அருள் தரும் மீனாட்சி அம்பிகையை வணங்கிய பின் கிளிக்கூண்டு மண்டப வாயிலைக் கடந்து சுவாமி சந்நிதானத்திற்குப் போகும் போது எதிரே எட்டு அடி வரை உயரமான பருத்த முக்குறுணி விநாயகர் தரிசனம் கிடைக்கிறது. கிளிக் கூண்டு மண்டபத்தின் வடக்கு வாசல் சுவாமி சந்நிதானத்துடன் இணைகிறது.
சுவாமி சந்நிதிக்கு எதிரில் உள்ள “ கம்பத்தடி மண்டபம் ” சிற்பக் கலையின் கருவூலம் எனலாம். மண்டபத்தின் நடுவில் தங்கக் கொடிமரமும் – நந்தியும் – பலிபீடமும் உள்ளன. அதனைச் சுற்றி 8 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் அற்புதமான சிலைகள் உள்ளன. சங்கரநாராயணர், சோமஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர், சக்கரபாணர், இடபாரூடர், ஏகபாதர், காமதகனர், தெட்சணாமூர்த்தி, ஸ்ரீசோமஸ்கந்தர், சுகாஸீனர், இடபவாகனத்தில் சிவன் – அம்மன் போன்ற தோற்றங்களும், திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அற்புதமானவை. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பம் அமைந்துள்ளது. (திரு விளையாடற் புராணம்: திருமணப் படலம் 5) இந்தச் சிற்பத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகளேயில்லை. அத்தனை ததத்ரூபமான அமைப்பு.
கம்பத் தடி மண்டபத்திற்குப் பக்கத்தில் இரண்டு பெரிய தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள (1) அக்னி வீரபத்திரர் (2) அகோர வீரபத்திரர் ரூபங்களும் அடுத்துள்ள தூண்களில் காணப்படும் (1)ஊர்த்துவதாண்டவர் (2) காளியின் நடன ரூபங்கள் கொள்ளை அழகுடையவை.
சுவாமி சந்நிதானத்திற்குச் செல்லும் வாயிலில் இரண்டு உருவத்திற் பெரிய துவார பாலகர்கள் இரு மருங்கும் உள்ளனர். உள்ளே நுழைந்ததும் பிரகாரத்தில், பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட சிவனாரின் 64 திரு விளையாடல்களும் அடங்கிய “ திரு விளையாடற் புராணம் அரங்கேற்றப்பட்ட “ ஆறு கால் பீடம் ” உள்ளது.
சுந்தரேஸ்வரரின் கருவறையை நோக்கியவாறு கரம் கூப்பித்தொழுத நிலையில் பதஞ்சலி முனிவரும் – வியாக்கிரபாதரும் காணப்படுகின்றனர். கருவறை மண்டப வெளிச்சுவர்களின் எல்லாப் பக்கங்களிலும் 64 திரு விளையாடற் காட்சிகளும் (ஓவியமாக அல்ல ) கண்ணைக் கவரும் வண்ணச் சிலைகளாக – அழகாக வர்ணம் தீட்டப்பட்டு வைக்கபட்டுள்ளது. இறுதியில், 65 என இலக்க மிடப்பட்டு – திருமலை நாயக்கருக்கு இறைவன் வஸ்திரம் வழங்கும் ஒரு காட்சியும் காணப்படுகிறது. அன்றைய பிரதோஷ நாளின் பரபரப்புக்கு மத்தியில் இது பற்றிய விபரம் எதையும் கேட்டு அறிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு திருவிளையாடலுக்கும் ஒரு காட்சி வீதம் ஒவ்வொரு காட்சியிலும் உள்ள சிற்பங்களின் முகபாவம் ஆகா … அற்புதம் இந்த 64 + 1 சிற்பங்களையும் ரசித்துப் பார்க்கப் பல மணி நேரம் எடுக்கும்.
சோமசுந்தரப் பெருமானின் கருவறை விமானம் இந்திர விமானம் –விண்ணிழி விமானம் என்றழைக்கப்படுகிறது. அட்டதிகு யானைகளும் 32 சிங்கங்களும் - 64 பூதகணங்களும் தாங்கும் அமைப்பில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரை நெருக்கிய படி எட்டுத் திசைகளிலும் ஓரளவான உயரமுடைய கொடித் தம்பங்கள் காணப்படுகின்றன. பிரம்மோற்சவ காலத்தில் மூலத்தம்பத்தில் கொடியேற்றம் நடைபெறும் போது இந்த எண் திசைத்தம்பங்களிலும் கொடி ஏற்றப்படும் எனத் தெரிவித்தார்கள்.
உட்பிரகாரத்தின் தென்பக்கத்தில் 63 நாயன்மார்களும், கலைமகள் சொரூபமும் உள்ளது. தென் மேற்கு மூலையில் உற்சவமூர்த்தங்களும், வடமேற்கு மூலையில் காசிவிஸ்வநாதரும் – பிட்சாடணரும் உள்ளனர். வடபிரகாரக் கோடியில் வெள்ளிக் கவசமிட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ள கனகசபையும் – யாக சாலையும் – வணிகனுக்காகச் சாட்சி சொன்ன வன்னியும் – கிணறும் – லிங்கமும் (திருவிளையாடற் புராணம் : வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் 64 ) உள்ளன.
இப்போது நாம் சுந்தரேஸ்வரப் பெருமானின் உட்பிரகாரத்தினுள் நுழைந்தால் – தெற்கு நோக்கி பரந்து விரிந்துள்ள “ வெள்ளியம்பலம்” வாசலுக்கு வருகிறோம். நடராஜப் பெருமானின் நடனக்கோல உருவம் வெள்ளியால் செய்யப்பட்டு தகதகவென ஜொலித்தபடி உள்ளது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் விக்கிரகம் தங்கத்தால் வார்க்கப்பட்டுள்ளமையையும் நாம் பார்க்கலாம். பொதுவாக நடராஜரின் நடனக்கோலம் இடது காலைத் தூக்கிய படி அமைந்திருக்கும். ஆனால் மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மட்டும் நடராஜர் வலது காலைத் தூக்கி நடனம் செய்தவாறு அபயம் தருகிறார். மதுரையை ஆண்ட இராஜசேகப்பாண்டியன், “ எம்பெருமானே! நின்ற திருவடியை எடுத்து வீசி, எடுத்த திருவடியை கீழே ஊன்றி அடியேன் காணும் படி கால் மாறி ஆடவேண்டும் (திருவிளையாடற் புராணம் :கால் மாறி ஆடிய படலம் 24) என இரந்து நின்றான். அவனது அன்புக்காக இறைவனும் கால் மாறி ஆடினார்.
நாம் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் ஆலயத்தினை தரிசிக்கச் சென்ற வேளை பிரதோஷ நாளாக அமைந்திருந்திருந்ததால், நாமும் பிரதோஷ விழாவினைக் காணும் பாக்கியம் பெற்றோம். முன்னே கோமாதா – அதன் பின்னே கோவில் யானை – அதன் பின்னே மங்கல வாத்தியம் – அதன் பின்னே நூற்றுக்கணக்கான பக்தர்கள் – அதன் பின்னே சுவாமி – அம்பாள் சிறிய ரிஷப வாகனத்தில் – அதன் பின்னே நமச்சிவாயப் பதிகம் உட்பட தேவாரப்பாடல்கள் பாடிய படி ஆண்களும் பெண்களுமாக பக்தர்கள் – இப்படியாக சுவாமி – அம்பாள் மூன்று முறை உட்பிரகாரத்தை வலம் வருகிறது. ஒவ்வொரு மூலையிலும் நெய் தீபஆராதனையும், கடைசிச் சுற்றின் கடைசித் தீபம் கர்ப்பூர பஞ்சாராத்தியும் காட்டப்பட்டதைப் பார்த்து பக்தர்களும் நாமும் மெய் மறந்து நின்றோம்.
மூலவர் சோமசுந்தரக்கடவுள், சொக்கலிங்கநாதர், சொக்சேகர், ஆலயவாய் அண்ணல் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற சுந்தரேஸ்வரர் சற்றே உயரமான லிங்க மூர்த்தமாக அளவான அலங்காரத்துடன் அழகு மிளிரக்காட்சி தருகிறார். தினம் தினம் தம்மை நாடி வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் அருள் வழங்கும் கருணைத் தெய்வம் சுந்தரேஸ்வரர்.
மூலவரின் உட்பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் மிகப் பெரிய ஆயிரங்கால்மண்டபம் வருகிறது.
மண்டப வாசலின் மேல்விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள குறவன்–குறத்தி, பிட்சாடணர் முதலான அழகு மிகசிற்பங்கள் காணத்தெவிட்டாத கலைச் சுவையுடையன. மண்டபத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் இத்தூண்கள் நூலிடைபிசகில்லாமர் ஓர் ஒழுங்கான வரிசையில் இருப்பது கண்டு வியந்துநிற்கின்றோம். இங்கு கணபதி, சரஸ்வதி, அர்ச்சுனன், ரதி, மோகினி, மன்மதன், கலிபுருஷன்எனப் பல அழகான சிற்பங்களும் உள்ளன. இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு காட்சியகம் உண்டு. அங்குள்ள அற்புதமான நடராஜர் சிலையையும் ஏனைய தெய்வத் திருமேனிகளையும்- தொல் பொருட்களையும் கண்டு மகிழலாம்.
ஆயிரங்கால் மண்டபம் அருகே “ மங்கையர்க்கரசி மண்டபம்” எனும் பெயருடைய புதிய மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் கூன்பாண்டியன், மங்கையர்க்கரசியார், ஞானசம்பந்தர், குலச்சிறையார் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. நடுவே சிவலிங்கத் திருமேனி ஒன்றும் உள்ளது. இது பிற்காலத்தய திருப்பணிவேலைகளின் போது (1960 – 1963) கட்டப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து மருது பாண்டியர் கட்டுவித்த அழகிய மரவிதானங்கள் கொண்ட “ கல்யாண மண்டபம்” காணப்படுகிறது. இது வரை கற்சிற்பங்களின் அழகினில் மயங்கி இருந்த நாம், இப்போது விதானங்களின் மரச்சிற்ப வேலைப்பாடுகள் கண்டு வியப்படைகின்றோம். “ கல்யாண மண்டபத்தின்” உட்புற மேற்கூரைகள் செப்புத் தகடுகளால் வேயப்பட்டு தகதகவென ஜொலிக்கிறது.
சுவாமி – அம்பாள் வீதி உலா புறப்படும் வீதி “ ஆடி வீதி” எனப்படுகிறது. வடக்கு ஆடி வீதியில் கோபுரத்தை அடுத்து இரண்டு பக்கங்கங்களிலும் வரிசையாக 5 + 5 தூண்கள் நிற்கின்றன. உயரமான இத்தூண்களின் உட்பகுதி பல அளவுகளில் உட்குழிகள் வெட்டப்பட்டிருப்பதால் அதனை மெதுவாகக் கல்லால் தட்டும் போது சங்கீத ஒலியை எழுப்புகிறது. ஒவ்வென்றும் ஒவ்வொரு விதமான ஒலிகளை வெளிப்படுத்துவதால் அவைகள் “ சங்கீதத் தூண்கள்” எனப்படுகின்றன. இம் மாதிரித் தூண்கள் சில ஆயிரங்கால் மண்டபத்திலும் உள்ளது.
இப்போது நாம் கிழக்குக் கோபுர வாசலினூடாக வெளியே வந்து எதிரே உள்ள வடக்குத் – தெற்கான வீதியைக் கடந்து எதிரில் உள்ள “ வசந்த மண்டபத்திற்கு” வருகிறோம். திருமலை நாயக்கரினால் கட்டப்பட்டுள்ள இம்மண்டபத்தைப் “ புது மண்டபம்” என்கிறார்கள். இந்த மண்டபத் தூண்களில் தடாதகைப் பிராட்டியார், மீனாட்சி திருமணம் , திருமலை நாயக்கர், கல்யானை கரும்பு உண்பது, இராவணன் கைலையைத் தூக்குவது முதலான பல சிற்பங்கள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிற்பங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு கொண்டவை. இந்த அழகு வடிவங்களை, மண்டபத்தின் உட்பகுதி முழுவதும் பரந்து காணப்படும் சிறிய சிறிய கடைகள் மறைத்து நிற்கின்றன. ஒருவாறாக மண்டபத்தின் ஊடாக நடந்து வர, வடக்குத்தெற்கான இன்னொரு வீதியுடனான ஒரு முச்சந்தி வருகிறது.
முச்சந்தியில் புது மண்டபத்தையும் (வசந்த மண்டபம் ) கிழக்குக் கோபுரத்தையும் பார்த்த படி அழகிய வர்ணம் தீட்டப்பட்ட ஒரு பெரிய நந்தியும் முற்றுப் பெறாத ஒரு கோபுரத்திற்கான அடிப் பகுதியும் காணப்படுகிறது. சாலையின் இருபக்கமாயுள்ள கோபுர அடிப்பகுதி மிக அகன்ற பரப்பளவு கொண்டது. இதனை நோக்குமிடத்து இந்தக் கோபுரம் கட்டிமுடிக்கப்பட்டிருந்தால்- தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிக உயர்ந்த விண்ணைத்தொடும் கோபுரமாக – கட்டிடமாக மிளிர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
மன்னர்களும் செல்வந்தர்களும் இத்திருக்கோயில் திருப்பணிகளில் காட்டி வந்த அக்கறை காரணமாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் வளர்ச்சி பெற்று வந்த இத்திருத்தலம் இன்று முழுமை பெற்ற பெருஞ் சிறப்புடன் திகழ்கிறது. 1960 – 63 காலப் பகுதியில் மேலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, அனைத்துக் கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டு – வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன. ஒவ்வொரு மாதப் பிறப்பன்றும் தங்க ரதம் புறப்பாடும், மாதாந்த விழாக்களும், பிரம்மோற்சவங்களும் முறைப்படி நடைபெறுகின்றன.
“ மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளைக் கைம்மட மானி
பங்கையச்செல்வி பாண்டிமா தேவி பணி செய்து நாடொறும் பரவப்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.