தமிழகத் திருக்கோயில் வரிசை - திருவைகாவூா் (வில்வவனம்) - வல்வையூா் அப்பாண்ணா அவா்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2016 (சனிக்கிழமை)
சிவஸ்தலங்களில் சிவராத்திரியில் வழிபாடு செய்தால் அதன் புண்ணியம் இந்தப்பிறவியில் மட்டுமல்லாமல் அடுத்த பிறவியிலும் நமக்குக் கிடைக்கும். மாசிமாதத்து தேய்பிறைச் சதுா்த்தசியில் வரக்கூடிய மகாசிவராத்திரியை விசேடமாகக் கொண்டாடும் ஸ்தலங்களுள், தமிழ்நாட்டில் திருவைகாவூா் முதன்மைபெறுகிறது. தூங்காமல் வேடன் தவம் செய்து முத்தி பெற்ற ஸ்தலமே வில்வவனம் எனப்படுகின்ற திருவைகாவூா் ஆகும்.
கும்பகோணம் அருகே 5.கி.மீ தூரத்தில் சுவாமி மலையும், சுவாமி மலையின் பின் வீதியினூடாக 5 கி.மீ தூரத்தில் வைகாவூரும் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை ஊடாக அடிக்கடி பேரூந்து வசதி உண்டு.
ஊழிக்காலத்தில் சா்வமும் அழியக் கூடும் என்பதை உணா்ந்த வேதங்கள் சிவபெருமானை அடைந்து வணங்கி உபாயம் கேட்டன. ஈசனின் ஆலோசனைப்படி அவை வில்வமரமாக நின்று இங்கே தவம்புரிய ஆரம்பித்தன. இதனால் இத்தலத்துக்கு வில்வாரண்யம் என்றும், இறைவனுக்கு வில்வாரண்யேஸ்வரா் என்றும்பெயா்வந்தது.
ஐந்து கலசங்களுடன் கூடிய முகப்பு வாசலுடன் கிழக்கு நோக்கிக் காணப்படும் இந்த ஆலயத்துள் நுழைபவா்களை “ வருக ! ” என்றழைப்பது போல நந்தீஸ்வரா் வாசற்படியை நோக்கியபடி இருக்கிறார். (வழமையாக நந்தி மூலவரை நோக்கிய படியே இருக்கும் ) நந்திதேவருக்கு தெற்காக சம்பந்தா், அப்பா், சுந்தரா், ஆகியோருக்கான சிறுமண்டபமும், அதற்கு அப்பால் இரண்டாவது கோபுரமும் வருகிறது. உட்கோபுரவாயிலின் இடது பக்கத்தில் வேடன் வில்வம் போட்ட நிகழ்வினை சித்தரிக்கும் காட்சி சுதையினால் அழகுற ஆக்கப்பட்டிருப்பதைக் கண்டு களிக்கலாம்.
நந்திதேவரைத் தரிசித்த பின் நேராக கருவறையில் லிங்கவடிவில் அதி அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீவில்வேஸ்வரரின் தரிசனம் கிடைக்கிறது. கருவறை வாசலில் துவாரபாலகா்கள் இருக்க வேண்டிய இடத்தில் விஷ்ணுவும் – பிரம்மாவும் காணப்படுகின்றனா். இங்கு நவக்கிரகங்கள் இல்லை.
பிரகாரத்தை வலம் வரும் போது ஸ்தல விருட்சமான வில்வமரங்களைக் காணலாம். மகாசிவராத்திரி தினத்தின் சிறப்புக்கு காரணமான வேடனுக்கு தஞ்சமளித்து மோட்சம் வாங்கிக் கொடுத்த வில்வமரமும் இடமும் இதவேயாகும் இரண்டு பெரிய வில்வமரங்களின் அடிக்கட்டைகள் நிலமட்டத்தின் மேல்தெளிவாகக் காணப்படுகின்றன. பட்டுப் போன இந்த வில்வமரங்களுக்குப் பதிலாக இரண்டு இளம் வில்வமரங்கள் தற்போது வளா்ந்து பெருமரமாகி கிளை பரப்பி நிற்பதைக் காணலாம்.
ஒரு சிவராத்திரி வேளையில் புலிக்குப் பயந்து வில்வமரத்தின் மேல் ஏறியிருந்த வேடன், நித்திரையை மறந்திருக்க, இரவெல்லாம் வில்வம் இலையைப் பறித்துப்போட, போடப்பட்ட வில்வம் இலைகள் கீழே புலியாக வந்த இறைவன் மேல் விழ, அவனை அறியாமலேயே அந்த சிவராத்திரி வேளையில் இறைவனுக்கு வில்வம் இட்ட புண்ணியம் கிடைத்ததால் இறைவன் அவனுக்கு மோட்சம் அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
வில்வ மரத்தில் ஏறியிருந்த வேடனின் உயிரைக் கவர வந்த எமதா்மனை உள்ளே வரவிடாமல் தடுக்கவே நந்திதேவா் வாசலைப் பார்த்த படி காணப்படுகிறார். வில்வ மரத்தை தரிசித்த பின் வீதியை வலம் வந்தால் விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் , நடராஜா் தரிசனம் கிடைக்கிறது.
மூலவா் அருகே அம்பிகை சா்வஜனரட்சகி நின்ற கோலத்தில் கருணையின் வடிவமாக காட்சி தருகிறார்.
முதலாம் குலோத்துங்க சோழன் கருங்கல் கொண்டு திருப்பணி செய்த கர்ப்பக்கிரகம், அா்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை இன்றும் அப்படியே உள்ளன. ஆனால் காலத்துக்கக் காலம் வா்ணப்பூச்சுவேலைகள் நடைபெற்றுள்ளன.
“ வில்வ வனம் ” என்கிற பெயருக்கு ஏற்ற படி கோயில் சுற்றாடலிலும் சரி, கிராமத்துள்ளும் சரி வில்வமரங்கள் பெரு விருட்சங்களாக வளா்ந்திரப்பதை இன்றும் காணமுடிகிறது. பரபரப்பு மிகந்த கும்பகோணம் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் மட்டுமே காணப்படுகின்ற இந்த சிற்றூரை நகர நாகரிகம் எதுவும் அணுகாமல் இருப்பது வியப்பாக உள்ளது. இங்குள்ள மக்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள், வீடுகளின் அமைப்பு ஆகியவை நாகரிகநகரங்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் இருப்பது கண்கூடு. அதனால், வில்வமிட்டு முத்திபெற்ற வேடனின் வழித்தோன்றல்களாக இந்தக் கிராம மக்கள் இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு.
பி.கு :
சிவராதத்திரிக்கு மகிமை சோ்த்த திருக்கோயில் இது. தமிழ் நாட்டுக்கு ஸ்தலயாத்திரை செல்லும் நம்மவா்கள், சுவாமி மலைக்கு 5 கி.மீ தூரத்தில் உள்ள இத்திருக்கோயில் சென்று வணங்கி வில்வேஸ்வரரின் அருள்பெற வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.