தமிழகத் திருக்கோயில் வரிசை சூரியனார் கோவில் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2016 (வெள்ளிக்கிழமை)
தமிழ் நாட்டிலேயே சிவசூரியப் பெருமானுக்குரிய தனிக்கோயில் அமைந்துள்ள ஒரே இடம், கும்பகோணத்திற்குக் கிழக்கே கும்பகோணம் – பூம்புகார் சாலையில் உள்ள சூரியனார் கோவிலாகும். கிரக தோஷ நிவர்த்திக்காக நவக்கிரக கோவில்களைத் தினமும் தரிசிக்கச் செல்லும் பல நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு மிக முக்கிய மையம் இந்தச் சூரியனார் கோவில். இலங்கையிலிருந்தும் தென்னிந்திய சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வோர், சூரியனார் கோவில் உட்பட நவக்கிரக கோவில்களைத் தரிசிக்கத் தவறுவதேயில்லை.
பிரதான வீதியிலிருந்து பிரிந்து செல்லும் அகன்ற பாதை நேரே, மேற்குப்பார்த்த கோபுர வாசலுக்குச் செல்கிறது. பாதையின் இரு மருங்கும் பல வீடுகளும், வீடுகளின் முகப்பினில் தாழ்வாரக் கடைகளும் காணப்படுகின்றன. எல்லாக் கடைகளிலும் ஒரே மாதிரியான பூசைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. எங்கள் இடங்களில் உள்ள பெரிய தட்டுப்பெட்டி அளவுகொண்ட பிரம்பினாலான வட்டத் தட்டுவத்தில் 10 தேங்காய், 10 வெற்றிலை, 10 பழம், சொரியலாகக் கொஞ்சம் பாக்குச் சீவல், ஒரு செந்நிறப் பட்டுத்துண்டு ஆகியவற்றிற்காக ரூபா 200 வரை கொடுத்து தட்டுவத்தை வாங்கிக் கொள்கிறார்கள். தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது, அதே கடையில் தட்டுவத்தை மீண்டும் ஒப்படைத்து ரூபா 10 திருப்பி வாங்கிக் கொள்கிறார்கள்.
மூன்று நிலைகள் கொண்ட அழகான கோபுர வாசலின் முன்பாக ஒரு தகரக் கொட்டகை காணப்படுகிறது. கோபுர வாசலினுள்ளே ஏழு படிகள் கீழிறங்கி மற்றவர்களுடன் நாமும் உள்ளே போகிறோம். நேராக, திறந்தபடியான அந்தப் பிரகாரத்தில் தம்பம் – பலிபீடம் – நந்தி ஆகியவை காணப்படுகின்றன. மண்டப முகப்பின்மேல் விளிம்பில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சிவசூரிய பகவான் பயணித்தபடியும், சூரியனின் தலைக்குப் பின்புறமாக சூரிய ஒளி வட்டமும், அந்த ஒளி வட்டத்தில் ஏனைய கிரகங்கள் வட்ட அமைப்பிலும் காணப்படும் பெரிய சுதைச் சிற்பம் அழகிய வர்ணத்தில் எழிலுறக் காணப்படுகிறது. சூரியனுக்கு உரிய நிறம் சிவப்பு. சூரியனார் கோவிலின் தலவிருட்சமான வெள்ளெருக்கு உட்பிரகாரத்தில் உள்ளது. கோவிலை அடுத்துள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தம் சிறப்பானது.
தென்மேற்கு மூலையில் (கோவில் மேற்குப் பார்த்தபடி உள்ளது ) கிழக்கு நோக்கிய படியான பெரிய தனிச் சந்நிதியில் “ கோள் தீர்த்த விநாயகர் ” அமர்ந்துள்ளார். ஒன்பது கிரகங்களுக்கு ஒன்பதும், விநாயகருக்கு ஒன்றுமாக பத்துத் தேங்காய்கள் உட்பட ஏனைய பொருட்களுடனான தட்டுவத்தை, கைகளிலோ – அல்லது தோள்மீதோ – அல்லது தலைமீதோ சுமந்தபடி வரும்
பக்தர்கள் நேராக விநாயகர் வாசலுக்கு வந்து சேருகிறார்கள். ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு பேர் (தட்டுவம் ) சேர்ந்ததும், கோயிற் குருக்கள் ஒரு தேங்காயை உடைத்து அர்ச்சனையை ஆரம்பிக்கிறார். அடுத்துவரும் ஐந்தாறு பேரைக் கவனிப்பதற்காக அடுத்த குருக்கள் தயாராகக் காத்திருக்கிறார். குருக்கள் மாரிடத்தில் இந்த விடயத்தில் ஒரு ஒழுங்குமுறை இருப்பது தெரிகிறது.
முன் மண்டபம், இடை மண்டபம், உள் மண்டபம் என மூன்று மண்டபங்கள் உண்டு. விநாயகருக்கான அர்ச்சனையை முடித்துக்கொண்டு தட்டுவத்தைச் சுமந்தபடி வரும் தோச நிவர்த்தி தேடி வருவோர் முன் மண்டபத்தின் பக்கவாட்டுப்
படிகளினூடாக உள்ளே வருகிறார்கள். முன் மண்டபத்தினுள்ளே வடமேற்கு மூலையில் தெற்குப் பார்த்தபடியாக உள்ள காசி விஸ்வநாதர், விசாலட்சியை வணங்குகிறோம். நடு மண்டபத்தில், கோவிலின் மூலவரான சூரியனை நோக்கியபடியுள்ள குரு (வியாழன் ) பகவானைத் தாண்டி நேராக உள் மண்டபத்தில் உள்ள மூலவர் சந்நிதானத்தை அடைகிறோம். கருவறை வாசலில்
.இடது புறமாக சிறிய உருவமாக ஆறுமுகர் வீற்றிருக்கிறார். உள்ளே, கருவறையில் ஸ்ரீ சிவசூரியப் பெருமான் (விக்கிரகம் 4’ உயரமிருக்கும்) இடதுபுறம் உஷாதேவி, வலதுபுறம் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். அழகிய அலங்காரமும், சாந்தமான முகபாவமும், “ வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டோம்…. இனி எல்லாம் ஜெயமே… ” என நிம்மதி கொள்ள வைக்கிறது. சூரிய பகவானுக்கு தட்டுவத்திலிருந்த சிவப்பு பட்டு சாத்தப்பட்டு ஒரு தேங்காய் உடைத்து அர்ச்சனை நடைபெறுகிறது.
நடு மண்டபத்தில் ( இதனைக் குரு மண்டபம் என்றும் சொல்கிறார்கள் ) சூரியனின் நேர் பார்வையில் சூரியனை நோக்கியபடி வீற்றிருக்கும் குரு (வியாழன்) பகவானுக்கும் தேங்காய் உடைத்து அர்ச்சனை நிறைவேறுகிறது. உள் மண்டபத்தின் இடது பக்கவாட்டுப் படிவழியாக உட்பிரகாரத்தின் தென்பக்க வீதியில் கால் பதித்துக் கீழே இறங்குகிறார்கள் தோஷ நிவர்த்தி வேண்டி
வருவோர். (இந்த இடத்திலிருந்து இனிமேல் அப்பிரதட்ஷணமாக வீதியை வலம் வர வேண்டும்) சூரியனின் கர்ப்பக்கிரகத்தை ஒட்டியபடி, நவ நாயகர்களில் (சூரியன், வியாழன் போக) மீதமான எழுவரும் சனி, புதன் , செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஒரே அளவான தனித் தனிச் சந்நிதானங்களில் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். கருவறையை ஒட்டியபடி நெருக்கமாக உள்ள இந்த சந்நிதானங்கள் இருக்கும் திசைகளும் (கருவறையிலிருந்து), சந்நிதானங்கள் நோக்கும் திசைகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
அமைவிடம் (கருவுறையிலிருந்து)
பார்க்கும் திசை
தென் மேற்கு – சனி
மேற்கு
தெற்கு – புதன்
வடக்கு
தென் கிழக்கு – செவ்வாய்
கிழக்கு
கிழக்கு – சந்திரன்
கிழக்கு
வட கிழக்கு – கேது
கிழக்கு
வடக்கு – சுக்கிரன்
தெற்கு
வட மேற்கு – ராகு
மேற்கு
தோச நிவர்த்தி வேண்டி வந்திருக்கும் குறித்த ஐந்தாறு பேருடன், குருக்கள் ஒவ்வொரு சந்நிதான வாசலிலும் தேங்காய் உடைத்து அர்ச்சனையை நிறைவு செய்து அப்பிரதட்சணமாகக் கோவிலை வலம் வருகிறார். இறுதியாக ராகு சந்நிதான அர்ச்சனையுடன் நவக்கிரக தரிசனம் நிறைவு பெறுகிறது. இங்கே அமர்ந்துள்ள நவக்கிரக நாயகர்களின் கைகளில் ஆயுதங்கள் எதுவுமில்லை. அவர்கள் தத்தமது வாகனங்களில் ஆரோகணிக்கவில்லை. அனைவருமே அனுக்கிரக மூர்த்திகளாக வரமருளும் சாந்தமான முக பாவத்துடன் அமர்ந்திருப்பது சூரியனார் கோவிலின் தனிச்சிறப்பாகும்.
இறுதியாக, ராகு சந்நிதானத்திற்கு மேற்குப் பக்கமாகவுள்ள சிறிய சந்நிதானத்தில் அமர்ந்துள்ள சண்டிகேஸ்வரரை வணங்குகிறோம். இங்கே சூரியன் மூல மூர்த்தமாக இருப்பதால் இங்கு அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரருக்கு “ தேஜஸ் (ஒளி) சண்டிகேஸ்வரா் என்ற சிறப்புப் பெயருமுண்டு. சண்டிகேஸ்வரர் தரிசனம் நிறைவெய்தியதும் (கவனிக்கவும்) பிரதட்சணமாக நாம் பிரகாரத்தை வலம்வர, தென்பிரகார சுவர் ஓரமாக, அதற்கென ஒதுக்கப்பட்ட நீண்ட மேடையில் பலநூறு நெய்தீபங்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
நவக்கிரக நாயகர்களை வணங்கும் ஒழுங்கு முறை மீண்டும் சுருக்கமாகக் கீழே தரப்படுகிறது.
தோச நிவர்த்திக்காக அர்ச்சனைப் பொருட்களுடன் வந்தவர்களில் அநேகர் தட்டுவத்திலுள்ள நிவேதிக்கப்பட்ட பொருட்களை வசதியான இடங்களில் வைத்துவிட்டு, தட்டுவத்தினை மட்டும் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே இந்த அர்ச்சனைப் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வதையும் காணமுடிந்தது.
பிரதட்சணமாக பிரகாரவலம் மீண்டும் விநாயகர் சந்நிதியில் நிறைவு பெற, விநாயகரை வணங்கி விடைபெற்று கோபுர வாசலினூடாக வெளியே வருகிறோம். அர்ச்சனைப் பொருட்கள் வாங்கிய பெட்டிக்கடையில் தனித் தட்டுவத்தினை தவறாது கொடுத்து கடைக்காரர் தருவதை வாங்கிக்கொண்டு கோவில் வளாகத்தினை விட்டு வெளியே நடக்கிறார்கள் பக்தர்கள். நாமும் அவர்களைத் தொடருகிறோம்.
மீண்டும் ஒரு திருக்கோவிலில் சந்திப்போமா……
நவக்கிரக திருத்தலங்கள்
சூரியன்
சூரியனார் கோவில்
சந்திரன்
திங்களுர்
செவ்வாய் (அங்காரகன்)
வைத்தீஸ்வரன் கோவில், பழனி
புதன்
திருவெண்காடு
வியாழன் (குரு)
ஆலங்குடி
சுக்கிரன்
கஞ்சனூர்
சனி
திருநள்ளாறு
இராகு
திருநாகேஸ்வரம்
கேது
கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, கேதாரம்
நன்றி : ஞானச்சுடர் : 2013 மார்கழி மலர் 2013
அடுத்த வாரம் : “ கொடுங்குன்றம் ” (பிரான்மலை)
(1) முருகன் தனது திருநடனத்தை “ அருணகிரிநாதருக்குக் ” காண்பித்த இடம்.
(2) எந்தக் கோவிலிலும் கிடைக்கப்பெறாத ஒரு புதுமையான அனுபவம் நமக்கும் கிடைத்த இடம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.