1995 ஆம் ஆண்டு வல்வைக் கல்வி மன்றத்தில் இடம்பெற்ற ஒரு துன்பவியல் சம்பவமே, ரகு இயக்கத்துக்கு செல்வதற்கு காரணமாக அமைந்தது.
ஏற்கனவே கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ‘அக்காச்சி’க்கும், எங்களுக்கும் பேரிடியாக அமைந்திருந்தது இந்தச் சம்பவம்.
அம்மாவின் நான்காவது சகோதரி தான் ‘அக்காச்சி’. அக்காச்சிக்கு பின்னர் 6 சகோதரங்கள். இவர்கள் 6 பேரும் ‘அக்காச்சி’ என்று அழைத்ததையே, பின் நாட்களில் பெறாமக்கள் ஆகிய நாமும் ‘அக்காச்சி’ என அழைக்கலானோம்.
அக்காச்சி செய்து கொண்டது கலப்பு திருமணம். கணவர் (சித்தப்பா) கொம்மந்தறையைச் சேர்ந்தவர். கலப்பு திருமணம் என்றாலும் இருவர் பகுதியிலும் சண்டை சச்சரவுகள் இடம்பெற்ற மாதிரி எனக்கு நினைவில்லை. என் நினைவுக்கு எட்டியவரை சித்தப்பா மிகவும் பண்பான நல்ல ஒரு மனிதர். பெறாமக்கள் ஆகிய எங்களைக் கூட ஒருபோதும் ஒருமையில் அழைத்தது இல்லை.
துரதிஷ்டம். பின்னாளில் குடும்பத்தை விட்ட, நாட்டை விட்டு நிரந்தரமாகவே பிரிந்துவிட்டார்.
இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனிமரமாக நின்ற அக்காச்சிக்கு இருந்த ஒரே ஆறுதல் மகன் ரகு தான்.
இயக்கத்துக்கு செல்லும் வரை இயக்கம் பற்றி சிந்திக்காதவன் ரகு. காரணம் படிப்பில் கவனம். ஹாட்லியின் மைந்தன். ஹாட்லியில் கற்பவர்கள் வடமராட்சியில் தெரிந்தெடுக்கபட்ட மாணவர்கள். ஆதலால் கிட்டத்தட்ட எல்லோரும் படிப்பில் சராசரிக்கு மேல் என்றாலும், வகுப்பில் முதன்மையாக திகழ்ந்தான் ரகு.
எனக்கு ஆங்கிலம் (பேச) வராத டீன் ஏஜ் காலத்தில், ஒரு நாள் ரகுவுக்கும் இளையதங்கை ரஞ்சசனிக்கும் சிறு சண்டை வர, ‘I will kill you’ என்று கூறினான். என்னை அண்ணார்ந்து பார்க்க வைத்தது அந்த விடயம்.
10 பிள்ளைகள் கொண்ட அம்மாவின் குடும்பத்தில் ஏனோ தெரியவில்லை ரகுவை எல்லோருக்கும் நன்றாகப் பிடிக்கும். எனக்கும்.
எனக்கு ஒன்று விட்ட சகோதரங்கள் 35 பேருக்கு மேல் உள்ள எமது குடும்பத்தில், ஒன்று விட்ட சகோதரங்கள் சிலரை நான் இன்னும் பார்க்கவில்லை, சிலருடன் இன்னும் பேசவில்லை. சில சகோதரங்களை அண்மையில் லண்டனில் சந்தித்தேன். ‘ஹலோ’, ‘கவ் ஆர் யு’ அவ்வளவுதான்.
ரகு இயக்கத்துக்கு சென்றதை, அன்றைய தினம் ஊரில் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை. பரவலாக இந்தச் செய்தி ஊரில் பேசப்பட்டது. காரணம் வறுமையில் வாடிய, தந்தையற்ற இரு பெண் சகோதரங்களுடன் கூடிய குடும்பச்சூழல். அடுதது அவனின் கெட்டித்தனமான படிப்பு. மூன்றாவது அன்று இடம்பெற்ற துன்பவியல் சம்பவம்.
இந்த விபரம் மேலிடத்துக்கு போக, அவனை வீடு போகுமாறு அறிவுறுத்தியது மேலிடம். ஆனாலும் அவன் பிடிவாதமாக வீடு வர மறுத்துவிட்டான்.
ரகு இயக்கத்துக்கு சென்ற வேளை , நான் கடேற் ஆக கப்பலில் இருந்தேன். தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில், இன்று போல் தொடர்பாடல்கள் இல்லாத காலத்தில், 1 மாதம் பின்னர் தான் விடயம் எனக்கு தபாலில் தெரியவந்தது. அன்றைய நாள் - இன்றும் நான் வருந்தும் நாட்களில் ஒன்று.
பின்னர் 2002 ஆம் ஆண்டு வரை, 9 வருடங்கள் போர் நிலமை காரணமாக தாயகப் பகுதிக்கு நான் போகவில்லை. கொழும்பில் நிற்கும் காலத்தையும் குறைத்து, இந்தியாவில் பரீட்சசைகளை முடிப்பதில் எனது விடுமுறைகளை கழித்து கொண்டிருந்தேன்.
ரகு, இயக்கத்தின் கடற்புலிகள் அமைப்பில் – அவர்களின் கப்பற் பிரிவில் செயற்படுவதாக கேள்விப்பட்டேன்.
மாதங்கள், வருடங்கள் உருண்டோட 2002 இல் சமாதான ஒப்பந்தம். 9 வருடங்கள் பின்பு ஊர் சென்றேன்.
அதே காலப்பகுதியில் இயக்கத்தை, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட இலங்கை அரசு அனுமதி அளிக்க, வல்வெட்டித்துறை பிரதேச கடற்புலிகளின் அரசியற் பிரிவு பொறுப்பாளாராக ரகு நியமிக்கப்பட்டான்.
14 வயது காற்சட்டைப் பையனாக 9 வருடங்கள் நினவில் நின்ற ரகு – அன்று பெரியவனாக, பொறுப்பாளனாக – நிர்மலானாக - எம்முன் வந்து நின்றான். ஆனாலும் கதை, பணிவில் குழந்தை போலேயே இருந்தான்.
ஆரம்பத்தில் எங்களை சந்திப்பதில் சங்கடப்பட்டுக்கொண்டான். காரணம் ‘பின்னர் எமக்கு ஏதும் பிரச்ச்னை வந்து விடுமோ’ என்று. ஆனால் எவற்றையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் அவனை சந்தித்தேன். வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தேன்.
அது மட்டுமின்றி, அன்று ஊரில் இருந்த சொற்ப உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கும் கூட்டிச்சென்றோம். இராணுவம் – இயக்கம் என்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒரு எழக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ரகுவைக் கண்ட அனைவரும் புன்னைகையுடன் அவனை வரவேற்றார்கள். பயந்து – ‘வராதே’ என்று ஒருவரும் மறைமுகமாக கூட கூறவில்லை.
இராணுவதினரோ போலீசாரோ நின்றதை சென்றதைக் கவனித்து இருக்கக்கூடும். ஆனாலும் அந்தப்பொழுதிலும் சரி, பிறகும் சரி எதுவித கரைச்சலும் கொடுக்கவில்லை.
ரகு சங்கடப்படக்கூடாது என்பதற்காக அவனின் பின்னணி பற்றி நான் ஒருபோதும் கேட்கவில்லை. அவனும் அது பற்றி கதைக்கவில்லை.
ஆனால் தான் கடற்புலிகள் பிரிவின் கப்பல் பிரிவில் இருப்பதாக மட்டும் கூறினான்.
கடற்புலிகளை அண்ணை ‘கடப்புலிகள்’ என்று சிலவேளை பகிடியாக கூறுவதாக கூறினான்.
அன்று அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த அரசியற்பணியில் அவன் அவ்வளவு நாட்டம் காட்டவில்லை என்பது தெரிந்தது. 'என்ன அண்ணா சனம் ஒவ்வொருநாளும் குடும்பச் சண்டைகளுடன் அலுவலகத்துக்கு வருதுகள், இதற்காகவா நாங்கள் இங்கு வந்தோம்’ என்றான். அதனால் 'கப்பற்துறைக்கே மீண்டும் போகவுள்ளேன்' என்றான்.
அவ்வாறே மேலிடத்தில் கேட்டு அரசியற்பணியில் இருந்து விடுபட்டு, வன்னி சென்று, மீண்டும் ஒரு சில மாதங்களிலேயே தொடர்பில் இருந்து விடுபட்டான்.
சமாதான காலத்தில், அவன் அவ்வாறு தொடர்பில் இல்லாத வேளையில் மூத்த சகோதரி ரம்யாவின் திருமணம் நடைபெற்றது.
மூத்தசகோதரியின் திருமண நிகழ்வில், ஒருவர் இன்னொருவருக்கு என்னை ‘நிர்மலனின் அண்ணா’ என்றார். அவர் உடனே ‘கடத்தல் நிர்மலானா’ என்றார். இந்தப் பெயரும் எதையோ கூறிநின்றது. நான் இதுபற்றி அவர்களிடம் எதுவும் மேற்கொண்டு கேட்கவில்லை.
தங்கையை ‘I will kill you’ என்று கூறியதை தவிர, குறைகூறக்கூடிய ஒன்றையும் நான் அவனிடத்தில் ஒருநாளும் கண்டதில்லை.
நன்றாகப் பாடக் கூடியவன். நெடியகாட்டில் தியாகி திலீபன் நினைவுப் பந்தலிலும் பாடியுள்ளதாக அவனினின் சக நண்பன் ஒருவன் கூறினான்.
காதலர் தினத்தில் பிறந்தவன். காதல் சுபாவம் கொண்டவன். இதுவே அவனின் விதியையும் மாற்றி எழுதிவிட்டது.
அவனும் சரி, சகோதரிகளும் சரி தங்களுக்குள் பன்மையில் தான் கதைப்பார்கள். அவர்களின் தந்தையார் போல.
ரகுவின் நண்பர்கள் இன்றும் கூட ரகுவைப் பற்றி கதைத்தால் உணர்ச்சிவசப்படுவார்கள். மிகவும் வருத்தப்படுவார்கள். கோபம் கொள்வார்கள்..
2002 லீவில் வந்த நின்றபொழுது தாயார், தங்கைகளின் திருமணம்பற்றிக் கேட்டபொழுது ‘பெரியம்மாவை கேளுங்கோ, அக்கா பார்ப்பார், அண்ணா பார்ப்பார் ‘ என்று மட்டும் கூறினான்.
இதுபற்றி ஊரில் நின்றபொழுது எனக்கும் கூறினான். ‘தான் ஒரு துரதிஷ்டவமான சம்பவத்தால் இயக்கத்துக்கு சென்றேன்’ என்றாலும், ‘இப்பொழுது தான் விருப்பத்துடனேயே இயக்கத்தில் செயற்படுவதாகவும், தனக்கு அங்கு நிறைய பொறுப்புக்கள் இருப்பதாகவும்’ கூறினான்.
2003 முற்பகுதியில் வன்னியில் மூத்த சகோதரியின் திருமணம். ‘தொடர்புகளுக்கு அப்பால் உள்ளான்’ என்று தூய தமிழில் கூறினார்கள். அவனின் விருப்பம் போலவே நான், அம்மா, அக்கா ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டோம்.
பின்னர் இளைய சகோதரியின் திருமணம் சென்னையில். இத்திருமணத்தையும் சிறப்பாக நடாத்தி வைத்தோம்.
உற்றார் உறவினர்களின் இன்பதுன்ப நிகழ்வுகளுக்கு விரும்பியபடி செல்லமுடியாத தொழில் தான் கப்பல் தொழில். எனது கூடப்பிறந்த சகோதரன் திருமணத்துக்கு கூட கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் ரகு வேண்டியபடி அவனின் சகோதரிகள் இருவரின் திருமணத்தையும் முன் நின்று நடாத்தினோம் எனபதில் ஒரு ஆத்ம திருப்தி.
இறுதித் தருணம்
கேள்வியுற்ற செய்திகளின் படி, இதேதினம் 14.06.2003 அன்று அதிகாலையளவில், வங்காள விரிகுடாவில் முல்லைத்தீவில் இருந்து சுமார் 265 கடல் மைல்கள் தொலைவில், இலங்கை கடற்படை கப்பல்களால் சூழப்பட்டது இயக்கத்தின் கப்பலான 'ஷொய்ஷூ' என்னும் சிறிய ரக எண்ணை தாங்கிக் கப்பல்.
சமாதான காலம். ஆகவே தாக்குதல் இயக்கத்தின் கப்பல் மேல் உடனடியாக இடம்பெறவில்லை. ‘கப்பல் முற்றுகைக்கு உட்பட்டுள்ளது’ என்று செய்தியே முதலில் வெளிவரத் தொடங்கியது.
தற்போதைய பிரதமர் ரணில் தான் அன்றும் பிரதமர். இயக்கத்தின் தரப்பில் மூன்றாம் தரப்பு சமாதான தூதுவர்கள் மூலம் கப்பலை விடுவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டதாம்.
ஆனாலும் நிலமை விபரீதமாக முடியும் என்பதை கப்பலில் இருந்தவர்கள் உணர்ந்துள்ளார்கள் போலும்.
இறுதித் தருணம், ரகுதான் 'தலைமைப் பீடத்துடன் தொடர்புபட்டதாகவும், கப்பலையும் தங்களையும் முடித்துக் கொள்ளப்போவதாகவும், அனுமதி வழங்குமாறு கேட்டதாயும்' ஒரு சிலர் அன்று கதைதார்கள்.
இதற்கு சில மாதம் முன்னரும் கிட்டத்தட்ட இதே பகுதியில், இதே பாணியில் இயக்கத்தின் இன்னொரு கப்பலும் மூழ்கியது குறிப்பிடத்தக்கது. (இயக்கத்தின் பின்னடைவுக்கும் வீழ்ச்சிக்கும் இந்தக் கப்பல்களின் இழப்பும் பிரதான காரணம் என பத்திரிக்கைகளில் பலர் எழுதியிருந்தார்கள்)
அப்பொழுது மும்பாய்யில் எனது இறுதி பரீட்சையைக்கு படித்துக் கொண்டிருந்தேன். கப்பல் முற்றுகை என்ற செய்தி வந்தவுடன் ரகு தான் கண்களில் வந்து போனான்.
கப்பல் வெடித்து மூழ்கி விட்டதாக செய்திகள் ஊடங்களில் வந்தன.
சில மணி நேரத்தில் பெயர்கள் வெளி வந்தன, நினைத்தது போலவே அதில் ரகுவின் பெயரும் ஒன்று. அழுதே விட்டேன். ரகுவுடன் ஏனைய 10 கடற்புலிகள் மற்றும் ஒரு ஆதரவாளர் என மொத்தம் 12 பேர் வங்கக் கடலில் சங்கமம் ஆனார்கள்.
கப்பல் வெடித்து தீப்பிழம்பம் எழுந்து மூழ்கும் காட்சி அன்று தொலைக் காட்சிகளில் ஒளி பரப்பப் பட்டது.
பரீட்சை முடிந்து வந்து, முதல் வேலையாக அக்காச்சி வீட்டுக்கு சென்று, அங்கிருந்து புதுக்குடியிருப்பு வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த துயிலும் இல்லத்திக்குச்சென்றேன்.
கல்லறைகளின் வரிசையில் கடைசியில் அப்பையா அவர்களின் கல்லறையும் (அப்பையா - இயக்கத்தின் மூத்த உறுப்பினர், அத்துடன் இயயக்கத்தில் மிக வயதானவரும் இவர் தான் என்று கூறப்படுகின்றது), அதற்குப் அருகில் ரகுவின் கல்லறையும் இருந்தது.
சமூகவலைத் தளத்தில் இக்கப்பல் சம்பவம் பற்றிய காணொளி ஒன்றைப் பார்த்தேன். தற்செயலாக அமைந்திருந்தாலும், குறித்த காணொளியில் ரகுவின் படம் தான் அதிகம் காட்டப்பட்டுள்ளது.
குறித்த காணொளியின் இறுதியில் வடிக்கப்பட்டுள்ள கவிதை வரிகளும், படம் ஒன்றும்.
எது எவ்வாறாயினும் கடலோடு காவியமான எம் கண்மணிகளை இனிக் காண மாட்டோம்,
ஆனாலும் அவர் விட்ட மூச்சு எழும்பி ஈரக் காற்ரோடு கலந்து வருகின்றது,
மிதந்து வரும் வெள்ளலைகள் வெடித்துச் சிதறும்போது அவர் சிரித்த சிரிப்பு தெரிகிறது,
தரைப் பாறைகளிலில் மோதி அடிக்கும் அலைகள் ஏதோ செய்தி சொல்லிவிட்டுப் போகின்றன.
எனக்கு ரகுவைப் போல், பலருக்கும் இவ்வாறு பல சொல்ல முடியாத வலிகள், கதைகள் இருக்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.