ஊரின் கிழக்கே ஒரு “பெரு விழா”, மேற்கே ஒரு “திருவிழா”. கிழக்கே அம்பாள் தீர்த்தோற்சவத்தன்று நடைபெறும் “இந்திரவிழா”. மேற்கே தைப்பொங்கற் தினத்தன்று இடம்பெறும் “விசித்திரப் பட்டத்திருவிழா”. இரண்டுமே ஊருக்கு பெருமை சேர்ப்பன. குடாநாட்டு மக்கள் அனைவருமே எப்போது வரும்? எப்போது வரும்? எனக் காத்திருந்து உரிய வேளை வந்ததும் உற்சாகமாக ஊர் நோக்கித் திரண்டு வந்து கூடிக் குதூகலிக்கும் பண்பாட்டு விழாவாக இரண்டுமே மாறிவிட்டன.
தைப்பொங்கல் (14.01.2018) நன்னாளில் வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையமும் உதயசூரியன் கழகமும் இணைந்து நடாத்தும் வல்வையின் 8 வது பட்டத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளும் - விளம்பரங்களும் - பதாதைகளும் ஒரு மாதத்திற்கு முன்னரே மக்கள் பார்வைக்கு வந்துவிட்டன. சந்தியில் பானை வடிவிலான பானரும், மதவடியில் புதுப்பானையில் பொங்கி வழியும் பெரிய அளவிலான உருவும் பார்ப்போரை கவரும்படியாக அமைந்திருந்தன. ஊடக அனுசரணை வழங்கிய “தினக்குரல்” பத்திரிகையின் விளம்பரங்களும், வானொலி மூலமாக விளம்பரங்களை விருப்போடு செய்த CAPITAL.FM ஸ்தாபனத்தாரதும் ஏனைய பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளும் போட்டியாளர்களையும் – பொதுமக்களையும் இலகுவில் சென்றடைந்தன.
அதனால் பட்டப்போட்டியைப் பார்ப்பதற்கு லட்சகணக்கான மக்கள் கூட்டம் உதயசூரியன் கடற்கரையில் அலை மோதியது. பட்டப் போட்டிக்காக பதிவு செய்யப்பட்டவை 68. போட்டியன்று உதயசூரியன் கடற்கரை மைதானம் வந்து சேர்ந்தவை 57. “பறக்க மாட்டேன்" என அடம்பிடித்து கடற்கரை மணலில் துவண்டு படுத்தவை 04. பரிசு பெற்றவை 30.
உதயசூரியன் கடற்கரை
பட்டப்போட்டி நடைபெறும் உதயசூரியன் கடற்கரை மைதானம் முழுவதும் அலங்காரம் பெற்று திகழ்ந்தது. விக்னேஸ்வர ச.சமூக நிலையத்திற்கு அருகே வடக்குப் பார்த்தபடி விருந்தினர்கள் அமரும் மேடையும், மைதானத்தின் மேற்காக கிழக்கு நோக்கியபடி இரவு நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கான மேடையும் அமைந்திருந்தன. பட்டப்போட்டிக்கான முழுமையான விளம்பரம் அனுசரணையாளர்களாக விளங்கிய “ஜங்கரன் மீடியா” நிறுவனத்தாரின் ஏற்பாட்டில் பல்வேறு விளம்பர ஸ்தாபனங்களின் விளம்பர பதாகைகளால் கழக மைதானம் களைகட்டி நின்றது.
வழிபாடு
உதயசூரியன் கடற்கரையில் கடலை அண்மித்த வளைவு அமைந்துள்ள பகுதியில் பகல் 12 மணிக்கு நமது பாரம்பாரிய மரபுப்படி சூரிய பகவானுக்கு பொங்கிப் படைக்கும் நிகழ்வு நடந்தேறியது. மாலையில் கப்பல் கிழவன் வாசலில் சிதறு தேங்காய் உடைத்து ஆசி வேண்டி - அனுமதி பெற்ற பின்னரே மாலை 02.15 க்கு பட்டப்போட்டித் திருவிழா ஆரம்பமாகியது.
காலநிலை
பட்டப்போட்டிக்கு முதல் நாள் வரையிலும் மாலை வேளைகளில் காணப்பட்ட வேகம் குறைந்த காற்றின் வீச்சும் – பணிக்குளிரான காலநிலையிலும், மறுநாள் இல்லாமல் குளிரற்ற – சீரான காற்று வீச்சு பட்டங்கள் பறக்க மிகுந்த சாதகமான சூழ்நிலையைக் கொடுத்தது.
வீதித்தடைகள் - மக்கள் வருகை
மதியத்திற்கு பின்னர் மக்களின் நடாமாடும் வசதிக்காக நகர எல்லைகளில் வீதி தடைகள் இடப்பட்டன. வாகனப் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்தி, மக்கள் இலகுவாக உரிய இடம் நோக்கி முன்னேற வழிகாட்டும் பணியில் ஏனைய கழகங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருந்தது. பூரண ஒத்துழைப்பு நல்கிய ஏனைய கழக நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள்.
கிழக்கே நெடியகாடு பிள்ளையார் வீதியிலும் – மகளிர் மைதானத்திலும், தெற்கே மருதடி வீதியினால் (முருகையன் கோவில் வீதி) உட்சென்ற வாகனங்கள் தூபியின் பெருநிலப்பரப்பிலும் – சிவபுர வீதி முழுவதிலும் மேற்கே இராணுவ முகாமிற்கு கிழக்காக உள்ள பரந்த காணி – மற்றும் சிதம்பரா மைதானத்திலும், குச்சு வீதி – குறுக்கு வீதிகளினால் வந்த வாகனங்கள் அம்மன் சிவன் வீதிகளிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொரு வாகன தரிப்பிடத்திலும் ஆயிரக்காணக்கான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அத்துடன் தனியார் பஸ்கள், கார்கள், வான்கள், லாண்ட் மாஸ்ரர்கள் என நிறுத்த இடமின்றி ஆங்காங்கே தாறுமாறாக விடப்பட்டதால் பல இடங்களில் வாகன நேரிசல்களும் ஏற்ப்பட்டது.
எல்லா ஒழுங்கைகள் - வீதிகள் ஆகியவற்றினூடாக உதயசூரியன் மைதானம் நோக்கி சாரிசாரியாக இலட்சக் கணக்கில் விரைந்து குவிந்த மக்கள் கூட்டம் கடற்கரை வளாகத்தில் நிரம்பி வழிந்தது. கிழக்கே மகளிர் மைதானம் முதல் மேற்கே ஆதிகோவிலடி வரையான கடற்கரை நெடுங்கிலும் வானைப் பார்த்தபடி மக்கள் நீக்கமற நிறைந்து காணப்பட்டனர். இந்த மக்கள் வெள்ளத்தினை “ AURA CINE MATIC” நிறுவனத்தினர் பறக்கும் கருவி கொண்டு படம்பிடித்த காட்சிகள் மறுநாள் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பின. மக்கள் பார்த்து மகிழந்தனர்.
விருந்தினர்கள் வருகை
8 வது பட்டப் போட்டி விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த கடற்றொழில் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்கள், கௌரவ விருந்தினராக வருகை தந்திருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமனாதன் அவர்கள், சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் – வட மாகாண சபை உறுப்பினருமான திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்கள், மற்றும் அழைக்கப்பட்டிருந்த பிரமுகர்கள் அனைவரும் மதவடியில் உள்ள உதயசூரியன் வளைவினில் (இரா.அரசரெத்தினம் ஞாபகார்த்த வளைவு) வரவேற்கப்பட்டனர்.
கௌரவ அமைச்சர் அவர்களுக்கு விக்னேஸ்வர ச.சமூக நிலையத்தலைவர் திரு.சு.கெங்காரூபன் அவர்களும், திரு அங்கஜன் அவர்களுக்கு உபதலைவர் திரு.வெ. கிருபாகரன் அவர்களும், திரு.M.K சிவாஜிலிங்கம் அவர்களுக்கு ச.ச.செயலாளர் திரு.அ.வசீகரன் அவர்களும் மாலை அணிவித்து ஊர்வலமாக விக்னேஸ்வர ச.சநிலைத்தின் வடபுறமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.
நடுவர்கள்
கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருஞானம் தர்மலிங்கம், சப்தமி இசைக்குழுவின் இசையமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் சத்யன், தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அதிபரும் சித்திர ஆசிரியருமான திரு இராமசாமி ஸ்ரீ நடராசா, பட்டக் கலைஞரும் தளபாட வடிவமைப்பாளருமான ஆறுமுகம் பழனிவேல், நடிகரும் ஒப்பனைக் கலைஞரும் கலாபூஷணம் விருது பெற்றவருமான வெள்ளியம்பலம் முத்துசாமி ஆகியோர் பட்டப்போட்டியின் நடுவர்களாக மணற்பரப்பில் அமர்ந்து கொண்டனர்.
அறிவிற்பாளர்கள்
இமையாணன் இ.த.க பாடசாலை அதிபர் திரு ரவீந்திரன் அவர்களும், விக்னேஸ்வர ச.ச நி அங்கத்தவர்களான திருக்குமரன், சது ஆகியோரும் அறிவிற்பாளர்களாக அழகாக – அற்புதமாக – நிறைவாக தங்கள் கடமையினைச் செய்தார்கள்.
பட்ட விபரங்கள்
நடுவர்கள் தயார் நிலையில் அமர்ந்திருக்க, விருந்தினர்கள் பார்த்திருக்க, அறிவிற்பாளர்கள் முழங்க பார்வையாளர்களின் பெருத்த ஆரவாரத்தின் மத்தியில் பட்டப்போட்டி ஆரம்பமாகியது. போட்டியாளர்களுக்கு போட்டி நிபந்தனைகள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாயினும் மீண்டும் ஒரு முறை நிபந்தனைகள் பற்றிய பொதுவான அறிவித்தல் விடப்பட்டது.
ரெட்டைவால் சுறா, கைக்கடிகாரம், பறக்கும் மேடையில் மொம்மலாட்டம், டிராகன், சட்லைட், அன்னப்பறவை, எலியன் கப்பல், உருமாறும்ரான்ஸ் போமர், மிக் 7, குதிரை வண்டி, ஹெலி ஹெப்டர்,எயர் ஆட்டோ, இந்திர விமானம், தள்ளுவண்டி என 57 பட்டங்கள் பட்டப்போட்டியில் கலந்து கொண்டன. பறக்க முடியாமல் படுத்துக் கொண்ட 4 பட்டங்கள் தவிர ஏனைய அனைத்தும் அழைக்கபப்ட்ட ஒழுங்கில் வானில் பறந்தன. ஒவ்வொரு பட்டம் வானில் பறக்கும் போதும் – உதயசூரியன் கடற்கரையில் நீக்கமற நிறைந்திருந்த மக்கள் கூட்டம் கரகோஷம் செய்து ஆரவாரித்தனர்.
VALVETTITHURAI.ORG, CLICK KURU, சங்கரன், சுலஷ்சன் உட்பட ஏனைய படப்பிடிப்பாளர்களும் நிகழ்வுகளை நிழற்படமாக்கிக் கொண்டிருந்தனர்.
உடனுக்குடன், உலகம் முழுவதிலுமுள்ள நம்மவர்கள் பார்வையிடக்கூடியதாக பட்டப்போட்டி நிகழ்வினை நேரடி அஞ்சல் செய்த TUBEதமிழ், வல்வை நியூஸ் org ஆகியவற்றின் பணிகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.
மாணவர்களுக்கான பரிசளிப்பு
கௌரவ அமைச்சர் அவர்களின் நேர வசதி கருதி பட்டப்போட்டி சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டு, கௌரவ அமைச்சரதும் பாராளுமன்ற உறுப்பினரதும் உரையினைத் தொடர்ந்து மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமானது
A/L சிதம்பரா கல்லூரி
செ.ஸ்ரீசஞ்சீவன்
பா.கீர்த்தனி - இரட்டையர்
பா.கீர்த்தனா - இரட்டையர்
பா.சங்கீதா
சி.தமிழரசி
வல்வை மகளிர் மகா வித்தியாலயம்
தி.திருலாஜினி
இ.கௌரி
இ.லதா
உடுப்பிட்டி அ. மி பாடசாலை
செ.விதுஷன்
o/L -9A சித்தி ஹாட்லி கல்லூரி சி.ரமணன்
புலமைப்பரிசில்
சிதம்பரா –
ஜெ.அபிநாஷ்
மகளிர்
க.ஜசீக்கா
அ.நிதர்ஷன்
சு.தாரிணி
சிவகுரு
க.அபிசாந்
றோ.க பாடசாலை
வி.சஞ்யை
கெ.சஜானா
அமித க பாடசாலை
பா .ஸ்ரீ ஹாரி - இரட்டையர்
பா.ஸ்ரீராம் - இரட்டையர்
யோ. சௌமியா
ஞா.பவித்திரன்
உ .கீர்த்திகா
பட்டப்போட்டி முடிவுகள்
மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர் – மீண்டும் பட்டப்போட்டி தொடர்ந்தது இறுதிக்கட்டத்தை அடைந்தது. சிறப்பு விருந்தினர் திரு.M.K சிவாஜிலிங்கம் அவர்களின் நீண்ட உரையினைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்திருந்த பட்டப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பரிசு பெற்ற பட்டங்கள், பட்ட அமைப்பாளர்களின் பெயர்கள், பரிசு விபரங்கள் ஆகியன கீழே தரப்பட்டுள்ளன.
முதற்பரிசு – பறக்கும் மேடையில் மொம்மலாட்டம்
ம.பிரசாந்(வல்வெட்டித்துறை )
1 பவுண் + ரூபாய் 15,000/- ரொக்கமாக
இரண்டாம் பரிசு – அன்னப்பறவை
ம.ஆரோக்கி (சைனின்ஸ் விளையாட்டுக்கழகம்)
1/2 பவுண் + ரூபாய் 10,000/- ரொக்கமாக
மூன்றாம் பரிசு – உருமாறும் டிரான்ஸ்போமர்
வெ.இராஜேந்திரன் (தீருவில் விளையாட்டுக்கழகம்)
துவிச்சக்கரவண்டி + ரூபாய் 5,000/- ரொக்கமாக
நான்காம் பரிசு – எயர் ஆட்டோ
ம.ஹசன் வல்வெட்டித்துறை
ஐந்தாம் பரிசு – இந்திர விமானம்
சாம்ஜெயவேல் வல்வெட்டித்துறை
(மேலும் 25 பேருக்கு பெறுமதி மிக்க பரிசுகளாக மொத்தம் 30 பேருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.)
நன்றியுரை
நிகழ்ச்சிகளின் நிறைவின் பின்னர். விக்னேஸ்வர ச ச நிலையத்தின் செயலாளார் திரு அ.வசீகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். நடுவர்கள், அறிவிப்பாளர்கள், விருந்தினர்கள், அனுசரணையாளர்கள், ஏனைய கழகங்கள் புலம்பெயர்ந்த உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் - அனுதாபிகள் , பொதுமக்கள் என போட்டி ஏற்பாடுகளில் இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றி கூறியதுடன் இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்து தனது நன்றியுரையினை நிறைவு செய்து கொண்டார்.
இசைநிகழ்ச்சி
இலங்கையின் முன்னணி இளைய தலைமுறைக் கலைஞர்கள் பங்குகொண்ட “சுருதிலயா இசைக்குழு” வினரின் இரவு நேர இசை நிகழ்ச்சி அனைவரதும் பாராட்டைப் பெற்றது. தமிழகத்திலிருந்து பிரத்தியோகமாக வருகை தந்திருந்த விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் கலைஞர்களான ராஜகணபதி – சௌமியா – பிரியாஜெர்சன் ஆகிய மூவருடனும் இணைந்து அமுதவாணன் – பாலா ஆகியோரின் பாடல்களை ரசித்துக்கேட்ட பார்வையாளர்கள் தங்கள் நீண்ட கரகோஷசங்களால் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இசைநிகழ்ச்சி ஒருங்கமைப்பும் – இணை அனுசரணையும் வல்வை – மதவடி தங்கமயில் இல்லத்தினராகும்.
சில அவதானிப்புகள்
நகரசபை ஒத்துழைப்புடன் உதயசூரியன் கடற்கரையில் 3 இடங்களில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கிகளைப் போன்று பிரதான வீதியிலும் (மதவடி, அம்மன் கோவிலடி , சந்தி போன்ற இடங்களில்) குடிநீர் தாங்கிகள் வைக்கப்பட வேண்டியதும், ஏனைய கழகங்களின் உதவியுடன் வாகன தரிப்பிடங்களிலும் -- குறுக்கு வீதிகளிலும் மேலதிக வெளிச்ச வசதிகளை ஏற்ப்படுத்துவதும் அடுத்தடுத்த வருடங்களில் கவனிக்கப்படுவது பொதுமக்களுக்குக் கூடுதல் வசதியாகவிருக்கும்
வியாபார நோக்கமாக இருந்த போதும் நள்ளிரவின் பின்னரும் தமது உணவகங்களைத் திறந்திருந்து, பட்டப்போட்டி திருவிழாவினைப் பார்க்க வந்த பொதுமக்கள் சிற்றுண்டிகள் உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளித்த உணவாக உரிமையாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
இரவு இசை நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிட மண்டபத்தில் தங்கி எழுந்து, அதிகாலை 4 மணிக்கு வரும் திருகோணமலை பேருந்திலும் 751 யாழ்ப்பாண பேருந்துகளிலும் பலரும் பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது.
நிறைவாக
விரிவான ஏற்பாடுகள் அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்து - 8வது பட்டப்போட்டி திருவிழாவினை அனைவரும் வியக்கும் வண்ணம் நிறைவு செய்த விக்னேஸ்வர சன சமூக நிலைய நிர்வாகிகள், உதயசூரியன் கழக உறுப்பினர்கள், அவர்களுக்கு சகல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த புலம்பெயர் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் – ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது உள்ளன்பான பாராட்டுக்களும் பணிவான பொங்கல் வாழ்த்துக்களும் உரியதாகுக.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
வல்வை மாநகரின் மெரீனாபீச் என வர்னிக்கப்படும் அழகுமிகு உதயசூரியன் கடற்கரையில் இந்த ஆண்டின் தைத்திருநாளில் நடைபெற்ற வல்வை மக்களின் சிறப்புக்கு பெருமைசேர்க்கும் இரு நிகழ்வுகளில் ஒன்றான பட்டப்போட்டி திருவிழா நிகழ்வுபற்றி அழகான படங்களுடன் மிகஅருமையாக விபரித்திருக்கிறீர்கள்.
.
இந்தக்கட்டுரையை வாசிக்கும்போது இந்தத்திருவிழாவை நேரில் பார்க்கமுடியாத எங்களுக்கெல்லாம் மனக்கண்களினாலாவது காணும் பாக்கியம் கிடைத்தது.
மிக்கநன்றி அண்ணா.
.
வல்வை மாநகரில் வருடாவருடம் நடைபெறும் இந்திரவிழாவும் பட்டத்திருவிழாவும் யாழ்குடாநாட்டு மக்கள் அணவராலுமே எப்போதுவரும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவதைப்போலவே புலம்பெயர்வாழ் தமிழர்களால் மிக ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமும் உண்டு.
அதுதான் வல்வையின் கலைச்சோலை ஸ்தாபனத்தினரால் வெளியிடப்படும் கலைச்சோலை நாட்க்காட்டி.
புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் இந்துமத விரதங்களையும் இலங்கையிலுள்ள இந்து கோயில்களின் வருடாந்தர மகோற்சவ காலங்களையும் கலைச்சோலை நாட்க்காட்டி வெளியிடும் நாட்க்களைக் கொண்டே அனுஷ்ட்டித்து வருகிறார்கள்.
சைவத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்றும் இந்த வருடத்திற்குரிய கலைச்சோலை நாட்க்காட்டி இன்றுவரை வெளிவராதிருப்பது ஒரு பெரிய மனச்சுமையாக இருக்கிறது.
.
அண்ணா,
உங்களுக்கு பல வேலைப்பளுக்கள் இருக்கும். நேரம் போதாமையும் இருக்கும். ஆனாலும் தயவுசெய்து எம்போன்றவர்களுக்குக்காக தொடர்ந்து கலைச்சோலை நாட்க்காட்டியை வருடாவருடம் வெளியிடும்படி மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
.
நீங்கள் சைவத்துக்கும் தமிழுக்கும் ஆற்றும் தொண்டு மேன்மேலும் பல்கிப்பெருகிட வேண்டுமேன எல்லாம்வல்ல வல்வை நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனை வேண்டுகிறேன்
..
நன்றி
வணக்கம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.