தமிழன் – தன்மானம் என்று பார்த்தால் அரியநேந்திரனுக்கு தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்கு போடவேண்டும். “தனக்கு போடும் வாக்கு வெற்றிக்காக அல்ல, மாறாக தமிழினத்தின் இருப்பைக்காட்ட” என்று அரியநேந்திரன் கூறியுள்ளார்.
முன்னர் சிவாஜிலிங்கம் இதே கருத்தைக் கூறி ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது, அவருக்கே எனது வாக்கு போட்டேன். போர் முடிவடைந்து இனப்பிரச்னை சூடு குறையாமல் இருந்தபோது, அன்று போட்டியிட்ட சிவாஜிலிங்கத்தை இவர்கள் “முட்டாள்” என்றார்கள்.
சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகள் வெறும் 8000 தான். இந்தமுறை பொது வேட்பாளரை முன்னிறுத்திய எந்தவொரு அமைப்பும் அன்று சிவாஜிலிங்கத்துக்கோ அல்லது அவரது நோக்கத்துக்கோ ஆதரவு அளிக்கவில்லை. அப்டியிருக்கையில் - நான் ஏன் அரியனேந்திரனுக்கு இந்தமுறை போட வேண்டும் என்ற குழப்பம்.
ரணில் (Ranil Wickremesinghe) ஒருபோதும் தமிழர்களுக்கு தீர்வு தரப்போவதில்லை. தந்திரக்காரர். ஆனாலும் அதளபாதாளத்துக்கு சென்று கொண்டிருந்த பொருளாதாரத்தை, மிகக் குறிகிய காலத்தில் நிமித்திய வல்லமை ரணிலையே சாரும். ரணிலுக்கு பதில் டலஸ் அழகப்பெரும வந்திருந்தால் நிலமையின் விபரீதம் விளங்கியிருக்கும். ரணில் மீண்டும் வந்தால் பொருளாதாரம் ஆகக் கீழே போக விட்டாலும் பெரிய மாற்றம் வராது. மாறாக அவ்வாறு பெரிய மாற்றம் வரவேண்டும் என்றால் – ஒரு மாற்றம் வேண்டும் – ஆகவே ரணிலுக்கு போடுவதோ என்ற குழப்பம்
மாற்றம் என்றால் இதுவரை ஆட்சி செய்யாதவர் அனுர (Anura Kumara Dissanayake). வாயால் வீசிக் கொண்டிருக்கிறார் மனுஷன். அனுராவுக்கு ஆதரவு கூடி வருகின்றது என்கிறார்கள். என்னுடன் கடந்த 2 வருடங்களில் 3 பிரதம பொறியிலாளர்கள் கடமை புரிந்தார்கள், மூவரும் சிங்களவர், என் வயதை ஒத்தவர்கள், வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், மூவருமே ஆதி தீவிர JVP ஆதரவாளர்கள், இது எனக்கு மிகவும் ஆச்சரியமான விடயம். ஆனாலும் ஆட்சி அனுபவம் இல்லாத ஒருவர், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பதவி ஏற்க - பொருளாதாரம் மீண்டும் உடைந்திடுமோ என்ற ஐயம், கப்பலில் தொடர்ந்து எவ்வளவு காலம் வேலை செய்ய முடியும் – அனுரவுக்கு போடுவதிலும் குழப்பம்
சஜீத் (Sajith Premadasa) – தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற ஓரளவு கரிசனை தானும் கொண்டவர் எனலாம். இல்லை என்று தமிழர்கள் கூற முடியாது, ஏனெனில் எல்லோரும் கடந்த முறை சஜித்துக்கு தான் வாக்கு போட்டோம். கடந்த தேர்தலில் ‘தான் ஜனாதிபதி ஆனால் தமிழீXத்தை தவிர மீதி அனைத்தையும் தருவேன் என்று தன்னிடம் கூறினார்” என கணேஷ் வேலாயுதம் தெரிவித்தார் என யாழ் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளிவந்திருந்தது. ஆனால் இவர் இந்த முறை அவ்வளவு வேகமாக ஓடாத குதிரை போல் தெரிகின்றார். ஏனெனில் எங்கட பக்கம் மாதிரி அங்கால் பக்கமும் பிளவுகள் நிறைய. ஆகவே சஜீத்துக்கு போடுவதிலும் குழப்பம்.
நாமல் (Namal Rajapakshe) ஒரு விளையாட்டுப்பிள்ளை. வல்வெட்டித்துறை பட்டப்போட்டிக்கு உதவ கோரி, உதயசூரியன் இளைஞர்கள் அலரிமாளிகை சென்றபோது “வாங்கோ வாங்கோ, ஏன் பட்டப் போட்டியை லோக்கலில் நடத்த வேண்டும், தேசிய ரீதியில் நடாத்துவோம்” எனக் கூறி, வெளிநாட்டு தூதுவர்களுக்கும் Twitter வழி அழைப்பு விட்டு எங்களை ஆச்சரியப்படுத்தியிருந்தார் நாமல். இதேமாதிரி மாறிச்சாறி ‘குட்டித் தீர்வை” ஏதும் தந்து விடுவாரோ என்ற நப்பாசை. ஆனால் இவரின் தந்தை, சிறிய தந்தை பின்னுக்கு இவருடன் நிற்கும் படத்தை பார்க்க – நாமலுக்கு போடுவதிலும் குழப்பம்.
மொத்தத்தில் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்கு போட என்ற குழப்பம் இன்னும் எனக்கு தீர்ந்த பாடில்லை. இந்தக் குழப்பம் என்னைப் போன்ற ஒரு சிலருக்குத்தானா அல்லது எல்லோருக்கும் தானா என்று தெரியவில்லை.
இது வேறு பத்தாது என்று சைக்கிள் காரர் ஓரம் போ ஓரம் போ என்று வேறு கலைக்கிறார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
சபா இராஜேந்திரன் (Sri Lanka)
Posted Date: September 08, 2024 at 10:01
வணக்கம்,
தம்பி ஆதவனுடைய குழப்பம் நியாயமானது. பல தமிழர்களின் மனதில் இந்தக் குழப்பம் இருக்கிறது. JVP இணையத்தளத்தின் கருத்துக்கணிப்பில் தமிழர்கள் கிட்டத்தட்ட சரிசமமாக இருக்கிறார்கள். தமிழர்களின் குரலை ஒற்றுமையாக சிங்களவருக்கும் உலகத்திற்கும் தெரிவிக்கவே 'பொது வேட்பாளர்' என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் ஒற்றுமையின்றி பலபல குழுக்களாகச் சிதறிக் கிடக்கும் எங்களை மேலும் இது சிதறடிக்கும் போலத் தெரிகிறது.
இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி எங்களை ஒற்றுமையை நோக்கிப் பயணிக்க வைக்கும் ஒரு திட்டத்தை முன்வைக்க விரும்புகிறேன்.
என்னுடைய பார்வையில் 70% க்கு மேலான மக்கள் பொதுவேட்பாளருக்கோ அல்லது தமிழரசுக்கட்சி கோடிகாட்டும் சஜித்திற்கோ போடும் நிலைதான் தெரிகிறது. இவை இரண்டையும் இணைக்கமுடியுமா? (என்னுடைய தனிப்பட்ட தெரிவு அனுரா. மற்றவர்களுக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் ஒன்றும் செய்யவில்லை. இவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் எமக்கு நல்லது எதுவும் செய்யமாட்டாரா என்ற நப்பாசைதான்) . ஆனாலும் மூவருடைய தேர்தல் விஞ்ஞாபனங்களையும் ஆராய்ந்து தமிழரசுக்கட்சியால் ஒரு முடிவுக்கு வந்த தீர்மானத்தை ( ஒற்றுமையை முக்கியமாகக் கருத்தில்கொண்டு) ஏற்றுக்கொள்ளுவோம்.
எமது முதலாவது தெரிவாக அரியநேந்திரனையும் (பொதுவேட்பாளரை) இரண்டாவது தெரிவாக சஜித்தையும் தெரிவுசெய்வோம்.
பொதுக்கூட்டங்களை ஒன்றாக நடத்துவோம். எல்லோரும் ஒரு பொதுமேடையில் இருப்பதால் மற்றவர்களைக் குறைகூறும் செயல்பாடு குறையும்.
"ஓரே கல்லில் இரண்டு மாங்காய்கள்" என்று இதைக்கூறலாம். எமது உரிமைக்குரலை உலகிற்கு எடுத்துக்காட்டலாம். எமது ஆதரவில் ஒரு ஜனாதிபதியைத் தெரிவுசெய்யலாம்
உண்மையில் மூன்று மாங்காய்கள். மூன்றாவது (மிக முக்கியமானது) எமது ஒற்றுமையை நோக்கிய ஒரு பயணம்.
இந்த இடத்தில் வல்வை இளைஞர்கள் ஒற்றுமைக்காக எடுத்த ஒரு முயற்சியைக் குறிப்பிட விரும்புகிறேன். 1965ம் ஆண்டு தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ், ஈழத்தமிழ் ஒற்றுமை முன்னணி ஆகியவை வெவ்வேறாகப் போட்டியிட்டபோது வல்வை இளைஞர்கள் அம்மன் கோயில் வீதியிலே ஒரு பொதுக்கூட்டம் நடத்தி மூவரையும் ஒற்றுமையாக செயல்படும்படி கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதன்படி மூன்று தலைவர்களையும் சந்தித்தோம். பலனிருக்கவில்லை, ஒற்றுமையாகச் செயல்படவில்லை. 1972 ல் இதே தலைவர்கள் வல்வையில் கூடி 'தமிழர் ஒற்றுமை விடுதலை முன்னணியை (TULF) ஆரம்பித்தார்கள்.
இப்போதும் வல்வை இளைஞர்கள் எனது திட்டத்தை ஆதரித்தால் இரு பக்கத்தாரையும் சந்தித்து செயல்முறையில் இது சாத்தியமானதா என்று முயற்சிக்கலாம்.
காலம் குறைவாக உள்ளது. முயற்சிப்பதானால் உடனே செய்யவேண்டும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.