கடந்த செப்டெம்பர் மாதம் விடுமுறையில் நின்ற பொழுது, நண்பன் ஒருவன் IT யுடன் தொடர்புடையவன் – தான் தென்னை வளர்ப்பு பெரியளவில் செய்யத்தொடங்கியுள்ளதாகக் கூறினான். IT தொடர்புடைய பணி புரிபவன், U Turn அடித்து, மண்ணை கிண்டுகிறானே – ‘ஒரு தடவை போய்ப் பார்ப்போம்’ என்று போனேன்.
குறித்த தோட்டம் முகமாலை – கிளாலிக்கு நடுவில் அமைந்துள்ளது. ‘நிலம் அதிருது’ என்று கதைக்கு கூறுவார்கள். உண்மையிலேயே மிக அதிர்ந்த இடம் இது. இயக்கத்தினதும் இராணுவத்தினதும் பண்ட் (Bund) அமைந்த பகுதியில், சற்று இயக்க கட்டுப்பாட்டுப் பகுதியில் தோட்ட நிலம் அமைந்திருந்தது.
மண்ணால் ஆன தடுப்பணை
தோட்டம் பார்க்க சென்ற எனக்கு மிகவும் கிளர்ச்சியைத் தந்தது அங்கே இன்னும் எஞ்சியிருக்கும் போர்க்கால சுவடுகள் தான்.
நண்பன், அங்கே குடியிருக்கும் இன்னொருவருடன் தனது தோட்டம் மற்றும் அதனைச் சுற்றியிருந்த இடங்களை காட்டி விளங்கப்படுத்தி கொண்டு வந்தான். அந்த இன்னொருவர் முன்னாள் போராளி, ஆகவே நல்ல விளக்கம் கூடவே வந்து கொண்டிருந்தது.
.
குறித்த இடம், கூடுதலாக நாவல் மரங்களைக் கொண்ட பற்றைக் காடு எனக் கூறலாம். குடியிருப்புக்கள் என்று எதுவும் தென்படவில்லை.
அவ்வாறு சென்று கொண்டிருந்த பொழுது, ‘பண்ட்’ மேல் இருந்த நாவல் மரம் ஒன்றின் மேல் நான்கு இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். கூடவே வந்த முன்னாள் போராளி ‘என்னடா இங்கு என்ன செய்கிறீர்கள்’ என்றார். அதற்கு அவர்கள் ‘நாவல் பழம் பறித்து உண்ண வந்தோம்’ என்றார்கள். ‘உங்கள் வீடுகளுக்கு பக்கத்தில் பழம் இருக்க மினக்கட்டு இங்கு நாவற்பழம் உண்ண வந்தீர்களா’ என்று கேட்டு, ‘சென்றி பார்க்க வந்திருக்கிறார்கள்’ என்று ஏதோ திட்டிக்கொண்டே வந்தார்.
அங்கிருந்த விடயங்கள், குறிப்பாக இயக்கம் மண்ணால் அமைந்திருந்த நெடிய தடுப்பு அணைகள் (பண்ட்) எனக்கு வியப்பைக் கொடுத்திருந்ததால், அவர் திட்டிக் கொண்டு வந்ததை நான் பெரிதாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
‘மினக்கட்டு வந்துள்ளாய், மரப் பழமாக கொஞ்ச நாவற் பழங்களை பறித்துக் கொண்டு செல் என்றான் நண்பன். "Genetically modified" பழங்களையே அதிகம் சாப்பிட்ட நான் ‘கொஞ்சம் அல்ல அதிகம் எனக்கு தேவை, ஆகவே வீடு போய் மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு பை எடுத்துக் கொண்டு வந்து பறிப்போம் என்றேன்.
திரும்பி வந்து சாப்பிட்டு விட்டு, சுமார் 1 மணித்தியாலத்தில் மீண்டும் ஏற்கனவே சென்ற பாதை வழி (மாறிப் போனால் மைன்ஸ் தான் காலில் தட்டுப் படலாம் என்றார்கள்) நாவற் பழங்கள் பறிக்க சென்றோம்.
சுவை பார்த்து வெவ்வேறு மரங்களில் நாவற் பழங்களை பறித்துக் கொண்டு சென்றோம். ஒவ்வொரு மரத்தினது பழங்களும் வடிவிலும் சுவையிலும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டிருந்தன.
நண்பனும் முன்னாள் போராளியும் -
இதை அண்மித்துதான் மணல் மயமானது
அவ்வாறு பழங்களை பறித்துக் கொண்டு, முன்னர் சென்ற வழியால் சென்று கொண்டிருந்த பொழுது, எமக்கு முன்னால் சென்ற முன்னாள் போராளி ‘பார் கும்பியைக் அள்ளி விட்டார்கள்’ என்றார்.
அப்பொழுது தான் வியப்புடன் பார்த்தேன், முன்னர் அந்த நால்வரும் அமர்ந்திருந்த மணல் கும்பி காணாமல் போயிருந்தது. இதுவரை இருந்த நெகிழ்ச்சி, கிளர்ச்சி, நாவலின் சுவை எல்லாம் மறைந்து, இப்பொழுது காணாமல் போன மண் கும்பி தான் என் கண் முன் வந்தது. நம்பவே முடியவில்லை. வெறும் ஒரு மணி நேரத்தில் திருட்டுத் தானமாக நடந்து முடிந்து விட்டது.
விவரம் கேட்ட பொழுது தான் ‘டிப்பர் ஒன்று வந்து மண்ணை அள்ளி சென்று விட்டது என்றும், முன்னர் இருந்த நால்வரும் அதற்கு துணை புரியவும் சென்றியாகவும் இருந்தார்கள்’ என முன்னாள் போராளி கூறினார். இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால், இது போல் சம்பவங்கள் இது போன்ற இடங்களில் இடம்பெறுவது வழமை என்றார்.
விவரம் புரிய, அணையை (Bund) இப்பொழுது உற்றுநோக்க, பல இடங்களில் மண் அள்ளப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிந்தது.
‘ஏன் இதுபற்றி ஒருவரும் முறைப்பாடு செய்வது இல்லையா’ என்று கேட்க ‘செய்கிறார்கள்’ என்றார்.
கெலிகொப்டர்கள் மூலம் கூட ‘மணற் கொள்ளை இடம்பெறுகின்றதா’ என்று இப்பகுதியில் பார்க்கப்படுவதாக சிலர் கூறினார்கள். அப்படியும் கட்டுப் படுத்த முடியவில்லை.
ஆங்காங்கே மணல் அள்ளப்பட்டுள்ள நிலையில் உள்ள தடுப்பணை
இப்பகுதிகளில் பல வீடுகளில் புதிய மணல் அள்ளும் டிப்பர்களைக் காணக் கூடியதாகவுள்ளது. மணல் டிப்பார்களாக மாறியுள்ளது போலும்.
நேற்றைய பத்திரிகைகளில் தலைப்பு செய்தி ‘படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கிளாலியில் இளைஞர் உயிரிழப்பு’. துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் நான் மேலே கூறப்பட்டுள்ள அதே விடயத்தை முற்றிலும் ஒத்தது தான். அதாவது திருட்டு மணல், சென்றி, ஓட்டம்........................
‘படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கிளாலியில் இளைஞர் உயிரிழப்பு’
‘சட்ட விரோத மணல் மாபியாக்களால் நாசமாக்கப்படும் முல்லைத்தீவு பேராறு’
‘மணற் காட்டில் மீண்டும் பாரிய மணற் கொள்ளைக்கு ஆத்திவாரம்’
இவை மூன்றும் நேற்றைய தினக்குரல் பத்திரிகையில் மணல் பற்றி வந்த செய்திகள்
இது போன்று தினக்குரல் பத்திரிகையில் அடிக்கடி மணற் கொள்ளை பற்றி செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் பிரசுரிக்கப்பட்டிருந்த இவ்வாறானதொரு இன்னொரு செய்தி;
‘திருட்டு மணல் அகழ்வால் கடல் நீர் உட்புகுந்தது, மேலும் கடல் நீர் உட்புகா வண்ணம் பொதுமக்களால் தற்காலிகமாக மண் மூட்டைகள் அமைப்பு’.
கொடுமை - கடல் நீர் உட்புகும் அளவுக்கும் சட்ட விரோத மண் அகழ்வு மிகக் கொடுமை – சம்பந்தபட்டவர்களால் நிரந்த தீர்வின்றி, ‘பொதுமக்களால் தற்காலிகமாக மண் மூட்டைகள் அமைக்கப்பட்டுள்ளமை’.
ஏராளமான நாடுகளில், ஏன் தலைநகர் கொழும்பில் கூட, Reclamation எனும் பெயரில் நீர்ப் பிரதேசங்களில் மண்ணை நிரப்பி நிலத்தை பெருப்பித்து வருகிறார்கள்.
யாழ்பாண நிலப்பரப்பானது ஒப்பீட்டு ரீதியில் வளங்கள் குன்றிய ஒரு பிரதேசம் ஆகும். ஆழமாக உற்று நோக்கினால், ஆராய்ந்தால் இது புலனாகும். பல மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போல் வளங்கள் மிகக் குறைந்த என்று கூறாமுடினும் – இருக்கும் வளங்களை சரிவர பாதுகாக்க தவறினால் – எதிர்காலத்தில் இவற்றுக்கு நிகராக வந்துவிடும் எனலாம்.
யாழ்ப்பாண பிரதேசம் ஆனது, யாழ்ப்பாண மக்கள் போல் சிக்கலான ஒரு நில அமைப்பை கொண்டமைந்தது.
மக்கள் வாழும் பெரும்பாலான இடங்களில், கடலில் இருந்தான நில மட்டத்தின் உயரம் (Elevation) - ஒரு சில மீட்டர்கள் தான்.
யாழ் மாவட்டத்தின் பெரும் பகுதி நீரேரிகளால் (Lagoons) அமையப்பெற்றது. இங்குள்ள அனேகமானவரை பொறுத்தவரை இவை ‘உருப்படாத நிலப் பகுதிகள்' தான்.
இவற்றின் ‘Elevation’ சென்றி மீட்டர்களிருந்து மீட்டர் வரை தான். இங்குள்ள நீர் ‘Dock water’ எனப்படும். அதாவது Density 1.000 ஆகவுள்ள நன்னீருக்கும், Density 1.025 ஆகவுள்ள கடல் நீருக்கும் இடைப்பட்ட தன்மையைக் கொண்டமைந்த நீரைக் கொண்டமைந்தவை ஆகும். இதை நன்னீராக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவ்வப்போது கூறப்பட்டாலும், இது சம்பந்தமான செய்திகளை அடிக்கடி காண முடியவில்லை. இவற்றை மறந்து எங்கு பார்த்தாலும் சுமந்திர அரசியலைத் தான் செய்திகளாகக் காண முடிகின்றது.
‘30 வருடத்தில் புலிகள் ஆயுதப் போராட்டம் மூலம் சாதிக்க முடியாததை நாங்கள் வெறும் 22 MP க்கள் கொண்டு எப்படி சாதிக்க முடியும்’ என்று கடந்த 8 வருட அரசியல் வாழ்வில் கூறுபவர்கள் – அரசியலைப் போக்குக் காட்டி இவை போன்ற மிகவும் பாரதூரமான பிரச்ச்னைகள் மறைத்து விட்டார்கள். தவறு அவர்களிடம் இல்லை. மீண்டும் இவர்களையே தெரியப் போகும் வடக்கு வாழ் மக்கள் மீது தான்.
வடக்கு அரசியல்வாதிகளில் இவை பற்றி புரிந்துணர்வுள்ள ஒரே நபர் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஐங்கர நேசன் ஒருவர் தான். பொதுமகன் தரப்பில் என்றால் ‘நான் மட்டும்தான் போல் போன்றதொரு பிரமை’ எனக்கு.
மண் ஆனது நீரை தேக்கி வைப்பது, அதனூடு மரங்களை வாழ வைப்பது. திட்டமிடாது மண்ணை அகழ்வாதால், சமநிலை குழம்பி மரங்களும் அழிவடைந்து, நீர் பிரச்னையும் தோன்றும். கடந்த சில நாட்கள் தென் கொரியாவில் தங்கியிருந்தேன், சுற்றிப் பார்க்க நல்லதொரு வாய்ப்பு. மண் வளம், நீர் வளம், மர வளம் – அப்பாடா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என்னவொரு திட்டமிடல்
யாழ்ப்பாணத்துகாரரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது மிகக் கடினம். (இது வாக்களிப்பதுக்கும் பொருந்தும்). எனக்குத் தெரிய சீமெந்திலான கொன்கிரீட் கற்கள் கொண்டு இன்றும் வீடு கட்டுபவர்கள் இவர்கள் தான். இதனால் தான் மண்ணின் தேவை தேவைக்கு மேல் உள்ளது.
தலைநகர் கொழும்பு உட்பட நான் பார்த்த எல்லா பெருநகர்களிலும் உயர் மாடிக் கட்டடங்களுக்கு கூட செங்கற்களைத்தான் பாவிக்கிறார்கள். தென்னிலங்கையைப் பொறுத்தவரை யாழ்பாணத்துக்கு தேவையான செங்கற்களை கொடுக்கக் கூடிய வளம் உண்டு. அவ்வாறு செங்கற்களைப் பாவித்தாள் வளங்களின் சமநிலையும் பேணப் படும்.
இங்குள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் மட்டத்தில் இவைபற்றி ஒரு ஆய்வு செய்திருக்கப்படவேண்டும். செங்கற்களை பாவிப்பதை ஊக்கப் படுத்தியிருக்க வேண்டும் – எல்லாமே Absence.
(சமாதான காலத்தில் இயக்கம் தென்னிலங்கையில் இருந்து வரும் சகல பொருட்களுக்கும் கடுமையாக வரி விதித்தார்கள். ஆனால் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட மரங்களுக்கு வரி விதிக்கவில்லை என்றார்கள் – ‘தங்களின் வளங்களை தக்க வைத்தல் என்னும் கோட்பாடு’. இதைத் தான் இன்று பல செல்வந்த நாடுகள் செய்கின்றன. அமெரிக்காவில் எண்ணை வளம் உண்டு, ஆனால் அமெரிக்க மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றது.
யாழ் பத்திரிக்கைகளில் அடிக்கடி இடம்பெறும் இரண்டு பிரதான தொடர் பிரச்சனைகள் - ஒன்று கஞ்சா, அடுத்தது மணற் கொள்ளை .
செல்லடிபட்டு தப்பித் பிழைத்த ஒரேயொரு தென்னை
கஞ்சா அளவுக்கு மக்கள் மண் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஏன் என்றால் மண் எல்லோருக்கும் தேவை, எனக்கும் தான்.
மணல் பல நாடுகளுக்கு பிரச்சனையான ஒரு விடயம். சிங்கப்பூர் கடல் வழி இந்தோனிசியாவிலிருந்து மண்ணைத் தருவிக்கின்றார்கள்.
சீனாவின் நிம்போ என்னும் பகுதியில் மண் தேவை என்றால், ‘கடலில் போய் தோண்டி எடுங்கள்’ என்று விட்டுள்ளார்கள். (ஒரு முறை அவ்வாறு மண் அகழும் பகுதி வழி நுழைந்து துறைமுகம் சென்றோம். திரும்பும் பொழுது அவ்வாறு மண் எடுப்பவர்கள் செய்த ஏதோ ரகளை காரணமாக கப்பல் உள்ளுக்குள்ளேயே ஒரு நாள் நங்கூரம் இட்டு தங்க வேண்டியிருந்தது
சில வருடங்கள் முன்பு நான் வீடு கட்டும் பொழுது மேத்திரியிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன் – ‘செங்கற்கள் எடுக்கின்றேன்’ என்று. ‘அது உறுதியாக இருக்காது’ என்று மேத்திரியார் அடியோடு மறுத்து விட்டார். கடைசி ஊரோடு ஒத்துப்போக வேண்டி வந்துவிட்டது.
தென்மராட்சி, மற்றும் வடமராட்சி கிழக்கின் உட்பகுதிகளுக்கு சென்றால் ஏராளமான இடங்களில் அத்து மீறிய கட்டுப் பாடற்ற மணல் அகழ்வுகளைக் காணலாம்.
அன்று அவ்வாறு தென்னம் தோட்டத்தைப் பார்க்கச் சென்ற எனக்கு இன்றும் அடிக்கடி நினைவில் வந்து போகும் சம்பவம் அந்த மாய மணல் சம்பவம் ஒன்று.
இன்னொமொன்று,
அங்கிருந்த ‘யுத்த கால எஞ்சிய சுவடுகள்’. உள்நாட்டு யுத்ததில் அதிகப் பேசப் பட்ட இடங்களில் ஒன்று முகமாலை. பேச்சு, எழுத்தை என எல்லாவற்றையும் தாண்டி அப்பகுதியை (முகமாலை – கிளாலி), ‘யுத்தம் அதிர வைத்துள்ளது’ என்பதை அங்கு சென்றால் காண முடியும்.
சிதைந்துள்ள பதுங்கு குழிகள், சீருடைகளின் எச்சங்கள், துப்பாக்கி சன்னங்கள், செல் துகள்கள், நீளமானமண்ணாலான தடுப்பணைகள் (பண்ட்), கண்ணி வெடி உள்ள பகுதிகள் என - ஒரு வித்தியாசமான சூழலில் நின்ற – மனதை விட்டகலாத விடயம்.
வெறும் 1 மீட்டர் தர 1 மீட்டர் நிலப் பகுதியை சற்றே தோண்டிப் பார்த்தால் ஏராளமான செல் மற்றும் சுடப்பட்ட சன்னங்கள்.
நிலக்கீழ் பங்கர் ?
அடர்ந்த மரங்கள் நடுவே நிலைத்திலிருந்து சுமார் 1 மீட்டர் உயரத்தில் பாம்புப் புற்று போல் ஒரு சிதைந்த அமைப்பு இருந்தது. ‘அது அநேகமாக கட்டளை இடுபவர் பாவித்த நிலக்கீழ் பங்கர்’ என்றார் முன்னாள் போராளி.
இயக்கத்தின் பண்டுக்கு அப்பால் இராணுவம் நிலை கொண்டிருந்த பகுதிக்கு போக முடியவில்லை. ஏனெனில் ‘அது இப்பொழுதும் கண்ணி வெடி அகற்றப் பட்டுக் கொண்டிருக்கும் பிரதேசமாம்’.
உலக அதிசயங்களான பிரமிட், சீனப் பெருஞ்ச் சுவரை இருமுறை பார்த்து விட்டேன். சக மாலுமிகளுடன் ஒப்பிடும் சரசரிக்கு மேல் பல இடங்களைப் பார்த்து விட்டேன். அவற்றை மீண்டும் பார்க்க முடியும். மாற்றமின்றி அவ்வாறே அவை இருக்கும்.
போரின் சுவடுகள் தவிர, பறித்து உண்ண நாவல் பழங்கள், மயில், குயில் எனப் பறவைகள், மரங்கள், மிருகங்கள் என ஒரு ரம்மியமான சூழல்.
குண்டுகளைத் தாங்கிய எஞ்சிய கட்டிடம்
அன்று அவ்வாறு நான் பார்த்த அந்த முகமாலை – கிளாலி பிரதேசம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. என்னோடு மிகவும் நெருங்கிப் பழகுபவர்களிடம் – ‘இந்த இடத்தை ஒரு முறை போய் பாருங்கள்’ என்று கூறிவருகின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: June 24, 2020 at 02:39
நாவல் பழம் மனதுக்கு இனிப்பாக இருந்ததாலும்
சட்டவிரோத மணல் கொள்ளை மிகுந்த வேதனையாகவும் இருக்கின்றது. ஒரு பக்கம் இயற்கை வளங்களை கொள்ளையிடுகிறார்கள் இன்னொரு பக்கம் கஞ்சா பவுடர் போன்ற சமூக விரோதிகள் செயல் பாடுகள் அதிகரிப்பு. தெளிந்த பார்வையும் இல்லை தூரநோக்கற்ற நேர்மை இல்லாத அரசியல் அயோக்கியர்கள் .மொழியின் மேலும் மண்ணின் மேலும் மக்களின் நலனிலும் அக்கறை உள்ள உண்மையான உலப்பூர்வமான அரசியல் தலைவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.