தமிழகத் திருக்கோயில் வரிசை திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (முதற்படை வீடு) -வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2016 (திங்கட்கிழமை)
பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குத் தென்மேற்கே ஐநு்து மைல் தூரத்தில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம். மதுரை நகரின் இரு பிரதான பேருந்து நிலையங்களான அண்ணா பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து அடிக்கடி பேருந்துகள் திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றன. மதுரையில் தமிழ் வளர்த்த கடைச்சங்க காலத்தில் இந்நகரம் அமைந்திருந்ததாக “ மாடமலி மறுகில் கூடல் குடவயின் ” என்று திருமுருகாற்றுப்படையும், “ கூடற் குடவயின் பரங்குன்று என அகநானூறும் கூறுகிறது.
திருப்பரங்குன்றம் நகருக்கு நடுவே, சுமார் முன்னூறு அடி உயரத்தில் காணப்படும் மலை சிவலிங்க வடிவிலே தோற்றமளிப்பதால், சிவபெருமானே குன்றுருவில் காட்சியளிப்பதாகக் கருதப்பட்டு தொன்றுதொட்டே “ பரங்குன்றம் ” என அழைக்கப்பட்டு வருகிறது. இக் குன்றைச் சிவபெருமான் என்று எண்ணி நித்தம் தொழுவதால் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் எனத் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் இது.
“ மைத்தகு மேனி வாளரகக் கன்தன் மகுடங்கள்
பத்தின திண்தோள் இருபதும் செற்றான் பரங்குன்றைச்
சித்தம தொன்றிச் செய்கழல் உன்னிச் சிவன்என்று
நித்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே”
கைலாயத்தில் இறைவன் உமாதேவிக்குப் பிரணவப் பொருளை உபதேசிக்ககையில் தன் தாயின் மடிமீது அமர்ந்திருந்த பாலமுருகனும் அம்மந்திரப் பொருளைக் குருமுகமாகவன்றி மறைமுகமாக அறிந்து கொண்டார்.
புனிதமான மந்திரப் பொருளைக் குருமூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டுமென்றும், மறைமுகமாக அறிந்துகொள்ளுதல் பாவமென்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. குரு பக்தியில்லாமல் ஞானத்தை அடைய முடியாது என சாஸ்திரம் வலியுறுத்துவதையே திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.
“ தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே ”
முருகப்பெருமானே பிரணவ மந்திர சொரூபமாக இருந்தபோதிலும், உலக நியதிக்குப் புறம்பான காரியத்தைச் செய்ததால், அக்குற்றத்திற்குப் பரிகாரம் செய்யவேண்டிக் குருமூர்த்தி திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்யலானார். முடிவில் சிவபிரானும் பார்வதி அம்மையும், பரங்கிநாதர் – ஆவுடையநாயகி எனும் பெயருடன் காட்சி கொடுத்து ஆசி வழங்கினார். முருகப் பெருமானால் வழிபடப்பட்ட இக்கோவில் மீனாட்சி – சுந்தரேஸ்வரா் ஆலயம் எனும் பெயரில் (திருப்பரங்குன்றம் கோவிலருகே ) சந்நிதி வீதியில் அமைந்திருக்கிறது. இவ்வாலய தரிசனம் செய்த பின்னரே முருகன் கோவிலுக்குச் செல்லவேண்டுமென்பது ஐதீகம் முருகக் கடவுளுக்கு சிவபெருமான் காட்சி தந்த நன்னாள், திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழாவாகப் பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சேர சோழ பாண்டியர் மூவரும் பரங்கிரி நாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றமையை சுந்தரமூர்த்தி சுவாமிகளின் “ அடிகேள் உமக்காட் செய….. ” என்று தொடங்கும் தேவாரப் பாடலில் “ முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே… ” எனவரும் அடிகள் மூலம் அறிகிறோம்.
சூரன் முதலான அசுரர்களை அழித்துத் தேவர்களின் துயர்துடைத்தமைக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்திரன் தன் புதல்வியாகிய தேவசேனாதேவியை திருப்பரங்குன்றத்திலே திருமணங் செய்து கொடுத்ததாக கந்தபுராணம் கூறுகிறது. இத் திருமண விழாவில் பிரம்மா விவாகச் சடங்குகள் இயற்றவும், சூரிய சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்கவும், பார்வதி - பரமேஸ்வரா் கண்டு களிக்கவும், இந்திரன் தாரை வார்த்துக் கொடுக்க முருகப்பெருமான் தேவசேனாதேவியைத் திருமணஞ் செய்துகொண்டார் என்பதை திருப்பரங்கிரிப் புராணம் தெளிவுபட உரைக்கிறது. முருகன் தேவசேனையைத் திருமணஞ் செய்த
பங்குனி உத்தர நன்னாளை இத்தலத்தில் பிரம்மோற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். இந்த வரலாற்றினை விளக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தின் மலைக்கருவறையில் முருகப்பெருமான் தேவசேனை அம்பாளுடன் மட்டுமே வீற்றிருக்கிறார்.
திருப்பரங்குன்றத்திற்கும் திருமுருகாற்றுப்படைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் வளர்த்த கடைச்சங்கத்தின் தலைவரான நக்கீரா் மதுரையில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தரரோடு தமிழ்வாதம் புரிந்த பாவம் தொலையத் தீர்த்த யாத்திரை புறப்பட்ட வேளை, திருப்பரங்குன்றில் ஒரு குளக்கரையில் அரசமரத்தடியில் அமர்ந்து சிவபூசை செய்யும்போது நிகழ்ந்த அதிசயமும், மலைக்குகையில் ( நக்கீரருடன் சேர்த்து ) ஆயிரம் பேரையும் பூதம் அடைத்து வைத்ததும், “ திருமுருகாற்றுப்படை ” பாடி நக்கீரா் அனைவரையும் விடுவித்த வரலாறும் “ ஞானச்சுடர் ” வாசகங்கள் ஏற்கனவே பல்வேறு கட்டுரைகள் மூலமும் அறிந்துள்ளீர்கள். அதனால் விரிவான “ திருமுருகாற்றுப்படை ” வரலாற்றினை விடுத்து, அதனோடு தொடர்புடைய சில குறிப்புகளை மட்டும் கீழே தந்திருக்கின்றேன்
நக்கீரா் பூசை செய்த இடம் பரங்குன்றின் “ சரவணப்பொய்கை ” குளத்தருகிலுள்ள “ பஞ்சாட்சரப் பாறை ” எனக் குறிப்பிட்டு, அதனருகே நக்கீரருக்கு ஓர் ஆலயமும் காணப்படுகிறது. ஆயிரம் பேரும் அடைபட்டிருந்த குன்றினை, முருகன் திருக்கைவேல் பிளந்த அடையாளத்தை குன்றின் தென்பாகமாகிய தென்பரங்குன்றத்தில் இன்றும் காணமுடியும் எனத் திருப்பரங்குன்ற வரலாறுகள் கூறுகின்றன.
பரங்குன்றத்து அடிப்பாக வடபுறத்தில் முருகப்பெருமானது ஆலயம் அமைந்துள்ளது. கோபுர வாசலுக்கு முன்பாக உள்ள விஸ்தாரமான “ சுந்தரபாண்டியன் மண்டபமும் ” , மண்டபம் முன்பாக உள்ள வீதியும் மிக நெருங்கியே உள்ளன. நமது தரிசன நாளுக்கு முதல்நாள் பங்குனி உத்தர தேரோட்ட நன்னாளாக இருந்தமையால், கோயிலின் முன்பாக (வீதியின் மறுபுறம்)
அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேர் நின்றிருந்தது. இத் தேரின் அழகுடன், தேரினில் முருகன் பவனிவரும் அழகினையும் சேர்த்து மனதில் நிறுத்திப் பார்த்து உள்ளம் பூரித்தேன்.
சுந்தரபாண்டியன் மண்டபத்தின் இடதுபக்க நுழைவாசலால் உள்ளே போய் கருப்பண்ண சுவாமியையும், வெற்றி விநாயகரையும் வணங்கித் திரும்பினால், மண்டபத் தூண் ஒன்றில் சுமார் 6’ உயரம் கொண்ட பத்ரகாளி அம்மன் வடக்குப் பார்த்தபடி காணப்படுகிறாள். தூணுடன் இணைந்தபடி இத்தனை உயரமான காளியின் பயங்கரத் தோற்றமும் – முக பாவமும், கைகளில் காணப்படும் ஆயுதங்களும், அணிந்துள்ள நகை அலங்காரமும், நடன பாணியில் அமைந்துள்ள கால்களும் பார்க்கப் பிரமிக்க வைக்கிறது. என்னே சிற்பியின் கைவண்ணம்! காளியின் சிலை அருகிலேயே வெண்ணெய் உருண்டை விற்பனை செய்கிறார்கள். உள்ளே வரும் ஒவ்வொருவரும் நெய் உருண்டைகளை வாங்கி காளியை நோக்கி எறிகிறார்கள். அதனால் காளியின் கால்முதல் திருமுடிவரை நெய் உருண்டை பதிந்து திட்டுத் திட்டாக நீக்கமற நிறைந்து ஒரு வித்தியாசமான அழகைக் கொடுக்கிறது. சிறுவர் முதல் பெரியோர் வரை இதனை ஒரு ஆலயக் கடமையாகக் கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது.
சுந்தரபாண்டியன் மண்டபம் 66 தூண்கள் கொண்ட பெரிய மண்டபம். நுண்ணிய வேலைப்பாடமைந்த யாளிகள், குதிரை வீரா்கள், சிவனின் திரிபுர தகனக்கோலம், நர்த்தன விநாயகர், துர்க்கையம்மன், தேவசேனாதேவி, வீரவாகு தேவர் முதலிய பல எழில் மிகுந்த சிற்பங்கள் 26 மையத் தூண்களிலும் காணப்படுகின்றன. தேவசேனாதேவியின் திருமணக் காட்சியினை விளக்கும் சிற்பமே அதி அற்புமான உச்சக் கலைவடிவமாகக் காணப்படுகிறது. பிரம்மா ஹோமம் வளர்க்க, இந்திரன் தாரை வார்க்க, முருகன், அன்னை தேவசேனாதேவியின் கைப்பற்றும் திருக்கோலத்தில் ஒவ்வொரு உருவும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, நாணம், பெருமிதம் ஆகிய உணர்ச்சிப் பாவங்களைப் பார்த்து பிரமித்து நிற்கிறோம். அந்த முகபாவங்கள் நம் மனதைவிட்டு இன்றும் அகலாமல் கண்முன்னே நிற்கிறது.
கல்லிலே கண்டிருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் கைவண்ணங்கள் விரிந்த கண்களினால் உள்வாங்கி மனதில் நிறுத்தி வியந்து போற்றியவண்ணம் ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தினூடாக உள்ளே வர “ கல்யாண மண்டபம் ” வருகிறது. கல்யாண மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தில் லஷ்மி தீர்த்தமும், மேற்குப் பக்கத்தில் “ பிரம்மகூபம் ” எனப்படும் சந்நியாசிக் கிணறும் காணப்படுகிறது. இந்த பிரம்மகூபத்துத் தீர்த்தமே இறைவனது அபிஷேகத்திற்கு உபயோகப்படுகிறது.
கல்யாண மண்டபத்தை அடுத்துள்ள கொடிமர மண்டபத்திற்கு ஆறுபடிகள் மேலேறிப் போக வேண்டும் இந்தக் கொடிமர மண்டபத்தின் இருபுறமும் குதிரைகள் இழுத்தபடியான ஒரு அமைப்புக் கொண்ட திருமண்டபமாக அமைத்துள்ளார்கள். கொடிமரத்தின் முன்பாக நடுவே பெரிய நந்தி, வலதுபுறம் எலி, இடதுபுறம் மயில் மூன்றும் தம்பம் முன்பாக அருகருகே இருப்பது தனி விசேடமாகும்.
அடுத்ததாக உள்ள மகாமண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டருகே வேதவியாசர் முதலான முனிவர்களின் சந்நிதியும், அண்டார – உக்கிரா் முதலான பூதகணத் தலைவர்களதும் சந்நிதிகள் அடுத்தடுத்து இருக்கிறது. இந்தப் பூதகணங்களே திருப்பரங்குன்றின் காவற்தெய்வமாக உள்ளமையால் இவர்களை வணங்கியே மேற்கொண்டு படியேறிச் செல்கிறோம். மண்டப வாயிலின் இரு மருங்கும் இரட்டை விநாயகரும் அதிகார நந்தியும் அமர்ந்துள்ளனா்.
மகாமண்டபத்தின் இடதுபுறமாக ஒன்பது படிகள் கீழிறங்கினால் கார்த்திகை முருகன், தெய்வயானை முருகன், கருடாழ்வார், காமாட்சி – ஏகம்பேஸ்வரா், அகிலாண்டேஸ்வரி – ஜம்புகேஸ்வரர், உண்ணாமுலைநாயகி – அண்ணாமலையார், சிவகாமி – சிதம்பரேஸ்வரா், ஞான பரணீனாம்பிகை, காளத்தீஸ்வரா் ஆகியோர் சந்நிதிகள் தொடர்ச்சியாக உள்ளன.
அதே போன்று மகாமண்டபத்தின் வலது பக்கமாக சில படிகள் கீழிறங்கினால், தெற்குப் பார்த்த வரிசையில் ஸ்ரீகால பைரவர், சந்திரன், சாவித்ரி, சூரியன், உஷாதேவி, விநாயகர் உள்ளனா். சற்றுத்தள்ளி நால்வர் திருவுருவங்கள் பெரியதாகவும், அதனைத் தொடர்ந்து அறுபத்துமூவர் திருவுருவங்களும் வரிசையில் ஒரே அளவினதாகவும் காணப்படுகின்றன. ஒரு பக்கத்தில் சந்தான குரவர்களான மெய்கண்டார், அருள்நந்தி, உமாபதிசிவம், மறைஞானசிவம் ஆகிய நால்வரும் உள்ளனா்.
மண்டபச் சுவர்களின் பல்வேறு இடங்களிலும் திருப்பரங்குன்றம் ( முதற் கவசம் ) , கந்தசஷ்டி கவசம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை ஆகியன தெளிவாக எழுதப்பட்டுள்ளது. மலையும் மண்டபங்களும் அடுத்தடுத்து காணப்படுவதால் தூய காற்றும், வெளிச்சமும் உள்நுழைவதற்காக பல்வேறு இடங்களிலும் காற்றோட்ட வழிகளை அமைத்துள்ளார்கள்.
ராஜகோபுரத்திற்கு இடது கைப்பக்கமாக நடராஜர், தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரா், ஸ்ரீ வீரவாகு – ஸ்ரீ வீரசூரா் - ஸ்ரீ ஸ்ரீவீரகேசரி – ஸ்ரீ வீரமார்த்தாண்டன் முதலான நவவீரா்களும், அருகே உற்சவ மூர்த்தங்களுக்கான பாதுகாப்பு அறையும், கிழக்குப் பார்த்தபடியான கஜலெட்சுமியும் உள்ளனா். நவக்கிரகங்கள் இல்லாமல் தனியாக சனீஸ்வர பகவான் உள்ளார்.
இப்போது நாம் மீண்டும் மகாமண்டபம் சென்று ஆறுபடிகள் மேலேறி வருகிறோம். மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலாகப் பரங்குன்றின் கருவறைப்பகுதி அமைந்துள்ளது. வழமையாக ஓருருவம் மட்டுமே கருவறையில் காணப்படுவது போன்றில்லாமல் இந்த குடவரையில் வரிசையாகப் பல தெய்வங்களும் உள்ளனா். தாமரை மலரின் மீதமர்ந்து கரங்களில் கரும்பும் வில்லுமேந்திப் பூதகணங்கள் சூழக் காட்சியருளும் கற்பக விநாயகர் திருவுருவம் மிக அற்புதமாக மலையைக் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோவிலில் ஸ்த்யகிரீஸ்வரா் எனும் சிவன் லிங்க வடிவில் அமர்ந்துள்ளார். மூலவா் முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணஞ் செய்த திருமணக் கோலத்தில் அருள் பாலிக்கிறார். முருகனின் வாகனங்களாவன மயில், ஆடு முதலியவையும், வேல் – கொடி ஆகியவையும் மூலவரின் திருவுருவோடு ஒட்டியபடி அழகுற அமைத்துள்ளனா். மூலவா் மலையைக் குடைந்தெடுத்த திருவுருவாக உள்ளமையால் முருகன் திருக்கரத்தில் உள்ள வேலுக்கே அபிஷேகங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன.
மூலவராகிய முருகப் பெருமானின் சந்நிதிக்கருகே ( மலையைக் குடைந்து ) பெருமாள் மகாலெட்சுமியுடன் அமர்ந்துள்ளார். இந்த சந்நிதிகளின் மலைச்சரிவில் ஆதிஷேசன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள், வராஹமூர்த்தி, நரசிம்மமூர்த்தி ஆகியவர்களின் அர்த்த சித்திர உருவங்களுடன், ஒரு ஓரத்தில் சோமஸ்கந்தர் திருவுருவமும், கோபூஜை செய்யும் பார்வதி,
சந்தியா தாண்டவமாடும் சிவன் ஆகியோரின் திருவுருவங்களும் உள்ளன. பொதுவாகக் கூறினால் தெய்வங்கள் அனைத்தும் முருகப்பெருமானது திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்துவதற்காகக் கூடியுள்ள நிலையிலேயே ஒரே கர்ப்பக்கிரகத்தில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களில் குறிக்கப்படும் இக் குடவரைக் கோயில் பல்லவர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே பாண்டிய மன்னர்கள் பாறைகளைக் குடைந்து கோவில்களை அமைத்தார்கள். என்பதற்குச் சான்றுகள் இருப்பதாகக் கோயிற்குறிப்புக் கூறுகின்றது.
அடுத்த வெள்ளி : “ குன்றக்குடி ”முருகனின் ஐந்தாவது படைவீடாகிய குன்றுதோடாடற் தலங்களில் ஒன்று “ குன்றக்குடி ” அந்நாளில் எமது ஊருக்கு இருமுறை வந்துபோன “ குன்றக்குடி அடிகளார் ” வாழ்ந்திருந்த மண் “ குன்றக்குடி ” அவரது மணிமண்டபம் கோவில் வீதியிலேயே உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.