பிரம்மஸ்ரீ கா.நீலகண்ட குருக்கள் (பிரம்மஸ்ரீ மனோகர குருக்களின் பேரனார்) சிவன் கோவிலின் பிரதம குருவாக இருந்த காலத்தின் (1930-1954) பிற்பகுதியில், மேற்கு வாசல் கோபுர வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாக “வரலாற்றில் வல்வெட்டித்துறை” நூல் (பக்கம்:30) கூறுகிறது.
அடியேனின் சிறுவயது நினைவுகளின் படியும், எனது வயதினைக் கொண்ட நண்பர்கள் ஒரு சிலரின் கூற்றுப் படியும் மேலைக் கோபுர வேலைகளின் ஆரம்ப காலம் 1954 அல்லது இரண்டொரு ஆண்டுகள் பிந்தியதாக இருக்கலாம் என்றே கொள்ள வேண்டியுள்ளது.
பிரபல வர்த்தகர் மறைந்த சி. நாகரெத்தினம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு, கோபுரத்தின் இரண்டு தளங்கள் வரை பூர்த்தியான நிலையில் பல்வேறு தடங்கல்களினால் இக் கட்டுமானப் பணிகள் நின்று போயின.
இந்த மேலைக் கோபுரத்தின் அடிப்பகுதி பொழி கற்களினாலும்(வெண் கற்கள்), மையக் கல்லும் மேலே பரவு கல்லும் கருங்கல்லினாலும், நிறைவு செய்யப்பட்டுள்ள இரண்டு தளங்களும் செங்கற்களினாலும் கட்டப்பட்டுள்ளன. இந்நாளில் சீமெந்துக் கலவை பயன்படுத்துவது போல அந்நாளில் சுண்ணாம்புச் சாந்து (சுண்ணாம்புக் களி) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இச் சுண்ணாம்புச் சாந்து எப்படி எடுக்கப்பட்டது?. சிவன் கோவிலின் தென்மேற்கு மூலையில் – ஆறுமுக ஜயர் மடம் அமைந்திருந்த (இப்பொழுது இந்த மடம் இல்லை. ஆனாலும் இடிபாடுகள் உள்ளன.) இடத்தருகே “காளவாய்” வைத்து சுண்ணாம்புச் சாந்து பெறப்பட்டது. சுண்ணாம்புச் சாந்து என்பது என்ன?. இடப்பெறுமதி கருதி சுருக்கமாகத் தருகின்றேன்.
செங்கல் சூளைகளில் இருப்பது போன்று துவாரம் வைத்து, புளியமரக் குற்றிகளை (புளிய மரம் தவிர வேறு மரம் எதுவும் இத்தேவைக்கு பயன்படாது). அடியில் வட்டமாகப் பரவி – அதற்கு மேலாக முருங்கைக் கற்களை அடுக்கி – இப்படியே நான்கு ஜந்து அடுக்குகள் பரவி – காற்றின் வளம் பார்த்து – துவாரத்தினுள்ளே அடியில் தீ மூட்டிவிட்டால், தீயானது சுடர் விட்டுப் பிரகாசித்து சுவாலை விட்டு பெருநெருப்பாக பல நாட்கள் தொடர்ந்து எரிந்து, சுண்ணாம்புக் கற்கள் வெந்து நீறாகி இறுகி அமர்ந்து சிறு குன்று போல சுண்ணாம்பு சேர்வதே “காளவாய் வைத்தல்” எனப்படுகிறது.
இப்படி உண்டாகிய சுண்ணாம்புக் கலவையை பல நாட்கள் ஆற விட்டு வெட்டி எடுத்து, சிவன் கோவில் எஞ்சின் கொட்டகையில் இருந்த சந்தானம் அரைக்கும் யந்திரத்தின் உதவியுடன் அரைத்துப் பெறும் களியையே செங்கற்களை ஒட்டப்பயன்படுத்தினார்கள்.
“எதற்கும் உரிய நேரம் வரவேண்டும்” என பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த வாசகம் சிவ கைங்கரியத்திற்கும் அப்படியே பொருந்தி வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏறக்குறைய 65 ஆண்டுகளின் பின்னர் விடுபட்ட இடத்திலிருந்து மீண்டும் மேலைக் கோபுர வேலைகள் ஆரம்பித்திருப்பது இதனையே காட்டுகிறது.
விகாரி வருடம் சித்திரை மாதம் 4 ஆம் நாள் (17-04-2019) உத்தர நட்சத்திரமும் அமிர்த சித்த யோகமும் கூடிய 06.15 – 07.00 வரையிருந்த சுபமுகூர்த்த வேளையில் மேலைக் கோபுர புனர் நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.
பொதுமக்களின் உபாயமாக - இன்னமும் மூன்று தளங்கள் அமைத்து பஞ்ச தள கோபுரமாக புதுப் பொலிவுடன் நிர்மாணம் செய்யப்பட இறையருள் கூடியிருக்கிறது.
ஆராலியைச் சேர்ந்த பாஸ்கரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர், கோவிற் சுற்றாடலிலேயே கோபுர புனர் நிர்மாண வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். பெருமட்டான பணிகள் நிறைவேய்தியதும், தமிழ் நாட்டிலிருந்து கைதேர்ந்த இரண்டு சிற்ப ஆசாரிகள் வரவழைக்கப்பட்டு கோபுரத்தின் பொம்மைகள் வைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகும்.
சிவன் கோவிலின் இராஜ கோபுரத்தை விட 1 அடி குறைந்ததாகவே மேலைக் கோபுர உயரம் அமையக் கூடியதான வரைபுகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி இக் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற 1 கோடியே 70 லெட்சம் ரூபா உத்தேச செலவினமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கோபுர பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், இக் கோபுர வாசல் திருவிழாக் காலங்களிலும், ஆனி உத்தரம் – மார்கழித் திருவாதிரை போன்ற விசேட தினங்களிலும் அடியார்களின் வசதிக்காக திறந்திருக்கும்.
எவ் வகையிலாயினும் வேலைகள் ஆரம்பமான காலத்திலிருந்து 10 மாதங்களில் (அதாவது தை மாதத்தில்)கோபுர கும்பாபிஷேகத்தினை நிறைவேற்ற முடியுமென பூரணமான நம்பிக்கை தெரிவிக்கிறார் கோவில் எசமான் ஸ்ரீ அவர்கள். இறை பணியில் பங்குகொள்ள விரும்பும் அன்பர்கள் எசமான் ஸ்ரீயுடன் 0778721609 எனும் தொலைபேசி இலக்கத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளமுடியும்.
அம்பாள் திருவிழாக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த நம்மவர்கள் சிலர் தாமாகவே முன்வந்து கோபுர புனர் நிர்மாணத்திற்கான பொருளுதவி புரிந்துள்ளனர். இன்னும் பலரும் தாமும் முடிந்தவரை உதவி செய்வதாகக் கூறிச் சென்றுள்ளனர். ஊரில் உள்ள பலரும் தம்மாலான அளவு நிதியுதவி புரிந்து வருகின்றனர்.
மேலைக் கோபுர நிர்மாணம் சம்பந்தமாக வெளியாகிய அறிவித்தலில் “தெற்கு வாசல் கோபுர வேலைகளும் விரைவில் ஆரம்பமாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதற்கான முஸ்தீபுகள் எதனையும் காண முடியவில்லை. காரணம்... 2020 இல் கோவில் பாலஸ்தானம் – கும்பாபிஷேகம் பற்றிய பேச்சு பரவலாக அடிபடுவதால் தெற்கு வாசல் கோபுர முன்னெடுப்புகளுக்கான எவ்வித அறிகுறியுமில்லை.
இதனை தெளிவுபடுத்த எசமான் ஸ்ரீ அவர்களிடம் வினாவியபோது அவர் தெரிவித்தலாவது:
“இந்த வருடமே பாலஸ்தானம் செய்வதற்கான எண்ணங்கள் இருந்தபோதும் – பல்வேறு காரணங்களால் அது அடுத்த வருடத்திற்கு (2020) தள்ளிப்போனது என்றும், 2020 பிரமோற்சவம் நிறைவெய்தியதன் பின்னர் பாலஸ்தானத்தைச்செய்து – அவ்வருடத்திலேயே அனைத்து வேலைகளையும் பூர்த்தியாக்கி, 2021தை மாதத்தில் கும்பாபிஷேகத்தினை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கிறது” என்று விபரம் தந்தார்.
எது எப்படியாயினும் திட்டமிடப்படுகின்ற அனைத்து காரியங்களும் இனிதே நிறைவு பெற எம்பெருமான் திருக்கருணையும் கடைக் கண் பார்வையும் வேண்டும்.
சிவநேசச் செல்வர்களே !
இப்பொழுது நம் கண் முன்னே ஆரம்பமாகியுள்ள மேலைக் கோபுர புனர் நிர்மாண வேலைகளில் நீங்களும் பங்கு கொண்டு – நிதியளித்து திட்டமிட்டபடி முழுமையாக நிர்மாணப்பணிகள் நிறைவு பெற ஒத்துழைப்பு வழங்கி எம்பெருமான் திருக்கருணைக்குப் பாத்திரமாகும்படி இவ்வடியவன் அன்போடு அழைக்கின்றான். விரைந்து செயற்படுங்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Balenthiran (Norway)
Posted Date: May 17, 2019 at 15:52
வணக்கம் கோயில் வங்கி இலக்கத்தை தெரிவித்தால் பலரும் காசு அனுப்ப வசதியாக இருக்கும்.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: May 17, 2019 at 03:38
மிகசிறப்பு ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.