அடியார்களதும் – ஊர் மக்களதும் வறுமைபோக்க இறைவனிடமிருந்து அப்பாரும் – சம்பந்தரும் படிக்காசு பெற்ற இடம்.
திருமால் தன் கண்களில் ஒன்றை அர்ச்சித்து இறைவனிடமிருந்து சக்கரம் பெற்ற வரலாறு நிகழ்ந்த இடம்.
சோழ நாட்டின் தென்கரைத் தலமான திருவீழிமிழலை மயிலாடுதுறை – திருவாரூர்ப் பாதையில், பூந்தோட்டம் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய இடங்களிலிருந்த பேருந்து வசதிகள் உள்ளன.
இறைவன்: வீழியழகீசர், வீழிநாதசுவாமி
இறைவி: சுந்தரகுஜாம்பிகை
தலமரம்: வீழிச்செடி
தலத்தீர்த்தம்: விஷ்ணு தீர்த்தம்
காவேரிக்கிளை ஆற்றின் இக்கரையிலிருந்து பாலாந்தாண்டி அக்கரைக்கு நாம் சென்றால் – கோவில் தென்புற வீதியின் நடுப்பகுதியைச் சென்றடைகிறோம். அகன்ற வீதி தெற்கு மதிற்சுவர் அருகாக (இடஞ்சுழியாக வரிசையாக நிற்கின்ற மருதமரங்கள் தாண்டி கோவிலின் ராஜகோபுரம் வரை செல்கிறது. உயர்ந்த மதிற்சுவரின் மேல் விளிம்பில் – சுதை நந்திகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. கிழக்குப் பார்த்த ராஜகோபுரம் முன்பாக கோவிலின் தெற்கு வடக்கான அகலம் எதுவோ அவ்வளவு பரப்பளவு உள்ள மிகப்பெரிய குளத்தின் நாற்புறமும் உள்ள நீராடு துறையில் பெண்கள் பலர் நீராடிக் கொண்டிருந்தனர்.
ராஜகோபுரம் தாண்டி நீண்ட பாதை வழியாக மேற்கு நோக்கி நடந்துவர நமது வலது கைப்புறமாக முதலில் வருவது மிகப்பெரிய “ வௌவால் மண்டபம் ” நடுவே தூண்கள் எதுவுமில்லாமல் – பார்ப்பதற்கு வௌவால் செட்டை விரித்திருப்பது போன்று குவிந்த நிலையில் இந்த மண்டபத்தை அழகுற அமைத்துள்ளார்கள். இங்கேதான் இறைவன் இறைவி திருக்கல்யாண நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
“ வௌவால் மண்டபம் ” தாண்டிவர இரண்டாம் கோபுர வாசலை அண்மிக்கிறோம். கோபுர வாசலின் வலதுபுறம் இரட்டை விநாயகரும், இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனா்.
திருவீழிமிழலையின் வடக்கு வீதியின் கிழக்குக் கோடியில் சம்பந்தரும், மேற்குக் கோடியில் அப்பரும் தத்தமது அடியார்களுடன் தங்கியிருந்து நாளில் மழைவளம் சுருங்கிப் பொய்த்து, காவேரி தரும் நீரின் அளவு குன்றி, விளையத்தக்க உணவுப் பொருட்கள் குறைந்ததால் அடியார்களும் – ஊர் மக்களும் வறுமையில் வாட இருவரும் பெருந்துயருற்றனா். இருவரதும் துயர் நீக்கத் திருவுளம் கொண்ட இறைவன் கிழக்கு வாசல் தம்பமருகே உள்ள பீடத்தில் சம்பந்தருக்கும், மேற்கு வீதியில் அப்பருக்கும் தினமும் ஒரு படிக்காசு வைத்தருளினார். “ படிக்காசுப் பிள்ளையார் ” மேற்குப் பீடத்தின் அருகிலுள்ளார். பீடத்தருகே சம்பந்தர் – அப்பர் இருவரதும் திருவுருவங்களும் உள்ளன.
இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. இந்த இரு படிக்காசு பெற்ற பீடங்களையும் விட, தெற்கு வீதியில் “ சுந்தரா் படிக்காசு பெற்ற இடம் ” என எழுதப் பட்டு ஒரு பீடமும் உள்ளது. ஆனால் திருவீழிமிழலையில் “ சுந்தரர் படிக்காசு பெற்றார் ” என்பதற்கான குறிப்பு எதுவும் பெரியபுராணத்தில் இல்லை. ஆகவே இதனை சைவ சமய ஆய்வாளர்கள் புரிய வைக்க வேண்டும் ஞானசம்பந்தரும், அப்பரும் இறைவனிடம் பெற்ற படிக்காசுகளைக் கடைத் தெருவுக்குக் கொண்டு விற்றுப்பொருள் வாங்கிய இடம் இன்று “ ஜயன்பேட்டை ” என வழங்கப்படுகிறது.
அங்குள்ள கோவிலின் சுவாமி பெயர் செட்டியப்பர். அம்பாள் – படியளந்தநாயகி. உற்சவமூர்த்தி தராசு ஏந்திய கையுடனும், அம்பாள் கையில் அளவையிடும் படியைப் பிடித்த கையுடனும் காட்சி தருகின்றனா். இந்தப் பந்தியில் உள்ள விபரம் கோவில் அர்ச்சகர் கூறியதாகும். கோவிலைத் தரிசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டவில்லை.
கருவறை விமானம் “ விண்ணிழி விமானம் ” எனப்படுகிறது. விமானம் முழுவதும் செப்புத் தகடுகளால் வேயப்பட்டு, தங்கச் கலசம் வைக்கப்பட்டு, காலை நேர வெய்யிலில் தகதகவெனப் பிரகாசித்து தனியழகு காட்டுகிறது. சம்பந்தரின் விருப்பத்தை நிறைவு செய்ய இறைவன் சீர்காழிக் காட்சியினைக் காட்டிய நிகழ்வினை சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். உள்ளே கருவறையின் மூலவர் வீழியழகீசர் நிறைந்த அலங்காரத்துடன் அமைப்பில் அருள் பாலிக்கிறார்.
மூலவரின் (வீழியழகீசரின்) பின்புறம் நின்றபடியான அமைப்பில் அம்மையும் அப்பனும் திருமணக்கோலம் காண்பித்து நிற்கின்றனா். திருவீழிமிழலை சிவன் - அம்பாள் திருமணம் நடைபெற்ற இடமாகக் கருதப்படுவதால் கருவறை வாசலில் “ அரசாணிக்கால் ” எனும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் “ பந்தல்கால் ” எனும் தூணும் உள்ளன. திருமணக் கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும்.
மகா மண்டபத்தில் தனிச் சந்நிதியில் கல்யாண சுந்தரர் – மாப்பிளை சுவாமியாகக் காட்சி தருகிறார். சுவாமியின் பாதத்தில் விஷ்ணு அர்ச்சித்த மலராகிய கண்ணின் அடையாளமும் சக்கரமும் உள்ளது. அர்ச்சகர் காண்பிக்க தீப ஒளியில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
உட்பிரகாரத்தின் வடக்கு – தெற்கு வீதியின் அருகேயுள்ள உயர்ந்த- நீண்ட மண்டபங்களில் நெல் பரவப்பட்டுள்ளது. பின் பிரகாரத்தில் கணபதி, வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர், செல்ல தியாகேசர், சம்பந்தர், சுந்தரா், ஸ்ரீ கஜலெட்சுமி ஆகியோர் உள்ளனா். சண்டிகேசுவரர் தனிச் சந்நிதியில் அமர்ந்துள்ளார். எதிரே “ பாதாள நந்தி ” உள்ளார். பலபடிகள் கீழிறங்கிக் குனிந்தபடி உள்ளே போய் பதாள நந்தியைத் தரிசிக்க வேண்டும் கிழக்குச் சுற்றில் (இரண்டாம் கோபுர வாசலின் இரு மருங்கும் ) ஸ்ரீ ஆடல் வல்லான், ஸ்ரீ மெய்கண்டார், ஸ்ரீ காளத்தீஸ்வரா், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ வைத்தியநாதசுவாமி, சூரியன், ஸ்ரீ அருணாசலேஸ்வரா், ஸ்ரீ சனீஸ்வரன் ஆகியோர் அமர்ந்துள்ளனா்.
இந்தக் கோவிலின் உள்ளும் புறமுகமாகப் பல்வேறு தீர்த்தங்கள் காணப்பட்ட போதும் மேற்கு மதிற்சுவரைச் சார்ந்துள்ள விஷ்ணு தீர்த்தமே ஸ்தலத் தீர்த்தமாகக் கொள்ளப்படுகிறது.
சித்திரை மாதப் பெருவிழாவும், பிரதோஷம், நவராத்திரி, சஷ்டி, கார்த்திகை ஆகிய பல்வேறு விழாக்களும் சிறப்புற நடைபெறுகின்றன.
“ பங்கயம் ஆயிரம் பூவினி லோர்பூக் குறையத்
தங்கண் இடந்துஅரன் சேவடிமேற் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரமாற்கருளிய வா(று)
எங்கும் பரவிநாம் தேணோக்கம் ஆடாமோ ”
-திருவாசகம்-
“ நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக் கொண்டு
ஏற்றுளி ஒருநாள் ஒன்று குறையக்கண் ணிறைய விட்ட
ஆற்றலுக் காழிநல்கி அவன் கொணர்ந்திழிச்சுங் கோயில்
வீற்றிருந்தளிப்பர் விழி மிழலையுள் விகிர்தனாரே ”
-அப்பர்-
நன்றி : ஞானச்சுடர் புரட்டாதி மலர் 2015
அடுத்தவாரம்: “திருப்பாச்சிலாச்சிராமம்” (திருவாசி) கொல்லிமழவன் மகளுக்குப் பீடித்திருந்த “ முயலகன் ” எனும் உடல் நோய் தீர சம்பந்தர் தேவாரம் பாடியருளிய திருத்தலம் “ திருப்பாச்சிலாச்சிராமம் ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.