ஆதவன் பக்கம் 71 -வரலாறான 87ம் ஆண்டும் குமரப்பா, புலேந்திரன் மரணமும்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2024 (சனிக்கிழமை)
தமிழர் போராட்டாத்தில் பாரிய திருப்பங்களை கொண்டமைந்த ஆண்டு 1987 ஆம் ஆண்டு தான்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட – வெற்றி கண்ட - முதலாவது இராணுவ நடவடிக்கை “Operation Liberation”–வடமராட்சியை புலிகளிடம் இருந்து மீட்டனர்.
தொடர்ந்து இதற்கு பதிலடியாக புலிகளின் விடுதலைப்புலிகளின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் வடமராட்சியின் நெல்லியடியில் இடம்பெற்றது.
வடமராட்சியின், நாம் உட்பட பல குடும்பங்கள் இடம்பெயர்வு.
இந்திய கடற்படையின் கப்டன் குப்தா தலைமையில் இந்திய கடற்படையினர் உணவுப் பொருட்களுடன் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய முனைவு– இலங்கை கடற்படை மறிப்பு.
அடுத்த நாள், இந்திய வான் படையின் சூப்பர் சொனிக் விமானங்கள் வானத்தைக் கிழித்து வட்டமிட்டு பாதுகாப்பு வழங்க, இந்திய சரக்கு விமானங்கள் யாழின் வடமராட்சி மற்றும் தென்மராட்சியின் வான் பரப்புகளில் உணவுப் பொட்டலங்களை போடுகின்றன. - Operation Pumalai
விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனைடெல்லிக்கு அழைத்து இந்திய உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம்.
தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கை வருகை
இலங்கையில் வரவேற்பு அணிவகுப்பில்,இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி மீது தாக்குதல் முயற்சி
இந்தியப்படையினரின் விமான மூலம் பிரபாகரன் பலாலி வருகை
பிரபாகரன் அவர்களின் சுதுமலைபிரகடன உரை
புலிகளின் ஆயுத ஒப்படைப்பு
திலீபன் நல்லூரில் உண்ணாவிரதம்
திலீபன் மறைவு
பாக்கு நீரிணையில் குமரப்பா, புலேந்திரன் கைது
பலாலியில் குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் சயனைற் அருந்தி சாவு
பிரபாகரனை வளைத்து இந்திய படையினர்யாழ் பரமேஸ்வரா பகுதியில் வான் வழி மூலம் தரையிறக்கம் - Operation Pawan
இந்திய அமைதி காக்கும் படையினர்–புலிகள் இடையே ஆரம்பமான போர்
போர் முனையியல் பெண் புலிகள் .- புலிகளின் முதற் பெண் போராளி மரணம்
வன்னிக்காட்டுக்குள் புலிகள் செயற்பாடுகள் ஆரம்பம்
இவ்வாறு மிக நீண்ட அரசியல் – இராணுவ நகர்வுகள் இலங்கை ஆயுதப் போராட்ட வரலாற்றில் வேறு எந்த வருடமும் இடம்பெற்று இருக்கவில்லை.இடம்பெறப்போவதுமில்லை.
இவற்றில் புலிகளுக்கும் IPKF இடையில் போரை ஏற்படுத்திய விடயம் குமரப்பா–புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் மரணம் தான் அன்றைய செய்தி தாள்களில் பதிவு.
திலீபன் மரணித்த பின்னர் மாபெரும் உணர்வலைகள் யாழில் ஏற்பட, திலீபனின் பூதவுடல் (யாழ் போதான வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட முன்னர்)யாழின் பல பகுதிகளிலும் மக்கள் இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.
அவ்வாறு திலீபனின் பூதவுடல் வல்வை சந்தி நோக்கி வந்து கொண்டிருந்த வேளை, அதற்கு சற்று முன்னர் குமரப்பா மற்றும் புலேந்திரன் வெள்ளை ஹஜேஷ் வாகனம் ஒன்றில் வந்து இறங்கினர்கள்.
அங்கு திலீபனுக்கு பா வாசிக்க நின்று கொண்டிருந்த ஒருவருடன் குமரப்பா உரையாடினார்
சில நிமிடங்கள் தான் அங்கு நின்றனர். ஆனாலும் திலீபனின் வித்து உடல் அங்கு வர முன்னரே சடுதியாக புறப்பட்டுச் சென்று விட்டனர்.
குமரப்பா பொது வெளியில் யாழில் மக்கள் முன் வந்திருந்தமை இது ஒன்றாகத் தான் இருக்கக்கூடும்.
இதற்கு சில நாட்கள், வாரங்கள் முன்னர் தான் குமரப்பா, புலேந்திரன் திருமணம் செய்திருந்தனர்.
ஓரிரு நாட்களின் பின்னர், பாக்கு நீரிணையில் குமரப்பா,புலேந்திரன் உட்பட 17 புலிகள் கடற்புறா என்னும் கடற்காலத்தில் இருந்து கைது செய்யப்பட்டு பலாலி கொண்டு செல்லப்படுகின்றனர் என்ற செய்தி.
அக்டோபர் 5 ஆம் திகதி வல்வையில் மிகவும் அசாதாரான சூழ்நிலை.
மாலை 4 மணியளவில், “பலாலியில் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட அனைவரும் குப்பி அடிக்கப்போகின்றார்கள்” என்ற செய்தி தீயாகப்பரவியது. அந்தக் காலத்தில் Landline கூட வீடுகளில் இல்லாத காலத்தில் இந்தச் செய்தி இவ்வாறு பரவிய விதம் இன்றும் ஆச்சசரியமானவிடயம் தான்.
மாலை 5:05 க்கு 17 பேரும் சயனற் அருந்த, குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 11 பேர் உடனடியாக மரணம், பொலிகண்டியைச் சேர்ந்த ரகு என்பவர் அடுத்த நாள் மரணம்.
நாம் எல்லோரும் அவரவர் வீட்டுக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருந்தோம்.
அடுத்த நிமிடம் பருத்தித்துறை பக்கத்திலிருந்து துப்பாக்கி வெடிச்சத்தங்கள். சற்று நேரத்தில் வெடிச் சத்தம் அண்மித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது சந்திப் பக்கத்திலிருந்து இராணுவ வாகனம் ஒன்று அதி உச்ச வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் இருந்து தான் வெடி.
அதாவது குப்பி கடித்தது 5:05 நிகழ்ந்து அதே நேரம் குறித்த இராணுவ வாகனம் திக்கம் பகுதியடியில் வந்து கொண்டிருக்க வேண்டும். விபரீத்ததை புரிந்த கொண்டவர்களுக்கு இருந்த ஒரே வழிதான் வெடி.
இதைவிட இன்னுமொரு “துன்பகரமான நிகழ்வு” வல்வைச்சந்தியில் மாலை கடந்து இடம்பெற்றது.
பலாலி நிகழ்வு புலிகளை உலுக்கியது. காரணம் குமரப்பா, மற்றும் புலேந்திரன் இருவரும் புலிகளைப் பொறுத்தவரை கிழக்கின் பிதாமகன்கள், மூத்த உறுப்பினர்கள்.
7 ஆம் திகதி என்று நினைக்கிறேன் (சரியாக ஞாபகம் இல்லை), குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிருவரின் பூதவுடல்கள் தீருவில் வெளியில் நெருப்புடன் சங்கமிக்கின்றன.
ஆந்தக் காலத்தில் அவ்வாறானதொரு மக்கள் கூட்டத்தை நான் பார்த்தது அதுதான் முதற்தடவை.
இறுதி மரியாதை செலுத்த விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் வந்திருந்தார்.
அங்கு நின்ற பெரிய ஆட்கள் கூறினார்கள்– இனி மேல் சண்டைதான் என்று – அதுதான் 3 நாட்கள் கடந்து நடந்தது.
அடுத்த வருடமே அதே தீருவில் வெளியில் வல்வை பிரஜைகள் குழுவினூடாக புலிகள் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் நினைவாக 12 இதழ்களுடன் கூடிய தூபி ஒன்றை அமைத்தனர்.
அதற்க்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் (நான் அங்கு நின்ற 93 ஆம் ஆண்டு வரை) அக்டோபர் 5 ஆம் திகதிஅன்று குமரப்பா, புலேந்திரன் நினைவாக மிகப் பிரமாண்டமாக நினைவு நிகழ்வுக ள்இடம்பெற்றன.
சீனியர் ஒருவர் நேற்று முகநூலில் “தீயினில் எறியாத தீபங்களே................” என்று பதிவிட்டுள்ளார்.
ஆமாம், அந்த நாட்களில் மிகவும் பிரசித்தமாக குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் நினைவாக ஒலித்த பாடல் தான் அது.
(பொறுப்பு துறப்பு– எனது இந்தப் பதிவு, எனது சிறு பராயத்தில்இடம்பெற்றவற்றை ஒட்டிய எழுத்துக்களின் வடிவம் தான், எவருக்கும் ஆதரவானதோ அல்லது எதிரானதோ அல்ல)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.