வெகுநேரம் ஆழமாக சிந்தித்தேன்... இவள் எப்படி உருவானாள்.. எங்கிருந்து உருவானாள் என்று தவித்தேன்..
பொதுவாக பெண் படைப்பாளிகள் தாண்டத் தயங்கும் எல்லைகளை வெகு இலாவகமாகத் தாண்டி எங்கோ சென்று ஒளிர்ந்தன அவள் கவிதைகள்.
ஒவ்வொரு கவிதையிலும் வார்த்தைகள் ஒரு மந்திரவாதிக்குக் கட்டுப்படுவதுபோல கட்டுப்பட்டு பொலபொலவெனக் கொட்டுப்படுவதைக் கண்டேன்..
மிகப்பெரிய வாழ்க்கை அனுபவமும், ஞானமும் அதற்கப்பால் ஒரு கொடையும் ஆதாரமாக இல்லாவிட்டால் இது போன்ற வைர வரிகள் கொட்டுப்பட்டு ஜொலிக்கமுடியாது.
வல்வை சகாறாவுடன் அவருடைய படைப்புக்கள் பற்றி பல தடவைகள் உரையாடியுள்ளேன்.. அத்தருணம் அவரிடம் தனது கருத்தில் சமரசம் காணாத நேர்த்தி இருந்தது..
சிலரை சிறந்த கவிஞர்களாக அவள் உள்ளத்தால் வரித்திருந்தகாரணத்தினால், அவர்களால் எட்டித்தொடமுடியாத இடங்களை அவள் தொட்டிருக்கிறாள் என்பதை சொன்னால் மிகை என்று என் மீது கோபப்படுவாளோ என்று அஞ்சி, அது பற்றி எதுவும் சொல்லவில்லை.
என்றும் உணர்வுபூர்வமான ஜீவனுள்ள பாடல்களையே எழுதுவேன் என்று உறுதியுடன் இருந்தவள், கொள்கையுடன் எழுதியவள்..
அவளுக்குள் சுடர்த்து நிற்கும் கொள்கை, படைப்பாற்றலின் கனல், இவைகளை உலகுடன் பேசக்கூடியவாறு எடுத்துச்சொல்ல முடியாது மௌனித்துக் கிடக்கிறது மனது.
இப்போது சகாறாவின் கவிதை வெளியீட்டுவிழா தமிழகத்தில் நடக்கும் செய்தி அறிந்ததும் என்னுள் பாயும் மகிழ்வை தடுக்கமுடியவில்லை... ஏதாவது எழுதியாகவேண்டும். வல்வை மக்களுக்கு இந்தச் செய்தியை வெளிச்சம் போடவேண்டும் என்ற துடிப்பு..
காலம் கடந்தாலும் காரியமில்லையென்று காத்திருந்து, உறுதியுடன் செயற்பட்டுதன் கவிதைக்கு சரியான முகவரி கொடுக்க வல்வைசகாறா எடுத்த முயற்சியை வெளிச்சம் போட்டு காட்டாவிட்டால் என் மௌனம் காட்டில் எறித்தநிலவாகிவிடும்.
தாழ்மையுடன் ஓர் உண்மை சொல்கிறேன். சகாறா கவிதைகளை மகத்துவம் குறையாது மேடையில் பேசயாராலும் முடியும் என்றநம்பிக்கை இன்றுவரை எனக்கு இல்லை..
ஆனால் அந்த நம்பிக்கை இவர்களிடம் இருக்கிறதெனமிகச்சிறந்த ஆற்றலாளர்களை தேர்வுசெய்து தன் கவியை பேசுங்கள் என்று கொடுத்துள்ளார்.
பத்தோடு பதினொன்று அட அத்தோடு இது ஒன்று என்று இவளைப் பேசிவிடமுடியாது, ஓர் எழுத்துக்குள்ளேயே இழுத்தெடுக்கமுடியாத ஏதோ ஒன்று புதைந்துகிடக்கும் சுரங்கமாக இருக்கிறது அவள் படைப்பு..
அவள் படைப்புகளைப் படித்ததும் இந்த உண்மை உங்களுக்கும் தெரியவரும்.
கக்குவதற்கு புறப்பட்ட எரிமலை அதற்குமுன் வெப்பம் தாங்காது இரண்டாகப் பிளந்துவிட்டால் எப்படியிருக்க்கும் ...அந்த அனர்த்தம் எவ்வாறு சீறிப்பாயும்.. அத்தகைய பிரளயம் அவள் படைப்புக்களுக்குள்ளால் வெடித்துச் சிதறுகிறது.
அதனால் தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவளுடைய கவிதைத் தொகுப்பை வாசித்துவிட்டு இன்று வரை எதுவுமே சொல்லாமல் உறைந்துகிடக்கிறேன்..
காரணம்... அதுபற்றி நான் ஒருவார்த்தை சொன்னால் எங்கே அதன் தரம் குறைந்து விடுமோ என்ற அச்சம்.. சிலவேளை தேவையற்றதை சொல்லிவிடுவோமோ என்ற பயம்.. அதனால் கர்ப்பம் காப்பதுபோல அந்தக் கவிச்சுகத்தை சொல்லமுடியாது
தவிக்கிறேன்.
கண்டவர்கள் விண்டதில்லை.. விண்டவர்கள் கண்டதில்லை இது கடவுளுக்கு மட்டுமல்ல அவள் கவிதைக்கும் பொருந்தும்.
இப்போதுவெளியீட்டுவிழா...
நேரில் கலந்து கொள்ளவோ வழியில்லை.. என் உள்ளத்தை எழுதியாகவேண்டும் என்று எழுத ஆரம்பிக்கிறேன்.
அன்று வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்தபோது எனது மாணவியாகக் கண்டேன்..
வல்வை மகளிர் மகாவித்தியாலயம் எத்தனையோஅறிவார்ந்த பெண் ஆற்றலாளர்களை தந்துவிட்டது..
ஆனால் அந்த மகாவித்தியாலயம் தந்தபெண் கவிப்படைப்பாளி என்றபெருமை சகாறாவுக்கே இருக்கிறது.
சிலருக்கு பொருள் வரும் அதற்கேற்ற சொற்கள் சரியாகப் பிறக்காது.. அதுவும் கவிதைதான்.
சிலருடைய கவிதைகளில் சொற்கள் சிறப்பாக இருக்கும் ஆனால் தேடினால் பொருள் கிடைக்காது.. அதுவும் கவிதைதான்.
ஆனால் ஆழமான பொருளும் அதற்கேற்ற சொற்களும் ஒரு சிலருக்கே வாய்க்கும், அதுவரம்.. அப்படிவரமாகப்பொருந்திய கவிதைகளே சகாறா கவிதைகள்.
கவிதை என்பது வைரத்தின் வாள் என்று பாரதிதாசன் சொல்வார்..
அவருடைய கவிதைகளை சந்தங்களும் ஒலிகளும் வழி நடத்தாது, தேவையற்ற ஒருசொல் அவர் கவிதைகளில் இல்லை.. ஓசைக்காக பொருளை இழக்க ஒருபோதும் சம்மதிக்காது பாரதிதாசன் கவிதைகள்.
அவருக்குப் பின் அந்த வைரவாள் கைக்குக் கிடைத்தவர்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே.. அவர்களில் ஒருபெண் படைப்பாளிசகாறா என்று ஒரு சுவைஞனாக சொல்கிறேன்.
ஒரு நல்லபடைப்பாளியாருடனும் சமரசம் காணமாட்டான், அதே சமரசமற்ற போர்க்குரல் சகாறாவின் வாழ்விலும், வரலாற்றிலும்,கவியிலும் இருக்கிறது.
இந்தவெளியீட்டுநாள் எழுச்சியுடன் அமையட்டும்..
தாய் நிலத்தின் கவிதைப் பெரு வீதியில் ஓர் அழகான - ஆரோக்கியமான மரம் நாட்டப்படுகிறது..
மனம் நிறைய வாழ்த்துகிறேன்.
வல்வை மக்களின் கலைப்பணிகளை உவந்து வாழ்த்தும் உலகளாவிய வல்வை மக்கள் தங்கள் வீடுகளில் இவள் கவிதைப் படைப்பை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.
சிறப்பாக பெண்கள் வாசிக்க வேண்டும்.
வல்வையில் உள்ள வீடுகளிலும், நூல் நிலையங்களிலும் இந்த வல்வை படைப்பாளியை வாசிக்க ஏற்பாடு செய்யவேண்டியது வல்வை மக்கள் கடனாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Theepa (United Kingdom)
Posted Date: August 02, 2020 at 12:45
ஆரம்ப பாடசாலையில் ஒன்றாக படித்தோம். உனது படைப்புகளை வாசிக்க ஆவலாக உள்ளேன்.
அனபு நண்பி
தீபா சேனாதிராஜா.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.