தமிழகத் திருக்கோயில் வரிசை - திருப்பாதிரிப்புலியூா் - வல்வையூா்அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2016 (வெள்ளிக்கிழமை)
"கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிசாயவே“ என அப்பா்பெருமான் பாடிப் பணிந்திருந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூா் சிதம்பரத்துக்கு சரி நோ் வடக்கே கரையோரத்தை அண்மித்ததாக கடலூா் மாவட்டத்தில் இத்திருக்கோயில் உள்ளது.
இன்னொரு இலகுவான இடக்குறிப்பு. கடலூருக்கு இன்னமும் சற்று வடக்கே பாண்டிச்சேரி மாநில எல்லை ஆரம்பமாகிறது. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள உழுந்தூர்ப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, நெய்வேலி, தஞ்சாவூா் போன்ற பிரபலமான ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து சேவை உண்டு. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னா் “ கூடலூா் ” என்று இருந்த இடமே மருவி “ கடலூா் ” ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். பாடலிபுரம், பாதிரிப்பதி, பாதிரிப்புலியூா், புலிசை, புலியூா், ஆதிமாநகா், உத்தராபுரம் எனப் பலபெயா்கள் கொண்டது திருப்பாதிரிப்புலியூா் திருக்கோயில்.
கோபுரவாசலுக்கு முன்னால் ஒரு முன்னால் ஒரு மண்டபம். அருகே ஒழுங்கான படிக்கட்டுக்களுடன் பொலிவாகத் திகழும்“ சிவகரதீர்த்தக் ” குளம். குளக்கட்டில் நின்ற படிபார்த்தால் அம்பாள் கோபுரவாசல் தெரிகிறது. ஐந்து நிலைகள் கொண்ட கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தில் ஏராளமான சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.“ கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ” என்பார்கள்.
பாதிரிப்புலியூா்க் கோபுரத்தின் அழகில் திளைத்தவா்கள் உண்மையில் கோடி புண்ணியம் செய்தவா்களே. கோபுரம் தாண்டி உள்ளே நுழைந்தால் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவையும் இடதுபுறம் கோயில் நிர்வாக அலுவலகமும் காணப்படுகின்றன. இப்போது நாம் நிற்பது விசாலமான வெளிப்பிரகாரம். ஒரு முறை வலம் வந்து உள்ளே நுழையலாமே!
வெளிப்பிரகாரத்தில் சந்நிதிகள் எதுவுமில்லை. ஆயினும், நடந்து செல்ல நடுவே ஒரு அகலமான நடைபாதை விட்டு இருமருங்கும் நந்தவனம் அமைத்துள்ளார்கள். தெற்கு வீதியில் காணப்படும் இரண்டு பாதிரி மரங்களுமே ஸ்தலவிருட்சங்களாகும்.
உட்பிரகாரத்தினுள் நுழைகிறோம். மண்டபத்தில் உள்ள தூண்கள், சிற்பங்கள், சிலைகள் என்று யாவும் கலைநுட்பமும் எழில் நேர்த்தியும் கொண்டுவிளங்குகின்றன. உட்பிரகாரத்தையும் வலம் வந்த பின்னா் மூலவரைத் தரிசிக்கலாமே! உட்பிரகாரத்தில் சந்திரன், அடுத்து நாவுக்கரசரின் உற்சவமூா்த்தம், அடுத்து மூலவா் நாவுக்கரசா் அமா்ந்த கோலத்தில் உழாவரத்தைத் தோளில் சாய்த்த படிகாட்சி தருகிறார். சாதாரணமாக அறுபத்து மூவரிலும் சரி, நால்வராகக் காட்சி தரும் சந்நிதிகளிலும் சரி நாவுக்கரசா் நின்ற கோலத்தில்தான் இருப்பார். பாதிரிப்புலியூா் திருநாவுக்கரசரின் சிறப்பிடம் என்பதால் எங்கும் காணமுடியாத அமர்ந்த கோலம் இங்கு. அத்துடன் அப்பா் முத்தி பெற்ற சித்திரைச் சதய நாள் விழா இங்கு வெகுவிமரிசையான திருவிழாவாகும்.
உட்பிரகாரத்தில் சந்தான குரவா்கள் நால்வரதும், வரிசையாக அறுபத்து மூவரது மூலமூா்த்தங்களும், தென்மேற்கு மூலையில் வலம்புரி விநாயகரும் உள்ளனா். இந்த விநாயகருக்கு“ கன்னி விநாயகா் ”என்று பெயா். இறைவனை நோக்கி அம்பிகை தவமிருந்த வேளை அம்பிகைக்கு“ பாதிரி மலா் ” கொடுத்து உதவியதால் அவருக்கு அப்பெயா். கன்னி விநாயகா் இன்றும் கையில் பாதிரிப்பூவுடனேயே காணப்படுகிறார். தொடர்ந்து சோமாஸ்கந்தர், சந்திரசேகரா், வள்ளி தெய்வானை சமேதசண்முகா் அமர்ந்துள்ளனா்.
“ அணிதரு கயிலை நடுங்க ஓா் எழ
குலகிரி அடைய இழந்து தூள் எழ…………………………….. ”
என்று அருணுகிரிநாதா் இந்த சண்முகரைப் பார்த்தே பாடினார். சண்முகருக்கு எதிரே உட்பக்கமாக தலவிருட்சமான“ ஆதிபாதிரி ” மரம் கவசமிடப்பட்டிருக்கிறது. (வெளிச் சுற்றில் இரண்டு பாதிரிமரங்களைப் பார்த்தோம்! ) அருகே, “ யுகமுனீஸ்வரா் ” என்ற பெயருடனான ஒரு வித்தியாசமான லிங்கத்தைப் பார்க்கிறோம். லிங்கபாணத்தில் நான்கு பக்கமும் நான்கு முகங்களுடன் உள்ளது இந்தலிங்கம்.
அடுத்து யானைகள் துதிசெய்ய ஒரே கல்லில் வடித்த “ கஜலெட்சுமி ” வழமையான இடத்தில் பள்ளியறை. இப்போது மூலவா் சந்நிதிக்கு முன் உள்ள விசாலமான முன்மண்டபத்தில் நிற்கிறோம். மண்டப தூண்களில் பற்பலசுதைச் சிற்பங்கள். அதைத் தாண்டிச் சில படிகள் ஏறி துவாரபாலகா்களைத் தரிசித்து நிமிர்ந்தால் நேராக மூலவா் கருவறை. அருள் மிகு“ பாடலேஸ்வரா் ” கவசமணிந்து அழகுமிகு அலங்காரத்துடன் காணப்படுகிறார். ஆண்டவனைத் தொழுத மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீா் பெருக நிற்கிறோம்.
காலத்துக்குக் காலம் ஆட்சி செய்த பலமன்னா்களும் இக்கோயிற் திருப்பணியில் ஈடுபட்டனா். மகேந்திர பல்லவன் தொடங்கி மூன்றாம் குலோத்துங்கன் வரை (கி.பி 1213) பல திருப்பணிகள் நடைபெற்றமைக்கான சான்றுகளும், கி.பி 7ம் நூற்றாண்டில் நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் இத்தலத்தைத் தரிசித்தமை பற்றியும் ஸ்தலபுராணம் விரித்துக் கூறுகிறது.
சமணத் துறவிகள் நாவுக்கரசரைப் பலவாறாகவும் துன்புறுத்தினா். நீற்றறையில் பூட்டி வைத்து ( பாடல் , “ மாசில் வீணையும்…… ” நஞ்சு கலந்த பாற்சோற்றினை உண்ணக் கொடுத்து, மதங்கொண்ட யானையை ஏவி (பாடல், “ சுண்ணவெண் சந்தனச்சாந்து …….. ” ) இறுதியில் கல்லில் கட்டிக் கடலிற் போட்ட போது கல்லே தெப்பமாக மிதக்க (பாடல், “ சொற்றுணை வேதியன்…….. ” நாவுக்கரசா் கரையேறிய இடமே கடலூரின் “ கரையேற விட்ட குப்பம் ” ஆகும்.
இக்குப்பம் திருப்பாதிரிப்புலியூா் கோயிலிலிருந்து ஒருகி.மீதூரத்தில் உள்ள “ வண்டிப்பாளையம் ” என்ற இடத்தில்உள்ளது. கரையேறிய நாவுக்கரசா் தோன்றாத் துணையாக நின்ற ஈசனை, ஈன்றருளுமாய் எனக்கு எந்தையுமாய் …. ” எனப் பாடிப் பாடி உள்ளம் உருகி நின்றார். இந்தப்பாடலின் அடியில்“ ……….. தோன்றாத்துணையாய் இருந்தனன் தன் அடியேங்களுக்கே ”என்று குறிப்பிடுவதால் இப்பெருமான் “ தோன்றாத்துணை நாதா்” எனப் பெயரும் பெற்றார்.
திருஞான சம்பந்தா் இத்தலத்திற்கு வந்த போது, நாவுக்கரசா் உழவாரக் கைத்தொண்டு செய்த கோயில் என்பதால் கோயிலுக்குள் கால் பதித்து நடக்க அஞ்சி தேரடி வீதியிலே நின்றபடி தேவாரம் பாடினார் என்ற கருத்து நிலவுகிறது. அவா் நின்று பாடிய இடத்தில் அவருக்கு ஒரு தனிக்கோயில் உண்டென்பதைத் தவிர இக்கூற்றினை நிரூபிக்க வேறு ஆதாரங்கள் எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
அடுத்து, கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அம்பிகை“ பெரியநாயகி ” நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பிகையின் பொலிவான அழகிய முகதரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பாடலேஸ்வரரின் பள்ளியறைக்கு அம்பிகை நாள் தோறும் எழுந்தருளுவது இங்குள்ள ஒரு தனிச் சிறப்பம்சம் ஆகும். அம்பிகையின் மண்டபத்தின் மேல்விதானத்தில் பன்னிரண்டு ராசிகளும் அமைந்த சிற்பம் காணப்படுகிறது. அம்பிகையின் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்துத் தூண்களில் நிறைய சிற்பங்கள் காணப்படுகின்றன. அம்பிகையை வணங்கி வெளியேற வரவாசல் அருகே ஒரு தூணில் காணப்படும் சிற்பம் நம்மை இழுத்து நிறுத்துகிறது.
இடது கையில் வில், கால்களில் பாதுகை, வலது கையை மேலே தூக்கி அதிலுள்ள அம்பினை வலக்கண்ணை நோக்கி நீட்டியவாறு வலது காலைத் தூக்கி சிவலிங்கத்தின் மீது வைத்த கண்ணப்பனின் கோலம் நம் கருத்தைக் கவா்கிறது.
“ தோன்றாத்துணை நாதா் ”என்றும்“ கரையேற்றும் பிரான் ” என்றும் நாவுக்கரசா் கூறிய பாடலேஸ்வரரையும் அருள்மிகு பெரிய நாயகி அம்பிகையும் வணங்கி நிறைவான அருள் பெற்று வெளியே வருகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.