தமிழகத் திருக் கோயில் வரிசை - சுவாமிமலை (திருவேரகம்) - வல்வையூர் அப்பாண்ணா அவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2016 (வியாழக்கிழமை)
“ நீரகத் தேதனை நினையும் அன்பினோர்
பேரகத் தலமரும் பிறவி நீத்திடும்
தாரகத் துருவமாந் தலைமை எய்திய
ஏரகத் தறுமுகன் அடிகள் ஏத்துவாம் ”
கந்தபுராணம் (துதிப்பாடல்)
முருகனுக்குகந்த நான்காவது படைவீடான சுவாமிமலை திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து மேற்கே 8 கீ.மீ தூரத்திலும், சுவாமிமலை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 2 கீ.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. கும்பகோணம் பெருநகரிலிருந்து பேருந்துகள் அடிக்கடி சென்று வருகின்றன.
திருப்பரங்குன்றத்தில்முருகப்பெருமான் தெய்வானையைத் திருமணங்கொண்டு திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். திருச்செந்தூர் சூரனை வென்று தேவர்களுக்குக் காட்சியளித்த தலமாகும். பழனியில், உலகமெலாம் சுற்றி வந்தும் சிவபெருமானிடமிருந்து பழம் கிடைக்காத நிலையில், முருகன் சினந்து வந்து ஞானப்பழமாய் நின்றார் என்பது புராண வரலாறு. சுவாமிமலை சிவபெருமானுக்குத் திருமுருகன் பிரணவப் பொருள் உபதேசித்த ஸ்தலமாகும்.
திருத்தணி, குன்றக்குடி, விராலிமலை, வள்ளிமலை, மயிலம், திருச்செங்கோடு, கதிர்காமம் ஆகியன குன்றுதோறாடலில் சேரும். மதுரைக்குப் பக்கத்தில் உள்ள பழமுதிர்சோலையும் வேறுபல சோலை சூழ்ந்த தலங்களும் பழமுதிர் சோலையுள் அடங்கும். இவற்றைத் தவிரவும் முருகன் குடிகொண்டுள்ள தலங்கள் இன்னும் பலப்பல வைத்தீஸ்வரன் கோயில் என்றழைக்கப்படும் புள்ளிருக்கு வேளூர், போரூர், குமாரவயலூர், இலஞ்சி, எண்கண், எட்டுக்குடி, திருவிடைக்கழி, வடபழனி, விரிஞ்சிபுரம், திருமுருகன்பூண்டி, சிக்கல், கந்தகோட்டம் ஆகிய ஸ்தலங்கள் எல்லாவற்றிலும் அன்பர்கள் அகம்மகிழக் காட்சி தருகின்றான் முருகன்.
முருகன் விரும்பி வாழும் திருப்பதிகளை விபரிக்கும்போது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
“ சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று
மேரகமு நீங்கா இறைவன் ” ---------எனப் பாடுகின்றார்.
திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரா் சுவாமிமலையைத் “ திருவேரகம் ” என்றே குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருமுருகாற்றுப்படைக்கு உரைகண்ட நச்சினார்க்கினியர், “ திருவேரகம் வேறொரு மலையகத் திருக்கோயில் ” எனக் குறிப்பிடுவதால் திருவேரகம் சுவாமிமலையைக் குறிக்காது ” எனக் கருதுவோரும் உளா். அருணகிரிநாதர் சுவாமிமலை மீது பாடிய 39 திருப்புகழிலும் “ ஏரகத்துறை முருகா ” எனப் போற்றிப் புகழுகிறார். ஒரு திருப்புகழில் வரும் இரண்டு வரிகள் இவை.
திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்
சிறுவா கரிக்கு மிளையோனே
இந்திராதி தேவர்கள் அனைவரும் முருகனை வணங்கிச் செல்லவும், “ இவன் சிறுவன்தானே ” என எண்ணிச் சென்ற பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணிய முருகன் பிரம்மாவை அழைப்பித்து, “ ஓம் ” என்ற சொல்லுக்குப் பொருள் கூறப் பணித்தார்.
“ தாம ரைத்தலை யிருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாம றைத்தலை எடுத்தனன் பகர்தலும் வரம்பில்
காமர் பெற்றுடைக் குமரவேள் நிற்றிமுன் கழறும்
ஓமெ னப்படும் மொழிப்பொருள் இயம்புகென் றுரைத்தான் ”
( தாமரைத் தலை – தாமரை மலா்மீது, குடிலை பிரணவ மந்திரமாகிய “ ஓம் ” மாமறைத் தலை – நான்கு வேதங்களில் முதன்மையாகிய ருக்வேதம்) “ ஓம் ” என்ற சொல்லுக்குப் பொருள்கூற முடியாத பிரம்மாவின் தலைகள் நான்கிலும் குட்டிச் சிறையிலிட்டு தாமே படைப்புத் தொழிலைப் புரியலானார் முருகன். பின்னா் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிடவே, பிரம்மாவைச்சிறை விடுத்தார் முருகன்.
பிரம்மாவும் விளங்கமுடியாத பிரணவப் பொருளை முருகன் அறிந்திருந்ததனால் அதனைத் தமக்கு உபதேசிக்கும் வண்ணம் சிவபெருமான் கேட்கவே, முருகனும் தன் தந்தையின் மடிமீதமர்ந்து குருமூர்த்தியாகப் பிரணவப் பொருளைச் சிவனது திருச்செவியில் உபதேசித்து சுவாமிநாதனென்றும் – குருநாதனென்றும் பெயர் பெற்றார். சுவாமியாகிய சிவபெருமானுக்கு முருகப்பெருமான் குருவாக விளங்கியபடியால் இப்பகுதி “ சுவாமிமலை ” என்றும் “ குருமலை ” என்றும் காரணப்பெயர் கொண்டு அழைக்கப்படலாயிற்று.
தந்தைக்கு உபதேசித்த காரணத்தால் குமரனும் “ தகப்பன் சாமி ” எனப் பெயர் பெறுகிறார். சிவபெருமான் சீடராகவும், முருகப்பெருமான் குருவாகவும் இருந்ததை விளக்கும் வண்ணச் சித்திரங்கள் கீழ் மலையில் உள்ள சிவன் சந்நிதியிலும், மேல் மலையில் உள்ள முருகன் சந்நிதியிலும் காணப்படுகின்றன. இரண்டாம் பிரகார வாசலில் உள்ள, விநாயகர் – நாரதா் – மகாவிஷ்ணு – பிரம்மா – அகத்தியர் – வீரவாகுதேவர் முதலானோர் சூழ்ந்திருக்க முருகன் தந்தையின் மடிமீதமர்ந்து உபதேசிக்கும் காட்சியினைச் சித்தரிக்கும் சுதைச் சிற்பம் கோயில் வரலாற்றினைச் சிறப்பாக சித்தரிக்கின்றன. “ தன்னிளங் குமரன் தன்னைத் தலைமையோடிருப்ப நல்கி ” என்றும், “ தாரகத் துருவமாந் தலைமையெய்திய ஏரகத்துறுமுகன் ” என்றும் கந்தபுராணம் கூறுவதையுங் காண்க. தகப்பன் சாமியின் மகிமையை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இவ்வாறு பாடுகிறார்.
“ சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளே
சிறக்குஞ் சாமி சொருபமி தொளிகாணச்
செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை
தெறிக்குஞ் சாமி முநிவா்க ளிடமேவுந்
தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை
தரிக்குஞ் சாமி யசுர்கள் பொடியாகச்
சிதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண
தப்பன் சாமி யெனவரு பெருமாளே ”
மருந்துக்குக் கூட மலையில்லாத தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே அமைந்துள்ள சுவாமிலை ஒரு கட்டுமலையேயாகும்.இத் திருக்கோயில் மூன்று கோபுரங்களுடனும்.மூன்று பிரகாரங்களுடனும் அழகுறக் காட்சி தருகிறது. மேலைக் கோபுரமும் கீழைக் கோபுரமும் மொட்டைக் கோபுரங்களாக விளங்க தெற்குக் கோபுரம் மட்டும் ஐந்து நிலைகளுடன், கந்தபுராண நிகழ்வுகளை விளக்கும் எழில்மிகு சுதைச் சிற்பங்களுடைய ராஜ கோபுரமாகத் திகழ்கிறது.
முதற் சுற்று கட்டுமலையின் அடிவாரத்திலும், இரண்டாம் சுற்று மலையின் நடுப்பகுதியிலும், (இச்சுற்றிலேதான் சுந்தரேஸ்வரா், மீனாட்சியம்மைக்கான தனிச்சந்நிதிகள் காணப்படுகின்றன) மூன்றாம் சுற்று மலையுச்சியில் சுவாமிநாதப் பெருமானின் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியும் அமைந்துள்ளன. ராஜகோபுர வாசலையும் அதனை அடுத்துள்ள கல்யாண மண்டபத்தையும் கடந்து சென்றால் முதலில் வருவது மீனாட்சியம்மை சந்நிதியாகும்.இங்கு அன்னை தன் குமரனை வணங்கவரும் சகல சௌபாக்கியங்களையும் வழங்கும் தாயாகா விளங்குகிறார்.
அம்பிகை முருகனுக்கு வேலும், காலனை உதைக்கச் சிவபெருமானுக்குக் காலும், திருஞானசம்பந்தருக்குப் பாலும், மன்மதனுக்குச் செங்கோலும் அளித்து உலகத்தைக் காத்துவரும் அவள், தம்மை அண்டி வந்தோருக்கெல்லாம் வாரி வழங்குவாள் என்பதனை படிக்காசுப் புலவா் இவ்வாறு பாடுகிறார்.
கோல் கொடுத்தாய் அம்மையே எனக்கு ஏதும் கொடுத்திலையே! ”
அன்னையின் சந்நிதிக்கருகில் உள்ள கிழக்கு நோக்கிய சுந்தரேஸ்வரின் தனிக்கோயில் அழகுடன் மிளிர்கிறது.சர்வ அலங்காரங்களுடன் சுந்தரேஸ்வரா் அருள்பாலிக்கிறார். நால்வார் தட்சணாமூர்த்தி – விஸ்வநாதர் – விசாலாட்சி – சோமஸ்கந்தர்- வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் – நவக்கிரகங்கள் – துர்க்கை – சண்டிகேஸ்வரா் சந்நிதிகள் பிரகாரத்தில் தனிச் சந்நிதிகளில் அமைந்துள்ளன. அம்மன் சந்நிதிக்குக் கிழக்கில் வசந்த மண்டபமும், அதையடுத்து மலை ஏறுவதற்கான படிகளும் காணப்படுகின்றன.மலை உச்சியை அடைவதற்கு அறுபது படிக்கட்டுகள் உள்ளன.இப்படிகள் தமிழ் வருடங்கள் அறுபதையும் குறிப்பன என்பதைக் குடந்தைக் புராணம் இவ்வாறு வர்ணிக்கிறது.
“ வரு பிரபவ முதல் வருட் தேவர்கள்
திருவளர் அம்மலைச் செறிந்த பல்படி”
முதற்படியில் தேங்காய் உடைத்துத் தீபாராதனை செய்து வழிபட்ட பின்னரே மக்கள் படியேறிச் செல்வதைக் காணமுடிந்தது.இதைவிட மனித வாழ்வின் அறுபது ஆண்டுகளின் நிறைவு மணிவிழாவினைக் குறிப்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.இந்தப் படிக்கட்டுக்களின் அருகாக அடிவாரத்தில் ஸ்தல விருட்சமான நெல்லிமரம் காணப்படுகிறது. 28 படிகள் எறிவந்த நிலையில் ஒரு மாடத்தில் “ படிக்கட்டு விநாயகர் ” காணப்படுகிறார். அருகிலேயே ஒரு பரந்த மண்டபமும் தொடர்ந்து இரண்டாம் சுற்றும் காணப்படுகிறது. இச்சுற்றின் தென் பக்கச் சுவரில், அருணகிரிநாத சுவாமிகள் சுவாமிநாதப் பெருமாள் மீது பாடிய “ திருஎழுகூற்றிருக்கை ” (தேர் வடிவில் அமைந்துள்ள சித்திரகவி ) சலவைக் கல்லில் பதிக்கப்பெற்றுள்ளமையும் காணலாம்.
மிகுதியாகவுள்ள 32 படிகளையும் கடந்து சென்றால் ஸ்தல விநாயகா் சந்நிதியையும் தங்கத்தினாலான, தம்பத்தையும், மூலமூர்த்தியான சுவாமிநாத சுவாமியின் கிழக்கு நோக்கிய சந்நிதியையும் காணலாம். பலிபீடமருகே மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக நிற்கிறது. ஹரிகேசன் எனும் அசுரனால் வலிமையிழந்த இந்திரன் சுவாமிநாதப் பெருமானை வழிபட்டு, மீண்டும் வன்மைபெற்று அசுரனை அழித்ததாகவும்; அந்த நன்றிக்கு அறிகுறியாக தனது யானையாகிய ஜராவதத்தை முருகவேளுக்குத் தொண்டுபுரிய நிறுத்திவிட்டுச் சென்றதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
(சென்னை பெசன்ற் நகரில் உள்ள அறுபடை வீடு கோயிலைத் தரிசிக்கச் செல்லும் அடியார்கள் சுவாமிமலைச் சந்நிதியில் பலிபீடமருகே யானை நின்ற நிலையில் உள்ளதைப் பார்த்திருப்பீர்கள்) மகாமண்டபத்தின் தூண்கள் அழகிய யாளிகளின் சிற்பங்களாலும், கொடுங்கைகளில் (தாழ்வாரங்களில்) தொங்கும் தாமரை மொட்டுப் போன்ற வடிவங்கள் கொண்டும் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மகா மண்டப வாசலருகே இடதுபுறம் அகஸ்தியர் – அருணகிரிநாதர் நவவீரா் முதலான திருவுருவங்களும், வலதுபுறம் இடும்பனின் திருவுருவமும் காணப்படுகின்றன.மண்டபத்தின் ஒரு பக்கத்தில் சுவாமிநாதப் பெருமானின் உற்சவ மூர்த்தமுள்ள சந்நிதியும் உண்டு.
கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விசாலாட்சி விஸ்வநாதர் , சந்திரசேகரா், கஜலெட்சுமி, சரஸ்வதி, நம்பிராஜன், வீரவாகுதேவர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், சபாபதி ஆகியோர் அமர்ந்துள்ள தனிச்சந்நிதிகள் காணப்படுகின்றன.
இவ்வடிவங்களில் சந்திரசேகரா், சபாபதி ஆகிய இரு திருவுருவங்களும் சிவபெருமானின் மகேஸ்வர வடிவில் இல்லாமல், முருகனின் தோற்றமாக அமைந்துள்ள ஒரு அதிவிசேட அம்சமாக உள்ளது.அதிலும் குறிப்பாக முருகன் தெய்வானையுடன் தனித்திருக்கும் (வள்ளி இல்லாமல்) கோலமானது.சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டு சபாபதி கோலம் தாங்கிய வடிவமாகும்.சந்திரசேகரா், சபாபதி இருவரதும் வடிவங்களை முருகன் திருவுருவில் காண்பது மிக அபூர்வமானதே.
கா்ப்பக்கிரகத்தில் சுவாமிநாதப் பெருமான் சுமார் ஆறு அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாக வலது திருக்கரத்தில் தண்டம் பிடித்தும்.இடது திருக்கரத்தைத் தொடைமீது வைத்தும் கருணை வழியும் திருமுகத்துடன் பார்ப்போரைப் பரவசப்படுத்தும் வகையில் யோககுருவாகத் தரிசனம் தருகிறார்.சுவாமிநாத சுவாமியின் திருக்கரத்தில் விளங்கும் வேல் ஒப்பற்றது.சிவனின் பாகமாய் அமர்ந்த உமையம்மை சூரனை வெல்வதற்காக இந்த வேற்படையை வேலனுக்கு அளித்தாள்.அவ்வேலின் மகிமை இவ்வாறு பேசப்படுகிறது.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சொக்கநாதப் புலவா் என்பார் திருவேரகத்திலுள்ளசுவாமிநாத மூர்த்தியைச் செட்டியாராக உருவகப்படுத்தி இரு பொருள்படப் பாடியது ரசிக்கத்தக்கது.
“ வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்து இருப்பார் இச்சரக்கை – மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே! ”
“ வினையைப் போக்குதற்கு ஏற்ற இடம் ஏரகத்துச் செட்டியாராக விளங்கும் முருககப் பெருமானின் திருவடிக் கமலங்களே ஆகும். அவையே நமக்கு வீட்டுப்பேறு ( சீர் அகம் ) அருளவல்லவை ” என்கிறார் சொக்கநாதப் புலவா். இக் கருத்தையே பட்டினத்தாரும் “ அறமார் புகழ் தில்லை அம்பலவாணா் அடிக்கமலம் மறவாதிரு மனமே! அதுகாண் நல் மருந்துனக்கே! ” என்று வலியுறுத்துகிறார்.
“ வினையைப் போக்கும் வலிமை, எம் பெருமானின் திருப்பாதார விந்தங்களுக்கே உண்டு ” என அருணகிரிநாத சுவாமிகளும் பாடுகிறார்.
“ விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே! ”
-கந்தரநுபூதி : பாடல் 35
சுவாமிநாதப் பெருமான் நமக்கும் கருணை கூர்ந்து இன்னல் போக்கி இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டியருள வேண்டுமெனப் பிரார்த்தித்து அவன் அருள் பெற்றிடுவோமாக
“ உருவாய் அருவாய் உளதா யிலதாய்
மருவாய் மலரா மணியா யொளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!”
-கந்தரநுபூதி பாடல் 51
பி.கு சுவாமிமலை சுவாமிநாதப் பெருமானைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், சவாமி மலையைச் சுற்றி மிக நெருக்கமாகவுள்ள திருக்கோயில்களையும் தரிசித்து வரலாமே!
(1)திருவைகாவூர் (வில்வவனம்) :
சுவாமிமலையிலிருந்து 5 மைல் தூரத்தில் இக்கோயில் காணப்படுகிறது.வேடன் வில்வம் சொரிந்து முத்திபெற்ற ஸ்தலம்.சிவராத்திரிக்குச் சிறப்புப் பெற்றது இக்கோயில்.
(2)பட்டீஸ்வரம்:
சுவாமிமலையிலிருந்து (கும்பகோணம் செல்லாமல் ) குறுக்குப் பாதையால் 3 கி.மீ தூரம் கொண்டது இத்தலம். திருஞானசம்பந்தருக்காக நந்திகள் விலகிய அற்புதம் நடந்த திருத்தலம்.
(3)திருவலஞ்சுழி :
சுவாமிமலையைச் சென்றடைய 3 கீ.மீ முன்பதாக இத்திருக்கோயில் காணப்படுகிறது.ஒன்பது அங்குல உயரமேயுள்ள கடல்நுரைப் பிள்ளையாரைத் தரிசிப்பதுடன், கல்யன்னல், ஒரே இரவில் கட்டப்பட்ட “ அபராத மண்டபம் ” ஆகியவற்றையும் கண்டு மகிழலாம்.
(4) தாராசுரம் :
ஜ.நாஸ்தாபனத்தின் தொல்பொருட் பிரிவினரால் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் நாட்டின் 3 கோயில்களில் ஒன்று இது.ஒவ்வொரு கல்லும் கதை சொல்லும் சிறந்த கலையழகு மிக்க ஸ்தலம்.நந்தியின் ஏழு படிகளிலும் ஒலிக்கும் ஏமு சுரங்களையும் கேட்டு மகிழலாம்.
நன்றி :ஞானச்சுடர்
அடுத்த வெள்ளி “ திருநாகேஸ்வரம் ” தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு “ ராகுஸ்தலம் ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.