தமிழகத் திருக்கோயில் வரிசை - திருநள்ளாறு - வல்வையூர் அப்பாண்ணா அவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2016 (வெள்ளிக்கிழமை)
பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியில் கரைபுரண்டு ஓடும் காவேரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது திருநள்ளாறு. காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 45 கி.மீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், நாகபட்டினத்திலிருந்து 23 கி.மீ தூரத்திலும் உள்ளது இத்திருத்தலம். எனவே, இத்தலத்திற்கு எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்துகள் தாராளமாகச் செல்கின்றன.சென்னையிலிருந்தும் சில மணிநேர இடைவெளியில் நேரடியாகவும் திருநள்ளாறுக்குச் சென்று வரலாம்.
நளனுக்கு நன்னெறி காட்டிய தலம் என்பதால் “ நள்ளாறு ” எனப் பெயா் பெற்றது. இறைவனை “ நள்ளாறா் ” என்றும், தீர்த்தத்தை “ நளதீர்த்தம் ” என்றும் அழைக்கிறார்கள். அன்றியும் காவேரியைக் குறிக்கும் “ நல்லாறு ” என்ற பெயரே “நள்ளாறு” என மருவியதாகக் கொள்வோரும் உளா்.
திருநள்ளாறு அழகும் அருளும் நிறைந்த ஒரு கலைக்கோயில்.கிழக்கு நோக்கிய ஒரு ராஜகோபுரம் உள்ளது.வெளிப்புறமாக புதிய ராஜகோபுரம் ஒன்று நிர்மாணிக்கப்படுகிறது.இதன் வேலைகள் முற்றுப் பெற்றதும் பழைய கோபுரம் இரண்டாம் கோபுரமாகிவிடும்.கோபுர வாசலின் உள்ளே இரண்டு திருச்சுற்றுக்கள் உண்டு.நேராக உள்ள இறைவன் சந்நிதி கிழக்கு முகமாகவும், அம்பிகையின் சந்நிதி தெற்கு முகமாகவும் உள்ளன. அம்பிகையின் சந்நிதிக்கு முன்பாக வலப்புறத்தில் கிழக்குப் பார்த்தபடி, இக்கோயிலின் சிறப்பு மூர்த்தியான “ ஸ்ரீசனிபகவான் ” சந்நிதி அமைந்துள்ளது.
லிங்கோற்பவருடன் திருமாலும் பிரம்மாவும் சிறிய ரூபாங்களில் அமர்ந்திருப்பதுவும் வித்தியாசமான அம்சங்கள். பிச்சாடணரின் அழகும் பொலிலும் இக் கோயிலின் தொன்மைக்குச் சான்றாகி நிற்கிறது. கோஷ்ட மூரத்தங்களின் தரிசனத்தை முடித்து பிரகார வலத்துக்கு வருகிறோம். உட்பிரகாரத்துத் தென் புறத்தில் அறுபத்து மூவா் திருவுருவங்கள் காணப்படுகின்றன. அறுபத்துமூவா் மண்டபத்தின் கடைசியில் தனித்த சிறிய மண்டபத்தில் நளனும் ஒரு சிவலிங்கத் திருமேனியும் உள்ளன.
மேற்குச் சுற்றில் வரிசையாக சொர்ண விநாயகா் சந்நிதியும், பிரகார நடுவில் அகத்தியா் முதலான சப்த ரிஷிகளினால் பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் வரிசையாகவும் உள்ளன. அடுத்து சோமஸ்கந்தர் உள்ளார். பொதுவாக சோமஸ்கந்தா் திருவுருவம் பஞ்சலோகத்தில் உள்ளதையே பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே சோமஸ்கந்தர் கல் விக்கிரகமாகவே உள்ளார்.அடுத்து சப்தவிடங்கத் தலங்களில் உள்ள விடங்க லிங்கங்கள் உள்ளன. அடுத்துள்ள சிறிய மண்டபத்தில் பிரம்மா நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.
அவரின் முன்பாக முனிவர்களின் சாயலில் மூவர் உருவங்கள் காணப்படுகிறது. “ இவர்கள் யார் ? ” எனச் சிலரை விசாரித்தேன். விபரம் கூறுவார் யாருமிலா். கோயிற் குறிப்புக்களிலும் எதுவம் குறிப்பிடவில்லை. வடகீழ் கோடியில் நடராஜா் சிவகாமி அம்மையுடன் எழுந்தருளியுள்ளார். வட ஈசானிய மூலையில் இக் கோயில் முக்கிய மூர்த்தங்களில் ஒன்றான வைரவா் பெரிய வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இவரே இக்கோயிலின் காவற்தெய்வம். கிழக்குச் சுற்றில் மேற்குப் பார்த்தபடி சூரியன் உள்ளார்.
அதிகாலையில் சூரிய பூசையை முடித்த பின்னரே திருப்பள்ளி எழுச்சி முதலான தினப் பூசைகளைத் தொடருகிறார்கள்.
பிரகார வலம் முடிந்து நாம் இப்பொழுது சில படிகள் ஏறி மேலே மூலமூர்த்தியான தர்ப்பாரண்யேசுவரா் திருவாயிலை அடைகிறோம். நள்ளாறரின் திருமுன்பாக நந்தியெம்பெருமானும் துவார பாலகர்களும் காணப்படுகின்றனா்.
நந்தியெம்பெருமானின் கம்பீரமும், துவார பாலகர்களின் “ அதட்டும் தொனி ” கலந்த தோற்றமும் பல்லவா் பாணி சிற்பங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. கருவறையில் மூலவா் நள்ளாறா் சுயம்புவாக ஜோதிலிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். அவரது பொலிவான அழகிய அலங்காரத் தோற்றம் காண்போர் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது.
இப்பெருமானையே, ஆளுடைய பிள்ளையார் எனப்படுகின்ற திருஞானசம்பந்தரும் ஆளுடைய அரசு எனப்படுகின்ற அப்பா் பெருமானும் ஆளுடைய நம்பி எனப்படும் சுந்தரமூரத்தி சுவாமிகளும் பாடிப்பரவி நின்றனா். மூவராலும் பாடப்பெற்ற ஒப்பற்ற தேவாரத் திருத்தலம் திருநள்ளாறு. எந்த ஒரு கோயிலிலும் மூலமூர்த்தியின் கீர்த்தியே மிகுந்திருக்கும். ஆனால், இங்கே மூலவருக்குச் சரிசமமான சிறப்பு வாய்ந்த மூர்த்தங்களாக
(1)சொர்ண விநாயகா் (2) போகமார்த்த பூண்முலையாள் (3) நகவிடங்கர் (4) சனிபகவான் எனத் திருநள்ளாறில் உள்ள ஏனைய மூரத்தங்களுக்கும் தனித்தனியான வரலாற்றுப் பெருமை உண்டு.
1)சொர்ண விநாயா் :
தர்ப்பாரண்யம் வந்து தர்ப்பாரண்யேசுவரரைத் தரிசித்த நள மகாராஜனைப் பீடித்திருந்த சனி பகவான் அவனை விட்டு விலகியதால், அதுநாள்வரை சனீஸ்வரனால் உண்டான துன்பங்கள் நீங்கி மன அமைதி அடைந்து பேரானந்தம் பெற்றான். நிம்மதியடைந்த நளன் பெருமானது திருக்கோயிலைப் பெரிதாக அமைக்க எண்ணி திருப்பணி வேலைகளை ஆரம்பித்தான்.
போதுமான பொருள் வளமின்மையால் திருப்பணி வேலைகள் இடையில் நின்று போயிற்று. மனம் மிக வருந்திய நளன் விநாயகரைத் துதித்து பூசைகளும் ஹோமங்களும் செய்வித்தான். நள மகாராஜாவின் பக்தியை மெச்சிய விநாயகர் அவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்து நின்று போன திருப்பணியைப் பூர்த்தியாக்கினார். விநாயகரே இத் திருப்பணிக்கு “ சொர்ணம் ” கொடுத்த படியால் “ சொர்ண விநயாகர் ”ஆனார். இவரையே நாம் உட்பிரகாரத்துத் தென்மேற்கு மூலையில் தரிசித்தோம்.
(2) போகமார்த்த பூண்முலையாள்:
இங்கே இறைவன் சந்நிதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சந்நிதி “ சோபன மண்டபத்தில் ” தெற்குப்புறம் பார்த்தபடியும் அமைந்துள்ளது. அம்பிகை “ போகமார்த்த பூண்முலையாள் ”என்ற திருநாமத்தோடு பெருமிதம் மிகுந்த பிராட்டியாக அருட்கோலம் தாங்கி நிற்கிறாள். உயிர்களுக்கெல்லாம் தாயாகி உலக நாயகியாக கனிவுளத் தெய்வமாக அருள் மழை பொழிந்து வருகிறார்.
புனல்வாதம் முடிந்த பின்னர் அனல்வாதம் செய்யப்புறப்பட்ட திருஞானசம்பந்தா் தாம் பாடிய தலத் திருப்பதிகங்களைக் கொண்ட ஏட்டுச் சுவடிகளின் கட்டுக்களைக் கொணர்வித்து நூற்கயிறு சார்த்திப் பார்த்தார். அந்நூற்கயிறு திருநள்ளாறில் திருஞானசம்பந்தா் பாடிய “ போகமார்த்த பூண்முலையாள் ” என்று தொடங்கும் பதிக ஏட்டில் விழுந்தது. மனம் மகிழ்ந்த சம்பந்தா் அம்பாளை வேண்டியபடி அப்பதிக ஏட்டினை எடுத்து செந்தீயில் இட்டார்.அவ்வேடு கனன்ற தீயுினில் கருகாது மேலும் பசுமையாக விளங்கியது. இதனால் தீயினில் வேகாத இப்பதிகம் “ பச்சைப் பதிகம் ”என்றாயிற்று. தென்னாட்டில் சைவசமயம் புத்துயிர் பெற்று விளங்க இந்த அனல்வாதம் வழிகோலியது.
(3) நகவிடங்கா்:
சப்தவிடங்கத் தலங்கள் ஏழினுள் திருநள்ளாறும் ஒன்றாகும். தர்ப்பாரண்யேசுவரா் சந்நிதியின் உட்பிரகாரத்தின் தென்புறமாக உள்ள ஒரு வழியால் “ நகவிடங்கா் ” சந்நிதிக்கு இலகுவாகச் செல்லலாம். அல்லது முதற் சுற்றுப் பிரகார நீண்ட வழியாகவும் செல்லலாம்.
மகாவிஷ்ணுவால் பூசிக்கப் பெற்றுவந்த மூா்த்தியை இந்திரன் பெற்று வந்து பூசித்து வந்தான்.தேவர்களுக்கும் அசுரா்களுக்கும் நடந்த போரில் முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவர்களுக்கு உதவி புரிந்தார். வெற்றித் திருவிழா வேளையில் இந்திரன் சபைக்கு வந்த முசுகுந்தச் சக்கரவர்த்தியிடம், “ தேவரீா் வேண்டுவது யாது? ” என இந்திரன் வினாவ, “ இறைவன் அருளால் உன்னுடைய ஆா்த்மார்த்த மூர்த்தியாகிய ஸ்ரீ தியாகேசப் பெருமானை வெற்றிப் பரிசாகக் கொடு ” எனக் கேட்டான் முசுகுந்தன்.
அதற்கு மனம் விரும்பாத இந்திரன், தேவதச்சன் மயனைக் கொண்டு அதேபோல் ஆறு மூர்த்திகளை உளிபடாமல் செய்து வைத்து “ உமக்கு வேண்டிய ஒன்றினை எடுத்துக் கொள்ளவும் ” எனக் கூறினான். சற்றே திகைத்துப்போன முசுகுந்தனுக்கு, இறைவன் குறிப்பால் உணர்த்திட, மூல மூரத்தியை அடையாளங் கண்டு எடுத்தான். இந்திரன் ஏனைய மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே கொடுத்தனுப்பினான். எல்லா மூர்த்திகளையும் பெற்று வந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி மூலமூர்த்தியைத் திருவாரூரிலும், ஏனையவற்றைத் திருநள்ளாறு, திருநாகைக்காரோகணம் திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு என ஆறு திருத்தலங்களிலும் பிரதிஷ்டை செய்வித்தான்.
இந்த ஏழு திருத்தலங்களுமே “ சப்தவிடங்கத் தலங்கள் ” எனப்படுகிறது. திருநள்ளாறு தலத்து விடங்கரின் திருநாமம் “ நகவிடங்கா் ” என்பதாகும். (சப்தவிடங்கத் தலங்கள் பற்றிய மேலும் விபரக் குறிப்புக்களை 2010 மாசி மாத ஞானச்சுடரில் “ திருவாரூா் ” கோயில் வரிசையிற் காணலாம்) கிழக்கு நோக்கிய விடங்கப்பெருமான் சந்நிதிக்கு எதிரில் தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் விடங்கப் பெருமானைப் பார்த்தபடி அமர்ந்துள்ளார்.
தியாகராஜ சுவாமியின் தெற்குச் சுற்றின் ஆரம்பத்தில் நால்வா் திருவுருவங்களும், அதனையடுத்து விநாயகா், தார்ப்பாரண்யச் சிவலிங்கம் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.தியாகராஜா் கோயிலின் தெற்கு கோஷ்டத்தில் தட்சணாமூரத்தி சந்நிதி காணப்படுகின்றது.இதேபோல திருநள்ளாற்றுப் பெருமான் சந்நிதியின் தென் கோஷ்டத்திலும் தட்சணாமூர்த்தியை நாம் தரிசனம் செய்தது நினைவுக்கு வருகிறதா? இவ்விதம் இரண்டு தட்சணாமூர்த்தி சந்நிதிகள் இருப்பது விடங்கத் தலங்களின் விசேடமாகும்.
(4) ஸ்ரீசனி பகவான் :
ஸ்ரீசனி பகவான் உக்கிர மூர்த்தியல்ல. அருளே வடிவானவா்.அவா் அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருத்தலம் திருநள்ளாறு. ஏற்றமும் எழிலும் வாய்ந்த இவரது திருத்தோற்றத்தினை பல ஸ்தலங்களில் பார்த்து வணங்க முடிந்தபோதும், சனிபகவான் எனச் சொன்னவுடனேயே நம் சிந்தனையில் வருவது திருநள்ளாறு திருத்தலமே. அம்பாள் சந்நிதி முன் வலது பக்கமாக கிழக்குப் பார்த்தபடி சனீஸ்வரனின் தனிச் சந்நிதி காணப்படுகிறது.
நவக்கிரக மூர்த்திகளில் சனிபகவான் நிரம்பவும் பெருமைக்குரியவா். ஈஸ்வரனுக்குச் சமமாக அவருக்கு மட்டுமே ஈஸ்வரப் பட்டம் இருப்பதனாலேயே சனி ,+ஈஸ்வரன் =சனீஸ்வரன் எனப் பெருமிதமாகப் போற்றப்படுகிறார். நவக்கிரகப் பிரதிஸ்டை இல்லாத கோயில்கள் பலவற்றிலுங்கூட சனீஸ்வரனுக்குத் தனிச்சந்நிதி இருப்பதைப் பார்க்கிறோம்.திருநள்ளாறிலும் நவக்கிரகங்கள் தனியாகப் பிரதிஷ்டை செய்யப்படவில்லை.
ஸ்ரீ சனிபகவான் நவக்கிரகங்கள் ஒன்பதுள்ளும் மிக மெதுவாக அண்டவெளியில் சஞ்சாரம் செய்வதால் இவருக்கு “ மந்தன் ” என்ற பெயருமுண்டு. தேவர்களாயினும், மன்னாதி மன்னர்களாயினும், நம்போன்ற சகாராண மனிதர்களாயினும்சரி சனிபகவானை நெஞ்சுருகி வழிபடாதவர்களேயில்லை.ஸ்ரீசனிபகவான் நம்முடைய பலாபலன்களுக்கு ஏற்றபடி நம்மை பக்குவப்படுத்த வேண்டி கெடுபலன்களைச் செய்தாலும், பலகாலம் நன்மைகளை அளித்து நம்மைக் காத்து வருகிறார்.சனீஸ்வரனால் கெடுபலன்களையும் பின்னா் சுப பலன்களையும் அனுபவித்த நளச்சக்கரவர்த்தியின் வரலாறு நாமெல்லாம் அறிந்ததே.
சாதாரண ஒரு சனிக்கிழமை நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சனிதோஷ நிவர்த்தி வேண்டி திருநள்ளாறுக்கு வருகிறார்கள். இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை வரும் சனிப்பெயர்ச்சி நாளிலும், அதன் முன்பின்னாக வரும் சனிக்கிழமைகளிலும் பல லட்சம் மக்கள் தங்கள் நேர்த்திகளை இங்கே நிறைவு செய்கிறார்கள்.
ஸ்ரீ சனி பகவானிடம் தோசநிவர்த்திக்காக வருபவர்கள் ஒரு ஒழுங்கான வணக்க முறையைக் கைக்கொள்கிறார்கள். முதலில் நள தீர்த்தத்தில் தீர்த்தமாடி தாம் தீர்த்தமாடும் போது அணிந்திருந்த ஆடைகளைகுளத்திலும் குளக்கரையிலும் விட்டுவிட்டு மாற்றுடை தரித்து - பிரம்ம தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தத்தில் தண்ணீரைத் தெளித்துக்கொண்டு உட்பிரகாரத்தை வலம் வருகிறார்கள். சொர்ண கணபதி – ஸ்ரீ சுப்பிரமணியர்தார்ப்பாரண்யேசுவரா் –தியாகேசா் சந்நிதிகளை வணங்கிக் கொண்டு இறுதியில் சனீஸ்வரன் சந்நிதிக்கு வந்து நீண்ட வரியைில் பலமணிநேரம் காத்திருந்து சனி பகவானை வணங்கிச் செல்கிறார்கள்.
நவக்கிரக ஸ்தலங்கள்
சூரியன்சூரியனார் கோயில்
ஆடுதுறை அருகில்
அண்மித்த நகரம் : கும்பகோணம் 15 கி.மீ
சந்திரன்திங்களூர்
கும்பகோணம் – திருவையாறு வழி
அண்மித்த நகரம் : திருவையாறு 04 கி.மீ
செவ்வாய்வைத்தீஸ்வரன் கோயில்
மயிலாடுதுறை – சீர்காழி வழி
அண்மித்த நகரம் : மயிலாடுதுறை 13 கி.மீ
புதன் திருவெண்காடு
சீர்காழி பூம்புகார் வழி
அண்மித்த நகரம் : சீர்காழி 10 கி.மீ
குருஆலங்குடி
கும்பகோணம் – வலங்கைமான்
நீடாமங்கலம் வழி
அண்மித்த நகரம் : கும்கோணம் 17 கி.மீ
சுக்கிரன் கஞ்சனூர்
மயிலாடுதுறை கும்பகோணம் வழி
அண்மித்த நகரம் : ஆடுதுறை 5 கி.மீ
சனிதிருநள்ளாறு
மாபெரும் சனீஸ்வரன் ஸ்தலம்
அண்மித்த நகரம் : காரைக்கால் 5 கி.மீ
இராகுதிருநாகேஸ்வரம்
கும்பகோணம் அருகில் உள்ளது.
அண்மித்த நகரம் : கும்பகோணம் 17 கி.மீ
கேதுகீழப்பெரும் பள்ளம்
அண்மித்த நகரம் : பூம்புகார் 04 கி.மீ
.
சனிபகவான் சந்நிதிக்கு முன்பாக, கோபுர வாசலருகே இடது புறமாக நீ்ண்டமண்டபம் காணப்படுகிறது.மண்டபத்தில் அகலம் குறைந்த பல படி வரிசைகளில் பல்லாயிரக்கணக்கான எள்ளெண்ணை சிட்டி விளக்குகள் எரிந்தபடியுள்ளன.கோயில் நிர்வாகமே இந்த எள்ளெண்ணை சிட்டிகளை விற்பனை செய்கிறார்கள்.நாமும் கையோடு கொண்டு வந்திருந்த எள்ளெண்ணை சிட்டிகளை படிவரிசைகளில் ஏற்றி வணங்குகிறோம்.மனதின் எல்லாப்பாரங்களையும் சனீஸ்வரன் காலடியில் இறக்கி வைத்தபின், நிம்மதியான நெஞ்சினராய் நமது அடுத்த திருக்கோயில் பயணத்தைத் தொடருகிறோம்.
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகம் ஆர்த்த தோலுடையவன் கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
-சம்பந்தர் தேவாரம் –
நன்றி : ஞானச்சுடர் : ஆடி 2011
அடுத்த வாரம் : “ சுவாமிமலை ” தந்தைக்கு உபதேசித்த முருகன் அமர்ந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்று.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.