தமிழகத் திருக்கோயில் வரிசை திருவெண்ணெய் நல்லூர் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/08/2016 (திங்கட்கிழமை)
“ பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனிஅல்லேன் எனலாமே ”
-சுந்தரர்-
சுருண்ட சடாமுடி, சடாமுடி நடுவே கங்கை, நெற்றிக்கண் இத்தனையையும் துணியால் மூடி மறைத்து ( பெரியபுராணம் பாடல் இல. 175 ) வயோதிப அந்தணா் வேடந்தாங்கி, சுந்தரரின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த “ புத்தூர் ”க்கு வந்த இறைவன், “ சுந்தரா! நீ எனக்கு அடிமை ” என்று சொல்லி வாதிடுகிறார்.
“ வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக ” (பெ.பு.பாடல்: 210) எனச் சபையோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவெண்ணெய் நல்லூரிலிருந்த “ திருவருட்டுறை” திருக்கோவிலுக்கு அனைவரையும் அழைத்துச் சென்று, “என் இருப்பிடம் இதுவே” (பெ.பு.பாடல் இல: 211 ) எனக் கூறி மறைந்தார் எம்பெருமான்.
“பித்தா” எனக் கூறிய சொல்லினையே முதற் சொல்லாக வைத்து “பித்தா பிறைசூடி” பதிகம் பாடினார் சுந்தரர். திருவருட்டுறை திருக்கோவிலும் சுந்தரரின் தேவார முதற்பதிகத்தின் முதற் பாடல்பெற்ற பெருமையினைப் பெற்றது. பாடலிலும் “வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்” என வரும் அடியினையும் நோக்க வேண்டும். (திருவெண்ணெய் நல்லூர் ஊரின் பெயர். திருவருட்டுறை ஊரின் நடுவிருந்த கோவிலின் பெயர். திருவருட்டுறை – திருவருள்துறை) சுந்தரரின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற ஊரின் பெயர் “புத்தூர்” முதிய வேதியராக வந்த இறைவன் சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட பின்னர் அக்கிராமம் “ தடுத்தாவூர் ” என இன்றும் வழங்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.
இறைவன் : கிருபாபுரீஸ்வரா், அருட்டுறை நாதர், தடுத்தாட்கொண்ட நாதர்
இறைவி : மங்களாம்பிகை, வேற்கண்ணியம்மை
தலமரம் : தண்டதீர்த்தம்
பத்து ஏக்கர் பரந்த நிலப்பரப்புடன் ஒரு ராசகோபுரம், இரண்டு பிரகாரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி திருவெண்ணெய்நல்லூர் திருக்கோவில் காணப்படுகிறது. கிழக்குப் பார்த்தபடியுள்ள ஐந்து நிலைக் கோயிற் கோபுர வாசலினூடாக உள் நுழைந்ததுமே முதன் முதலில் கண்ணில் படுவது சுந்தரா் வழக்கு நடந்த “ வழக்கு தீர்த்த மண்டபம் ” இம் மண்டபம் கால ஓட்டத்தினால் தற்போது பெருமளவு சேதமடைந்த நிலையில் இருப்பினும், சுந்தரா் வாழ்வினில் முக்கிய பங்கு வகித்த காரணத்தினாலும், இறைவன் திருவடிதீண்டப்பெற்று புனிதம் பெற்ற பூமியாதலினாலும் “ வழக்குத் தீர்த்த மண்டபம் ” இன்றும் வணங்கப்பட்டு வருகிறது.
மண்டபம் தாண்டினால் செப்புக் கவசமிடப்பட்ட கொடிமரமும், கொடிமரத்து விநாயகரும், நந்தி பலிபீடமும் காணப்படுகின்றன. மண்டப முகப்பில் சுந்தரருக்கு இறைவன் இடபாரூடராகக் காட்சி தந்த அழகிய சுதைச்சிற்பம் உள்ளது. அதற்குக் கீழே எதிர்ப்புறத்தில் சுந்தரர் சந்நிதி உள்ளது. மாப்பிளை கோலத்தில் கழுத்தில் மாலையுடன் – கையில் ஓலையுடன் ( “ நீ எனக்கு அடிமை ” என வேதியர் உருவில் வந்த இறைவன் காண்பித்த ஓலை ) காணப்படும் சுந்தரரின் திருக்கோலத்தின் அழகே அழகு. வேறு எங்கும் காணமுடியாத நிறைவான திருவுருவம் இது. பரந்த உட்பிரகாரத்தை வலம் வந்தால், தென்பிரகாரச் சுவரோடு அமைந்துள்ள கல் மண்டபத்தில் அறுபத்துமூவரும் வரிசையாக அமர்ந்துள்ளனா். தொடர்ந்து, சப்த மாதா்கள், சம்பந்தா், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் வரிசையாக உள்ளன.
நமது தரிசன வேளை முதல்நாள் பகற்திருவிழா முடிவுற்ற நேராக அமைந்திருந்தது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பளிச்சென சத்தமாகக் காணப்பட்ட உட்பிரகாரத்தின் ஒவ்வொரு மூர்த்தங்களின் முன்பாகவும் (அறுபத்து மூவர் உட்பட ) ஒரே அளவான வாழையிலையில் வெற்றிலை, பாக்கு, பழம், உடைக்கப்பட்டிருந்த தேங்காய் ஆகியவை நிவேதிக்கப்பட்டிருந்தது. அறுபத்துமூவரின் கழுத்திலும் ஒரே நிறத்தில் ஒரே அளவினதாகத் தொங்கிக்கொண்டிருந்த மாலைகள் அம்சமாக – அழகாக – ரம்மியமாக இருந்தது. நிவேதிக்கப்பட்ட பொருட்களுடன் பொங்கல் – சுண்டல் ஆகியவையும் சேர்த்து ஒரு பையிலிட்டு அங்கு நின்றிருந்த பொதுமக்களுக்கு பொங்கல் – சுண்டல் ஆகியவையும் சேர்த்து ஒரு பையிலிட்டு அங்கு நின்றிருந்த பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள். எவ்வித சிரமமுமின்றி எமக்கும் அர்ச்சனைப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று கிடைத்தமை எமது அதிஷ்டமே.
அறுபத்து மூவர் சந்நிதிக்கு முன்பாக சோமஸ்கந்தர் சந்நிதி காணப்படுகிறது. சோமஸ்கந்தர் சந்நிதி அருகே மூலவரின் கருவறைக்குச் செல்லவேண்டிய பக்கவாட்டுப் படிகள் காணப்படுகின்றன. எனவே நாமும் அந்தப் பக்கவாட்டுப் படிவரிசை கடந்து கருவறை வாசலின் முன் மண்டபத்திற்கு வந்து சேருகிறோம். கருவறைக்கு நேர் எதிரே மண்டப முடிவில் கல்யன்னல் காணப்படுவதனால் அனைவரும் இந்தப் பக்கவாட்டுப் படிகளையே பயன்படுத்துகிறார்கள். மூலவர் “கிருபாபுரீஸ்வரர்” சுயம்பு லிங்கமாக நிறைந்த அலங்காரத்துடன் அற்புமாக அருள் பாலிக்கிறார். மூலவரின் முன் மண்டபச் சுவரில் “ பித்தா பிறைசூடி ” பதிகம் முழுவதும் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.. மண்டபத்தூண்களில் பைரவர், தட்சணாமூர்த்தி சிற்பங்கள் தனித்தளியாக உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாக பிட்சாடனர், தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். விசாலானமான உட்பிரகாரச் சுற்றில் பொல்லாப் பிள்ளையார், முருகன், சுந்தரா், கஜலெட்சுமி சந்நிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் தத்தமது வாகனத்தில் ஆரோகணித்தபடி உள்ளமை வித்தியாசமான அம்சமாக இருந்நது.
அன்னை மங்களாம்பிகை சந்நிதி உட்பிரகாரத்தை அண்டியபடி இடது புறமாகக் காணப்படுகிறது. மூலவர் சந்நிதி போன்றே அம்பிகையின் சந்நிதியும் கிழக்குப் பார்த்தபடியே உள்ளது. பூரண அலங்காரத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பிகை அருள் பாலிக்கிறாள். உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டைகட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிருந்து தவஞ்செய்த காரணத்தால் இவ்விடம் “ வெண்ணெய்நல்லூர் ” எனப் பெயர் பெற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
தினமும் நான்கு கால பூசைகளுடன் பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை, பங்குனி உத்தரம், ஆடிச் சுவாதி முதலிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடிச்சுவாதி உற்சவத்தில் திருமண உற்சவம், திருமணத்தைத் தடுத்தது, சுந்தரருக்குக் காட்சி கொடுத்தது முதலிய அக்கால நிகழ்வுகளை அப்படியே அக்காலத் திருவிழாவாக வருடந்தோறும் முன்னிறுத்துகிறார்கள்.
சடையப்ப வள்ளல் வாழ்ந்த பதி இதுவே. சைவ சித்தாந்த சாத்திரங்களுள் தலையானதாகத் திகழும் “ சிவஞானபோதம் ” நூலை அருளிச்செய்த மெய்கண்டார் (மெய்கண்ட தேவா் ) வாழ்ந்து உபதேசம் பெற்ற சிறப்புத் தலமும் இதுவேயாகும். மெய்கண்டாரின் சமாதி புறவீதியின் வடமேற்கு மூலையில் உள்ளது. இந்தச் சமாதி அமைந்துள்ள “ மெய்கண்ட தேவர் ” மடம் திருவாவடுதுறை ஆதினத்தின் பராபரிப்பில், ஆதினத்து தம்பிரான் சுவாமிகள் ஒருவரால் பராபரரிக்கப்பட்டு வருகிறது.
இறைவன் திருப்பாதம் பதிந்த திருவெண்ணெய்நல்லூர் – திருவருட்டுறை திருக்கோவிலின் வாசற்படியில் கை வைத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு கோவில் வளாகத்தினை விட்டு வெளியே வருகிறோம்.
வேலாக வணங்க வைக்கும்
நூற்றித் தொண்ணூற்றி நான்கில் பூக்கும் ஞானச்சுடரே – நீ
நூதனமாய் வென்று விட்டாய்,
நேற்றுப் போல இருக்கிறது – நீயோ
நெடிதுயர்ந்து நிற்கிறாய்,
நாற்று மேடையில் கீற்றாக நீதான்
நனிசிறக்க நவில்கிறாய் அதனால்
ஊற்றாக மாதமொருமுறை அழகு
உருவாக ஆன்மீகம் தருகிறாய்,
தோற்காத கட்டுரைகள், படைப்புக்கள் யாவும்
தூயமனதாரின் வார்ப்புக்கள்,
தொற்றாமல், பற்றாமல் தனித்துவமாய்
துலங்கும் ஞானச் சுடரே! நீ வாழி,
வற்றாமல் சற்றேனும் இலாபமின்றி – நீ
வடிவோடு வெளி வருகின்றாய் – உன்
வாரியழகு முருக சந்நிதி வேலாக
வணங்க வைக்குமே முறையாக
நன்றி : ஞானச்சுடர் மாசிமலர் 2014
அடுத்த வெள்ளி : “ பழமுதிர்சோலை ” முருகனின் படைவீடுகளுள் ஆறவாது படைவீடு “ பழமுதிர்சோலை ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.