எண்பதுகளின் நடுப்பகுதிகளில் சிதம்பராவில் இலவச புகைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்று நடாத்தப்பட்டது. அதில் நானும் ஒரு மாணவனாகக் கலந்து கொண்டேன். நடாத்தியவர் அமரர் செல்வ நாயகம் அவர்கள். என்னைப் போன்றோருக்கு பிலிம் சுருளையே வாங்க யோசிக்க வேண்டிய காலம் அப்போது. தானே காமராவைக் கொண்டு வந்து பட்டறையையும் நடாத்தியிருந்தார்.
ஹாட்லியில் படித்ததால், இதைவிட அதிபருடன் நெருங்கிப் பழக சந்தர்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் சக வகுப்பு நண்பர்கள் பலர் அதிபர் பற்றி அடிக்கடி கதைப்பதை பார்த்துள்ளேன். வீதி வழியாக அதிபர் அவ்ராகள் சென்று வருவதை தினந்தோறும் பார்த்துள்ளேன்.
ஹாட்லி கல்லூரியின் அப்போதைய அதிபர் சாமுவேல், துணை அதிபர் வல்லிபுரம் ஆகியோரை ஒத்து இருந்தவர – கடமை, கண்ணியம், கட்டுபாடு – போன்ற கோட்பாடுகளுக்கு உரித்தானவர் அமரர் செல்வநாயகம் என்றால் மிகையாகாது.
எமது பகுதியின் ‘சாரணரின் தந்தை’ என்றால் அது செல்வநாயகம் அவர்கள் தான்.
சாரணீயம் தவிர்ந்து அதிபர் அவர்கள், தொழில் நுட்பக் கல்வியில் அதிகம் நாட்டம் காட்டியிருந்தார். அதிபர் அவர்களின் போதனையில், வானொலிகளை தாமே உருவாக்கி இயக்கிய சக நண்பர்களைப் பார்த்து வியந்து இருக்கின்றேன்.
80 களின் நடுப் பகுதிகளில் சிதம்பரக் கல்லூரியில் மாபெரும் கண்காட்சி ஒன்று அதிபர் தலமையில் நடாத்தப்பட்டிருந்தது. வெட்டப்பட்ட தவளை, கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த குறையில் பிறந்த சிசு, மாணவர் உருவாக்கிய வானொலிப் பெட்டி என நீளும் பல விடயங்கள் அக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டமை இன்றும் நினைவில் உள்ளது. அதுவரை புத்தகக் கல்வியில் இருந்த எனது பக்கத்தை மற்றொரு பக்கத்துக்கு கொண்டு சென்ற கண்காட்சி அது.
ஒரு சிலர் அதிபரைப் பற்றி விமர்சனங்கள் கூறியதையும் கேட்டுள்ளேன்.
முதலாவதானது தொழில் நுட்ப பாடங்களில் அதிகம் மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும், பல்கலைகழக தேர்வில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதில் நாட்டம் காட்டுவது குறைவு என்பது. இன்று அதிபர் அன்று காட்டிய அதே தொழில் நுட்ப யுகத்தில் வயது வரம்பின்றி, நாம் அனைவரும் உழன்று கொண்டிருக்கின்றோம்.
மற்றையது அதிபர் அவர்களின் காலத்தில் சிதம்பரக் கல்லூரியில் மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட பின்னடைவு.
இதற்கு பிரதான காரணம் - அப்போதைய உள்நாட்டு யுத்தம். அதிபர் அவர்கள் சிதம்பராவில் பணியாற்றிக் கொண்டிருந்தது உள்நாட்டுப் போரின். மிகச் சிக்கலான காலம் – இராணுவ முகாமுக்கு அருகில் கல்லூரி.
நான் விரும்பியது,
எமது பிரதேசத்தில் வாழ்கின்ற மூத்த குடிமக்களில், அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே அவர் தம் சேவைகளையும் பெருமைகளையும் எழுத்து மூலம் நான் தெரியப்படுத்த விரும்பியவர்களில் முதலாமானவர் அமரர் செல்வநாயகம் அவர்கள் தான்.
கடந்த வருடம் நான் விடுமுறையில் நின்ற பொழுது, இதற்காக அமரர் செல்வநாயகம் அவர்களின் சகோதரரை சென்று சந்தித்து, அதிபர் பற்றிய விபரங்களை தொகுத்துத் தருமாறு கேட்டுக் கொண்டேன்.
ஆனாலும் நான் விரும்பியவாறு அதிபர் அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே, அதிபர் பற்றி பதிவிட முடியாமல் போனது சற்று வருத்தம் தான். (அதிபர் பற்றிய குறித்த தொகுப்பு இன்னும் ஓரிரு தினங்களில் பிரசுரமாகும்)
அதிபர் அவர்களின் ஒரு மகன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 87 ஆம் ஆண்டில் ஊரிக்காட்டில் இடம்பெற்ற ஒரு சண்டையில் சாவடைந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.
ஆனாலும் பலருக்கும் தெரியாத விடயம் ஒன்று,
சண்டை இடம்பெற்ற சில நாட்களின் பின்னர், சூசை அவர்கள் எனது தந்தையாருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது ஒரு விடயத்தைக் குறிப்பிட்டதாக எமது தந்தையார் கூறியிருந்தார்.
‘செல்வநாயகம் மாஸ்ரரின் மகன் ஒரு வெற்று இடத்தை விட்டுச் சென்றுள்ளார்’ என்று சூசை அவ்ராகள் தெரிவித்திருந்தாராம். சுமார் 1 அடி நீள அகலத்தில் தாங்கள் பாவித்துக் கொண்டிருந்த ‘நீண்ட தூர தொலைத் தொடர்பு சாதனத்தை’ செல்வநாயகம் மாஸ்ரின் மகன் ஒரு கைப் பிடி அளவு சாதனமாக மாற்றி அமைத்திருந்தாராம் - அசாத்திய திறமை
(இச் சாதனம் அநேகமாக ‘MF/HF’ தொலைத் தொடர்பு சாதனமாக இருக்கும் என்று பின்னாளில் – கப்பல் ஏறிய பின்னர் - நான் ஊகித்துக்கொண்டேன், ஆனாலும் உறுதிபடக் கூற முடியவில்லை).
நீண்ட நாள் அதிபர், சாரணத்தில் நிபுணத்துவம், தொழில் நுட்ப பாடங்களில் அசாதாரான அறிவு, இயக்கத்தில் இருந்து மறைந்த மகன்.............................. ஊரிலும், இணையங்களிலும், விக்கிபீடியாவிலும் ஒரு சுற்று சுற்றி வந்திருக்கலாம்.
‘முற்றாக நிரம்பிய ட்ரம், சத்தமிடாது’ என்பார்கள். சிறந்த ஒரு. வரைவிலக்கணமாக வாழ்ந்து மறைந்து விட்டார் செல்வநாயகம் அவர்கள்.
அதிரூபசிங்கம் ஆதவன்
பிற்குறிப்பு,
செல்வநாயகம் அவர்கள் செல்வ[வி]நாயகம் என்றே பொதுவாக அழைக்கப்பட்டு வந்தார். அவ்வாறே நானும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: February 22, 2019 at 20:35
சிறப்பு அவர் ஒரு சிறந்த அதிபர் மிகசிறந்த ஆசிரியர் அவர் அதிபராக இருந்தகாலத்தில் நானும் அங்கே படித்திருக்கின்றேன் என்பதில் பெருமைகொள்கின்றேன் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.