நாம் எதிர்பார்க்காத கோணங்களில் நம்மிடம் ஏதோ ஒரு நினைவு அடையாளமாகத் தங்கி விடும். கால நீட்சிக்கும் அது ஒரு அழியாச் சித்திரமே. ‘லங்கா’ வுடனான உறவும் நினைவும் அப்படியான ஒன்றே. 1986 இல் அவரைச் சந்தித்ததாக நினைவு. அப்பொழுது லங்கா, யாழ்ப்பாண நகரில் ஸ்ரான்லி வீதியில் இயங்கிய முரசொலி பத்திரிகைக் காரியாலயக் கட்டிடத்தில் தங்கியிருந்து வணிக ரீதியான ஓவியப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். இடைக்கிடை தன்னார்வமாகத் தன்னுடைய ஈடுபாட்டுக்கேற்ற ஓவியங்களை வரைவதுமுண்டு. அன்றெல்லாம் இன்றையைப் போல நினைத்த மாத்திரத்தில் ஒரு பெயர்ப்பலகையையோ விளம்பரத்தட்டியையோ பனரையோ இல்லாவிட்டால் இந்த மாதிரி ஒரு வடிவமைப்பையோ செய்து கொள்ள முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும் அதைக் கைவினையினால்தான் செய்யமுடியும். மையினால் மெல்ல மெல்ல எழுதியோ வரைந்தோ இதைத் தயார் செய்வார்கள். கடினமான பணி. மழைக்காலங்களில் வேலை செய்வது அதை விடக் கடினம். இந்தப் பணிக்காக ஒவ்வொரு நகரிலும் ஏராளமானவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நகரில் ஒவ்வொரு பெயர்ப்பலகையையும் பார்த்துக் கொண்டு நடந்தால், ஒவ்வொருவரின் கைவண்ணங்களையும் காண முடியும். தங்கள் அடையாளங்களை முத்திரையாகப் பதிப்பதற்கு தாங்கள் எழுதுகின்ற அல்லது வரைகின்ற பலகைகளிலும் தட்டிகளிலும் தங்கள் பெயரைச் சிறிய அளவில் கீழே எழுதியிருப்பார்கள்.
ஏறக்குறைய அது ஒரு கையெழுத்துப்போலவே இருக்கும். இதையெல்லாம் சிறிய வயதில் எண்ணற்ற கற்பனைச் சிறகுகள் விரிய கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பேன்.சில பெயர்ப்பலகைகளில் ஆட்களை அல்லது சுவாமிப் படங்களை அப்படியே தத்ரூபமாக வரைந்திருப்பார்கள். வியப்பாகவே இருக்கும். இப்படி நான் பார்த்து அடையாளம் கண்டிருந்தார் லங்கா என்ற ஓவியர். ஆனால், அவர் எங்கே இருக்கிறார்? எப்படியான ஆள்? என்னவெல்லாம் செய்வார் என ஒன்றுமே தெரியாது. யாரிடம் கேட்டு அறிவது என்றும் தெரியவில்லை. இப்படியாக நான் தேடிக் கொண்டிருந்தவரிடம் எதிர்பாராமல் போய் முன்னுக்கு நிற்பதென்றால்!
நாங்கள் அங்கே சென்றது மதியத்துக்குப் பிந்திய பொழுதில். லங்கா சாப்பிட்டிட்டு வந்து படு பிஸியாக தன்னுடைய வேலையில் இருந்தார். அங்கே நாங்கள் செல்லும்வரையில் எனக்கு லங்காவிடம் செல்கிறோம் என்றே தெரியாது. என்னை அழைத்துச் சென்ற சின்னபாலா ஒரு போதும் நாங்கள் எங்கே போகிறோம்? என்று சொல்வதேயில்லை. அவரிடம் அதைப்பற்றிக் கேட்கவும் முடியாது. காலமும் அப்படித்தான். எதையும் வெளிப்படையாகப் பேசி முறையாகத்திட்டமிட்டுச் செய்ய முடியாமல் கெட்டுக் கிடந்தது. அவர் வண்டியை ஓட்டுவார். நாம் வாயை இறுகப் பொத்திக் கொண்டு பின்னே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.
மேலே மாடிப்படியேறிச் சென்ற பிறகுதான் ஓவியர் ஒருவரிடம் வந்திருக்கிறோம் என்று தெரிந்தது. அதுவும் லங்காவிடம். நாங்கள் செல்வதைக் கண்ட லங்கா, வாங்கோ வாங்கோ என்று அழைத்தார். மெலிந்த தோற்றம். ஆனால் நல்ல நிறம். ஒடுங்கிய அந்த முகத்தில் துருத்திக் கொண்டு பெரிய மீசை. துடிப்பாகவும் வேகமாகவும் பேசினார். எதையோவெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். நான் மூடியிருந்த வாயைத் திறக்கவேயில்லை. செவிகொள்ளாச் சொற்கள் என்று எதுவுமே இல்லை. அரசியல், தன்னுடைய வேலைகள் என்று நிறையப்பேசிக் கொண்டேயிருந்தார். எல்லாவற்றையும் கேட்டுக் கொணடேயிருந்தார் சின்னபாலா.
அப்பொழுது சின்னபாலா ஈழப்புரட்சி என்ற அமைப்பின் வெளியீட்டுப் பிரிவுக்கும் ‘பொதுமை’ என்ற பத்திரிகைக்கும் பொறுப்பாக இருந்தார். வெளியீட்டுப் பிரிவின் பணிகளில் நானும் ஒரு ஆள் என்றபடியால் என்னைக் கூடவே கூட்டிச் சென்றிருந்தார். அப்போது பத்திரிகை, சஞ்சிகை, நூலாக்கப்பணிகளில் ஓவியர்களின் பங்களிப்பே பெரிதாக இருந்தது. லங்காவிடம் நாங்கள் சென்றதும் அப்படியான ஒரு தேவைக்காகத்தான். லங்காவும் சின்னபாலாவும் வேலையின் விவரத்தைப் பற்றிப் பேசினார்கள். நான் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தேன். அதற்குப்பிறகு அந்த இடத்துக்கு தொடர்ந்து வரப்போவதும் லங்காவுடன் தொடர்ந்து வேலைகளைச் செய்வித்து வாங்கப்போவதும் நான்தான். ஆகவே என்ன நடக்கிறது என்று கவனித்துக் கொண்டிருந்தேன்.
அன்றைய சூழலில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த பல பத்திரிகைகளோடு லங்காவுக்குத் தொடர்பிருந்தது. முரசொலியோடு கூடுதல் பங்களிப்பிலிருந்தார் என்று எண்ணுகிறேன். ஏறக்குறைய அவர்களுடைய ஒப்பந்தம் செய்யப்படாத ஓவியப் பணியாளராக இருந்தார்.
‘லங்கா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் சிற்றம்பலம் இலங்கைநாதன் இப்படி அறிமுகமாகினாலும் பிறகு லங்காவுடனான உறவும் வாழ்வும் வேறு பல விதமாக அமைந்தது. அந்த நாட்களில (1986 – 1987); முல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களுக்கிடையிலான மணலாறு பிரதேசத்தை இலங்கை அரசு ‘வெலிஓயா’ என்ற பெயரில் துண்டாடி, அதைச் சிங்களப் பிரதேசமாக்குவதற்கு முயற்சித்தது. இதை எதிர்த்து ஒரு பிரசுரத்தை மணலாறு என்ற பெயரில் ஈரோஸ் வெளியிட்டிருந்தது. அதற்கான அட்டைப்படத்தை லங்காவே வரைந்திருந்தார். சித்திரா அச்சகத்தில் அந்தப் பிரசுரம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இதற்குப் பிறகு லங்காவுக்கும் எனக்குமிடையிலான தொடர்புகள் குறைந்து விட்டன. ஆனால், அவருக்கு யாழ்ப்பாணத்திலிருந்த எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவிருந்தது. எல்லாப் போராட்ட இயக்கங்களுக்கும் தன்னாலான பங்களிப்பைச் செய்து வந்தார் என்று மட்டும் தெரியும்.
இதெல்லாம் ஏதோ பழைய நினைவுகள் என்ற மாதிரி இருந்தாற்போல ஒருநாள் லங்காவை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பில் சந்தித்தேன். மொறாயஸ் என்ற மூக்குக் கண்ணாடிக் கடையில் லங்காவின் விளம்பரப் பெயரைக் கண்ட பிறகு விசாரித்தபோது, அவர் தங்களுடைய கடையோடுள்ள பகுதியிலிருந்தே வேலை செய்வதாகச் சொன்னார் மொறாயஸ். அந்த வழியில் சென்று லங்காவைக் கண்டேன். அப்பொழுது அவர் முள்ளியவளையில் இருந்தார். ஒரு மகன் போராளியாக விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார். ஆனால், அவரைப் பற்றிய சரியான தகவல்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஏகப்பட்ட கதைகள் வதந்திகளாகவும் தகவல்களாகவும் லங்காவுக்கு வந்து கொண்டிருந்தன. மகனைப்பற்றிய நினைவுகளில் அவரும் மனைவியும் கரைந்து கொண்டிருந்தனர். ஆனாலும் உற்சாகமாகக் கதைப்பார். தினமும் 15 கிலோ மீற்றருக்கும் கூடுதலான தொலைவுக்குச் சைக்கிள் மிதித்து வந்து தன்னுடைய வேலைகளைச் செய்து விட்டு, மீண்டும் அதேயளவு தொலைவுக்கு மாலையில் சைக்கிளில் செல்வார். காடும் புழுதியும் நிறைந்த பாதையில் மழைக்காலச் சேறு வேறு பெரும் தொல்லையாக இருக்கும். என்றாலும் அவர் சலித்ததில்லை. ஊரை விட்டு (யாழ்ப்பாணத்திலிருந்து – இளவாலையிலிருந்து ) வந்து முள்ளியவளையில் அகதியாக இருப்பவருக்கு வேறு உதவிகள் கிடையாது. என்பதால் லங்கா சைக்கிளோடித்தான் ஆகவேணும். எதையோ வரைந்தோ எழுதியோ தீரவேணும்.
ஒரு கட்டத்தில் லங்காவின் மகனைப்பற்றி அவர் எதிர்பாராத சேதி வந்தது. அது துயர்ச்சேதி. ஆனாலும் அவரால் அதை நம்ப முடியவில்லை. இன்றுவரை அவர் அந்தச் சேதியை நம்பாமல், புத்திரனையும் காணாமல்தான் உள்ளார். அது பெருங்கதை.
முள்ளியவளையில் லங்கா இருந்த காலத்தில் குறும்படங்களிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் நடித்தார். குறிப்பாக வானொலி நாடகங்களில் லங்காவின் குரலை எப்போதும் கேட்கலாம். அப்பொழுது நான் வெளிச்சம் இதழில் செயற்பட்டேன். அந்த நாட்களில் பிற கலைத்துறை வெளிப்பாடுகளையும் கலை பண்பாட்டுக்கழகம் நிகழ்த்திக் கொண்டிருந்தது. அதில் ஒன்று ‘இது சூடடிக்கும் காலம்’ என்ற நாடகம். இந்த நாடகத்தின் உருவாக்கத்தில் என்னுடைய பங்களிப்புக் கூடுதலாக இருந்தது. கண்ணுக்குப் புலப்படாத அரங்கு (ஐnஎளைiடிடந வுhநயவநச) என்பதால் இந்த நாடகத்தில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்று எளிதில் யாருக்கும் புலப்படாது. இதில் லங்காவின் பாத்திரம் எதிர்மறையானது. சிங்களவர்களைப் பற்றியும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சிற்றி பேக்கரி போன்று பேக்கரிகளை வைத்திருந்ததையும் பெருமிதமாகப் பேசும் பாத்திரம். லங்காவுக்கு உதவியாக இன்னொரு ஓவியரான ராஜன் நடித்தார். நாடகம் அரங்கிடப்படும் இடங்களில் லங்கா தூக்கலான குரலில் கடந்த காலத்தின் யாழ்ப்பாணச் சூழலைப்பற்றிப் பேசுவார். ‘எல்லா அமைதியையும் யுத்தம் குலைத்து அழித்து விட்டது. சும்மா, போராட்டம் போராட்டம் எண்டு சொல்லி எங்களை எல்லாம் அலைய விட்டதுதான் மிச்சம். ஒரு நல்ல பாணைக் கூட வாங்கேலாத அளவுக்குக் கொண்டு வந்து விட்டிட்டியள். வளர்த்த நாயிருக்கா? நட்ட பயிர் இருக்கா? கும்பிட்ட கோயிலிருக்கா? படிச்ச பள்ளிக்கூடமிருக்கா? கூடப் படிச்ச நண்பர்கள் இருக்கிறார்களா? எல்லாத்தையும் அழிச்சுப் போட்டு என்னத்தை மிச்சமாக வைச்சிருக்கப் போறியள்?’ என்று கடிந்து கொள்வார்.
இப்படிச் சொல்லும்போது சில இடங்களில் பார்வையாளர்கள் உள்ளுர லங்காவைப் பாராட்டுவதுண்டு. ஆனால் அநேகமான இடங்களில் லங்காவை எதிர்க்கின்ற பார்வையாளர்கள் அவரைத் தாக்கவே முற்படுவர். அப்படித் தாக்கியதும் உண்டு. ஆனால் பக்கத்திலே இருக்கிற அவருடைய நண்பராக நடிக்கும் ராஜன் நிலைமையைச் சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்து லங்காவைப் பாதுகாத்துக் கொள்வார். சில இடங்களில் இதையும் மீறி தாக்குல்கள் நடந்ததும் உண்டு. அந்தளவுக்கு நாடகத்தோடும் சூழலோடும் ஒன்றி நடிக்கும் நல்லதோர் கலைஞர் லங்கா. இந்த நாடகம் யுத்த நாட்களில் வன்னியின் பெரும்பாலான இடங்களில் நிகழ்த்தப்பட்டது. பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் லங்காவை தங்களில் ஒருவராக, யாரோ ஒரு வழியப்பயணியாகவே உணர்ந்திருந்தனர். ஆனால் அது ஒரு நாடகம் என்று ஒரு ஆண்டுக்குப் பிறகு யாரோ எழுதியபோதே லங்காவை அதில் நடிகராகப் பலரும் புரிந்து கொண்டனர்.
இப்படி ஓவியம், வானொலி நிகழ்ச்சிகள், குறும்படம், நாடகம் என்று பல தளங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்த லங்கா ஒரு நாள் சொன்னார், தம்பி நான் இஞ்ச இருந்து வெளிக்கிடப்போகிறேன் என்று. எங்கே போகப்போகிறீர்கள் என்று கேட்டேன். அவருடைய தாயும் தந்தையும் யாழ்ப்பாணத்திலிருந்தனர். ஆனாலும் அவர் அங்கே செல்லக்கூடிய சூழல் இல்லை. அதனால்தான் எங்கே போகப்போகிறீர்கள் என்று கேட்க வேண்டியிருந்தது.
தமிழ்நாட்டுக்குப் போகலாம் என்று யோசிக்கிறன் என்றார். சொன்னமாதிரியே குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து கடிதங்கள் வந்தன. பதில் எழுதினேன். இப்படியாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் லங்காவின் கலைத்துறை ஈடுபாட்டின் நிமித்தமாக அவரை சென்னையிலிருந்த சில நண்பர்களோடு அறிமுகமாக்கினேன். எல்லாம் கடிதங்களின் வழியாகவே. அப்படியான ஒரு அறிமுகத்தின் மூலமாக தங்கர்ப்பச்சானுடன் லங்காவுக்கு உறவு ஏற்பட்டது. அந்த உறவு தங்கர் பச்சான் பங்களிப்புச் செய்து கொண்டிருந்த படங்களில் லங்காவுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. பாரதி, அழகி போன்ற படங்களில் லங்கா நடித்தார். தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனாலும் ஓவியங்களிலும் செயற்பட்டுக்கொண்டிருந்தார். பிரதிமை ஓவியங்களில் லங்கா சிறப்பாகச் செயற்பட்டார்.
2014 இல் சென்னைக்குச் சென்ற போது லங்காவிடம் சென்றேன். பெரும் சந்தோசத்தில் மிதந்தார். இரவிரவாகப் பலதையும் பேசிக்கொண்டேயிருந்தோம். அவருடைய மூத்த புதல்வனைப்பற்றிய நினைவுகள் அப்படியே அவரில் புத்துருவாக்கத்துடன் இருந்ததைக் கவனித்தேன். அதன் அடியில் பெரும் புத்திர சோகம் படிந்து கிடந்தது. ஆனாலும் அதை அவர் காட்டிக் கொள்ளாமல் பேசிக்கொண்டேயிருந்தார். தான் வரைந்த ஓவியங்களையும் விலையான ஓவியங்களின் மாதிரிப் படங்களையும் காண்பித்தார். மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. அவருடைய மனதைச் சமனிலைப்படுத்துவதற்கு அவருக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. தன்னை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக் கொள்வதற்கு அந்த வழி உதவுகிறது.
என்றாலும் முதிய வயதில் தனித்துப்போயிருக்கும் பெற்றோரும் தகவல் என்ன என்றே தெரியாத புத்திரருமான ஒரு தத்தளிப்பின் நிழல் அவரை ஊடுவிக் கிடந்தது. அது தன்னைச் சிதைத்து விடக்கூடாது என்ற பிடிவாதத்துடன் வெறியாக இயங்கிக் கொண்டிருந்தார். சில குறும்படங்களிலும் நடித்திருந்தார். தீக்குச்சி என்ற படம் அதில் முக்கியமானது. பல விருதுகளைப் பெற்ற படம். அதில் தனியாள் பாத்திரமேற்றுச் சிறப்பாக நடித்திருந்தார். இதை விடத் தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றிலும் நடித்தார். இன்னும் பிஸியான ஆளாகவே இருக்கிறார் லங்கா. இப்பொழுது அவருக்கு வயது ஏறக்குறைய எழுபதை நெருங்கியிருக்கும். ஆனாலும் முதமை அவரை நெருங்கவேயில்லை. அதற்கு லங்கா அனுமதிப்பதுமில்லை.
அடிக்கடி தொலைபேசியில் அழைத்துப் பேசுவார். புதிய படங்கள், புதிய தொலைக்காட்சித் தொடர்கள், புதிய ஓவியம் என்று புதிய தகவலோடு பேசுவார். ஆச்சரியங்களையே உண்டாக்கும் விதமாக ஒவ்வொரு சேதியும் வரும். மகிழ்வும் பெருமையும் உண்டாக்கும் விதமாக அவருடைய குரல் துடிப்பாக இருக்கும். பிறந்த ஊரையும் தாய் நாட்டையும் விட்டுச் சென்று இன்னொரு நாட்டில் ( தமிழகத்தில்) வாழ்ந்தாலும் ஈழ நினைவுகளோடு வாழும் கலைஞர் லங்கா. எப்படியாவது நான் என் மண்ணில் வந்து திரும்பவும் ஓவியம் வரையவேணும். படஙகள் நடிக்க வேணும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆனால் அதற்கான காலம் எப்போது? சூழல் எப்படி அமையும் என்று தெரியவில்லை.
இன்று காலையிலும் சொன்னார், புதியதொரு தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்காக பொள்ளாச்சிக்குப் புறப்படுகிறேன். திரும்ப களத்து மேட்டுக்கு வர ஆறு நாட்கள் ஆகும் என்று. வாழ்த்துகள் என்று சொல்லி விடைபெற்ற போது என்ன, யாரோடு பேசினீர்கள் என்று கேட்டார் நெடுங்கேணியைச் சேர்ந்த நண்பர் ஒருவர். அங்கே பொறுப்பு மிக்க அரச அதிகாரியாக வேலை பார்க்கிறார். லங்கா என்றொரு ஓவிய நண்பரோடு பேசினேன. அவர் சென்னையில் சினமா, தொலைக்காட்சித்துறையில் இருக்கிறார் என்றேன்.
ஓ நம்மட லங்கா அண்ணனா என்று கேட்டார் அந்த அதிகாரி.
ஓம் உங்களுக்கு அவரைப்பற்றித் தெரியுமா? என்று கேட்டேன்.
நீங்கள்தான் அவரை 1998 இல் முள்ளியவளையில வைச்சு அறிமுகப்படுத்தியிருந்தீங்கள். மணலாறு (வெலிஓயா) என்ற புத்தகத்துக்கு அட்டைப்படம் வரைந்தவர் என்று. அவர்தானே என்று சொன்னார்.
போராட்டம். வடக்கு கிழக்கு இணைப்பு – பிரிப்பு. இராணுவ ஆக்கிரமிப்பு. சிங்களக் குடியேற்றம்.. அத்துமீறல். தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசம்… யுத்தம், இப்பெயர்வு. அகதி வாழ்க்கை. நாட்டை விட்டுப்போதல்…
இப்படி ஏராளம் எண்ணங்கள் மனதில் அலைமோதின.
மணலாறு… வெலிஓயா… லங்கா… இலங்கைநாதன்…
(2018 மார்ச் மாதம் எழுதிய கட்டுரை)
Karunakaran Sivarasa
Curtsy - Tamil Journalism
பிற்குறிப்பு
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தமிழகம் சென்னை கொட்டிவாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பன்முகக் கலைஞரான சிற்றம்பலம் இலங்கைநாதன் (லங்கா) அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று தனது 74 ஆவது வயதில் சாவடைந்துள்ளார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.