ஆதவன் பக்கம் (63) - ஸ்டாலினின் நிவாரணப் பொருட்களும், தேவானந்தாவின் யோசனையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2022 (சனிக்கிழமை)
‘கப்பலில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் பொருட்களை காங்கேசந்துறையில் இறக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி’ என்ற அவர் கட்சி சாரந்த நண்பர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் இரு தினங்கள் முன்பு ஒரு குறிப்பை பார்த்தேன்.
பத்திரிக்கைகளில் இது பற்றிய செய்தி ஒன்றும் வரவில்லை. ஆனால் குறித்த குறுஞ்செய்தியை பதிவு செய்தவர் ஈ.பி.டி.பி ஆதரவாளர் என்ற வகையில் செய்தி நம்பகமானது என எடுத்துக் கொள்ளலாம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 'இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்ப உள்ளதாக' கடந்த சில வாரங்கள் முன்பு அறிவித்திருந்தார்.
84 வயது பழுத்த அரசியல் பழம் சம்பந்தனில் இருந்து, தற்பொழுது அரசியலில் சாகசம் செய்து வரும் சாணக்கியன் வரை – இந்த விடயத்தை வைத்து அரசியல் செய்யத் தவறி விட்டார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வர்கள், 'தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்' என்று அறிவித்தவுடனேயே 'பொருட்களை காங்கேசந்துறைக்கு தான் அனுப்ப வேண்டும்' என்று தமிழ் அரசியல் வாதிகள் கேட்கத் தவறிவிட்டார்கள்.
தொப்புள் கொடி உறவு எனும் அரசியற் பதத்துக்கு அப்பால், தமிழகம் அதாவது சென்னைக்கு அண்மையாக அமைந்து இருப்பது காங்கேசன்துறை துறைமுகம் தான். இந்த ஒரு காரணமே போதும், இங்குதான் பொருட்கள் அனுப்பப்படவேண்டும் என்று கேட்க.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து தற்போதைய ஆட்சியாளர்களின் நாடியை திறம்பட பிடித்துப் பார்த்து இருந்திருக்கலாம். 'திறப்போம்', 'திறப்போம்' என்ற காங்கேசன்துறை முகத்தை திறப்பதற்கு மனம் வைத்துள்ளார்களா என்றாவது தெரிந்து கொண்டிருக்கலாம்.
தூரநோக்கு அற்ற தன்மை, குறைந்த பரந்தபட்ட அறிவு என பல குறைபாடுகளுடன் உள்ளவர்கள் தமிழ் அரசியற் வாதிகள். கிடைத்த ஒரு அரிய சந்தர்பத்தை தவறவிட்டுவிட்டார்கள்.
அரசியல்வாதிகள் தான் மறந்து விட்டார்கள் என்றால்,
பத்திரிக்கைகள், பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புக்கள், பல்கலை விரிவுரையாளர்கள், பொருளியலாளர்கள், பாதிரியார்கள், வேலன் சுவாமிகள், முகநூல் போராளிகள் என கூக்குரல் போடும் அனைவருமே இதுபற்றி சிந்திக்க தவறியது – சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல என எத்தனை பேருக்கு விளங்கும் என்று தெரியவில்லை.
ஸ்டாலின் முதலில் 'தமிழர் பிரதேசங்களுக்கு தான் நிவாரணப் பொருட்கள் 'என்று தான் அறிவித்திருந்தார்.
'நிவாரணப் பொருட்களை தமிழர் பிரதேசங்களுக்கு மட்டும் என்று வரையறுக்காமல், முழு இலங்கை மக்களுக்கும் என அனுப்ப முடிவு எடுக்கவேண்டும்' என எம்.பி சுமந்திரன் அறிக்கை ஒன்றை விட்டிருந்தார்.
ஸ்டாலின் அவர்கள் அரசியற் கோளாறனால் இவ்வாறு கூறியிருந்தாலும் – அதாவது தமிழர்களுக்கு மட்டும் என்று கூறி இருந்தாலும் – முழு நாடும் பாதிக்கப்பட்டு இருக்கும் போது – ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் நிவாரணப் பொருட்களை அனுப்புவது என்பது சாத்தியப்படாத ஒன்று. இறுதியில் இன்று பொருட்கள் முழு இலங்கை மக்களுக்கு என்றே அனுப்ப படுகிறது. இதுதான் நடைமுறைச் சாத்தியமான விடயம்.
ஆக மொத்தத்தில் எம்.பி சுமந்திரன் 'முதல்' போடாமல் 'இலாபம்' எடுத்து விட்டார்.
ஒருவரை பார்க்கிறோம் என்றால் முதலில் அவரின் முகத்தைதான் பார்ப்போம், அதுவும் இரு கண்களை. அதுபோல் தான் ஒரு நாட்டின் ஒரு பிரதேசத்தின் இரு கண்கள் தான் விமான நிலயமும், துறைமுகமும்.
எங்கள் இரண்டு கண்களும் நீண்ட காலமாக மூடப்பட்டுத்தான் உள்ளன.
2009 ற்குப் பின்னர், 'எமக்கு இனி உள்ளவை கல்வி கட்டமைப்பும், பொருளாதார வளர்ச்சியும் தான்' என்றார்கள். பாம்பு அட்டை விளையாட்டில் ஏனியும், பாம்பும்தான் ஞாபகம் வருகின்றது.
பொருளாதாரக்கு அடிப்படையே விமான நிலையமும், துறைமுகமும் தான்.
பல இராணுவப் புரட்சிகளை எடுத்தப்பார்த்தால் தெரியும், முதலில் இராணுவத்தினர் கையகப்படுத்துவது இவை இரண்டையும் தான்.
இதனால் தான் 2008 இல் இயக்கத்தின் விடத்தில் தீவு, 2009 இல் சாலை மற்றும் இரணைமடு இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட போது மிகவும் வெற்றிச் செய்தியாக பறைசாற்றப்பட்டன. எம்மில் பலர் அந்த்ச் செய்திகள் கேட்டு நொந்து போயிருந்தார்கள்.
பலாலியும், காங்கேசந்துறையும் குளிரூட்டியில் வைக்கப்பட்ட நிலையிலேயே இன்றும் இந்தப் பிரதேச மக்களை பொறுத்தவரை உள்ளன. அவ்வப் போது தமிழ் அரசியல் வாதிகள், குளிரூட்டியின் கதவைத் திறந்து அவை நல்ல மாதிரி உள்ளனவா என்று மட்டும் பார்த்துக்கொண்டு உள்ளார்கள்.
நான் ஒரு அரசியல் வாதியாக இருந்திருந்தால் எனது இரண்டு கண்களைத்தான் முதலில் திறக்க முயற்சித்து இருப்பேன்.
தாமதம் என்றாலும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் அறிவிப்பு நான் மிகவும் எதிர்பார்த்த ஒன்று.
ஆனாலும் இது (அதாவது தமிழகத்திலிருந்து நேரடியாக காங்கேசந்துறைக்கு நிவாரணப் பொருட்கள்) என்பது நடைபெறப் போவது அல்ல என்பது அமைச்சர் தேவானதாவுக்கும் புரியாவிட்டால், அரசியலில் இவரும் பயணிக்க வேண்டிய பாதையும் பெரிது தான்.
பிந்தைய செய்தி - 'அமைச்சர் டக்ளசின் முயற்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் பச்சைக்கொடி ' யாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.