சோழ நாட்டின் தென்கரைத் தலமான நாகைக்காரோகணம் சோழ மன்னர்களின் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது. நாகபட்டினம், நாகூர் இரண்டும் அடுத்ததுள்ள நகரங்களாகும். நாகர்கள் குடியேறி வாழ்ந்ததால் இது “ நாகபட்டினம் ” எனப் பெயர் பெற்றது.
கடற்கரையை அண்மித்த பகுதியாக நாகபட்டினம் உள்ளமையால் இது ஒரு துறைமுகப் பட்டினமாகும். பிறநாட்டு வணிகர்கள் இந்தத் துறைமுகத்தில் வந்திறங்கி வியாபாரம் செய்து வந்தமையால் நாகபட்டினம் துறைமுகம் எந்நேரமும் பரபரப்பானதொரு துறைமுகமாகவே இருந்து வந்துள்ளது.
நாகபட்டினம் எனும் பெயர் படிப்படியாக மருவி “ நாகை ” என்றாயிற்று. ஊர் நாகை, கோயில் – காரோகணம். எனவே நாகைக்காரோகணம் எனும் பெயர் நிலைத்த பெயராயிற்று. நாகைக்காரோகணம் திருக்கோவிலின் சிறப்புக் காரணம் பலவுண்டு. புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்துகொண்ட பெருமைபெற்ற பதி இது. சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான இத்தலம் ஆதிபுராணம், சிவராததானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் எனப் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டியதும், அதிபத்த நாயனார் அவதரித்ததுமாகிய சிறப்புக் கொண்ட தலம் நாகைக்காரோகணம்.
இறைவன்:காயரோகணேஸ்வரர், ஆதிபுராணர்
இறைவி:ஸ்ரீ நீலாயதாகூஷி அம்பாள்
தலமரம்: மா
சம்பந்தர், அப்பர், சுந்தரா் மூவராலும் பாடப்பெற்ற ஸ்தலம். அருணகிரிநாதர் தனது 16 வரிகள் கொண்ட திருப்புகழின் ஈற்றடியில் “ நாலுதிக்கும் வெற்றிகொண்ட சூரபத்மனைக் களைந்த நாகபட்டி னர்த்தமர்ந்த பெருமாளே ” என நாகைக்காரோகணத்தைப் பெருமைப் படுத்தியுள்ளார்.
கோவில் வளாகத்தினுள் நுழைந்தவுடனே நம் கண்ணெதிரே மூடிய மண்டபத்தினுள்ளே உள்ள சுதை நந்தி அழகிய வர்ணத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பது தெரிகிறது. நந்தியுள்ள மண்டபத்தின் இரு புறமும் – சற்றுத் தள்ளி – நந்தவனம் காணப்படுகிறது. நந்தவனத்திற்கும் சுதை நந்திக்கும் இடைப்பட்ட அகன்ற பாதை கோபுர வாசல்வரை நீண்டு செல்கிறது. சற்று முன்னே கோவிலின் இடது புறமாக (தெற்கு நோக்கியபடி ) அம்பாள் சந்நிதி தனியாகவும், வலது புறமாக ஆலமர் கடவுளான தெட்சணாமூர்த்தி நான்கு முனிவர்களுக்கும் உபதேசிக்கும் நிலையில் தனிச் சந்நிதானத்திலும் உள்ளனா். இன்னமும் சற்று முன்னே போனால் நடுவே எண்கோண அமைப்புடனான மண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் காணப்படுகின்றன. எண்கோண மண்டப மேற்தளத்தில் நடுவே சுவாமி – அம்பாளும், வலதுபுறம் பிள்ளையார், இடது புறம் முருகன் சுதைச் சிற்பங்களாக நின்ற திருக்கோலத்தில் உள்ளனா். இந்த எண்கோண மண்டபத்தின் வலதுபுறம் சற்று தள்ளி ஸ்தல விருட்சமான “ மா ” மரம் கிளை பரப்பி நிற்கிறது.
அடுத்து 28 தூண்கள் கொண்ட அகன்ற ஒரு மண்டபம் காணப்படுகிறது. மண்டப முகப்பு வாசலின்மேலே, நடுவே சுவாமி – அம்பாள் இடபத்திலும், வலதுபுறம் கணபதி எலி வாகனத்திலும், இடதுபுறம் அம்பாள் தனியாக அன்ன வாகனத்திலும், அடுத்து முருகன் மயில் வாகனத்திலும் உள்ள சுதைச் சிற்பங்கள் புதுவர்ணம் தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டுள்ளன.
கண்ணெதிரே கிழக்குப் பார்த்தபடியான ஐந்து நிலைக்கோபுர வாசல் தெரிகிறது. கோபுர வாசல் முன்பாக செப்புக் கவசமிடப்பட்ட பெரிய கொடிமரமும், பரந்துவிரிந்த பெரிய முகப்பு மண்டபமும் உள்ளது. 36 உயர்ந்த தூண்களையும், 16 உயரம் குறைவான தூண்களுடன் மிகப் பெரிய அமைப்பைக் கொண்டுள்ளது அம்மண்டபம் . இம் மண்டபத்தின் இடது புறத்தில் 4’ வரை உயரம் கொண்ட நீண்டதும் அகலமானதுமான தொட்டியொன்று காணப்படுகிறது. நாகபட்டினம் கடற்கரையை அண்டிய பிரதேசமாயினும் தரவைப்பகுதி நெல் விளைச்சல் கூடிய பகுதியாகும். அதனால் விளைச்சலின் முதல் நெல்லை விவசாயிகள் மூடையாக இந்தத் தொட்டியினுள் கொட்டி விடுகிறார்கள்.
கோபுர வாசல் தாண்டி உள்ளே சென்றால் (வலஞ்சுழியாக ) கிழக்குச் சுற்றில் சூரியன், நால்வர், சுந்தரா் (தனியாகப் பரவையாருடன் ) உள்ளனா். தென் சுற்றுச் சுவரோடு இணைந்தபடியான ஒரு நீண்ட திண்ணைப் பகுதியும், சுவரில் தசரதச் சக்கரவர்த்தி இறைவனை வேண்டுதலும் - இறைவன் வரம் அருளுவதும் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. மேற்கில் மாவடிப்பிள்ளையார், கார்முகீஸ்வரா், தொடர்ச்சியாக ஏழு லிங்கங்களும், வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணியரும் வீற்றிருக்கின்றனா். சிவன் கோவில்களில் பொதுவாகச் சுப்பிரமணியர் காணப்படும் இடத்திலல்லாது கருவறைக்கு சரி பின்புறமாக கிழக்கு நோக்கியபடி உள்ளார் . தொடர்ந்தும் வைரவர் , விசுவநாதர், ஸ்ரீமகாலெட்சுமி ஆகியோர் உள்ளனா். வட சுற்றில் அறுபத்து மூவரும் இந்திரன், எமன், நிருத்தி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இச்சா – கிரியா – ஞான சக்திகள், பிள்ளையார் உள்ளனா்.
வடகிழக்கு மூலையில் (கிழக்குச் சுற்றின் இடது புறம் ) ஸ்ரீ மகா கால பைரவர் உள்ளார். சனீஸ்வரனுக்குத் தனிச்சந்நிதி மேற்குப் பார்த்தபடி காணப்படுகிறது. நவக்கிரகங்களுக்கான சந்நிதி தனியாக உண்டு. இதில் வரிசைக்கு மூன்றாக (கூடுதலான இடைவெளி விட்டு) மூன்று வரிசைகளில் ஒரே திசையை - சுவாமியை நோக்கியவாறு உள்ளனா்.
கோபுரத்தில் திருப்பாற்கடலைக் கடைந்தமை , நால்வர், காளியோடு நடனமாடும் சிவன், மார்க்கண்டேயருக்காக யமனைக் காலால் உதைத்தமை, தென்முகக் கடவுள் நால்வருக்கும் உபதேசித்தமை என நிறையச் சிற்பங்கள் அழகிய வர்ணத்தில் ஜொலிக்கின்றன.
நடராஜர் சபையை வணங்கி உள்வலத்தை முடித்து 5 படிகள் மேலேறிச் சென்றால் வலதுபக்கம் பிச்சாடணர், நடராஜர் – சிவகாமி எனப் பல உற்சவ மூர்த்தங்கள் உள்ள அறை கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. துவார பாலகர்களைத் தொழுது வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உயர்ந்த லிங்கபாணம் – நிறைந்த அலங்காரத்துடன் அருள் பாலிக்கிறார் காயாரோகணா். மூலவரின் பின்புற சுவரை அண்மித்தபடி பார்வதி – பரமேஸ்வரன் – மணமக்களுக்கான முழுமையான அலங்காரத்துடனான திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றனா். அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய அற்புதமான திருமணக் காட்சி. இது.
கருவறையின் இடதுபுறம் தெற்குப் பார்த்தபடியான சந்நிதியில் ஈசன் – அம்பிகையின் இன்னுமொரு திருமணக்கோலக் காட்சி. ஈசனின் இடது கை அம்பிகையை அணைத்தபடியிருக்க, தொங்கவிடப்பட்ட வலது கையினை நந்தி நக்கியபடியான ஒரு காட்சி புதுமையாக உள்ளது. ஈசன் – அம்பிகை – நந்தி வழமைக்கு மாறான பெரிய தோற்றத்துடன் உள்ளது. மூலவரைச் சுற்றிய தனிப்பிரகாரச் சுற்றின் கோஷ்டத்தில் தெட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரா், பிச்சாடணர் உள்ளனா். இந்தத் தனிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரா் வழமைக்கு மாறாக கருவறையின் வலது பக்கமாக உள்ளார். கருவறையின் வலது பக்கம் தியாகராஜர் சந்நிதியும் காணப்படுகிறது.
மூலவரின் கருவறைக்கு முன்பாக உள்ள தம்பத்திற்கு இடமாக அம்பாளுக்கான தனிச் சந்நிதி தெற்குப் பார்த்தபடி உள்ளது. பின்புறமாகக் கருவறையும் , முன்புறம் 12 தூண்களுடனான மண்டபமும் உள்ளடங்கிய சந்நிதி இது. மண்டபத்திற்கு முன்பாக அம்பாளுக்கான தனிக்கொடிமரம் உண்டு. அம்பாளின் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் நிறைந்த அலங்காரத்தில் ஸ்ரீ நீலாதாட்கூஷி அம்பாள் அருள் பாலிக்கிறார். மண்டபத்தின் இடது பக்கச் சுவரில் காளி நடனமாடும் காட்சியும், புண்டரீக மகரிஷி சிவவணக்கம் செய்யும் காட்சியும் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அதேபோல வலது பக்கச் சுவரில், தனது உள்ளங்கால் தெரியும்படியாக சிவன் காலைத் தூக்கி நடனமிடும் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அம்பாள் கருவறையின் முன் மண்டபத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் காணப்படுகின்றன. சற்றுப் பெரிய உருவத்தோடு முன்புறமாக உள்ள நந்தி தனது தலையை வலது புறம் திருப்பியபடி உள்ளதையும், பின்புறமுள்ள நந்தி உருவில் சிறியதாகவும் காணப்படுகிறது.
நாள்தோறும் ஆகம முறைப்படியான ஆறுகால பூசைகளுடன், சிவராத்திரி – பிரதோசம் – நவராத்திரி – கேதாரகௌரி விரதம் போன்றவை அனைத்தும் சிறப்புற நடைபெறுகின்றன. வைகாசி மாதத்தில் வரும் எம்பெருமானின் பிரமோற்சவம் – ஆடி மாதத்தில் வரும் அம்பிகையின் மகோற்சவம் ஆகியவை ஊரின் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிபத்த நாயனாருக்கு இறைவன் அருள் செய்த விழா ஆவணியில் நடைபெறுகிறது. அதிபத்த நாயனார் வாழ்ந்த இடமான செம்படவர் சேரி – தற்போது நம்பியாங்குப்பம் என்றழைக்கப்படுகிறது. நாகைக்காரோகணத்தின் தல புராணத்தை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.