தமிழகத் திருக்கோயில்கள் வரிசை - திருப்பட்டூர் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயில் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)
தமிழ்நாட்டின் நடுநாயகமாக இருக்கின்ற திருச்சி மாநகரின் காவிரியின் வடகரையில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரம் தாண்டி (திருச்சியிலிருந்து சமயபுரம் 12 கி.மீ) இன்னமும் 13 கி.மீ தூரம் பயணித்து இடது புறமாக “ பட்டூர் 5 கி.மீ ” எனும் அம்புக்குறியிட்ட பெயர்ப்பலகை உள்ள இடத்தில் திரும்பினால் வீதி திருப்பட்டூர் கிராமத்தையடைகிறது. இங்குதான் பழமையும் பெருமையும் வாய்ந்த “ ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் ” ஆலயம் உள்ளது. திருக்கோவிலுக்கு முன்பாக சிறிய நான்கு கால் மண்டபம் உள்ளது.
இம் மண்டபத்தின் இடது புறமாக புதிய திருமண மண்டபம் ஒன்றும், கோவில் அலுவலகமும் காணப்படுகிறது. அத்துடன் கோவில் சார்பான அர்ச்சனைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இரண்டு கடைகளும், அருகே இரண்டு வீடுகளும் உண்டு. இந்த இரு அக்கிரகார வீடுகளும் குருக்கள் மனைகளாக இருக்கலாம். வலதுபுறம், பரந்த – பழமையான ஒரு மண்டபமும் முகப்பும் காணப்படுகிறது. மண்டபத்தின் உட்புறம் பாவனைக்கு ஏற்றதாக இல்லாமல் சிதைவடைந்து உள்ளது. இதன் அமைப்பும் முறையும் இம் மண்டபம் கோவிலின் “ வசந்த மண்டபமாக ” நீண்டகால பயன்பாட்டில் இருந்திருக்கும் என ஊகிக்க முடிகிறது.
அகன்ற முகப்பு மண்டபத்தின் மேற்பகுதியின் நடுவே இடபாரூடராக சிவனும் பார்வதியும் வலது பக்கம் கணபதியும் இடது பக்கம் வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமானும் சுதைச் சிற்பங்களாக உள்ளனா். கிழக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைகிறோம். கொடிமரத்தினை அடுத்து ஒரு நான்கு கால்கள் உள்ள உருத்திராட்சப் பந்தலின் கீழே நந்தியெம்பெருமான் வீற்றிருக்கிறார். நந்திக்கு மேற்பகுதி முழுவதும் மாலை தோரணங்கள் போன்று முற்றுமுழுதாக உருத்திராட்ச விதைகளினால் அலங்கரித்திருந்தமை எங்கும் காணாத ஒரு அம்சமாகத் தெரிந்தது. இந்த நந்தி மண்டபத்தை “ வேதமண்டபம் ” என்கிறார்கள்.
நடு மண்டபத்தோடு இணைந்தபடி தெற்கும் வடக்குமாக புறவீதி தொடர்கிறது. மண்டபத்தின் நடுவே காணப்படும் நான்கு அற்புதமான சிற்ப வேலைப்பாடமைந்த தூண்கள், திருவானைக்காவில் நடு நான்கு தூண்களையும் நினைவுபடுத்தி நிற்கிறது. தூண்கள்நான்கும் மெலிவானது. ஆனால் நெடுத்தவை. வெவ்வேறு சிற்ப அழகு கொண்டவை. தூண்களின் அரைவாசிக்குக் கீழ்ப்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற யாழிகள், இரண்யனைக் கொல்லும் நரசிம்மர், பிரகலாதனுக்கு அருளுதல், நரசிம்மரின் தோற்றம் எனக் கல்லில் வடிக்கப்பட்டிருந்த சிற்பங்களின் அழகு நம்மைக் கட்டிப்போடுகிறது. பார்த்தது பார்த்தபடி அப்பால் நகரமுடியாமல் மெய்மறந்து நிற்கிறோம். இந்த அளவுக்கு இல்லையாயினும் சிறப்பான சிற்பங்கள் கொண்ட இன்னமும் 10 சோடித் தூண்கள் தெற்கு வீதியில் தெற்கு வாசல்வரை தொடர்கிறது.
நரசிம்மச் சிற்பங்களின் பின்புறமுள்ள உள் மண்டப வாயிற் சுவரில் அப்பா், சுந்தரா் இருவரும் திருப்பட்டூர் மீது பாடிய வைப்புப் பாடல்கள் (திருப்பட்டூர் மூவா் பாடல்பெற்ற ஸ்தலமல்ல ) எழுதப்பட்டுள்ளது. இந்த இரு பாடல்களுடன், திருக்கைலையில் சேரமான் பெருமாள் நாயனரால் பாடப்பெற்ற “ திருக்கைலாய ஞான உலா ” வைக் கேட்ட மாசாத்தனார் (ஐயனார்) இங்கே பட்டூரில் அதனை வெளிப்படுத்தி உலகறிய வைத்தார் எனும் குறிப்பும் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
உட்பிரகாரம் செல்லும் வாயிற் கதவு பழமையைப் பறைசாற்றி நிற்கிறது. மகாமண்டபத்தில் இன்னொரு வாசல். வாசலருகே இரண்டு பெரிய துவார பாலகர்களை வணங்கி உள்ளே பார்த்தால் அர்த்த மண்டபத்தை அடுத்து கருணைக் கடலான ஈசன் லிங்கவடிவில் வீற்றிருப்பது தெரிகின்றது. பிரம்மனுக்கு அருள்புரிந்த ஈசனாதலால் அவரது பெயர் (1) “ பிரம்மபுரீஸ்வரா் ” என்றாயது. அளவான அலங்காரத்துடன் பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறார். மூலவரைத் தரிசனம் செய்துகொண்டிருந்த எம்மைப் பார்த்து, கருவறையின் உள்ளேயிருந்து வெளியே வந்த ஆலய அர்ச்சகா், பிரம்மா, தரினம் முடிந்ததா? முதல்லை பிரம்மாவைத் தரிசித்துவிட்டு வாங்க ” எனக் கூறினார். நமக்கு இது ஆச்சரியமாக இருந்தது. உள் மண்டப வாயில் தாண்டி உள்ளே வரும் அனைவருமே கருவறையின் லிங்கமூர்த்தியினைக் கண்டுகொள்ளாமல், கருவறையின் வலப்புறமாக கோயில் கொண்டிருக்கும் “ பிரம்மா ” சந்நிதியை நோக்கியே செல்கின்றனா். நாமும் மகாமண்டபத்தை விட்டிறங்கி வலமாக வருகிறோம்.
பிரம்மபுரீஸ்வரா் அமர்ந்துள்ள சந்நிதியின் வலப்புறத்தே கிழக்குப் பார்த்தபடி பிரம்மாவுக்கான பெரிய சந்நிதி காணப்படுகிறது.பிரம்மனுக்குத் தனிக்கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மா இல்லாத சிவ ஆலயங்களே இல்லை என்பதுவே உண்மை. எல்லாச் சிவன் கோவில்களிலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேகத் தீர்த்தம் வரும் கோமயத்தின் மேலாக கோஷ்ட மூர்த்தமாக பிரம்மா வீற்றிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் திருப்பட்டூரில் மட்டுமே பெரிய தனிச் சந்நிதியுடன் தலையெழுத்தை மங்களரகரமாக மாற்றும் சக்தியுடன் பிரம்மா வீற்றிருக்கிறார். “ ஈசனுக்கும் ஐந்து தலை, எனக்கும் ஐந்து தலை, உலகத்தைப் படைக்கும் சக்தி என்னிடமே உள்ளது ” என பிரம்மாவுக்கு உண்டான அகம்பாவத்தினால் ஈசனை மதிக்காத போக்குடன் செயற்பட்டார்.
பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணரவைக்க எண்ணிய ஈசன் “ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் ” என்று அவருடைய ஒரு தலையைக் கொய்துவிட்டதுடன் “ உன்னுடைய மதிப்பையும் இழக்க கடவாய் ” எனவும் சாபமிட்டார். பிரம்மன் தனக்குரிய மதிப்பையுமிழந்ததுடன் படைப்பாற்றலையும் இழந்தார். தன் நிலைமை உணா்ந்த பிரம்மன் திருப்பட்டூரில் பன்னிரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தார். பிரம்மனின் வழிபாட்டினில் மகிழந்த ஈசன் கூடுதலாக ஒரு வரமும் வழங்கினார்.“ எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை யாம் மாற்றியதுபோல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவர்களுடைய தலையெழுத்தை மாற்றுவாயாக”என்று ஈசன் கொடுத்த வரத்தினால் பிரம்மன் மீண்டும் படைத்தற் தொழிலைத் தொடங்கினார்.
பிரகாரப் பாதையிலிருந்து மூன்று படியேறிச் செல்லும் இடத்திலிருந்து, தென்பிரகாரச் சுற்றில் இறங்கும்வரை மாபிள் கற்கள் பதிக்கப்பட்டு அழகுபடுத்தியுள்ளார்கள்.அந்த மண்டபமும் தூண்களும், வர்ணங்கள் பூசப்பட்டு சிறந்த பராமரிப்பில் இருப்பது தெரிகிறது. அர்ச்சனைத் தட்டு, மற்றும் நேர்த்திகளுக்காக வந்திருப்பவர்கள் ஒரு வரிசையிலும், பிரம்மாவைத் தரிசிக்கச் செல்பவர்கள் ஒரு வரிசையிலுமாக மாபிள் தரையில் கால்பதித்து மக்கள் இரு வரிசைகளில் செல்கின்றனா். நாமும் தரிசன வரிசையில் இணைந்து கொள்கிறோம். சந்நிதானத்தில் தாமரைப்பீடத்தின் மேல் சம்மணம் கட்டி அமர்ந்த நிலையில் முன் கைகள் இரண்டும் கால்களின் மேல் பதிந்த நிலையிலும், பின் கைகள் இரண்டும் மேலேயுமாக பிரம்மா அமர்ந்திருக்கிறார். புன்னகை தவழும் பொலிவான முகம், நெற்றியில் நிறைந்த திருநூற்றுப் பூச்சு, புருவ மத்தியில் பெரிய சந்தனப் பொட்டு, மத்தியில் குங்குமத் திலகம், அளவான மாலை அலங்காரம், தோளிலிருந்து பாதங்களுக்குக் கீழேயும் தொங்குகின்ற சால்வை என நிறைந்த பொலிவுடன் பிரம்மா அமர்ந்திருக்கிறார்.
பிரம்மாவின் நான்கு முகங்களில் ஒன்று நேராகவே தெரிகிறது.இருபுறமும் இரு முகங்கள் பக்கவாட்டில் தெரிகின்றன. பின்புறமுள்ள நான்காவது முகம் நன்குதெரியும்படியாக பின்பக்கச் சுவரில் நிலைக்கண்ணாடி ஒன்றினைப் பொருத்தியுள்ளனா். பொதுவாகச் சிவன் கோவில்கள் அனைத்திலும், கருவறையின் தீர்த்தம் வெளியேறும் கோமுகையின் மேலே கருவறையின் மாடச்சுவரில் கோஷ்ட திருப்பட்டூரில் பிரம்மாவின் தனிக்கோவிலும், உருவப்பொலிவும், பிரம்மா சந்நிதானத்தின் முக்கியத்துவமும் பிரமிக்க வைக்கிறது.
இது உட்பிரகாரத்தின் தென் பகுதி. மூலவா் சந்நிதானம், பிரம்மா சந்நிதி இரண்டுமே பிரகாரத்தைவிட 3 அடி உயர்ந்திருக்கிறது. அதேபோல தென் பிரகாரத்தின் இடது பக்கமாக ஒரு மண்டபம் 3 அடி உயர்ந்தேயிருக்கிறது. தூண்களுள்ள இம்மண்டபம் தெற்கு, மேற்கு, வடக்குப் பிரகாரங்கள் வரை நீண்டு செல்கிறது. ஆகவே பிரகாரங்களின் இரு மருங்கும் உயர்ந்துள்ளதால் நடுவே ஒரு நடைபாதை மாதிரி உட்சுற்றுப்பிரகாரம் அமைந்திருக்கிறது. பிரம்மாவின் தரிசனத்தை முடித்துக்கொண்டு தென்பிரகார நடுப்பகுதியில்கால் வைத்தால் எதிர் ஒரு கண்ணாடி அடைப்பினுள்ளே நுழையும் கதவு காணப்படுகிறது. “ஸ்ரீ பதஞ்சலி முனிவா் சந்நிதி ” எனவும், “ இது தியானம் செய்யுமிடம் ” எனவும் கதவு வாசலின் இரு பக்கமும் பெரிய எழுத்தில் ஒட்டப்பட்டிருக்கிறது. உள்ளே ஓரிருவா் பத்மாசன நிலையில் அமர்ந்தபடி தியானத்தில் இருப்பதையும் பார்க்க முடிந்தது. கிழக்கு மேற்காக உள்ள அம்மண்டபத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நடக்கின்றேன். கொங்காணா், பதஞ்சலி, சட்டைநாதர் , பச்சமுனிவா், சிவவாக்கியா், கோயா், பாம்பாட்டிச் சித்தர், இராமதேவா், சந்தரானந்தா், இடைக்காடர் , திருமூலர் , அருணகிரிநாதர் என அனைத்துச் சித்தர்களின் திருவுருவங்களும் சித்திரமாக வரையப்பட்டுள்ளன.
மண்டப நடுவே ஒரு சிறிய லிங்கம் காணப்படுகின்றது. இதுவே “ பதஞ்சலி முனிவா் யோக சமாதியடைந்த இடம் ” என எழுதப்பட்டுள்ளது. லிங்கத்தின் பின்புறம் தவக்கோலத்தில் பதஞ்சலி முனிவரின் இறுதிவேளைத் தோற்றம் – எலும்பிலே ஒட்டிய தோலுடன் – நீண்ட தாடி மடிமீது தவழ்ந்தபடி – பார்க்கக் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. மண்டபத்தின் வடக்குப் பாதியில் ஆதிசங்கா், தெட்சணாமூர்த்தி, பட்டினத்தார், நால்வார்.சப்த மாதர்கள் ஆகியோரின் படங்கள் அழகுற வரையப்பட்டுள்ளது.
இப்போது நாம் உட்பிரகாரத்தின் மேற்குச் சுற்றுக்கு வருகிறோம். தென்மேற்கு மூலையில் பெரியது, நடுத்தரம், சிறியது என மூன்று பருமினில் கணபதியின் விக்கிரகங்கள் அந்தச் சிறிய சந்நிதியின் உள்ளே காணப்படுகின்றன. அடுத்து (2) ஸ்ரீ பழமலைநாதர் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். கருவறைக்குச் சரி பின்னே கிழக்கு நோக்கி இடப்பாக மயிலில் அமர்ந்தபடி ஸ்ரீ கந்தபுரீஸ்வரா் (முருகன் ) வள்ளி தேவசேனா சகிதம் மிகப்பெரிய உருவமாக உள்ளார். அடுத்துள்ள ஸ்ரீ கஜலெட்சுமியின் சந்நிதி. அருகாமையிலேயே சுதையினாலான இன்னுமொரு ஸ்ரீ கஜலெட்சுமியின் பெரிய திருவுருவமும்– உருவத்தின் பருமனுக்கு எற்றபடி இருபுறமும் உள்ள யானைகளும் பெரியவையாகவே இருந்தன.
வடக்குச் சுற்று மண்டபத்தின் தரைப்பகுதி பெரும்பாலும் சேதமடைந்தே காணப்படுகிறது. மண்டபத்தின் நடுப்பகுதியில் பள்ளியறை புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பள்ளியறைப் பிரவேசம் இன்னமும் நடைபெறவில்லை என்பது தெரிகிறது. பள்ளியறையை ஒட்டியபடி (3) ஸ்ரீ பாதனேஸ்வரா் எனப்படுகின்ற பாதாள ஈஸ்வரா் கிழக்குப் பார்த்தபடி நந்தி பலிபீடத்துடன் காணப்படுகிறார்.வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கியபடி அகன்ற வசந்த மண்டபம் காணப்படுகிறது.
தரைப்பகுதி முழுவதும் மாபிள் பதிக்கப்பட்டு அண்மையில் புதுப்பித்துள்ளமை தெரிகிறது.உட்பிரகார கிழக்குச் சுற்றின் இடது புறத்தில் காலபைரவா், சூரியன், ஸ்ரீ பத்தநந்தி, (4) ஸ்ரீ சுத்தரத்தினேஸ்வரா் ஆகிய சந்நிதிகள் மேற்குப் பார்த்தபடி காணப்படுகின்றன.இந்த வரிசைக்கு முன்பாக நவக்கிரகங்கங்கள் உள்ளன.
கருவறையின் கோஷ்டத்தில் ஸ்ரீ நிருத்த கணபதியும், தனிச்சந்நிதியில் தெட்சணாமூர்த்தியும் கருவறையும் சரி பின்புற மாடத்தில் லிங்கேஸ்வரா் அமர வேண்டிய இடத்தில் ஸ்ரீ மகா விஷ்ணுவும், கோமயத்துக்கு மேல் மாடத்தில் பிரம்மாவும்( சிறிய உருவில்), அருகே துர்க்கையும் உள்ளனா். வழமையான இடத்தில் ஸ்ரீ சண்டேஸ்வரா் அமர்ந்துள்ளார்.கோபுர நுழைவு வாசலினூடாக வெளியே வந்து கொடிமரம், நந்தியெம்பெருமானுக்கு இடது பக்கமாக உள்ள பெரிய வாசலூடாக உள்ளே போகிறோம்.நிமிர்ந்து மேற்காகப் பார்த்தால் வடமேற்கு மூலையில் அம்பாள் கருவறையும் – கருவறைக்கு முன்பாக உள்ள மகாமண்டபமும் தெரிகிறது.
நமக்கு இடது கைப்புறமாக சிறிய சந்நிதியில் வடக்குப் பார்த்தபடி லிங்கவடிவில் அமர்ந்துள்ள (5)தாயுமானவரை வணங்கி விடைபெற்று அம்பாளின் மகாமண்டபத்து மேடையில் கால் பதிக்கிறோம். அழகிய சிற்ப வேலைப்பாடமைந்த தூண்களுடன் கூடிய மகாமண்டபம் அது. உள்ளே நின்ற திருக்கோலத்தில் மலர்ந்த முகத்தோடும் – அளவான அலங்காரத்தோடும் காணப்படும் அம்பிகை “ பிரம்மநாயகி ” என அழைக்கப்படுகிறாள். பிரம்மாவுக்கு அருளி “ பிரம்மபுரீஸ்வரா் ” எனப் பெயா் கொண்ட நாயகனின் நாயகியாக இருத்தலினால் அம்பாளுக்கு “ பிரம்மநாயகி ” எனும் பெயா் மிகப்பொருத்தமே. அம்பாள் கருவறையின் கோஷ்டத்தின் 5 மாடங்களிலும் பிராமி, மாகேஸ்வரி, சரஸ்வதி, கௌமாரி, வைஷ்ணவி ஆகியோர் வீற்றிருக்கின்றனா்.தாயுமானவா் சந்நிதிக்கு எதிரே ஒரு சிறிய கதவு வழியாக உள்ளே போகிறோம்.
கால் ஏக்கா் நிலப்பரப்புள்ள பரந்த பகுதி. நமது இடது கைப்பக்கமாக “ பிரம்ம தீர்த்தம் ” எனும் நான்கு பக்கமும் குத்துப் படிக்கட்டுக்கள் கொண்ட மிக ஆழமான ஒரு குளம், அடியில் தெளிவான சுத்தமான நீருடன் காணப்படுகிறது. இந்த பிரம்ம தீர்த்தத்தை இன்னமும் பகுள தீர்த்தம், சண்முக நநி என இரு தீர்த்தங்கள் உள்ளதாகவும், பகுள தீர்த்தம் ஆலயத்திலிருந்து வடகிழக்கு மூலையில் சுமார் 150 மீற்றா் தொலைவிலும், சண்முகநிதி ஆலயத்திலிருந்து கிழக்குப் பகுதியில் 500 மீற்றா் தொலைவில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்வதாகவும் அங்குள்ளவா்கள் தகவல் தந்தனா். பிரம்ம தீர்த்தத்தின் அருணாசலேஸ்வரா் (9) ஸ்ரீ கைலாசநாதர் என நான்கு.கிழக்கு நோக்கிய சந்நிதிகளும் (10) ஸ்ரீ ஜம்புகேஸ்வரா் (11) ஸ்ரீ காளத்தீஸ்வரா் (12) ஸ்ரீ சப்தரிசீஸ்வரா் என மூவரின் சந்நிதிகளும் மேற்குப் பார்த்தபடியும் உள்ளன.ஸ்ரீ கைலாசநாதா் சந்நிதி தவிர ஏனையவை அனைத்தும் ஏறக்குறைய ஒரே அளவான சிறிய சந்நிதிகளாகும்.அனைத்திலும் லிங்கவடிவிலேயே இறைவன் வீற்றிருக்கின்றான்.
இந்த ஏழு லிங்க மூர்த்தங்களும் கால் ஏக்கா் அளவு கொண்ட நிலப்பரப்பில் தள்ளதித் தள்ளிக் காணப்டுகின்றது.இந்தச் சந்நிதிகள் அனைத்தையும் 5 அடி அகலம் கொண்ட அழகிய நடைபாதையால் இணைத்துள்ளனா். நடைபாதை தவிர்ந்த ஏனைய பகுதிகள் முழுவதும் பூ மரங்கள் நாட்டப்பட்டு இப்பொழுதும் வளர்ந்து வருகிறது. சொற்ப மாதங்களில் அந்த மரங்கள் அனைத்தும் வளர்ந்து பூத்துக் குலுங்கி அழகிய சொற்ப மாதங்களில் அந்த மரங்கள் அனைத்தும் வளர்ந்து பூத்துக் குலுங்கி அழகிய நந்தவனமாகி இடையிடையே உள்ள சந்நிதானங்களுடன், சுத்தமான பிரதோசமாக இருக்கப்போகும் அழகைச் சிந்திக்க ஆனந்தமாக இருக்கிறது. இந்த ஏழு சந்நிதிகளும் நடுவே ஸ்தல விருட்சமான மகிழமரம் கிளைபரப்பி பெரிதாக வளர்ந்து நிற்கிறது.
இந்த ஏழு சந்நிதிகளில் வடமேற்கு மூலையில் உள்ள (9) ஸ்ரீ கைலாசநாதா் சந்நிதி பற்றித் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லவுண்டியுள்ளது.கருவறை – மண்டபங்கள் – நந்தியும் – பலிபீடமும் – உட்பிரகாரம் – வெளிப்பிரகாரம் கொண்ட ஒரு கோவிலின் அமைப்பினை நினைவுபடுத்துங்கள்.உங்கள் மனக்கண்ணில் வருகின்ற கோவிலின் மிகச்சிறியதொரு மாதிரியினைக் கற்பனையில் கொண்டு வாருங்கள்.மேலே சொன்ன அத்தனையும் உண்டு இந்தக் குட்டிக் கோவிலில். ஸ்ரீ கைலாசநாதா் லிங்கவடிவில் ஆவுடையார் பகுதி இல்லாமல், உயர்ந்த லிங்கபாணமாக, 3” அளவிலான பட்டைகள் தீட்டப்பட்ட லிங்க வடிவாகக் காணப்படுவது வித்தியாசமான அம்சமாக இருந்தது.
எட்டித்தொடும் தூரத்தில் மென்மையான வேலைப்பாடுகள் கொண்ட மேல் விதானங்கள், விதானங்களைத் தாங்கி நிற்கும் உயரம் குறைந்த குட்டித் தூண்களில் காணப்படும் நெளிவு சுளிவுகளும். சேதமடைந்துள்ள குட்டிப்படி வரிசைகளும், சுண்ணாம்புக்காறை அகன்ற நிலையில் உட்புறம் தெரியும் செங்கற்களும் உடம்பினை ஒடுக்கித் தலையைத் தாழ்த்தி(நிமிர்ந்து நடந்தால் தலை போய்விடும் ) குனிந்து நடக்கவேண்டிய வாசல்களும் – பிரகாரங்களும் –சுவரும் கால ஓட்டத்தினால் சிந்திக்கிடக்கும் சுண்ணாம்புப் படிவமும் )ஒரு வகை பெருமணலும் அந்தப் படிவத்தில் காணப்படுகிறது. ) இவையெல்லாம் அச் சந்நிதியின் அழகைக் கூட்டி நெஞ்சைவிட்டகலாத நிழல் ஓவியமாக மனதில் படிந்துள்ளன. எதிரே 50 மீ்ற்றா் தூரத்தில், இந்தக் குட்டிக் கோவிலுக்குச் சற்றேனும் பொருத்தமில்லாதபடி, மிகப்பெரிய நந்தியொன்று ஸ்ரீ கைலாசநாதரைப் பார்த்தபடி உள்ளது.
பிரம்மா பன்னிரண்டு லிங்கங்களைக் பட்டூரில் அமைத்து வழிபட்ட விபரத்தை முன்னரே பார்த்தோம். (1) என இலக்கமிட்ட கருவறையின் ஸ்ரீ பிரம்புரீஸ்வரா் தொடக்கம் வரிசையாக (12) வரை இலக்கமிடப்பட்ட லிங்கங்களே பிரம்மா வழிபட்டுப் பேறடைந்த லிங்க மூர்த்தங்களாகும்.
நன்றி: ஞானச்சுடர்,ஆனி 2013
“ சித்தத்துள கிட்ட அருள்வான் ”
கா்ச்சித் தலை சப்தித் திடுமொலி
கொட்டும் முர சொத்துத் திசைதர
மெத்தப் புக ழுற்றுற் றொளிர்பதி – கல்லோடை
வைக்கப் பனி கொட்டக் கிரிதரு
சக்திச் சரம் நட்டுத் தொழுதெழச்
சித்தத் துள கிட்டத் திருவருள் – புரிவேலா
இச்சைப் படு மிச்சந் நிதியதில்
மக்கட் கிடர் தந்திட் டலைபவா்
பற்றிக் குறை யுற்றுத் திரிதரு – கதிர்காமா்
இட்டப் படி யற்பவா் உலவிட
பத்துத் தினம் விட்டிட் டவரது
துட்டத் தலை வெட்டித் தரையெறி – வடிவேலா
பட்சத் தொடு ரட்சித் திருமரு
தர்க்குக் கழ லர்ச்சித் திடவளி
சொத்தைப் பகு தற்குக் கொருமுறை – யுரைகோவே
பற்றுக்கொடி ழைத்துப் புகழை
பித்துக் கொடு முத்துத் தமிழினில்
தித்தித் திடச் சுற்றித் தருமெனைக் –காவாயோ?
மெச்சத் தக வுற்றுற் றுலகினில்
மிக்கத் தன முற்றுற் றுனதருள்
சித்தித் தடி யுற்றுக் கிடவென – அருளாயோ?
மெட்டுப் பறை கொட்டத் திருவுரு
வைத்துத் தொழு சித்ரக் கதவடை
செட்டிக் குலம் விட்டிப் டகலருள் – முருகோனே!
-இராசையா குகதாசன்- சந்நிதிக் கந்தன்
கழற்கோர் கவிமாலை – 41
அடுத்த வெள்ளி : “ திருஏடகம் ” சமணரோடு ஏற்பட்ட புனல் வாதத்தின் போது வைகை ஆற்றில் விட்ட ஏடானது, ஆற்றின் வேகத்தினை எதிர்துச் சென்று கரை ஒதுங்கிய இடம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.