திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் 14 கி.மீ தூரத்தில் உள்ளது “ திருப்பாச்சிலாச்சிராமம் ” எனும் “ திருவாசி ” ஸ்தலமாகும்.
திருப்பாச்சிலாச்சிராமம் = பாச்சில் + ஆச்சிரமம்
பாச்சில்= ஊரின் பெயர்
ஆச்சிரமம்= கோவில்
“ திருவாசிராமம் ” என வழங்கபட்டு வந்த ஊரின் பெயரே “ திருவாசி ” என இந்நாளில் வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு அற்புதங்கள் நிகழ்ந்த இடமாக இருத்தலினால் “ திருவாசி ” ஸ்தலம் தனிச்சிறப்பான ஸ்தலமாகக் கொள்ளப்படுகிறது. (1) சுந்தரா் பொற்காசு பெற்ற இடம். (2) கொல்லி மழவன் புதல்விக்கு வந்த முயலகன் நோயைச் சம்பந்தர் தீர்த்து வைத்தது. “ முயலகன் ” நோய் என்பது உணர்வற்ற நிலையில் வரும் ஒருவித வலிப்பு நோய். இங்குள்ள நடராஜர் திருவடியின் கீழ் முயலகனுக்குப் பதிலாக பாம்பு இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கியுள்ள கோவிலின் எதிரே குளமும் வன்னி மரமும் உள்ளது. முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிரகாரத்திற்கும் இடைப்பட்ட பரந்த பகுதியில் இருக்கும் நாலுகால் மண்டபம் “ ஆவுடையாப்பிள்ளை மண்டபம் ” எனப்படுகிறது. இம்மண்டபத் தூண்களில் சம்பந்தர், கொல்லி மழவன் புத்திரியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோவிற் பிரகாரத்தினுள் நுழைந்ததும் தம்பத்தடி விநாயகர் – தம்பம் – பீடம் – நந்தி ஆகியவை உள்ள மாபிள் கற்கள் பதிக்கப்பட்ட மண்டபப் பகுதிக்கு வருகிறோம். நேராக கருவறையில் மூலவர் தரிசனம் கிடைக்கிறது. லிங்கவடிவில் உள்ள மூலவர் “ மாற்றறிவரதீஸ்வரா் ” உருவத்திற் சிறியவராக அனைவருக்கும் அருள் பாலிக்கிறார். சமீவனேஸ்வரா், பிரமபுரீஸ்வரா் எனவும் கருவறைச் சிவனுக்கு வேறு திருநாமங்களும் உண்டு. இந்தத் தம்பத்தடி மண்டபம் “ சுந்தரருக்குப் பொற்கிழி தந்த ஸ்தாபன மண்டபம் ” எனப்படுகிறது.
மேற்கு நோக்கியபடி பாலாம்பிகை அம்பாள் சந்நிதி காணப்படுகிறது. நவக்கிரகங்கள், சகஸ்ரலிங்கம் சந்நிதிகள் தனித்தனியாகக் காணப்படுகிறது. உட்பிரகாரத்தின் தென் சுற்றில் தென் கிழக்கு மூலையில் மடைப்பள்ளியும், நால்வர், அறுபத்துமூவர் சந்நிதிகள் உள்ளன. தொடர்ச்சியாக மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் “ கோடி விநாயகரும் ” பிரகாரத்தின் நடுவே முருகனும், வடமேற்கு மூலையில் “ கஜலெட்சுமியும் ” வீற்றிருக்கின்றனா்.
கருவறையின் கோஷ்டத்தில் தென்புறமாகத் தெட்சணாமூர்த்தியும், மேற்காக அர்த்தநாரீஸ்வரரும், கிழக்காக பிரம்மாவும் உள்ளனா். சண்டிகேஸ்வரா் தனிச்சந்நிதியில் காணப்படுகிறார். சூரியன், பைரவர், நடராஜர் சந்நிதிகளும் தனித்தனியாக உண்டு.
அப்பர் பெருமானின் ஒரு பதிகமும், சுந்தரின் 12 பாடல்கள் கொண்ட ஒரு பதிகமும், ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் “ ஷேத்திர வெண்பா ” மூன்று பாடலும் உட்பிரகாரச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.
கொல்லி மழவன் தனது பெண் குழந்தையை “ முயலகன் ” எனும் உடல் நோய் வருத்தியதால் பெரிதும் வருந்தித் தளர்ச்சியடைந்தான். எந்த வழிமுறையிலும் அந்நோய் நீங்கப் பெறாமையால் அப்பெண்ணை இறைவனின் திருக்கோவில் கொண்டு வந்து சேர்த்தனா். திருஞானசம்பந்தர் “ திருப்பாச்சிலாச்சிராமம் ” வருவதை அறிந்த கொல்லி மழவன் நகரத்தை அலங்கரித்து சம்பந்தர் வரும் வழி சேர்ந்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தை பெரிய புராண நாயகரான சேக்கிழார் பெருமான் தமது பாடலின் ( பாடல் இல. 2212 ) இறுதி வரியில், “ வானவர்நா யகர்மகனார் வருமுன்பு தொழுதணைந்தான் மழவர்கோன் ” என்கிறார். “ கொல்லி வழவன் தானும் தேவதேவரான சிவபெருமானின் மகனார் திரு முன்பு தொழுதபடியே சேர்ந்தான் ” என்பது பொருள். “ மகனார் ” எனக் கூறியமையானது, உமாதேவியாரின் திருமுலைப்பால் உண்ட காரணத்தால் ஞானசம்பந்தா் சிவபெருமானின் “ மகன் ” எனப்பட்டார் எனக் கொள்க.
பொன்னின் கொடி என ஒல்கிவந்து பொருவலித் தாதை புடையணைந்தாள்.
சம்பந்தா் திருப்பதிகம் பாடி முடிந்ததும் மழவன் மகள் நோய் நீங்கப்பெற்று தன் தந்தை பக்கத்தில் வந்து நின்றாள். திருவானைக்கா திருத்தலத்தை பாடித் துதித்த பின் சுந்தரா் திருப்பாச்சிலாச்சிராமத்தினைச் சென்றடைந்து, அங்குள்ள ஈசனிடம் தமக்கு பொற்காசு தரும்படி வேண்டுகோள் வைக்கிறார். சுந்தரரின் வேண்டுகோளை ஏற்று இறைவனும் அவருக்கு பொன் முடிப்பு வழங்குகிறார்.
மேற்குறித்த இரு அற்புதங்களும் நிகழ்ந்த இந்த “ திருவாசி ” திருக்கோவிலை அனைவரும் தரிசித்து அருள் பெறுவார்களாக.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.