தமிழகத் திருக்கோயில்கள் வரிசை - திருஏடகம் - வல்வையூர்அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)
அனல் வாதத்தில் தோற்றுப்போன சமணர்கள் சீர்காழித்தலை வரைப் புனல்வாதத்திற்கு அழைத்தனா். மதுரைப் பாண்டியனின் ஏற்பாட்டில் சம்பந்தரும் அதனை ஏற்றுக்கொள்ள, சமணர்களால் வைகை ஆற்றில் விடப்பட்ட ஏடானது ஆற்றின் வேகத்திற்கு இசைவாக அள்ளுண்டு வேகமாகச் சென்று மறைந்தது. சீர்காழி வேந்தா், ஏட்டுக் கட்டினுள் நூல் சாத்திப்பார்த்து வெளியே எடுத்த “வாழ்க அந்தணா் ”எனத் தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டினை வைகை ஆற்றில் விட, அவ்வேடானது ஆற்று நீரின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் நீரைக் கிழித்துக்கொண்டு முன்னே சென்றது.
ஆற்றின் மேற் செல்லும் ஏடு தொடர்ந்தெடுப்பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லுங் கடும் பரி ஏறிக்கொண்டு
கோற்றொழில் திருத்த வல்லகுலச் சிறையார் பின் சென்றார்
ஏற்றுயா் கொடியினாரைப் பாடினார் ஏடு தாங்க
பெரிய புராணம் : 2747
ஆற்றின் நடுவே நீரை எதிர்த்து மேல் நோக்கிச் சென்ற ஏட்டினை எடுப்பதற்காக காற்றினைப் போல விரைவாகச் செல்லும் தம் குதிரை மீதேறிச் சென்ற பாண்டியனின் பிரதம அமைச்சரான குலச்சிறையார் வைகைச் கரை மீதுசெல்ல, அந்த ஏடு மேற்கொண்டும் செல்லாது ஓரிடத்தில் தங்கி நிற்குமாறு திருஞானசம்பந்தா் “ வன்னியும் அத்தமும் ” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடியருளவும் ஏடானது ஏடகத்தில் கரைதட்டி ஒதுங்கி நின்றது.
ஏடகம் பிள்ளையார்தம் வன்னி என்றெடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாருங் கூடிக்
காடிட மாக ஆடுங் கண்ணுதல் கோயில் மாடு
நீடுநீர் நடுவுட் புக்குநின்றஏ டெடுத்துக் கொண்டார்.
பெரியுராணம் :2748
ஞானசம்பந்தர் அவ்வேடகத் திருப்பதிகத்தை“ வன்னியும் அத்தமும் ” எனத்தொடங்கிப் பாடியருளவும், ஆற்று நீருள் கூடி வந்த ஏட்டினிடம் குலச்சிறையாரும் போய்ப்பொருந்திப் பெருஞ் சுடுகாடே இடமாய் ஆடுகின்ற நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் கோயிலினுள் புகுந்து, மேலே செல்லாமல் நின்ற ஏட்டை எடுத்துக்கொண்டார்.
ஏடகம்பாண்டிநாட்டுத்திருத்தலம். ஏடகம்ஏடு + அகம். ஏடு ஒதுங்கிய இடம் ஏடகம் என்றாயது. வைகை ஆற்றுக்குத் தெற்காக, மதுரை மாநகருக்குக் கிழக்காக உள்ள திருஏடகம் மதுரையிலிருந்து சோழவந்தான் சாலையில் 20 கி.மீ தூரத்தில் உள்ளது. மேற்குறித்த சோழவந்தான் சாலையானது சில இடங்களில் வைகையை நெருங்கியும், பல இடங்களில்வைகையை விலகியும் சென்றாலும், ஏடகத்தினை அண்மிக்கும் போது கோவிலை மிகநெருங்கியே செல்கிறது. “ செல்கிறது ” என்ற சொற்பிரயோகம் தவறானது. “சென்றிருக்கிறது ” என்பதே சரியானதாகும்.
ஒருகாலத்தில். அகன்று கரை புரண்டு வைகை ஓடியதற்கான சான்றுகள் மட்டுமே இப்போது தெரிகிறது. ஒரு சொட்டு நீரின்றி வரண்ட வைகையில் குவியல் குவியலாக சேர்ந்துவிட்ட வண்டல் மண்ணினை வரிசை வரிசையாக டிராக்ரா்களில் விற்பனைக்காக அள்ளிச் செல்லும் காட்சியே இன்றைய வைகையின் அடையாளமாகும்.
ஒரு முகப்பு வாசல் வளைவின் இரு மருங்கும் உள்ள விநாயகரையும் முருகனையும் வணங்கி அனுமதி பெற்று உள்ளே போனால் கிழக்குப் பார்த்தபடியான ஐந்து நிலைக்கோபுரம். உள்ளே கோவிலும் பிரகாரம் சிறியன. மேற்குப் பார்த்துள்ள சூரியனை நமஸ்கரித்து எமது பிரகார வலத்தினை ஆரம்பிக்கிறோம். உட்பிரகாரத்தின் தென்புறம் முழுவதும் அறுபத்து மூவர் வரிசையாக உள்ளனா். தென்தேற்கு மூலையில் ஒரே சந்நிதியில் மெய்கண்டதேவா், உமாபதிசிவம், அருள்நந்தி, மறைஞானசம்பந்தா், என சந்தான குரவா் நால்வரும் அமர்ந்துள்ளனா். அடுத்து பஞ்சலிங்கங்கள், வள்ளி–தெய்வானை சமேத சண்முகா் சந்நிதிகளும் உண்டு.
உட்பிரகார வடசுற்றின் ஆரம்பத்தில் அமர்ந்திருக்கும் வராஹி அம்மன் உருவத்தில் பெரியவளாக, நிறைவான அலங்காரத்துடன் உள்ளார். அன்று வாரஹி அம்பாளுக்கு நடைபெற்ற விசேட பூசையிலும் பலபெண்கள் கலந்து கொண்டமையும் காணமுடிந்தது. அம்பாளைத் தொடர்ந்து சப்தமாதர், இரட்டை விநாயகா், சுப்பிரமணியா், துர்க்கை, மகாலெட்சுமி மூர்த்தங்களும் உள்ளன. சுப்பிரமணியர், துர்க்கை மகாலெட்சுமி தத்தமது வழமையான இடங்களில் இல்லாமல் மாறுபட்ட இடங்களில் அமர்ந்திருப்பது வித்தியாசமாக இருந்தது.
உட்பிரகார வடகிழக்கு மூலையில் உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் ஒரே வரிசையில் தனிச்சந்நிதியில் வைக்கப்பட்டு கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து காலபைரவா், வல்லபகணபதி, பூரணாம்பிகை, அய்யனார், புஸ்பகலாம்பிகை, சாஸ்தா, சந்திரன் ஆகிய மூர்த்தங்கள் வரிசையாக உள்ளன. இந்த மூலையிலேயே நவக்கிரகங்களுக்கான தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.
பிரகார வலத்தினை நிறைவு செய்து, தம்பம் –நந்தி –பலிபீடத்தினைச் சுற்றி, மூலவா் சந்நிதானத்தின் முன்மண்டபத்தினுள் நுழைகிறோம். முன்மண்டபமும் – தூண்களும் விதானமும் ஓரளவான சிற்பவேலைப்பாடுகள் கொண்டு காணப்பட்டன. கருவறையின் உள்ளே மூலவா் திருஏடகநாத சுவாமிலிங்க வடிவில், அளவான அலங்காரத்துடன் காணப்படுகிறார். சந்நிதியில் கூட்டம் குறைவாக இருந்தமையால் ஏடகநாதரைக் கண்குளிரக் கண்டு மனம் நிறையத் தரிசித்து வரமுடிந்தது. கருவறைச் சுவரில் கோஷ்டமூர்த்தங்களாக தெற்கில் பாலகணபதியும், தெட்சணாமூர்த்தியும், மேற்கில் கருவறையின் சரி பின்புறமாக லிங்கோற்பவரும், வடக்கில் துர்க்கையும் மாடங்களில் வீற்றிருக்கிறார்கள். சண்டிகேஸ்வரா் துர்க்கையின் முன்பாக தமது வழமையான நிலையத்தில் உள்ளார்.
அருகிலேயே ஸ்தலவிருட்சமானவில்வ மரம் காணப்படுகிறது. அருள் மிகு ஏலவார் குழலி அம்பாள் சந்நிதிகிழக்குப் பார்த்த தனிக்கோவிலாக ஒரு முன் மண்டபத்துடன் காணப்படுகிறது. அம்பிகை நான் குதிருக்கரங்களுடனும், நிறைந்த முகப்பொலிவுடனும் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறை கோஷ்டத்தில் தெற்கே இச்சாசக்தியும், மேற்கேகிரியா சக்தியும் வடக்கே ஞானசக்தியும் உள்ளனா். வழமையான இடத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதியும் உண்டு. அம்பாள் கருவறையின் முன் உள்ள மண்டபத்துத் தூண்களில் பல்வேறு சிற்பங்கள் காணப்படினும், ஒரு தூணில், கைத்தாளமின்றிக் காணப்படும் திருஞானசம்பந்தரின் சிலாரூபம் திரும்பிப் பார்க்க வைக்கிறது. கந்தசஷ்டி, நவராத்திரி, ஆடிப்பூரம், சிவராத்திரி, பங்குனி உத்தரம் போன்றவை திருஏடகத்தின் விசேட நாட்களாக இருப்பினும், ஆவணி மாதத்து முதல் நாளில் கொண்டாடப்படும் ஏடு எதிரேறிய விழாவே மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஒரு குறிப்பு:
சீர்காழித் தலைவா் சம்பந்தரால் மதுரையின் வைகைக் கரையில் விடப்பட்ட ஏடானது நீரைக் கிழித்து எதிரேறிய இடம்“ திருஏடகம் ” ஆனாலும், இந்த வரலாற்றுப் பதிவு கோவிலின் எப்பகுதியிலும் காணப்படாமை ஒருகுறையாகவே தென்பட்டது.
“ ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில் பெறும்
கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமார் ஏடகஞ் சேர் தலாஞ் செல்வமே ”
-சம்பந்தா்-
நன்றி :ஞானச்சுடா் ,ஆடி 2013
அடுத்தவாரம் : “திருக்கருகாவூர் ” தாயின் கருப்பையிலுள்ள கருவைக் காத்து நிற்கும் “ கருக்காத்த நாயகி ” வீற்றிருந்து அருளாட்சி செய்யும் இடம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.