நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியாக அநுர நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு அநுர அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
முதல் சுற்றில் அநுர - 5,634,915 votes + இரண்டாவது விருப்பு வாக்குகள் 90,076 = மொத்தம் 5,724,991 வாக்குகள் பெற்றார்.
முதல் சுற்றில் சஜித் - 4,363,035 votes + இரண்டாவது விருப்பு வாக்குகள் 145,424 = மொத்தம் 4,508,459 வாக்குகள் பெற்றார்
நாளை காலை ஜனாதிபதியாக பதவியேற்கும் அனுரகுமார வெளியிட்டுள்ள வெற்றிச் செய்தி வருமாறு....
பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். இது எம்மனைவரதும் வெற்றியாகும்.
நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம். எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன. இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன.
கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக் கொள்வோம்!
மேற்கண்டவாறு அனுரகுமார திஸாநாயக்க குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.