் குழு
கல்லூரிக்கு முன்பாக குடியிருந்த காலஞ்சென்ற தி.சபாபதிப்பிள்ளைக்கு சொந்தமான “நெருப்புப் பெட்டிக் கார்” என வர்ணிக்கப்படும் “குட்டுக்காரை” அந்த பத்து நிமிட நேர தயாரிப்பில் உருவான பாலத்தின் மீதாக பலமுறை செலுத்தி பார்ப்போரை அசத்தியது போன்ற சம்பவங்கள் சிதம்பரா சாரணீய சரித்திரத்தின் மறக்க முடியாத நிகழ்வுகளாகும். பாலத்தின் மீது ஒடிய “குட்டிக் கார்” மீள் நிர்மாணம் செய்யப்பட்டு, இன்று வல்வை வீதிகளில் ஓடித்திரிவதைப் பார்த்திருப்பீர்கள்.
1960, 1961, 1962, 1965 ஆகிய ஆண்டுகளில் யாழ் பழைய பூங்காவில் நடைபெற்ற சாரணர் போட்டியில் சிதம்பரா சாரணர் முதலிடம் பெற்று “றோட்டறிக்கிண்ணத்தைப்” பெற்றுக்கொண்டனர்.
இராணி சாரணர் கொடியினை பெற்ற குழுவினர் - 1970
1962 ல் அகில இலங்கைப் போட்டிகளுக்கான தரத்தினை (MERIT CERTIFICATE) குழு எட்டியிருப்பதற்கான சான்றுப் பத்திரம் கொழும்பு சாரணர் குழு தலைமை காரியத்திலிருந்து கிடைத்தது. 1966, 1967 ஆகிய ஆண்டுகளில் சிதம்பரா சாரணர் குழு போட்டிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
1964, 1969, 1970 ஆகிய மூன்று வருடமும் அகில இலங்கையிலும் கூடுதலான இராணிச் சாரணர்களை கொண்ட குழு என்பதற்கான “குலாம் ஹீசைன் இராணிச் சாரணர் கொடி” மேன்மை தங்கிய மகா தேசாதிபதி வில்லியம் கோபவல்லவ அவர்களினால் கொழும்பு இராணி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. 1964, 1970 ல் தனியாகவும், 1969 ல் உடு.அ.மி.பாடசாலையுடன் இணைந்து இந்த வெற்றிக்கொடியினை சிதம்பரா சாரணர் சுவீகரித்தனர்.
(1972 ல் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசாக மாற்றம் பெற்ற பின்னர் “இராணிச் சாரணர்” என்பது “ஜனாதிபதி சாரணர்” எனவும், “இராணி மாளிகை” என்பது “ஜனாதிபதி மாளிகை” எனவும், “மகா தேசாதிபதி” என்பர் “ஜனாதிபதி” எனவும் பெயர் மாற்றமடைந்தது.)
சாரணர் குழு - 1972
1968, 1969, 1970 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக “அகில இலங்கையின் சிறந்த சாரணர் குழு” என்பதற்கான விருதினைப் பெற்றுக் கொண்டமை சிதம்பரா சாரணர் குழுவின் மிகப்பெரிய சாதனையாகும். இந்த நிலைக்கு கொண்டு செலுத்திய சாரணர்களையும், சாரணாளர்களையும் விட, சாரணர் அல்லாத பலரிடமிருந்தும் கிடைத்த உதவிகளின் கூட்டு முயற்சியே மேற்குறித்த உச்ச வெற்றியைத் தேடித்தந்தது.
இந்த வெற்றியினை – வெற்றி விழாவாகக் கொண்டாடும் முகமாக 14 – 07 – 1971 ல் ஒரு மாலை நேர சாரணர் விழா கல்லூரியில் நடைபெற்றது. சிதம்பரா சாரணீயத்தின் தோற்றத்திற்கும் – அதன் வளர்ச்சிக்கும் மூல காரணாமாயிருந்த உடுப்பிட்டியூர் S.R அரியரெத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட விழா, வழமையான சாரண நிகழ்வுகளுடன் நடந்தேறியது. அன்றைய தினம் வெளியிடப்பட்ட சாரணீய வெற்றிவிழா மலரின் அட்டைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள்.