வல்வையில் தைப்பொங்கல் பட்டப்போட்டியில் சில பட்டங்கள் ஏறத்தவறிவிட்டன. “போட்டிக்கு முதல் பரீட்சாத்தமாக ஏற்றியபோது வெற்றியளித்தன, ஆனால் போட்டியன்று காற்றுப் போதாமல் பறக்கத்தவறிவிட்டன” என சம்பந்தப்பட்ட பட்டக் கலைஞர்கள் கூறுகின்றார்கள்.
உண்மை அதுதான்.
பிரசவத்தில் பிள்ளை இறந்து பிறக்கும்போது, பெற்றோர் எப்படி துடிப்பார்களோ, அப்படி துடித்து இருப்பார்கள் சம்பந்தப்பட்ட கலைஞர்கள். காரணம் 2 மாத கடும் உழைப்பு, உயர்ந்து வரும் கடும் போட்டி.
குறிப்பாக ரகு வின் இரண்டு புதிய முயற்சிகள் மற்றும் Valvai Tech இன் இரு பட்டங்களையும் குறிப்பிடலாம்.
Valvai Tech என்ற பெயரில் கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப கருவிகள் சம்பந்தமான பட்டங்களை ஏற்றி வருபவர் தம்பி சரவணன். ஆனாலும் இவரின் ஏனைய 8 பட்டங்கள் போட்டியில் பங்கெடுத்து பரிசில்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது
இதைவிட இன்னும் சில பட்டங்கள் ஏறவில்லை.
2 மாதங்கள் பட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் கலைஞர்கள், குறித்த தைமாதத்திலும், தைப் பொங்கல் தினத்தன்றும் வீசும் காற்று பற்றிய அறிவை பெறத்தவறி வருவதே இதற்கான பிரதான காரணம் என்று நான் நினைக்கிறேன்.
வல்வையில் (யாழில்) வடகீழ் பருவப் பெயற்சி காற்று (வாடைக் காற்று) ஐப்பசி மாதம் ஆரம்பித்து தை இறுதி வரை நீடிக்கின்றது. இதன் உச்சபட்ச வேகமானது, மார்கழி மாதத்தில் (மணிக்கு 30-35 கடல் மைல்கள் வேகம், Beaufort scale 7-8) வீசி, தையில் படிப்படியாகக் குறைகின்றது. குறிப்பாக தை முதல் வாரத்தின் பின்னர், சடுதியாக் குறைவது வழக்கம். பின்னர் தை நடுப்பகுதியிலிருந்து மாதம் முடியும் வரை சாதாரணமாக வீசி, மாசியில் காற்றின் வேகமும் திசையும் மாறுகின்றது.
தை 10,11, 12 ஆம் திகதிகளில் வீசும் காற்றானது பொங்கல் அன்றும் வீசும் என்று எதிர்பார்ப்பது தான் தவறாக முடிகின்றது. தை மாத ஆரம்பத்தில் மணிக்கு 15 கடல் மைல்கள் (Knots) வேகத்தில் வீசும் காற்றானது, தைபொங்கலுக்கு முன் பின்னான நாட்களில் மணிக்கு 10 கடல் மைல்கள் என்றளவுக்கு குறைகின்றது.
விதிவிலக்காக, இயற்கையின் நியதிப்படி “இன்று ஒரே காற்று”, “இன்று காற்று விழுந்து விட்டது”, “மழைக் குணம்” என்றும் நடப்பது வழக்கம்.
ஆகவே தைப்பொங்கலுக்கு முன்னர் குறைந்த பட்சம் காற்று 15 Knots ஆக இருக்கும் போது ஏற்றக் கூடிய பட்டங்களை, 10 Knots காற்றில் ஏற்றுவது என்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்று
தொடர்ந்து இதனை கருத்திற் கொள்ளாமல் ஒவ்வொரு பட்டப் போட்டியிலும் சில கலைஞர்கள் தவறிழைத்து வருகின்றார்கள். இதன் ஆதங்கமாக இதைப் பதிவுசெய்கிறேன்.
சுருங்கற்கூறின் செய்யும் பட்டங்களை மெல்லிய காற்றில் ஏற்றக் கூடியதாக – பாரத்தை குறைத்து, அதிகளவு காற்று பைகள் அமைத்து உருவாக்க வேண்டும். இதை சில கலைஞர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்.
முதற் தடவை பட்டம் ஏறத்தவறினால் இறுதி சந்தர்ப்பமாக பட்டத்தின் கயிற்றின் நீளத்தைக் கூட்டி முருகைக் கல் வரை செல்ல வேண்டும். பல கலைஞர்கள் இடுப்பளவு நீர் வரை சென்றுள்ளார்கள்.
6 வருடங்கள் முன்பு மகேந்திரன் அண்ணாவின் முதலைப் பட்டம், முதற்தடவை ஏற மறுத்த போது, கயிற்றை தான் வாங்கி, முருகைக்கற் பக்கம் 2, 3 முறை திரும்பி பார்த்து விட்டு, முருகைக் கல் தாண்டியும் சென்று இழுத்தார். முதலை வானில் பறந்து முதல் இடம் பிடித்தது. (பைதகரஸ் முக்கோணி – நீளம் கூட உயரம் கூடும்).
(குறித்த முதலையை தலைநகர் Galle Face இல் ஏற்றிக் காட்ட விரும்பினேன். முதலையின் ராட்சத அளவு காரணமாக அதை கொழும்பு கொண்டு வர முடியவில்லை, ஆனால் போட்டியில் பங்கெடுத்த வேறு சில பட்டங்களை கொழும்பில் உள்ள ஊரவர்கள், மற்றும் பட்டக் கலைஞர்கள் உதவியுடன் “Valvettithurai Kites’ என்று பெயரில் Galle Face இல் ஏற்றினோம். “வல்வெட்டித்துறை” என்ற பதம் காரணமாக விளம்பரம் இன்றி ஏற்றியதால் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், Trail & Error வெற்றி தான்)
வழமையாக இவ்வாறு காற்றுடன் சம்பந்தப் பட்ட விடயங்கள் இடம்பெறும் இடங்களில், காற்றின் திசை மற்றும் அளவை அறியக் கூடிய காற்று மானிகள் / இலகு காற்றாடிகள் (Wind Vanes) வைக்கப்படுவது வழக்கம். உதயசூரியன் நிர்வாகிகள் இதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். Winds Vane காற்றின் திசையையும் வேகத்தையும் எவ்வாறு கண்டு பிடிப்பது என்னும் விளக்க படத்தையும் இணைத்துள்ளேன்.
முடிந்தால் அடுத்த போட்டியில், பட்டக் கலைஞர்கள் யாராவது, குறித்த காற்றாடியை பட்டமாக ஏற்றி, அன்றய தினம், உதயசூரியன் கடற்கரையில் வீசும் காற்றின் வேகத்தையும் திசையையும் வானில் காட்ட முயற்சியுங்கள். முதன்மையான பரிசுகளில் ஒன்று கிடைக்கத் தவறினால் நடுவர்களின் அறிவு “அவ்வளவு” தான் என்று விட்டுப்போங்கள்.
வல்வை ஆதிகோவிலில் படகு கொண்டு கடல் செல்லும் எனது வகுப்புத் தோழன் சித்திரைவேல், “மச்சான் இங்கே கடலில் காற்றின் தன்மையைக் கண்டு பிடிக்கிற Apps ஒன்று இருக்கு தெரியுமோ” என்று ஒரு நாள் காட்டினான். ஆச்சரியப் பட்டுவிட்டேன். “திசை சரியாக காட்டுது, ஆனால் வேகம் சரியாகக் காட்டுவதில்லை” என்று மேலும் கூறினான்.
குறித்த Apps களில் உள்ள காற்றை நம்பி பட்டத்தை தயார் செய்தால் ஏமாந்து தான் போவீர்கள்.
வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு மணித்தியாளமும் காற்றின் திசையை வேகத்தை, ஒவ்வொரு புள்ளியிலும் 3, 4 நாட்கள் முன்பே கணிக்கக்கூடிய தொழில் நுட்பவசதிகள், கருவிகள் உண்டு. (WNI Port forecast என்ற ஒன்று உதாரணத்துக்கு காட்டியுள்ளேன்) ஆனால் இலங்கையில் அவ்வாறு வசதிகள் இல்லை. இலங்கை பற்றி Apps களில் காட்டப்படும் காற்றின் தரவுகள் வெறும் Interpolation, Extrapolation (குத்து மதிப்பு) மட்டும் தான்
பட்டங்களின் அளவுகள், நுட்பங்கள் கூடுவதால், குறித்த பட்டங்களை ஏற்றக்கூடிய வகையில் பருத்தித்துறையில் உள்ள ஜெட்டி போன்ற உருவை ஒத்த, விமான ஓடு பாதையை ஒத்த - உயரம் குறைந்த – கடலுக்குள் நீட்டி செல்லும் அமைப்பு ஒன்றை உதயசூரியன் நிர்வாகிகள் அமைப்பது காலத்தின் கட்டாயம்.
(குறிப்பு – காற்று சம்பந்தப்பட்ட விடயத்தை Sailing direction for Bay of Bengal மற்றும் எனது சிறு வயது இருபரிமான பட்டப் பைத்தியத்தின் போது பெற்ற அனுபவம், கடந்த 13 வருடங்களாக தைப் பொங்கல் தினத்தன்று உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற காற்றின் தன்மையை கூர்மையாக அவதானித்ததன் தன்மை மற்றும் கடலோடி பெற்ற அனுபவத்தை வைத்து எழுதியுள்ளேன்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
I. Thurailingam (United Kingdom)
Posted Date: January 18, 2024 at 23:31
நன்று சொன்னீர்கள்!
ஒவ்வொரு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவைகளின் பின்னால் காரணங்கள் உள்ளன. வெறுமனே அவற்றை விளையாட்டு அல்லது பொழுதுப்போக்காக விட்டுவிடாது அவற்றினால் என்ன முன்னேற்றம் அடையலாம்? அவற்றில் இருந்து வாழ்க்கைக்கு தேவையான படிப்பு, அனுபவம் மற்றும் எவ்வாறு அவற்றை நவீனமயப்படுத்தி முன்னேறலாம் என்பவற்றையும் மனதில் வைத்திருப்பது முக்கியம்.
உதாரணமாக, பட்டம் ஏற்றும் விழாவைத் தொடர்ந்து Hang gliding போட்டி, புகைக்குண்டு விடுவதை முன்னேற்றி Hot-air balloon என்பன போன்றவற்றை முன்னேற்றுவதற்கு, உங்களைப் போன்று ஊக்குவிப்பாளர்களினால் எடுத்துக்காட்ட முடியும். வல்வையர்களினால் நிச்சயமாக செய்துகாட்ட முடியும்.
துரைலிங்கம் - இங்கிலாந்து
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.